சினிமா

துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு

துள்ளு கிற மாடு

பொதி சுமக் காது

என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.

தன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.

சினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.

போகட்டும்.

துள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா? அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா?

இல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.

பொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.

தலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத்திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.

தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.

Advertisements

புரிஞ்சதா?

சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.

 “இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”

 “இது மூன்றாந்தரம்”

 “கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”

 “ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”

 “இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”

 “நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”

 “ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”

 இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?

கிமுவில் பாலச்சந்தர் கதை

”இளவரசே, அரசியார் உங்களை அழைக்கிறார்கள்” சேவகன் இடுப்பை வளைத்து உணர்வின்றிச் சொன்னான்.

 ”வருகிறேன் என்று சொல்” என்றான் குணால். அவன் சேவகன் பக்கம் திரும்பக் கூட இல்லை.

 “இல்லை இளவரசே, ஏதோ தலையாய செய்தியாம், கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றான் மீண்டும். இப்போது அவன் சொன்ன விதம் இது உறவுமுறை அழைப்பல்ல, அரசியின் கட்டளை என்பது போல் ஒலித்தது.

 “அரசியின் கோபம் நமக்கெதற்கு? போய் என்னவென்று கேட்டு வாருங்களேன்” என்றாள் காஞ்சனமாலா.

 அரசியைச் சந்திக்கச் செல்லத் தான் தயங்குவதன் காரணத்தை மனைவி காஞ்சனமாலாவிடம் குணாலால் சொல்ல முடியாது. சொன்னால் அவளால் தாங்க முடியாது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

 நேற்று நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்த போது அவன் மேல் ஒரு ரோஜா வந்து விழுந்தது. மல்லிகைக் கொடியிலிருந்து ரோஜா எப்படி விழும் என்கிற ஆச்சரியத்தில் நிமிர்ந்து பார்த்தால் உப்பரிகையில்  திஷ்யரக்‌ஷா!

 ’இங்கே வாயேன்’ என்பது போலக் கையை ஜாடை செய்து வெட்கத்தோடு சிரித்தாள்.

 குணால் ஒரு வினாடி பதறினான்.

 இதை அவன் பெற்றோரோ, மனைவி காஞ்சனமாலாவோ பார்த்தால் என்ன ஆவது!

 சட்டென்று அரண்மணைக்குள் நுழைந்து மறைந்து போனான்.

 அது முதல் தடவையல்ல. போன வாரம் தயா நதிக்கரைக்குக் குளிக்கப் போயிருந்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த போதே அவளும் ஆடைகளைக் களைந்து விட்டு நீரில் இறங்கி விட்டாள். கையால் முகத்தை மறைத்துக் கொண்டு கரையேறி ஓடி வந்து விட்டான். அவன் எங்கே போனாலும், என்ன செய்தாலும் தொடர்கிறாள். இதெல்லாம் காஞ்சனமாலாவுக்குத் தெரியாது. தான் இப்போது அழைக்கப்படுவது இது விஷயமாகத்தான் என்பது அவனுக்குத் தெரியும்.

 என்ன சொல்வது?

 என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என் மனதில் தப்பில்லை என்று எண்ணிக் கொண்டான். எழுந்தான்.

 “அரசியிடம் வாதிட வேண்டாம். அவர் என்ன சொன்னாலும் அதன்படி நடந்து கொள்ளுங்கள்” என்றாள் காஞ்சனமாலா.

 பைத்தியக்காரி. நடக்கப் போவது தெரியாமல் பேசுகிறாள். அரசி சொற்படி நடந்தாலும் பிழை, நடக்கவில்லையென்றாலும் பிழை என்பது இவளுக்கெங்கே புரியப் போகிறது.

 குணால் எழுந்ததைப் பார்த்ததும் சேவகன் நடக்க ஆரம்பித்தான். நேராக அந்தப்புறம் சென்றார்கள். சேவகன் பணிந்து கையை உட்புறம் நீட்டி நின்றான். குணால் உள்ளே பிரவேசித்ததும் உள்ளேயிருந்து ஒரு குரல் சேவகனுக்குக் கட்டளை பிறப்பித்தது,

 “நாங்கள் ராஜ ரகசியம் பேசப் போகிறோம். கதவைச் சாத்திக் கொண்டு வெளியில் இரு. மன்னர் வந்தால் மட்டும் எனக்குத் தெரிவி”

 “ஆகட்டும் அரசி”

 அவன் கதவை மூடிக் கொண்டு வெளியேறினான்.

 உள்ளே யாரையும் காணாமல் “அழைத்தீர்கள் என்று சொன்னான்” என்று பொதுவாகச் சொன்னபடி சுற்றிலும் பார்த்தான் குணால்.

 அவன் கொஞ்சமும் எதிர்பாராமல் பின்னாலிருந்து யாரோ அணைத்தார்கள். சுகந்தமான நறுமணமும் மல்லிகைப் பந்து போன்ற மென்மையும் ஒருவினாடி அவனைக் கிறங்கச் செய்தன. சட்டென்று விலகித் திரும்பினான்.

