கிரிக்கெட்

லோக்பால்-சில சந்தோஷங்கள், சில பயங்கள்

லோக்பால் வெற்றியை எங்கள் தெரு சமூக ஆர்வலர்கள் பாலாஜியும், நாராயணனும் பட்டாஸ் வெடித்து ஃபைனலில் பாகிஸ்தானை இந்தியா ஜெயித்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 நிச்சயமாக இதில் சந்தோஷம் இருக்கிறது.

 ஆனால் இதை வெற்றி என்று வர்ணிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. இது வெற்றி என்றால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தோல்வி என்றாகிறது. அதற்கு அப்புறம் வரலாம்.

 நாட்டின், நாட்டு மக்களின் நன்மையைக் கருதி தைரியமாக, விடாமுயற்சியுடன் குரல் கொடுக்க ஒரு மாமனிதர் கிடைத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய சந்தோஷம். அவரை ஆஃப் செய்ய அடக்குமுறையிலிருந்து அவதூறுப் பிரச்சாரம் வரை எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டும் அவை எடுபடாமல் போனது மிக மிகப் பெரிய சந்தோஷம்.

 சாந்திபூஷன் பெயரை ரிப்பேராக்குவதற்கு அரசியல் மாமாக்கள் உதவியுடன் முயற்சி நடந்தது. வெளியிடப்பட்ட ஒலித் தகடு ஜெனூயினானதுதான் என்று லேப்கள் சான்றிதழ் வழங்கும் அளவுக்குப் போனார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாதது மிக மிக மிகப் பெரிய சந்தோஷம்.(எதிரிகளுக்கு ஆப்பு வைக்க எலக்ட்ரானிக் மீடியாவை பயன்படுத்தும் ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி இந்த நாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. பொதுநலச் சிந்தை இருக்கும் மின்னணுப் பொறியாளர்கள் இந்த மாதிரி விஷயங்களின் ஜென்யூனிட்டி இன்மையை எவ்விதம் கண்டறியலாம் என்கிற அவேர்னஸைப் பரப்பினால் நல்லது)

 அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற உறுதியைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. பள்ளிப் பிள்ளைகள் முதல், ரிடையர் ஆனவர்கள் வரை எல்லாத் தரப்பினரும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆதரவுக் குரல் தந்தது ஒரு சந்தோஷம்.

 ஆங்கில, செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கின்றன. நாடெங்கும் இந்த நல்ல முயற்சி பரவவும், ஆதரவு பெருகவும் இந்தத் தொலைக் காட்சி நிறுவனங்கள் முக்கிய காரணம். இவைகளின் முயற்சியின்றி இது நடந்திருக்கவே முடியாது என்று கூடச் சொல்வேன். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மீடியாக்கள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமேயானால் ஆங்கிலேயர்கள் இருநூறு வருஷம் ஆண்டிருக்க முடியாது என்பது மட்டுமில்லை, இரண்டு வருஷம் கூடத் தாக்குப் பிடித்திருக்க முடியாது என்பது திண்ணம்!

 பிரபல தமிழ் செய்தி சேனல் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் லோக்கல் அரசியலின் குழாயடிச் சண்டைகளை ஒளிபரப்பிக் கொண்டு, படுதோல்விகளின் ஒரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்றித் துளிகளை வெளிச்சம் பொட்டுக் காட்டிக் கொண்டு, கொலைகாரர்களுக்கு மன்னிப்புக் கோரி உருக்கமாக வேண்டிக்கொண்டு நேரத்தை உபயோகமாகச் செலவு செய்து கொண்டிருந்தது.

 சந்தோஷங்களைச் சொல்லியாகிவிட்டது. இப்போது சில பயங்கள்.

 இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், ஊழலைக் கட்டுப்படுத்த, இருக்கிற சட்டங்கள் போதாது என்று உலகம் பூரா தமுக்கடித்து அறிவித்த மாதிரி இருக்கிறது. இருக்கிற சட்டங்கள் போல இதுவும் புஸ்வாணமாகிப் போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

  1. லோக்பால் உறுப்பினர்கள் எல்லாரும் நியமன உறுப்பினர்கள். நியமிக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்களின் நேர்மையைப் பொறுத்துதான் குழுவின் நேர்மையும் நம்பகத் தன்மையும் அமையும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசை காட்டப்பட்டோ, மிரட்டப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ தவறான தேர்வுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
  2. உண்ணாவிரதத்துக்கே அரசாங்கத்துடன் பேரத்தில் இறங்கி, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட கால அவகாசம் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கைக்கு மட்டும் மக்கள் கூட்டம் சேர்த்து போராடியவர்கள், அரசாங்கத்தின் இதர பேரங்களுக்கும் படிப்படியாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
  3. அன்னா ஹஸாரேவும் அவர் ஆதரவாளர்களும், ஆசையினாலோ, மக்களின் வற்புறுத்தலாலோ, அரசியலின் நிலையின்மை காரணமாகவோ, வேறு ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாகவோ முழுநேர அரசியல்வாதிகளாக மாறமட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
  4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, நியமன உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, முசோலினி டைப் அரசாங்கம் இங்கே அமைய முன்னோடியாய் அமைந்து விடாதா?

