எஸ்.வி.சேகர்

அடிச்சிக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லாதிங்க

தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கும், அவர்களுக்குப் பெரும்பாலும் துணையாக இருந்த தமிழகக் காவல்துறைக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

 மன்னிக்கவும், ’பிடிச்சது அறுபது கோடின்னா விட்டது எவ்வளவு இருக்கும்’ என்கிற பாமரச் சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் திருமங்கலம் அளவு மோசமில்லை என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.

 போஸ்ட்மேன் மூலமும், செய்தித்தாள் மூலமும், ஸ்ட்ரேஞ்சர்கள் மூலமும் பணப்பட்டுவாட நடந்திருப்பதை ஆங்கில செய்தி அலைவரிசைகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. பால் பாயிண்ட் பேனாவுக்குள், போஸ்டர்களின் பின்புறம் சொருகி என்றெல்லாம் லஞ்சம் கொடுப்பதில் இன்னவேஷன்களைக் காட்டியிருக்கிறது மதுரை மாவட்டம். வாங்குவதில் மட்டும்தான் விற்பன்னர்கள் என்று நினைத்தோம், கொடுப்பதிலும் விற்பன்னர்கள் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.

 வம்புகளைச் சுடச்சுட வழங்கும் ஆங்கில செய்தி அலைவரிசைகளைப் பார்ப்பது ஒரு அடிக்‌ஷனாகப் போய்விட்டது. டைம்ஸ் நெளவிலும், ஹெட்லைன்ஸ் டுடேவிலும் தி.மு.க வின் சார்பாக குஷ்பூ மாட்டிக் கொண்டு முழி பிதுங்கினார்.

 ராகுல், கையில் தேர்தல் கமிஷனின் ஸ்டேட்மெண்ட்டுடன், திமுகவிடம் பிடிபட்ட ஐம்பது கோடிக்கு என்ன சொல்கிறீர்கள் என்று மறுபடி மறுபடி கேட்டார்.

 ‘அடிச்சிகூடக் கேப்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க’ என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள் போலிருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் ஆறாயிரம் கொண்டு போனால் கூடப் பிடிக்கிறார்கள் என்று அதே பல்லவியை எல்லா டிவியிலும் பாடினார்.

 இந்தப் பரிதாபத்தைப் பார்த்து சிரிக்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல் திங்கட்கிழமைக் காலை மேனேஜர் மாதிரி முகபாவத்துடன் மணிசங்கர் ஐயர் உட்கார்ந்திருந்தார். ஆனால் அதே கேள்விக்கு அருமையான பதில் கொடுத்தார்,

 “பாக்கி பத்துகோடி எதிர்க்கட்சிகள் தந்ததுதானே? அதுக்கென்ன சொல்றீங்க?” என்று மட்டும் கேட்டார். “அந்தப் பட்டியல்லே காங்கிரஸ் தலைவர்கள் பேர் இல்லை” என்று திருப்திப்பட்டுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் ’வாங்குவதை’ டிசெண்ட்ரலைஸ் செய்தால்தானே தருவதற்கு காசு இருக்கும்? அதுதான் சிங்கிள் விண்டோ சிஸ்டம் ஆயிற்றே!

 ‘நீங்களும் ஊழல் பேர்வழிகள்தானே?’ என்கிற கேள்விக்கு மைத்ரேயன்,

 “போடப்பட்ட 13 வழக்குகளில் 12ல் தலைவி மேல் தப்பில்லை என்று தீர்ப்பு வந்தாயிற்று. இன்னொன்றை தி.மு.க தாமதித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே எங்களை ஊழல் என்று சொல்வது அனெதிக்கல்” என்றார்.

 வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிற போதெல்லாம் தி.மு.க தான் ஜெயித்திருக்கிறது என்கிற சன் டிவியின் ஹேஷ்யத்திற்கு,

 “வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிற போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது” என்று சொல்லி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் மைத்ரேயன்.

 ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த ரஜினி வார்த்தைகளைக் கவனமாகப் பேச ரொம்பக் கஷ்டப்பட்டார். பேசின நாற்பது வார்த்தைகளில் இருபத்திமூன்று “ஆக்சுவல்லி”. அன்னா ஹஸாரேக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார்.

 எஸ்.வி.சேகரை மடியில் கட்டிக் கொண்ட காங்கிரஸ் அவிழ்த்து உதறிவிட்டது. நீக்குவதற்கு தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

 உண்மைதான், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு தலைமை என்றைக்கு அதிகாரம் தந்திருக்கிறது!

பட் அந்த டீலிங் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது

அடுத்த என்.டி.ஆர். என்கிற இன்பக் கனவில் கட்சியை ஆரம்பித்தார் சிரு.