 திஷ்யரக்‌ஷா!

 “இது தவறு” என்றான்.

 ”என்ன தவறு?” என்றாள் வேல்விழிகளைச் சிமிட்டியபடி.

 “நான் திருமணமானவன்”

 “உங்கள் தந்தையும் திருமணம் ஆனவர்தானே? திருமணம் ஆகிவிட்டதென்று அவர் உங்கள் தாயை மணக்காமல் இருந்திருந்தால் உங்களால் சாம்ராட் அசோகரின் மகனாகப் பிறந்திருக்கவே முடியாதே?”

 “என் தந்தையைப் போல் இன்னொரு மணம் செய்வதில் தவறில்லை. ஆனால் தந்தையின் மனைவியையே மணப்பது தவறு. தயவு செய்து கதவைத் திறக்கச் சொல்லுங்கள் அரசி”

 (அசோகர் தன் இறுதிக் காலத்தில் மணந்த திஷ்யரக்‌ஷா குறித்தும், அசோகரின் மகன் குணால் குறித்தும் வரலாற்றில் இருக்கும் தகவலின் அடிப்படையில் நான் எழுதியிருக்கும் கதை இது)

இசைத்தலும் இசைய வைத்தலும்

ஐந்தாவது முறையாக ஃபோனை எடுத்துப் பார்த்து விட்டுப் பையில் வைத்துக் கொண்டான் இளவரசு.

 “என்ன அடிக்கடி பார்க்கிறே?” என்றேன்.

 “இல்லே.. இன்னைக்கு ஒரு கம்போஸிங் கம்மிட் பண்ணியிருந்தேன். டைரக்டர்தான் ஃபோன் பண்ணிகிட்டே இருக்காரு. சைலண்ட்ல போட்டிருக்கேன்”

 “ஐயய்யோ.. ஐயாம் சாரிடா. நான் கிளம்பறேன். நீ உன் தொழிலைப் பாரு” என்று எழுந்தேன்.

 “அதெப்படி.. பல வருஷம் கழிச்சி வந்திருக்கே. உன்னை எழுந்து போன்னு சொல்லிட்டு நான் போக முடியுமா?”

 “அதெல்லாம் கவலை இல்லை. நீ உன் தொழிலைப் பாரு, நான் அப்புறமா வர்ரேன்”

 “நான் என் தொழிலைப் பார்க்கிறது இருக்கட்டும்; நீ என் தொழிலைப் பார்க்க வேணாமா? வா, ஸ்டூடியோவுக்குப் போகலாம்”

 “நானா?”

 “நீயேதான் வா. கார்ல பேசிகிட்டே போகலாம். டியூனை ஓக்கே பண்ணியாச்சுன்னா நம்ம அரட்டையை வந்து தொடரலாம்”

 “அவ்வளவு சீக்கிரம் ஓக்கே ஆகுமா? திரும்பத் திரும்ப கம்போஸ் பண்ணி பல்லவி ஓக்கே ஆகவே ராத்திரி ஆயிடும்ன்னெல்லாம் இசையமைப்பாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கேனே?”

 “வாஸ்தவம்தான். பட் நான் எப்பவுமே ஒன் அவர்லே ஒரு ட்யூனை ஓக்கே பண்ணிடுவேன்”

 “ம்ம்.. உன் மாதிரி இசை ஞானம் எல்லாருக்கும் இருக்குமா? இல்லாதவன் கஷ்டப்பட்டுத்தானே ஆகணும்?”

 இதற்கு இளவரசு பதிலொன்றும் சொல்லவில்லை. லேசாகச் சிரித்துக் கொண்டான். நாங்கள் அடுத்த விஷயம் பேசுமுன் ஸ்டூடியோ வந்து விட்டது.

 எங்களை வரவேற்ற டைரக்டர் ரொம்பப் பெரிய ஆள். அவர் வாங்காத அவார்ட் இல்லை, அறிமுகம் செய்யாத பெரிய ஸ்டார்கள் இல்லை, காணாமல் அடிக்காத கர்விகள் இல்லை.. யாருக்கும் தலை வணங்க மாட்டார் அதே சமயம் யாரையும் தூக்கி எறிந்தும் பேச மாட்டார். இளவரசுவின் டெம்பர்மெண்டுக்கு இவரிடம் எப்படி வேலை செய்கிறான் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவர் டைரக்‌ஷனில் எப்படியோ அப்படி இசையில் இவன்.

 இளவரசின் அஸிஸ்டண்ட் ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து காமாட்சியைப் பிரதிஷ்டை செய்யும் ஆதிசங்கரர் போல பவ்யமாக வைத்தான். இளவரசு உட்காரும் வரை காத்திருந்து தப்லாக்காரரும் உட்கார்ந்தார்.

 “சார்.. இது ஹீரோயின் தன்னோட வருத்தத்தை பூடகமா சொல்ற மாதிரிப் பாட்டு, அதனாலே சிந்து பைரவி ராகத்துல..” என்று ஆரம்பித்தான்.

 “இல்லை அரசு.. சோகம் மெட்டுல தெரியக் கூடாது. சொற்கள்ள மட்டும்தான் தெரியணும்”

 “சரி, அதை மாத்திக்கலாம். சோகம்ங்கிறதாலே டெம்போ குறைவா தன்னம்த்த தந்தன்னன்னன்னு ஒரு எய்ட் பீட் ரிதம்….” இளவரசு முடிப்பதற்குள் டைரக்டர் குறுக்கிட்டார்,

 “ம்ம்ஹூம்.. பாட்டு மேலோட்டமாக் கேட்டா குத்துப் பாட்டு போல இருக்கணும். வார்த்தைலதான் சோகம்” என்றார்.

 “ஓஹோ.. ஓக்கே. மாத்திக்கலாம். சந்தம் எப்படி, ஒரு லைனுக்கு ஆறு வார்த்தை வர்ராப்பல இருக்கலாமா? நல்ல ஃப்ளோவும் கண்டிநியுட்டியும் இருக்கும்”

 “ம்ம்ஹூம். வந்தானா.. வர்லியா; தந்தானா.. தர்லியா; அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் வந்து பழகு வந்து பழகுங்கிற மாதிரி இருக்கட்டும் சந்தம். அதான் பல்லவி”

 இளவரசு தியானம் செய்கிறவன் போல இரண்டு நிமிஷம் கண்மூடி உட்கார்ந்தான். பிறகு பக்கத்திலிருந்த தப்லா வித்வானிடம், “தந்தன தத்தா தந்தன தத்தா தன்னம்னம்.. இதான் ரிதம்” என்றான்.

 அவர் தன் தப்லாவைக் குமுக்கி அந்த தந்தன தத்தாவுக்கு உயிர் கொடுக்க இளவரசு ஹார்மோனியத்தில் வந்தானா வர்லியா சந்தத்தை ஷண்முகப்பிரியாவில் வாசித்தான்.

 “எக்ஸல்லண்ட்.. உனக்குள்ள இருக்கிற திறமை உனக்குத் தெரியல்லை. நான் தோண்டி எடுக்க வேண்டியிருக்கு. நாளைக்கு ரிக்கார்டிங் முடிச்சிடு” என்றார் டைரக்டர்.

 எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 “என்னடா, இந்த டைரக்டர் மஹா ஈகோ பிடிச்சவன்ம்பாங்க.. பத்து நிமிஷத்துல ஓக்கே பண்ணிட்டியே?”

 சிரித்தான்.

 “எப்படிடா ரெண்டு நிமிஷத்துல அவர் கேட்ட மாதிரி ட்யூனைப் போட்டே?”

 ”இது ரெண்டு நிமிஷத்தில் போட்டதில்லை. நான் நேத்து பூரா யோசிச்சி போட்ட ட்யூன்” என்றான்.

தலைவா – சினிமா விமர்சனம்

Thalaiva-Movie-Stills _4_

நம்ம ஊரில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும், பெங்களூரில் இருப்பதாலும் படத்தைப் பார்க்கிற ஆர்வம் உண்டாயிற்று. பெங்களூர் ஃபோரம் மாலில் ஏற்கனவே 2012 படம் பார்த்த அனுபவம் அந்தத் தியேட்டருக்குத் திரும்பப் போகும் ஆவலை வேறு தூண்டியது! படம் ஆரம்பித்ததிலிருந்து இடைவேளை வரை பிரமிப்பு, சிலிர்ப்பு, ரசனை, திரில்!

 அடடா.. அட்டஹாசமான படம் ஒன்று தமிழில் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறதே…  சத்தியராஜுக்கு இப்படிப்பட்ட கிளாஸ் நடிப்பு வருமா? இத்தனை வருஷமும் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்! ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப எஞ்சாயபிள். அறிமுகம் ஆகிற காட்சியில் அமலா பால் மனசை அள்ளுகிறார். சந்தானம் பிராண்ட் ஜோக்குகள் நிறைய இருக்கின்றன. தியேட்டரில் பார்த்தால் மட்டும் சந்தானம் ஜோக்குகள் சில ரசனையாக இருக்கின்றன.

 புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் அமலா பால் விஜயையும் சந்தானத்தையும் இன்வைட் செய்கிறார்.

 “நாளைக்கு ஃபங்ஷனுக்கு வர்ரப்போ சாப்பிடாம வாங்க”

 “ஏன்? வந்ததும் பிளட் டெஸ்ட் பண்ணப் போறீங்களா?”

 இடைவேளை வரை கட்டிக் காத்திருக்கும் சஸ்பென்ஸை நிஜமாகவே ஊகிக்க முடியவில்லை. அருமையான கதையமைப்பு. இடைவேளையில் காபி குடிக்க வந்த போது ஏறக்குறைய எல்லாருக்குமே எனக்கிருந்த அதே சிலிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

 இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தது.

 என் பிரமிப்பும் சிலிர்ப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. அதற்கப்புறம் வில்லனையும் அவன் ஆட்களையும் அடித்துத் துவைக்கிற சாதாரண விஜய் படம். கைப்பற்ற வேண்டிய வீடியோ கேஸட் வைத்திருக்கும் பிக்பாக்கெட்காரனுக்கு வில்லன் ஃபோன் செய்யாமல் என்கேஜ் செய்து வைப்பது நல்ல ஐடியா. வில்லனை ஜெயிலிலிருந்து தப்ப வைத்து (வில்லன் ஒளிந்திருந்து ஏமாற்றி தன் சொந்த முயற்சியில் தப்புவதாகத்தான் காட்டுகிறார்கள். விஜய், ‘நீ தப்பிச்சதும் என் ஐடியாதான்’ என்கிறார்!) மந்திரி கொலையில் சிக்க வைப்பதும் நல்ல ஐடியாதான்.

 ஆனால் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்.

 வில்லன் திரும்பவும் தப்பித்துப் போய் மலைக் குகையில் ஒளிந்து கொண்டு அப்புறம் சொத்து சொத்து சண்டைகள். இடுப்பில் கத்தியை சொருகிய பிறகு விஜய் எட்டு பேரைப் போட்டுத் தள்ளுகிறார். சித்தப்பா திடீரென்று கட்சி மாறுவது சஸ்பென்ஸ் இல்லை, சொதப்பல்.

 ரெக்கார்டிங் வெகு சிறப்பு. 3டி ஒலி அமைப்பை நன்றாக உணர முடிகிறது. விஜய் பாடும் பாட்டும் நன்றாக இருக்கிறது. அமலா பால் அழகோ அழகு.. மிடுக்கோ மிடுக்கு. இடைவேளை விட்டதும் ஓடி விடுங்கள்…

சிங்கம் II (விமர்சனம்)

????????????????????????????????????????????

பெண்கள் கழிப்பறைக்கு வெளிப்புறம் பெண் படம் போடுவது வழக்கம்தான்; ஆனால் அதற்காக மோனலிஸாவின் ஒவியத்தை எழுதி வைப்பார்களோ?

 அப்படித்தான் இருக்கிறது இவர்கள் அஞ்சலியைப் பயன்படுத்தியிருக்கும் விதம். அட்ரோஷியஸ்!

 தியேட்டர் முழுக்க புஷ்பேக் சீட்டில் சாய்ந்து கொண்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தேசிய கீதத்தை முழுசாகப் பாடுகிறார்கள் படத்தில். இதை எப்படி சென்ஸார் போர்ட் அனுமதித்தது? தேசிய அவமானம்!

 சரி.

 படம் ஆரம்பித்து ஏறக்குறைய இடைவேளை வரை ஆஹா, படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கை வருகிறது. ஆனால் இடைவேளை நெருங்கும் போது என்ன இன்னும் இடைவேளை வரவில்லை என்று நெளிய வைக்கிற மாதிரி இருக்கிறது. நீளம் அதிகம் என்பதாலா திரைக்கதை டைட்டாக இல்லாததாலா?

 கஸ்டமர் ஃபீட்பேக்கை வெகுசிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் ஹிட் ஆன பாடல்களின் சாயலிலேயே இதிலும் பாடல்கள், முக்கியமாக காதல் வந்தாலே பாடல்! அனுஷ்காவின் உதட்டுச் சுழிப்பு, கண்ணடிப்பு, மின்னல் வேக அணைப்பு எல்லாமே அப்படியே ஆக்‌ஷன் ரீபிளே. ஆனாலும் அனுஷ்காவை ஹன்ஸிகா ஓவர்டேக் செய்து விடுகிறார். ஹன்ஸிகா வரும் காட்சிகள் ரசனையாக இருக்கின்றன. அனுஷ்கா காட்சிகள் ரொம்ப ரொம்ப சாதாரண ரகம். ஆனாலும் ஹன்ஸிகாவின் மரணம் டைரக்டர் எதிர்பார்த்த இம்பேக்ட்டை உண்டாக்கவில்லை. சாரி சார்..

 சந்தானத்தின் எண்ட்ரி படு டிரமாட்டிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.(காமெடிக்காக செய்வது போல நிஜமாகவே செய்திருப்பது தெரிகிறது; மேலும் அதே காமெடிப் போர்வையில் சந்தானம் அனுஷ்காவுடன் ஆடுவது போலவும் காட்டப்படுகிறது. சந்தானம் அந்தக் காட்சியில் நிஜமாகவே அருமையாக டான்ஸ் பண்ணியிருக்கிறார்!) சந்தானம் ஒரு பிராண்ட் இமேஜாக இன்னமும் பயன்பட்டு வருவது புரிகிறது.