 வழக்கமான Devil’s advocate வேலையைச் செய்துவிட்டேன். Devil க்கு தகுதியான விடை தரும் Angel களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நாலு பேருக்கு நல்லதுன்னா…..

கிரிக்கெட் தெரியாமலோ, அதில் சுவாரஸ்யம் இல்லாமலோ இருப்பது ஒரு கலாச்சாரப் பிழையாகக் கருதப்படுகிறது.

 ”அமெரிக்கா எத்தனை ரன்?” என்று கேட்கிற லெவலில் இருந்தவன் நான். அமெரிக்கா விளையாடுவதில்லை என்கிற அளவுக்குத்தான் இதுவரை ஞானம் வளர்ந்திருக்கிறது. (விளையாடவில்லைதானே?)

கிரிக்கெட்டை யார், எங்கே எப்போது விளையாடினாலும், வாயை நீரின் மேற்பரப்புக்கு வரும் மீன் மாதிரி வைத்துக் கொண்டு பார்க்கிறவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாக இருக்கும். என் மாமனாரும், இளைய மகனும் 1987ல் நடந்த மேட்சைக் காட்டினாலும் அதே பிரமிப்புடன் பார்ப்பார்கள்.

“ஆறின கஞ்சி பழங்கஞ்சி… இதைப் போய் ஏண்டா பார்த்துகிட்டு இருக்கே?” என்று கேட்டால்,

“ஏன், பழசைப் பார்க்கக் கூடாதா?” என்று வெடிப்பான்.

“இல்லடா, அதுல யார் ஜெயிச்சாங்கன்னு தெரிஞ்சாச்சு, அதுக்கப்புறம் அதுல என்னடா திரில்?”

“ஜெயிப்பு, தோல்விக்கு மேல எதுவுமே இல்லாம இருக்கிறதுக்கு அது ஒண்ணும் மூணு சீட்டு இல்லைப்பா”

“சரிடா, எட்டு சீட்டு அதிகமா இருக்கலாம், அப்பவும் அதுல என்ன இருக்கு பார்க்க?”

“இதோ பார், இந்த பாலை ஏறி வந்து அடிச்சிருந்தா கபில்தேவ் அவுட் ஆயிருக்க வேணாம். இவ்வளவு ஸ்லிப் வேணாம், மிட் ஆன்ல யாருமே இல்லாததால அடிச்சி விளாசறாங்க பார், கேட்ச்சை வாங்கும் போது கையை இறக்கிற சமாச்சாரம் அப்ப இல்லை பார், அதான் டிராப் பண்றான்……” என்றெல்லாம் டோனி கோசியர் மாதிரி விமரிசனத்தை ஆரம்பிப்பான்.

“உனக்கு சரி, மத்தவங்களுக்கு?” என்று மட்டும் கேட்பேன்.(தர்மபுரி மாவட்ட டீமுக்கு விளையாடி, அவ்வப்போது ஹிந்து நாளிதழின் கோயம்பத்தூர் எடிஷனின் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் இடம் பெற்றவன். ராபின் சிங், டபிள்யு.வி. ராமன் உள்ளிட்ட சில பிளேயர்களிடம் பரிசு வாங்கியவன். ஆகவே கிரிக்கெட்டை ரொம்பத் திட்டினால் என்னைத் தேசத் துரோகியாகப் பார்ப்பான்)

“மத்தவங்க டீம் ஸ்பிரிட் கத்துக்கலாம், ஃபோகஸ் கத்துக்கலாம், பிரஸன்ஸ் ஆஃப் மைண்ட் கத்துக்கலாம், எ ஃபுட் பால் ப்ளேயர் இஸ் மோர் குளோஸ் டு காட் தேன் எ யோகின்னு விவேகானந்தர் சொன்னதா அடிக்கடி சொல்வியே, அது பார்க்கிறவங்களுக்கும் பொருந்தும்”

“அது சரி, அது உன்னை மாதிரி ஐம்புலன்களும் ஒன்றி பார்க்கிறவங்களுக்கு சரி. ஒரு கையில துக்ளக்கும், இன்னொரு கையில காராச் சேவுமா உட்கார்ந்து கிட்டு காது இங்கே இல்லாம வாசல்லே விற்கிறது கீரையா, இராலான்னு பார்த்துகிட்டு இருக்கு. கிச்சன்லே சமைக்கிறது உருளைக் கிழங்கு பொடிமாஸா கொத்தவரைங்காய் துவட்டலான்னு மூக்கு பார்த்துகிட்டு இருக்கு. வாய், இன்னைக்கு லீக் ஆகிற பால் பாக்கெட் போட்டவனைத் திட்டிகிட்டு இருக்கு …………………”

“அப்பா ஸ்டாப்…. கண் காது மூக்கு போதும். சென்ஸார் இல்லைன்னா ஏதேதோ சொல்ல ஆரம்பிச்சிடுவே. இதனால் நீர் மன்னருக்குச் சொல்ல விரும்பும் கருத்து?”

