கும்பகோணம்

அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

Advertisements

தஞ்சை மாவட்ட சொல்லாட்சிகள்

சமீபத்தில் நான் பிறந்த மாவட்டத்துக்குப் போய் வந்ததாலோ என்னமோ, தஞ்சை மாவட்டத்து சொல்லாட்சிகள் திடீரென நினைவுக்கு வந்தன. ஆமாம், நாகப்பட்டினம் அப்போது தஞ்சை மாவட்டம்தானே.. இப்போது, நாகை, திருவாரூர், தஞ்சை என பிரிக்கப்பட்டு விட்டது.

பரசுராமன் மளிகைக் கடையில் சாமான்கள் எல்லாம் பொட்டலம் கட்டப்பட்டதும்,

“செட்டியாரே, ரோக்காவை எடுத்துக்கங்க. ஒத்துக்கறீங்களா?” என்பார் பரசுராமன்.

அவரும் பய பக்தியோடு “சரிங்க” என்பார்.

பார்க்கிறவர்களுக்கு செட்டியார் எதோ குற்றம் செய்து விட்ட மாதிரியும் இவர் மிரட்டியதும் ஒத்துக் கொள்கிறார் போலவும் இருக்கும்.

பரசுராமன் “புளி அரைக் கிலோ” என்று attendance எடுக்கிற மாதிரி அறிவிப்பார்.

செட்டியார் பொட்டலங்களை லேசாக அழுத்திப் பார்த்து புளியை கண்டு பிடித்து அதை ஒரு ஓரமாக வைப்பார். வைத்து விட்டு அவர் ஒரு தரம்

“ஆங்.. புளி அரைக் கிலோ” என்பார்.

ஒத்து கொண்டாகி விட்டது.

அப்புறம் அடுத்த ஐட்டம்.

எல்லாம் முடிந்ததும் “மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டம்” என்பார் பரசுராமன்.

செட்டியார் எண்ணிப் பார்த்து “சரியா இருக்கு” என்பார்.

பிற்காலத்தில் யோசித்த போது ரோக்கா என்பது ரோல் கால் என்பதின் மருவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
********************************************************************************************************************
“ஆள வெடக்கிறியா?”

என்று ஒரு பிரயோகம் உண்டு.

பொய் சொல்வது,கிண்டல் செய்வது இரண்டுக்கும் இது பொருந்தும்.

“சீரியசாத்தான் சொல்றியா?”

“என்ன நக்கலா?”

“ரீல் உட்ரியா?”

இப்படி நிறைய அர்த்தம் உண்டு அதற்கு.

இதே காண்டேக்ச்டில் மெட்ராஸ் பாஷையில் ஒரு சந்தேகப் பார்வையோடு,

“ஐயே?” என்பார்கள். அந்த ஐயேவில் கேள்விக்குறி தொக்கி நிற்கும்.

திருவெண்காட்டில் கோயில் வாசலில் ஒரு ஆண்டி யாரிடமோ

“என்ன வெடைக்கிறியா?” என்று கேட்ட போது இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதில்.
**********************************************************************************************************************
போகும் போது சேலம்,நாமக்கல்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாகப் போனேன்.

மயிலாடுதுறையில் இறங்கும் போது கடல் பயணம் முடித்த மார்கோ போலோ மாதிரி உணர்தேன். மயிலாடுதுறை நெருங்கும் போது ஒரு மரத்தடியில் இளநீர் சாப்பிட்டோம்.(முப்பது ரூபாயாம். பகல் கொள்ளை!)

அருகிலிருந்த இன்னொரு கார் பயணியிடம் வந்த பாதையை விளக்கி,

“இந்த ரூட்டை செலெக்ட் பண்ணது முட்டாள்தனம்ன்னு நினைக்கிறேன்” என்ற போது

இளநீர்க்காரர், “அட ஆமாங்குறேன்” என்று ஆமோதித்தார்.

“எது ஆமாம், நான் முட்டாள்ங்கிறதா?”

“அது தெரியல்லைங்க, ஆனா இந்தப் பாத சுத்துங்க. போவக்குள்ள திர்ன்னாமல பாதையில போங்க”

அட ஆமாங்குறேன் என்பதும், போவக்குள்ள, வரக்குள்ள என்பதெல்லாம் கேட்டு நெடு நாள் ஆயிற்று. சில சமயம் டி.ராஜேந்தர் படங்களில் இது மாதிரி வசனங்கள் வரும். மாயவரத்தில படிச்சவராச்சே!
*********************************************************************************************************************