 தென் ஆப்பிரிக்கர்கள் சிலரும் தயாரிப்பில் கூட்டணி போலத் தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க நடிகர் டேனி அதே பெயருள்ள கதாபாத்திரமாகவே வருகிறார். அந்த டேனியையும் சேர்த்து படத்தில் ஏகப்பட்ட ரிடண்டண்ட் கேரக்டர்கள். விவேக், கிட்டி கூட அனாவஸியம்தான். பல வருஷங்களாக தூத்துக்குடியில் இருக்கிற கேரக்டராக நடிக்க வராதது பரவாயில்லை, தமிலையாள மொழியில் ரஹமான் பேசுவது ரொம்பத் தமாஷ்.

 வசனகர்த்தா (டைரக்டர் ஹரியேதான்) தனக்குத் தெரிந்த் எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கக்கியிருப்பது இரக்கத்தை வரவழைக்கிறது. அதேபோல விவேக் முயன்றிருக்கும் காமெடிகளும் இரக்கத்தை வரவழைக்கின்றன. காற்று சந்தானம் பக்கம் அடிப்பதால் அவர் என்ன செய்தாலும் செல்லுபடி ஆகிறது. அதிலும் பல மொக்கைகள்.

 இன்னின்னாரெல்லாம் கிரிமினல்கள் என்பது கால் படத்திலேயே தெரிந்து விடுகிறது. ஆகவே திரைக்கதையில் விறுவிறுப்பு போய் விடுகிறது. அட அவர்களைச் சிக்க வைக்கிற ஐடியாக்களாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் ம்ம்ஹூம்…

 சூர்யா எல்லாரையும் போட்டு சொத்து சொத்தென்று மொத்துகிறார் அவ்வளவுதான். அவ்வப்போது ஐஎம்ஏ நம்பர், சிம், லொக்கேஷன், மொபைக் சிக்னல் ஜேம்மர் என்று பம்பார்டிங்காக டயலாக் வருகிறது. ஆனால் எல்லாமே கைப்புண்ணுக்குக் கண்ணாடி ரகம்தான்!

 எனக்குத்தான் ரசனை இல்லை. படம் ஆந்திராவில் சக்கைப் போடு போடுகிறதாம். நம்ம ஊரில் கூட ஓடி விடும் போலத்தான் தோன்றுகிறது. ஆனாலும்,

 சிங்கம் ஒன்னை ரசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடைவார்கள். சூர்யா,

 Pull your socks up!

விஸ்வரூபம் எடுக்கிறதா பிரச்சினை?

KAMALS~1

விஸ்வரூபம் படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற கவலை உண்டாகிறது. எதிர்க்கிறவர்களின் பிரச்சினையும் கவலையும் எனக்குப் புரியவில்லை. புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பது புரிகிறது. கமலஹாசனின் முயற்சியால் யாருக்கும் நஷ்டம் இருக்காது என்பதே என் நம்பிக்கை. எதிர்க்கிறவர்கள் வெறும் அச்சத்தால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் துணிவு. பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவை கமலஹாசனுக்குக் கடவுள் அருளட்டும். அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது (நன்றி : இசைஞானி)

****************************************************************************

பெண்கள் கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது என்று சொன்னால் பல பெண்களுக்குப் பிடிக்கவில்லை. சம உரிமை, சுதந்திரம், ஆணாதிக்கம், கன்ஸர்வேட்டிவ் என்று ஏதேதோ சொல்லி எதிர்க்கிறார்கள். தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் இருக்கும் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் எல்லாப் பெண்களுக்குமே அந்தத் திறனும், வலிமையும் இருக்கிறதா? இல்லை என்றால் பாதுகாப்பாக இருப்பதுதானே நல்லது?

****************************************************************************

MSG

சமீபத்தில் வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார். ஹிந்துஸ்தானியும், கர்நாடக இசையும் கலந்த ஒரு இனிய மயக்கம் அவரது இசை. பரூர் ஸ்டைல் என்று சொல்லப்படும் அபூர்வமான சுவரப் பிரயோக ஸ்டைல் அவருடையது. ஒரு தாளத்துக்கு மூன்று சுரங்களாக இறங்கு வரிசையிலும் ஏறு வரிசையிலும் துரித காலத்தில் அவர் வாசிப்பது யுனீக் ஸ்டைல். ஒரு தரம் பெங்களூர் போகும் போது ரயிலில் முதல் வகுப்பு கூபேயில் அவருடன் அரட்டை அடித்துக் கொண்டு போனது மறக்க முடியாத நிகழ்ச்சி. முக்கால் வாசி நேரம் அவர் என்னைப் பேட்டி எடுப்பது போலப் பேசிக் கொண்டு வந்தது சுவாரசியம். அது குறித்து ஒரு இடுகை தனியாகப் போட வேண்டும்.