“அப்படி இன்வால்வ்மெண்ட் இல்லாமப் பண்றதா இருந்தா தியானம் மட்டுமில்லை, கிரிக்கெட்டும் பிரயோஜனமில்லை”

“அது சரி, பல சமயம் விளையாடறவங்களே அடுப்புல பால் வெச்சிட்டு வந்த மாதிரி அவசரமாத் திரும்பிப் போயிடறாங்க, பாக்கறவங்க அப்படி இருந்தா தப்பில்லை”

“ஆக மொத்தம் பார்த்த மேட்சைப் பார்க்கிறது தப்பில்லைங்கிறே?”

“பார்த்த அயன் படத்தை திரும்பப் பார்க்கிறது, கேட்ட ஹரிஹரன் கஸலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறது, படிச்ச கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு புத்தகத்தைத் திரும்பப் படிக்கிறது…….”

“ஹோல்ட் ஆன்…… தப்பில்லையான்னா, தப்பில்லைன்னு சொல்ல வேண்டியதுதானே, அதுக்காக இப்படி குத்தி, கீறி, பிராண்டிக் காட்டணுமா?”

“நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு ஸ்வாமி மணிரத்னானந்தா சொல்லியிருக்கார்”

“யார் அந்த நாலு பேர்?”

“ஸ்பான்ஸெர்ஸ், ப்ளேயர்ஸ், கிரிக்கெட் போர்டு, எலெக்ட்ரிஸிட்டி போர்டு”

சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும்

நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பரத்தில் சொல்லப்படும் எச்சரிக்கை ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவருக்கும் பொருந்தும்.

கடைசி ஓவர் வரும்போது நிஜமாகவே நாற்காலியின் முனைக்கு வருகிறவர்களைப் பார்க்க முடிந்தது. சிலர், முதல் விமானப் பயணத்தின் டேக் ஆஃப் போலவும், சிலர் பேதிக்கு சாப்பிட்ட மாதிரியும் முகத்தை வைத்திருந்தார்கள். கடைசிப்பந்து வீசப்படும்போது லட்சுமி வெடிக்கு நெருப்பு வைத்துவிட்டுக் காத்திருக்கிற மாதிரி பல்லைக் கடித்து, காதைப் பொத்தி அரைக்கண் மூடி பலபேர் பார்த்தார்கள்.

வீட்டில் இருக்கிற பெண்கள், இளம் பெண் பால் பலாத்காரத்துக்கு ஆளாகிற காட்சி மாதிரி கடைசி ஓவரைத் தவிர்த்தார்கள்.

“பார்த்துட்டு என்ன ஆச்சுன்னு எனக்கு சொல்லிடேன்” என்று சொல்லி தலைகாணியில் குப்புறப் படுத்து காதை மூடினார்கள்.

கிரிக்கெட்டை சூதாட்டமாக்கியதாலும், வருஷம் பூரா ஏதாவது ஒரு பெயரில் ஆடிக் கொண்டே இருப்பதாலும் அதன்பால் நாட்டமில்லாமல் இருந்தேன். அதைவிட நமிதாவின் குலுக்-தளுக் நடனங்கள் மேல் என்கிற ஐடியாவில் இருந்தேன். நேற்று வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் முதல் பாதியை சர்வ சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் தடிக்க முடியாதது மட்டுமில்லை, நானும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது. முதல் பாதியைப் பார்த்து விட்டதால் கடைசி பத்து ஓவர்கலைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

பார்த்திருக்க வேண்டிய ஆட்டம்தான்.

இந்தியாவால் ஜெயிக்க முடியாததற்கு என் அஞ்ஞானத்தில் உதித்தது இரண்டு காரணங்கள். அவர்களை விட நம் ஆட்கள் அதிக டென்ஷனில் இருந்தார்கள் என்பது முதலாவது.

கடைசி ஓவருக்கு போடவேண்டிய பவுலர் ஏற்கனவே அவரது கோட்டாவை முடித்து விட்டிருந்தது இரண்டாவது.

கிரிக்கெட் அபிமானிகள் சண்டைக்கு வரலாம்.

********************************************************************************************************

சுஜாதாவின் நினைவு நாள் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் ஞாபகம் வந்தது.

அவரிடம் நான் கற்ற சில பாடங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் நல்ல எழுத்தின் அடையாளங்கள் என்பது முதல் பாடம். முடிந்தவரை சுருக்கமாக எழுத வேண்டும் என்பது அடுத்தது. அநாவசியமான காண்ட்ரவர்ஸிகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது இன்னொன்று. இது பிடிக்கும், இது பிடிக்காது என்கிற ட்யூவாலிடீஸிலிருந்து விலகி, எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்பது ஒருபாடம். (ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்களிலும், எழுத்திலும் அவருக்கு நாட்டமில்லை என்று அம்பலம் பதில்களில் படித்தேன். இது எனக்கு ஒரு ஆச்சரியம். இதைப் பற்றி அப்புறம் பேசலாம்)

*******************************************************************************************************

இந்தவார ஆனந்த விகடனில் படித்த ஒரு ஜோக் உங்களுடன் பகிரத் தகுதியானது :

“மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”

“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”

“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”

*******************************************************************************************************