உரையாசிரியர்

கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க!

பல உரையாசிரியர்கள் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவே இல்லை.

 அவர் இன்று உயிரோடு இருந்தால் ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே!’ என்று வேதனைப்படலாம்!

சிந்திப்பதற்கு எட்வர்ட் டி போனோ சொன்ன வழிகளைவிடச் சிறப்பானது திருக்குறள் படிப்பதுதான். ஒவ்வொரு திருக்குறளையும் படித்துவிட்டு, இதற்கு நேராகச் சொல்லப்பட்டதற்கு மிகுதியாக, அல்லது வித்யாசமாக ஏதாவது அர்த்தம் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். ரெண்டு வரியில் அவர் எழுதினதற்கு இதுதான் நோக்கம். ரெண்டு நாள் உங்களை யோசிக்க வைக்கிற குறள்கள் நிறைய உண்டு.

சில சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பேசுவதை ஒன்றரை நிமிஷத்தில் மறந்து போய்விடலாம்!

‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, ‘காப்பி ஆத்தத்தான் போவே’, ‘சிரைக்கவா வந்தே?’ என்கிற ரீதியில் பேசும் முட்டாள் வாத்தியார்கள் லிஸ்டில் உரையாசிரியர்கள் அவரை வைத்தது சோகம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

என்பது ஒரு சுவாரஸ்யமான குறள்.

திருவள்ளுவர் எதை வலியுறுத்துகிறாரோ அதற்கு நேர் எதிரிடையாகத்தான் பெரும்பாலான உரையாசிரியர்களும்,(பரிமேலழகர் உள்பட!) தமிழாசிரியர்களும் இதற்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மு.வரதராசனார் மட்டும் விதிவிலக்கு.

அறத்தின் பயன் இன்னதென்று சொல்லத் தேவையில்லை, பல்லக்கைத் தூக்குகிறவர்களையும், அதில் பயணம் செய்பவர்களையும் பார்த்தாலே போதும் என்கிற ரீதியில்தான் எல்லாரின் உரையும் அமைந்திருக்கிறது. அதிலும் கலைஞர் கருணாநிதி இதே அர்த்தத்தை இன்னும் அவருடைய திறமையெல்லாம் சேர்த்து எழுதியிருக்கிறார்.

அது பொருளாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நானும், மு.வ. அவர்களும் மட்டும்தான் சரி என்று சொல்வது அறியாமையாக இருக்கும். பரிமேலழகரை விட நான் மேதாவி என்று நினைத்துக் கொண்டால் அது அறியாமையின் உச்சம். ஆனால் இந்தக் குறளை வேறொரு கோணத்திலும் பார்க்க முடியும். அந்தக் கோணத்தில் பார்க்க முதலில் திருவள்ளுவர் மேல் ஒரு நம்பிக்கை வேண்டும்.

பல்லக்குத் தூக்குகிறவனுக்கு அது தலையெழுத்து என்றோ, முன்வினைப் பயன் என்றோ அர்த்தம் வருகிற மாதிரி வள்ளுவர் பேசுவாரேயானால், சில தொழில்களைக் கேவலமாக அவர் நினைக்கிறார் என்று பொருளாகிவிடும். எந்தத் தொழிலும் கீழானது அல்ல என்பதே நிஜம். இதை வள்ளுவரும் கூட வேறொரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்

என்கிற குறளை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

சிறப்பு ஒவ்வா என்று ஏன் சொல்கிறார் என்றால், தொழிலை வைத்துச் சிறப்பை (உயர்வு, தாழ்வை) சொல்ல முடியாது என்கிறார். தொழிலில் வித்யாசங்கள் உண்டே ஒழிய ஏற்றத் தாழ்வு கிடையாது என்கிறார்.

அறத்தைச் செய்யாததால் விதி உனக்கு ஆப்பு வைத்துவிட்டது. அறம் செய்தவன் நோகாம நுங்கு தின்கிறான் பார் என்கிற தொனியில் ஒரு அறவுரையை சொல்கிற ஆட்டிட்யூட் இருந்திருந்தால் அவரை இந்தச் சமூகம் எப்போதோ நிராகரித்திருக்கும்.

அந்த இடத்தில் போய் அறவுரையே சொல்லக் கூடாது.

ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் ஒருத்தனிடம் இப்படிச் சொன்னால், “அறமாவது, ……………வது, இப்படி ஆப்பு வைக்கிற அறம் எனக்குத் தேவையே இல்லை” என்பது அவனுடைய ரியாக்‌ஷனாக இருக்கும். பல்லக்கில் போய்க் கொண்டிருக்கிறவனிடம் இப்படிச் சொன்னால் மண்டைக்கனம் ஏறி, ஆஹா…. ஏற்கனவே நிறைய அறம் செய்தாகிவிட்டது. பாக்கி வாழ்க்கை அனுபவிக்க மட்டுமே என்கிற எண்ணம் வந்துவிடும். ஆக இரண்டு பேருக்குமே அறன் வலியுறுத்தல் ஒர்கவுட் ஆகாது.

பல்லக்குத் தூக்குவது ஒரு உதாரணம்தான்.

ஊர்ந்தான் இடை என்று முடித்திருக்கிறார் பாருங்கள்.

உழைக்கிறவனுக்கும், உழைப்பை அனுபவிக்கிறவனுக்கும் இடையே ஒப்பீடாக அறத்தை போதிக்காதீர்கள் என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவந்தது. அறத்தாறு இதுவென வேண்டா – என்றால் அறத்தால் வந்த வினை இது என்று சொல்லாதீங்கடா என்று அர்த்தம்.

இதை மிகச் சரியாகத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறவர்கள்தான் அதிகம். இந்த மாதிரி அபரேஷன்கள் கூடுமானவரை வராமல் எழுதியிருக்கிறேன் என் திருக்குறள் புத்தகத்தை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisements