காந்தி

நேருவும் மு. க. அழகிரியும்

”என்னடா, வேலை எதுவும் இல்லாம ஓபி அடிச்சிகிட்டு இருக்கே?” என்றபடி உள்ளே வந்தான் என் நண்பன்.

”உம் வாக்கியத்தில் பிழை இருக்கிறது” என்றேன்.

“எதில் குற்றம் கண்டீர் சொல்லிலா அல்லது பொருளிலா” என்றான் மூக்கருகே ஆள்காட்டி விரலை ஆட்டி.

“சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம். வேலை இருந்தாத்தான் ஓபி அடிக்க முடியும்”

“சரி, இப்ப எந்த வேலையை விட்டுட்டு ஓபி அடிக்கறே?”

“ஓபின்னா இது ஒரு மாதிரி இலக்கிய ஓபி. ஒரு புத்தகம் எழுதி முடிச்சிக் குடுத்தாகணும். அதுல ஒரு விஷயம் புரியாததால் காங்கிரஸோட வரலாற்றைப் படிக்க வேண்டியிருந்தது”

“வரலாறு என்ன சொல்லுது?”

“கோஷ்டிகள் காங்கிரஸுக்குப் புதிசில்லை. 1885 இல்  தொடங்கப்பட்ட காங்கிரஸ்  1907ம்  ஆண்டே  இரண்டாகப் பிளந்தது.  பாலகங்காதரத் திலகரின் தீவிர  கோஷ்டி  மற்றும்  கோகலேயின்  மிதவாத  கோஷ்டி  என்று ஆயிற்று”

“அட.. இண்ட்டரஸ்டிங்!”

“அதை விட இண்ட்டரஸ்டிங் ‘வெள்ளையனே வெளியேறு டைப் போராட்டத்தை திலகர் 1907 லேயே ஆரம்பிச்சாச்சு. அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி அனுப்பிட்டு 1942ம் வருஷம் நானே சிந்திச்சேன் போல காந்தி திரும்ப அந்த இயக்கத்தை ஆரம்பிச்சார்!”

“போப்பா.. சும்மா குறை சொல்லாதே 1907 ல காந்தி இந்தியாவிலயே இல்லை. தன்னாப்பிரிக்காவில் இல்ல இருந்தார்?”

”சரி அதை விடு. இன்னொரு சுவாரஸ்ய விஷயமும் உண்டு. 1920 இல் காந்தி தலைமை ஏற்ற போது கிலாஃபத் இயக்கம் என்கிற இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்தது பிடிக்காம மோதிலால் நேரு உள்பட பலரும் வெளியேறி ஸ்வராஜ்ன்னு புதுசா கட்சி ஆரம்பிச்சாங்க”

“அட, நேருவும் மோதிலாலும் வெவ்வேறு அணியா!”

“ஆமாம். நம்ம மு. க., அழகிரி போல”

“அட.. அப்ப அழகிரி ஆதரிக்கிற சைடுதான் பெருசா வருங்கிறியா?”

“நா எதுவும் சொல்லல்லை. நீதான் சொல்றே, ஆளை விடு”

Advertisements

நானும் அங்கேதான் போறேன்

சீட் காலியாக இருக்கிறதே என்று மூன்றாம் வகுப்புப் பெட்டியில் காலை நீட்டிப் படுத்தபடி போய்க் கொண்டிருந்தாராம் காந்தி.

அசதியில் தூங்கியும் விட்டார்.

கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்த பிறகு குடியானவர் ஒருவர் வந்து, “யோவ் பெருசு.. இதென்ன உங்கப்பன் வீட்டு வண்டியா? எழுந்து உக்காருய்யா” என்கிற ரீதியில் கடுப்படித்திருக்கிறார்.

காந்தி அமைதியாக எழுந்து இடம் கொடுத்து விட்டார். பின்னர் மெல்ல அந்த ஆளிடம், “எங்கே போறீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

“பேதியாங்கிற இடத்தில் மஹாத்மாஜியோட மீட்டிங். அதுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன். நீ எங்கே (தூ என்கிற பதத்தை உபயோகித்தாராம்) போறே?” என்றார் அந்த ஆள்.