****************************************************************************

இந்த முறை புத்தகச் சந்தை மௌண்ட் ரோட் ஒய்.எம்.ஸி.ஏ மைதானத்தில் நடக்கிறது. தேதியும் 11 லிருந்து 23 வரை என்று மாற்றப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தைத் தமிழில் தன்னாட்சி என்ற பெயரில் என்னை எழுதச் சொல்லி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை எழுதி முடிக்கும் போது நிறைவாக உணர்ந்தேன். படிக்கிறவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். எச்சரிக்கை : அது குறித்த தனிப் பதிவு விரைவில் வருகிறது!

******************************************************************************

ஆண்கள் குறித்த பெண்களின் மனப்பாங்கு குறித்து ஒரு வெண்பா முயன்றேன். அதற்கு உரை எழுத உரையாசிரியர்கள் வரவேற்கப்படுகிறார்கள் :

உனக்குப் பண்பே கிடையாது பாதகன்
கணக்குப் பண்ணும் காமுகன் – நான்
எத்தனை மோசமாய் உடை யணிந்தாலும்
சித்தனாய் ஞானியாய் நீயிரு.

ஏ.ஆர்.ரஹமானைப் பிடிக்கல்லைன்னா…

”என்ன… வாய்ல பூந்த ஈ மூக்கு வழியா வெளியே போயிடுச்சு, அது கூடத் தெரியாம சொருகலா உட்கார்ந்திருக்கே? யு ட்யூப்ல சத்திரத்து ராத்திரிகள் பார்த்தியா?”

 “கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு கற்பனைதான்”

“ஐயய்யோ அப்ப அதை ஸ்கிப் பண்ணிடலாமா… கன்னா பின்னான்னு திட்டி நம்ம நண்பர்கள் பின்னூட்டம் போடப் போறாங்க….”

“இல்லை இல்லை.. அந்த லெவலுக்குப் போக மாட்டேன்”

“சொல்லு”

“ஒரு ஹைப்பத்தெட்டிக்கல் சிச்சுவேஷன். அப்படிப்பட்ட சிச்சுவேஷன்ல நீ என்ன பண்ணுவேன்னு புளுகாம சின்ஸியரா சொல்லணும்”

“ஓக்கே.. ரெடி”

“ஒரு குட்டித் தீவு. நடுக் கடல்ல இருக்கு. அதுல நீயும் ஒரு அழகான பொண்ணும் மட்டும் இருக்கீங்க. அங்கே நீ பண்புள்ளவனா, ஒழுக்கமா நடந்துப்பியா அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப்பியா?”

“சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிறதும் ஒழுக்கமும் ஒண்ணுக்கொண்ணு எதிரானதா?”

“உன் கிட்ட ஒரு கெட்ட பழக்கம். கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டே. பதிலுக்கு இன்னொரு கேள்வி கேப்பே”

”இதுல என்னத்துக்கு ஒழுக்கம் பண்பையெல்லாம் கொண்டு வர்ரே? சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப்பியா, மாட்டியான்னு மட்டும் கேளு”

“ஏன் பண்பை இழுக்காதேன்னு சொல்றே? பண்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்றியா?”

“நான் எதுவும் சொல்லல்லை. உன் கேள்வியைப் பார்க்கிறப்போ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிறது பண்பு கெட்ட செயல்ன்னு அர்த்தம் வருது”

“அது பண்பு கெட்ட செயல்தானே?”

“அப்ப அதை சந்தர்ப்பம்ன்னே நீ சொல்லியிருக்கக் கூடாது”

“நல்ல கதையா இருக்கே. சந்தர்ப்பம்ங்கிறது நல்ல செயல் கெட்ட செயல் எல்லாத்துக்குமே உருவாகும். நீ சொல்றதைப் பார்த்தா சந்தர்ப்பம்ன்னு ஒண்ணு உருவானாலே அது கடவுள் கொடுக்கிற வரம்ங்கிற மாதிரி பேசறே?”

“கொஞ்சம் யோசிச்சிப் பாரு. நேத்து ஒரு பொண்ணை ரேப் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சது. ஆனா நான் பண்ணல்லைன்னு யாராவது சொல்வாங்களா?”

“பொதுவா சொல்ல மாட்டாங்க”

”ஏன் பொதுவா? அப்ப சொல்ற சிலர் இருக்காங்க, அப்படித்தானே?”

“ஆமாம்”

“யார் அப்படிச் சொல்வாங்க?”

“யாருன்னா எப்படிச் சொல்றது? சிலர் சொல்வாங்க”

“அப்படிச் சொல்றவங்களின் ஆட்டிட்ட்யூடை ப்ரெடிக்ட் பண்ண முடியுமா?”

“அதெப்படி முடியும்?”

“முடியும். ரேப்பிங் பண்புக் குறைவான செயல், அது ஒரு குற்றம்ன்னு நினைக்கிறவன் அதை சந்தர்ப்பம்ன்னு சொல்ல மாட்டான். ஆனா அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகிட்டவனோ அல்லது பயன்படுத்த ஆசைப்பட்டு முடியாமப் போனவனோ அதை சந்தர்ப்பம்ன்னுதான் சொல்வான்”

“ம்ம்ஹூம். அதில் அவ்வளவு சைக்காலஜி இருக்கிறதா எனக்குத் தெரியல்லை”

“நிச்சயம் இருக்கு. ஒரு நிகழ்வை நீ எப்படி கம்யூனிகேட் பண்றேங்கிறதுலயே அந்த நிகழ்ச்சி குறித்த உன் மனப்பாங்கு நிச்சயம் வெளிப்பட்டுடும்”

“உதாரணத்துக்கு?”

