கே.ஜி.ஜவர்லால்

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

சென்ற ஞாயிறு 25-01-2015 முதல் ‘நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல’ என்கிற என் நகைச்சுவைத் தொடர் தினமலர் ஞாயிறு ஸ்பெஷல் இதழில் தொடங்கியிருக்கிறது.

சென்னை நீங்கலான இதர ஊர் தினமலர்களில் இது வெளியாகும்.

Dinamalar-25012015-Twitter

Advertisements

விஸ்வரூபம் எடுக்கிறதா பிரச்சினை?

KAMALS~1

விஸ்வரூபம் படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற கவலை உண்டாகிறது. எதிர்க்கிறவர்களின் பிரச்சினையும் கவலையும் எனக்குப் புரியவில்லை. புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பது புரிகிறது. கமலஹாசனின் முயற்சியால் யாருக்கும் நஷ்டம் இருக்காது என்பதே என் நம்பிக்கை. எதிர்க்கிறவர்கள் வெறும் அச்சத்தால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் துணிவு. பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவை கமலஹாசனுக்குக் கடவுள் அருளட்டும். அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது (நன்றி : இசைஞானி)

****************************************************************************

பெண்கள் கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது என்று சொன்னால் பல பெண்களுக்குப் பிடிக்கவில்லை. சம உரிமை, சுதந்திரம், ஆணாதிக்கம், கன்ஸர்வேட்டிவ் என்று ஏதேதோ சொல்லி எதிர்க்கிறார்கள். தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் இருக்கும் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் எல்லாப் பெண்களுக்குமே அந்தத் திறனும், வலிமையும் இருக்கிறதா? இல்லை என்றால் பாதுகாப்பாக இருப்பதுதானே நல்லது?

****************************************************************************

MSG

சமீபத்தில் வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார். ஹிந்துஸ்தானியும், கர்நாடக இசையும் கலந்த ஒரு இனிய மயக்கம் அவரது இசை. பரூர் ஸ்டைல் என்று சொல்லப்படும் அபூர்வமான சுவரப் பிரயோக ஸ்டைல் அவருடையது. ஒரு தாளத்துக்கு மூன்று சுரங்களாக இறங்கு வரிசையிலும் ஏறு வரிசையிலும் துரித காலத்தில் அவர் வாசிப்பது யுனீக் ஸ்டைல். ஒரு தரம் பெங்களூர் போகும் போது ரயிலில் முதல் வகுப்பு கூபேயில் அவருடன் அரட்டை அடித்துக் கொண்டு போனது மறக்க முடியாத நிகழ்ச்சி. முக்கால் வாசி நேரம் அவர் என்னைப் பேட்டி எடுப்பது போலப் பேசிக் கொண்டு வந்தது சுவாரசியம். அது குறித்து ஒரு இடுகை தனியாகப் போட வேண்டும்.

****************************************************************************

இந்த முறை புத்தகச் சந்தை மௌண்ட் ரோட் ஒய்.எம்.ஸி.ஏ மைதானத்தில் நடக்கிறது. தேதியும் 11 லிருந்து 23 வரை என்று மாற்றப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தைத் தமிழில் தன்னாட்சி என்ற பெயரில் என்னை எழுதச் சொல்லி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை எழுதி முடிக்கும் போது நிறைவாக உணர்ந்தேன். படிக்கிறவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். எச்சரிக்கை : அது குறித்த தனிப் பதிவு விரைவில் வருகிறது!

******************************************************************************

ஆண்கள் குறித்த பெண்களின் மனப்பாங்கு குறித்து ஒரு வெண்பா முயன்றேன். அதற்கு உரை எழுத உரையாசிரியர்கள் வரவேற்கப்படுகிறார்கள் :

உனக்குப் பண்பே கிடையாது பாதகன்
கணக்குப் பண்ணும் காமுகன் – நான்
எத்தனை மோசமாய் உடை யணிந்தாலும்
சித்தனாய் ஞானியாய் நீயிரு.

புத்தகச் சந்தை-2012, கொஞ்சம் சுய விளம்பரம்

என்னதான் உபயோகமான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சுய முன்னேற்ற நூல்கள் என்றால் சிலருக்கு அலர்ஜி. அவர்களுக்கும் கருத்துக்கள் போய்ச் சேர வேண்டுமே, என்ன செய்வது?

 அதை ஒரு நாவல் வடிவத்தில் எழுதி விட்டால் போயிற்று!

 கதை நகர்ந்து கொண்டே இருக்கும். கதையினூடே சுய முன்னேற்றக் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கும். ஆங்காங்கே சின்ன குட்டிக கதைகள், சில நகைச்சுவைத் துணுக்குகள்.

 போதாதா சுவாரஸ்யத்திற்கு?

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்று. அதைப் படிக்கிற ஆசை இருந்தாலும் சில பயங்கள். அந்த இலக்கண, இலக்கிய நடை புரியுமா? பக்கத்தில் அகராதி வைத்துக் கொண்டே படிக்க வேண்டுமா? ஏகப்பட்ட பக்கங்கள் இருக்குமே, எப்படிப் பொறுமையாகப் படிப்பது? சுவாரஸ்யமாக இருக்குமா?

 கவலையை விடுங்கள்.

 எளிய நடை. பள்ளிக்கூடப் பையனுக்குக் கூடப் புரியும். ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள், விறுவிறுப்பகப் போய்க் கொண்டே இருக்கும். மொத்தம் 130 பக்கங்கள்தான். முழு சிலப்பதிகாரமும் சுவாரஸ்யமான நாவலாக… ரூ.80/= க்கு.

 திருக்குறள் உரைகள் படித்துச் சலித்திருப்பீர்கள்.

 ஒவ்வொரு குறளாக, அதற்கு அர்த்தமாக…. இப்படித் தனித் தனியாகப் படித்தால் சொல்லப்பட்ட கருத்து என்ன என்று எப்படித் தெரிந்து கொள்வது?

 ஒவ்வொரு அதிகாரத்தையும் தொகுத்து ஒரு கட்டுரை. அந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் கோர்வையாக. விலை ரூ.160/=

 ஜென் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 ஆனால் ஒவ்வொரு கதையும் என்ன நீதியைச் சொல்கிறது என்பது பல கதைகளில் புதிராக இருக்கும். அந்த நீதியைச் சுருக்கமாக, சுவையாக சில சமயம் நகைச்சுவையாகச் சொல்லி எழுதப்பட்ட கதைகள். ஜென்னை முழுதாகப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகம்.

 கதைகளின் வழியே ஜென். விலை ரூ.115/=

 மேற்சொன்ன எல்லாப் புத்தகங்களும் புத்தகச் சந்தையில் F-7, கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கும்.