“நானும் அதே மீட்டிங்குக்குத்தான் போய்கிட்டிருக்கேன்” என்று மட்டும் சொன்னாராம் காந்தி.

இதைப் படிக்கும் போது Hilaire Belloc எழுதிய A Conversation with a Reader என்கிற கட்டுரை ஞாபகம் வந்தது. ரயிலில் போகும் போது எதேச்சையாய் எதிரிலிருக்கும் பிரயாணி இவரது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலாய் அவரிடம் ’புத்தகம் எப்படி?’ என்று கேட்பார். ‘Silly Stuff’ என்று அவன் பதில் சொல்வானென்று தொடங்கும்.

அபிமான எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து அவர்களை நேரில் பார்க்காத வாசகர்கள் ஏராளம் பேர்கள் இருந்தார்கள் ஒருகாலத்தில். அப்போதெல்லாம் பொதுவாக எழுத்தாளர்கள் படத்தைப் பத்திரிகையில் போடுவது கிடையாது. எழுத்துக்களின் தன்மையின் அடிப்படையில் நாமே ஒரு இமேஜை உருவாக்கிக் கொள்வது பொதுவாக எல்லாருமே செய்வது. முதன் முதலில் நேரில் சந்திக்கும் போது கட்டாயம் நிறைய அதிர்ச்சிகள் இருக்கும். உருவத்தால் மட்டுமல்ல, குணங்களாலும். ஒருவரின் எழுத்துக்கள் அவரைப் பிரதிபலிப்பதில்லை என்கிற உண்மையைத் தாமதமாய்த்தான் நாமெல்லோரும் அறிகிறோம்.

ஹில்லரி பெல்லாக்கிற்கு நேர்ந்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அதற்கு முதலில் நான் எழுத்தாளர் ஆக வேண்டும், பிரபலமும் ஆக வேண்டும். முதலாவதை மட்டுமாவது இந்த ஆண்டுக்குள் செய்து விட ஆசை!

’உண்மய சொன்னேன்’

என் காலத்துக் குழந்தைகளுக்கு வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள். என்னுடைய ஏழாங்கிளாஸ் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர்.

 மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும்.

 ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது.

 “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை.

 தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் மனைவியும் மகன்களும் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!)

 போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை.

 சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

 பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது.

 வெளிப்பாளையத்திலிருந்து வரும் பையன்கள் சைக்கிளில் வருவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க  வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன்.

 “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார்.

 “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

 “……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.

 “எந்த ………………………………….? பெரிய கடத்தெருவில ரொட்டிக்கடை வச்சிருக்கானே அவனா?”

 “அவரேதான்”

 அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார்.

 டண்டர… டண்டர…. டண்டர என்று கேவி மஹாதேவன் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார்.

 அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது.

 இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன்.

 “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது.

 வீட்டுக்கு வந்து, “……………………………… வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது,

 “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி.

 அது என்ன என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

தீக்குளிப்புகளுக்கு யார் பொறுப்பு?

தீக்குளிப்பு மரணங்கள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பவை என்பதில் சந்தேகமில்லை.

அவை நிகழாமல் தடுக்கப் பட வேண்டியவை என்பதிலும் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

எப்படித் தடுப்பது?

ஏன் நிகழ்கின்றன என்பது தெரிந்தால்தான் எப்படித் தடுப்பது என்பது புரியும்.

எந்த ஒரு பிரச்சினையையும் அறிவுப் பூர்வமாக அணுகும் போது பெரும்பாலும் தீர்வு கிடைத்து விடும். ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அந்தப் பிரச்சினையோடு வாழ்வது எப்படி என்கிற உபாயமாவது தெரியும்.

உணர்வுப் பூர்வமாக அணுகுகிற போது பெரும்பாலும் தீர்வு கிடைப்பதில்லை. கிடைக்காதது மட்டுமில்லை அதனால் வரும் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்கிற பக்குவமும் இல்லாமல் போகிறது. உயிரை மாய்த்துக் கொள்கிற அளவுக்கு உணர்வு தூண்டப்படுகிறது.

ஏன் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை?

அப்படித்தானே அரசியல்வாதிகள் நம்மைப் பழக்கி இருக்கிறார்கள்.

தேசப்பற்று என்பதை ஒரு உணர்வாக ஊட்டியவர்கள் தேசியக் கட்சி. மொழிப் பற்றை உணர்வாக ஊட்டியவர்கள் மாநிலக் கட்சிகள்.

அஹிம்சைத் தத்துவம் என்ன சொல்லிக் கொடுத்தது? செத்தாலும் பரவாயில்லை கொள்கையை விட்டுக் கொடுக்காதே என்றுதானே? நீ எத்தனை ஹிம்சைக்கு ஆளானாலும் கொள்கையை விடாதே என்றுதானே?

அதைத்தானே நம் லோக்கல் அரசியல்வாதிகள் தத்தெடுத்தார்கள்?

அஹிம்சை போதித்தவர்  அதிக ஹிம்சைக்கு ஆளாகவில்லை. ஆனால் அதைக் கற்றுக்கொண்ட எத்தனை பேர் செத்துப் போனார்கள்?

ராணுவத்தை சந்திக்கத் தயார், தூக்கு மேடைக்குப் போகத் தயார், சாவது ஒருமுறை அது இதற்காக இருக்கட்டுமே என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பேசுகிறவர்கள் கிழங்கு மாதிரி முழுசாக, சௌக்யமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அந்த உணர்வை ஏற்றிக்கொண்ட ஆசாமிகள் தீக்குளித்து செத்துப் போகிறார்கள்.

அத்தோடு நின்றாலாவது பரவாயில்லை.

தீக்குளித்தவர்களுக்கு தியாகிப் பட்டமும், மேடைக்கு மேடை பாராட்டும், ஊர் பூரா போஸ்டரும் ஒட்டுகிறார்களே, இது தீக்குளிப்புகளை மேலும் ஊக்குவிக்கத்தானே செய்யும்?

வருத்தப் படுவது சரிதான், அந்த வருத்தத்தை விளம்பரப் படுத்தாமலாவது இருக்கலாமே?

நம் ஜனங்கள் எப்போது அறிவுப்பூர்வமான அணுகுமுறையை கற்றுக் கொள்வார்கள்?

மொழி என்பது ஒரு உணர்வு அல்ல என்று சொன்னாலே படித்தவர்கள் கூட உணர்ச்சி வசப் படுகிறார்களே!

அஹிம்சை என்றால் என்ன?

காந்தியிடம் போற்றத் தகுந்த குணங்கள் எதையாவது பார்க்கிறீர்களா?

என்று கோபால் கோட்சேயிடம் (காந்தி கொலை வழக்கிற்காக பல்லாண்டுகள் சிறையில் இருந்து வெளி வந்தவர். நாதுராம் கோட்சேயின் சகோதரர்) டைம் பத்திரிகை நிருபர் கேட்ட போது, அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் :

ஒன்று மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை தான் காட்டுகிற வழியில் போக வைத்தது. மற்றொன்று சிறைச்சாலை மேல் மக்களுக்கிருந்த அச்சத்தைப் போக்கியது.

கொலை வெறி கொண்டவராலேயே இரண்டு நல்ல விஷயங்களைப் பார்க்க முடிகிறது என்றால், இதை விட ஒரு மனிதரின் சிறப்புக்கு வேறு சான்று தேவையில்லை.

காந்தியின் கொள்கைகள் எல்லாமே இந்த நாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டவை என்பதால், அவற்றை விமரிசிக்கிற துணிவு யாருக்கும் இருந்ததில்லை. ஒரு வேளை காந்தி இந்தத் தலைமுறை மனிதராக இருந்தால், மீடியா இசகு பிசகாகக் கேள்வி கேட்டு அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துமோ என்னவோ…

எனக்கு அஹிம்சை பற்றி ஒரு நிரடல் உண்டு.

என்னை ஒருத்தன் அடிக்கும் போது பொறுத்துக் கொண்டால் அது அஹிம்சை. அவனே உங்களை அடிக்கும் போது பொறுத்துக் கொள்ளச் சொல்லி போதிப்பது ஹிம்சை இல்லையோ?

என்னுடைய, மேற்சொன்ன வாதம் தப்பு என்று எனக்குப் புரிகிற மாதிரி யாராவது சொன்னால் சந்தோஷப் படுவேன்.