 தேர்தல் முடிவுகள் அவரை என்.டி.ஆராகவும் அங்கீகரிக்கவில்லை, சிவாஜி பாக்கியராஜ் கட்சி மாதிரி சுத்தமாக நிராகரிக்கவும் இல்லை. கடையை மூடிவிட்டு சினிமா வேலையைத் தொடரலாம் என்றால் அவரை நம்பி பதினெட்டு எம்.எல்.ஏ க்கள்! அரசியலில் ஆர்வத்தைத் தொடரலாம் என்றால் இந்தப் பதினெட்டு முப்பத்தாறாகி, முப்பத்தாறு எழுபத்திரெண்டாகி…. ம்ம்ஹூம் அதற்குள் சந்திரபாபு நாயுடு சுதாரித்து விடலாம். அல்லது ஜூனியர் என்.டி.ஆரோ வேறே யாராவதோ கட்சி ஆரம்பிக்கலாம்.

கன்ஃப்யூஷன்! (ஜனகராஜ் மாதிரி படிக்கவும்)

ஓஹோ…. என்னைப் பார்த்தா ஒண்ணும் பண்ண முடியாதவன் மாதிரி இருக்கா என்று கொதித்தெழுந்த ஜகன்மோஹன் ரெட்டி அல்லும் பகலும் பேசி இருபத்திநாலு எம்.எல்.ஏ க்களின் ஆதரவோடு கட்சியை ஆரம்பித்து மீசையை நீவிக் கொண்டார்.

‘ஏண்டா டேய்…. நாங்க ஆனானப்பட்ட என்.டி.ஆருக்கே பாஸ்கர ராவை வச்சி ஆட்டம் காட்டினவங்க, நீங்கள்ளாம் பச்சாடா’ என்று காங்கிரஸ் யோசித்தது.

’டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ’ வில் இருந்த சிரஞ்சீவியை (கொம்பு) சீவியது. என்ன டீலிங்கோ நமக்குத் தெரியாது. அந்த டீலிங்க் சிருவுக்குப் பிடித்துப் போயிற்று.

சிரஞ்சீவிக்கு பிரெட்டு, ஜகனுக்குத் திரெட்டு!

சுபம்.

ஆந்திரா காங்கிரஸ்காரர்களிடம் உலக அரசியல் அரங்கு நிறையத் தெரிந்து கொள்ளவேண்டும்.

நம்ம ஊர்ல கூட காங்கிரஸ் கட்சியில ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கு. எஸ்.வி.சேகர் காங்கிரஸ்ல சேர்ந்திட்டாராம். எனக்கென்னமோ நடிகர் பொன்னம்பலம் அதிமுக வில் சேர்ந்ததுக்கும், இதுக்கும் பெரிய வித்யாசம் இருக்கிறதா தெரியல்லை.

அதே மைலாப்பூர் தொகுதிக்கு டிக்கெட்டும் கிடைச்சி ஜெய்ச்சியும் காமிச்சிட்டாருன்னா அதுவே பெரிய சாதனை!

கண்ணதாசனின் கிராஸ் கம்யூனிகேஷன்

அப்போது கவிஞர் கண்ணதாசன் ஒரு தி.மு.க. அனுதாபி.

பெருந்தலைவர் காமராஜின் கொள்கைகளிலும்,நடவடிக்கைகளிலும் கவரப் பட்டு அவருடைய அணிக்கு மாற ஆசைப் பட்டார். எப்படிச் சொல்வது?

பட்டணத்தில் பூதம் என்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத வேண்டியிருந்தது. அதன் பல்லவியை இப்படி எழுதினார் :

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னை
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

(திரு.காமராஜ் அவர்களின் தாயார் பெயர் – சிவகாமி)

அதற்கப்புறம், அவர் திரு.காமராஜின் அணிக்கு வந்த பிறகு, பழைய அணியின் திரு. அண்ணாதுரை சுகவீனம் அடைந்தார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய அவரை நலம் விசாரித்தாக வேண்டும். எப்படி?

தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஒரு பாட்டு.

நலந்தானா… நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா?

இந்த கம்யூனிகேஷன் வந்து சேர்ந்து விட்டது என்பதை திரு.அண்ணாதுரை எப்படி அங்கீகரித்தார் தெரியுமா?

இந்தப் பாட்டு வெளியான அடுத்த வாரம் ஆனந்த விகடன் பேட்டிக்கு அவர் புகைப் படத்துக்கு தந்த போஸில் நாதஸ்வரம் வாசிப்பது மாதிரி கையை வைத்துக் கொண்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்திருந்தார்.

அணிகளுக்கும் எதிர் அணிகளுக்கும் அன்று இருந்த நட்புணர்வு இன்று இல்லை!