“ஒரு ஏ.ஆர். ரஹமான் ரசிகன், ரஹமான் பாட்டு ஒண்ணு பிடிக்கல்லைன்னா ‘நாட் ஒன் ஆஃப் ஹிஸ் பெஸ்ட்’ ந்னுதான் சொல்வான். அதுவே அவனுக்குப் பிடிக்காத மியூசிக் டைரக்டரா இருந்தா ‘சகிக்கல்லை’ ந்னு சொல்வான். அவனுடைய அபிமான கம்போஸரும் இல்லை. பிடிக்காதவனும் இல்லைன்னா ‘நல்லாயில்லை’ ந்னு பொதுவா சொல்வான். சரிதானே?”

“ம்ம்ம்.. இதை ஒத்துக்கிறதைத் தவிர எனக்கு வேறே வழியில்லைங்கிற மாதிரி ஒரு உதாரணம் சொல்லிட்டே. அப்ப என்ன சொல்றே… நான் சொன்ன ஹைப்பதெட்டிக்கல் சிச்சுவேஷன்ல அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிற மைண்ட் செட்ல நான் இருக்கேன்னு மறைமுகமா சொல்றியா?”

“மறைமுகமா? ஈ வாய்ல பூந்து மூக்கு வழியா வரும் போதே அது வெளிப்படையாத் தெரியாதா?”

“சரி, நான் சொல்ல வந்ததே வேறே. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சாலும் அதைப் பயன்படுத்திக்காம இருக்கிறவந்தான் பண்பாளன்”

“அப்படீன்னா லாட்ஜ் வைத்தியர்களைப் பார்க்கப் போகிற எல்லாரும் மஹா பண்பாளர்கள்ன்னு சொல்லு!”

“சாமர்த்தியம்ன்னு நினைச்சி நீ பேசற பல விஷயங்கள் ரசக் குறைவா இருக்கு”

“ரசம் குறைவா இருந்தா அதுக்கேத்த மாதிரி சோத்தைக் குறைச்சிக்க”

“நீ என்னதான் சொல்ல வர்ரே?”

“பண்புன்னு நீ சொல்றது என்ன? அடுத்தவங்களுக்கு சம்மதமில்லாத விஷயங்களைப் பண்ணாம இருக்கிறதுதானே?”

“அது நெகட்டிவ் ஆட்டிட்யூட். அடுத்தவங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிறதுதான் பண்புன்னு சொன்னா அது பாஸிட்டிவ் ஆட்டிட்யூட்”

“அப்போ அடுத்தவங்களுக்குப் பிடிச்சிருந்தா எல்லாமே பண்புதான்?”

“நீ என்ன பெர்ரி மேஸன் கிராஸ் எக்ஸாமினேஷன் பண்ற மாதிரியே பேசிகிட்டு இருக்கே?”

“சொல்லு… அடுத்தவங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் எல்லாமே பண்பு இல்லை. அடுத்தவங்களுக்குப் பிடிக்கல்லைன்னாலும் சிலது பண்பு. நமக்கு பிடிச்சிருக்கா இல்லையாங்கிறது ஒரு மேட்டர் ஆஃப் கன்ஸெர்னே இல்லை. சம்பந்தப்பட்டவங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் சமூகத்துக்குப் பிடிக்காது சிலது. சம்பந்தப்பட்டவங்களுக்குப் பிடிக்கல்லைன்னாலும் சமூகத்துக்காக சிலதை……”

“ஐய்ய்ய்ய்யோ….. ஆளை விடு… இப்ப என்ன சொல்ல வர்ரே? நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னா?”

”இல்லை. பண்புங்கிறது இவ்வளவு சப்ஜெக்டிவ் மேட்டரா இருக்கே… அதைப் போய் வாழ்க்கைல அப்ஜெக்டிவா வெச்சிக்க எப்படி முடியும்ன்னு யோசிக்கிறேன்”

மாற்றான் – வழக்கப்படி லேட் விமர்சனம்

கே.வி. ஆனந்த், சூர்யா, சுபா, ஹாரிஸ் ஜெயராஜ்….

ஆஹா…. மாற்றான் ஏ-மாற்றான் என்று மனதில் அயன் படம் கொடுத்த கலர்க் கனவுகளோடு தியேட்டருக்குப் போன சராசரி சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன். எனக்கு ஏமாற்றம்.

