கல்வி

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..

ம்ம்ஹூம்.

மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,

“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.

காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?

படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.

அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து

“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்

“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,

ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.

இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,

“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.

அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.

தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,

“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.

“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.

“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.

“அவனுக்கு காது கேக்காதுங்க”

Advertisements

தேவை – இன்னும் சில சீமாச்சுக்கள்….

சீமாச்சு என்று ஒரு ப்ளாக்கர் இருப்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாதிருக்கலாம்.

கீரன் அவர்கள், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற கம்ப இராமாயண வாசகம் பற்றி சொன்னதை நான் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அவரது ப்ளாக்கில் ஒரு இடுகை போட்டிருந்தார். அதுதான் அறிமுகம்.

அதற்கப்புறம் சில பல மின்னஞ்சல்கள் மூலமாகவும், அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்பு ஏற்பட்டது.

அவர் அமெரிக்காவில் இருக்கிற ஒரு NRI.

மாயவரத்தில் அவர் படித்த பள்ளியை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறவர். அந்தப் பள்ளிக்காக அவர் சம்பாதிக்கிற பணம் மொத்தத்தையும் செலவு செய்து கொண்டிருக்கிறவர். அமேரிக்கா போனவர்கள் கொஞ்சம் காசு பார்ப்பதையும், அந்தக் காசில் இங்கே செட்டில் ஆவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள். பிறிதொரு சாரார் இந்த நாட்டைப் பற்றி கவலையே இன்றி அந்த நாட்டு பிரஜை ஆனவர்கள்.

இவர் ரொம்ப வித்தியாசமானவர்.

அந்தப் பள்ளியிலிருந்து வருகிற ஒவ்வொரு குழந்தையும் தலை சிறந்த இந்தியப் பிரஜையாக வர வேண்டும் என்கிற உந்துதலில் இருக்கிறவர்.

ஒரு பள்ளியில் படித்து அவர் இன்று சிறப்பாக இருக்கிறார்.

அந்தப் பள்ளியில் படிக்கிற அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும், அதனால் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்.

இதில் ரொம்ப சிறப்பு என்ன என்று கேட்டால், என் அடுத்த நடவடிக்கை என்ன என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது இந்த அழைப்பு வந்ததுதான்!

என் தகப்பனார் அவரது தேசப்பற்று காரணமாகத்தான் நரசிம்மன் என்கிற என் பெயரை ஜவ(ஹ)ர்லால் என்று மாற்றினார்.

இந்த தேசத்துக்கு நான் ஏதாவது செய்ய விரும்பினால், அது நல்ல பிரஜைகளை உருவாக்குவது மூலம்தானே செய்ய முடியும்? ஷிவ் கேராவின் யு கேன் வின் படிக்கும் போது அவரது ஆதங்கமான பள்ளிகள் ஆட்டிட்யூடை சொல்லித் தருவதில்லை என்கிற செய்தியை கண்ணீருடன் படித்த நான், அந்த ஆட்டிட்யூடை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஒரு வாய்ப்பு கிட்டுகிற போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

என்னால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.

சீமாச்சுவின் கிரீடத்திற்கு ஒரு இறகாகும் சிறிய முயற்சி இது.

இன்னும் சில சீமாச்சுக்கள் இந்த நாட்டுக்குத் தேவை!

ஆங்கிலம் கற்க வாருங்கள்

கொஞ்ச நாள் முன்பு ஹிந்தி கற்றுக்கொடுத்தேன்.

எல்லாரும் ஆர்வமாக கற்றுக்கொண்டீர்கள். (அன்புடன்) அருணா மேடம் ஆங்கிலம் எப்போது என்று கேட்டிருந்தார்.

இதோ….

கல்லூரிக் கட்டணத்தை கெடுவுக்கு முன்னாலேயே கட்டிட்டேன் : I have tied the college fees in front of the due date

நேற்று கோயிலுக்கு என் மனைவியோடு வந்த போது உங்களைப் பார்த்தேன் : I saw you with my wife yesterday at temple

எத்தனை மணிக்கு பல் விளக்குவீங்க? – What time do you explain the teeth?

கூச்சப் படாமே சாப்பிடுங்க – Eat shamelessly

எனக்குக் கொஞ்சம் மோர் கொடு – Give me some more

மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை – Mustache also wants, paste also wants

உன்னாலே ரெண்டு கேக்கை சாப்பிட முடியாது – You can’t have the cake and eat it too

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் – Scold when there is wind

என் மனைவி பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள். வீட்டில் பொறுப்புள்ள ஒரே நபர் நான்தான் என்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும். – My wife is admitted to hospital for delivery. as I am the only responsible person for it, I want one day leave.

“அவ காட்டறா” ஹைபாதெசிஸ்

நானும் என் நண்பர்களும் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தோம்.

வாரம் ஒருமுறை பல்லாவரம் ஜனதா தியேட்டர் அருகே இருக்கிற குட்டிச் சுவரில் உட்கார்ந்து அப்டேட் செய்து கொள்வோம்.

“என்னடா கலை, போன வாரம் இண்டர்வ்யூ போயிருந்தியே என்ன ஆச்சு?”

“அந்த வேலை கிடைக்காது மச்சி”

“ஏண்டா, என்ன ஆச்சு?”

“இண்டேர்வ்யூவிலே போய் உட்கார்ந்ததுலேந்து பாயில்ஸ் லா தெரியுமா, ஓம்ஸ் லா தெரியுமா, ந்யூடன்ஸ் லா தெரியுமான்னு கேட்டுகிட்டு இருந்தான். ஐ ஆம் நாட் எ லா கிராஜுவேட் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

அவன் இப்போது பி ஹெச் ஈ எல் லில் மேலாளராக இருக்கிறான்.

படித்தது எல்லாம் நமக்குப் பயன்படுகிறதா?

நமக்கு முன்னால் எவனாவது பிரமோஷன் வாங்கி விட்டால் ரத்தம் கொதிக்கிறதே, அதுதான் பாயில்ஸ் லாவா?

அவோ காட்ராஸ் ஹைபாதேசிஸ் பயன்படுகிறதோ இல்லையோ “அவ காட்டறா” ஹைபோதேசிஸ் சினிமாக்காரர்களுக்குப் பயன்படுகிறது.

எனக்கு இன்றுவரை ஆரம்பக் கல்வியில் பயின்ற தமிழும்,ஆங்கிலமும்,கூட்டல்-கழித்தல்-பெருக்கல்-வகுத்தலும்தான் பெரும்பாலும் பயன்பட்டு வருகிறது.

உங்களுக்கு?