கம்யூனிகேஷன்

இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்

ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.

விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.

நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.

ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.

இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.

ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.

ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.

தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.

“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.

“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.

“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”

இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.

என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.

லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.

எப்படி?

தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.

இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.

மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?

தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.

“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.

உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.

“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”

அவ்வளவுதான்.

கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது.

அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா

கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.

பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.

“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”

மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.

கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.

“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”

மாமி போய் விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து

“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.

கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.

மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.