வோல்கா கதாபாத்திரம் வில்லியல்ல என்று தெரிகிற போது ஆஹா.. கதையில் நல்ல திருப்பங்கள் இருக்கும் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்த நிமிஷமே சூர்யாவின் அப்பா பாத்திரம்தான் வில்லன் என்பது வெட்ட வெளிச்சமாகச் சொல்லப்பட்டு விடுகிறது.

அதற்கப்புறம் கதையில் என்ன இருக்கிறது?

மதுரைக் காண்டத்திற்குப் பின்னரான சிலப்பதிகாரம் போல் படம் நகர்கிறது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி தவிர வஞ்சிக் காண்டத்தை யாருமே படித்திருக்க மாட்டார்கள் என்பது என் துணிவு. (என் சிலப்பதிகாரத்தில் திரைக்கதை மாற்றம் செய்து வஞ்சிக் காண்டத்தில் கொஞ்சம் மசாலா தூவி முன்னரே எழுதியிருந்தேன்!)

ஆர்த்தர் ஹெய்லி டைப் ஆராய்ச்சிக் கதைகள் சராசரி தமிழ் சினிமா ரசிகனால் வரவேற்கப்படுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. அதிலும் ஜெனட்டிக் எஞ்சிநியரிங் என்பதெல்லாம் ஏ கிளாஸ் ஆடியன்ஸுக்கே கொஞ்சம் சலிப்புத் தரும் சமாச்சாரங்கள் என்பதும் என் பணிவான அபிப்ராயம். இன்னும் கொஞ்சம் மசாலா தூவியிருந்தால் இந்தக் குறைகளை மறைத்திருக்கலாம்.

இரட்டை சூர்யாக்கள் வரும் சில காட்சிகளில் தொழிற்நுட்ப உன்னதத்தை வியக்க முடிகிறது. முக்கியமாக இரண்டு சூர்யா ஒரு காஜல் தோள்களை அணைத்தபடி சிரிக்கும் காட்சி. ஒரே ஒரு பாட்டும் அதன் காட்சியும் அயன், கோ படங்களில் கிடைத்த சுகமான அனுபவத்தைத் தருவது கொஞ்சம் ரிலீஃப் (நாணி, கோணி, ராணி… என்ன சாகித்யம் இது!) காஜல் அகர்வாலை ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிவிட முடியாது. அவ்வப்போது புத்தகத்தின் நடுப்பக்கத்தின் விளிம்பு மட்டும் தெரிகிறது. ஏனோ இரட்டை சூர்யாக்கள் வரும் வரை என்னால் படத்தில் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஒட்டுதல் அதிகமாகிறது.

காஜல்-சூர்யா காதல் அரும்பும் காட்சிகள் கொஞ்சம் இதம்.

‘உன் உடம்பில் பத்து பேரின் ஜீன்கள் இருக்கின்றன’ என்று செண்டிமெண்ட்டிலும் விஞ்ஞானம் டாமினேட் செய்கிறது.

எது எப்படியோ, வித்யாசமான படத்தைத் தர வேண்டும் என்கிற கே.வி. ஆனந்த்-சூர்யா-சுபாவின் துணிச்சலையும், கமிட்மெண்ட்டையும் பாராட்டத்தான் வேண்டும்.

சூப்பர் ஸ்டார்

1969 இல் ‘ரூப்புத் தேரா மஸ்தானா’ பாட்டை முணுமுணுக்காத உதடுகள் சொற்பம்.

 ஹிந்தியே தெரியாதவர்கள் கூட ‘கோப்பித் தேரா மச்சானா’ என்று தாங்கள் கிரகித்த விதத்தில் பாடிக் கொண்டு திரிந்தார்கள். வேற்று மொழிப் படங்களே போடாத நாகப்பட்டினம் ஸ்டார் டாக்கீஸில் ஆராதனா படம் போட்டார்கள். ராஜேஷ்கன்னா என்பவர் அவ்வளவு பவர்ஃபுல் ஸ்டார் என்பதால்தான் அவரை ஹிந்திப் படத் தயாரிப்பாளர்கள் பவர் ஹௌஸ் ஆஃப் ஹிந்தி சினிமா என்று அழைத்தார்கள்.

 சூப்பர் ஸ்டார் என்கிற சொற்றொடர் இந்திய சினிமாவுக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்.

 கண்ணை மூடித் திறந்து தலையை சாய்த்து நிமிர்த்தினால் போதும். ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். என் அபிமான ஆர்.டி.பர்மனின் பல ஹிட்டுகள் ராஜேஷ்கன்னாவுக்காகப் போடப்பட்டவை. 69 வயதில் பல நடிகர்கள் பிஸியாக இருந்தார்கள், இருக்கிறார்கள். சிலர் ஹீரோவாகக் கூட நடித்தார்கள். காகாஜி என்று அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா 69 வயதில் செத்துப் போய் விட்டார். கேன்ஸர்!

 என்.டி. டிவியில் அவர் மரணச் செய்தியை அறிவித்து விட்டு ‘மோத் ஆநீகே காயே கீத்திக் தின்’ என்கிற வரியைப் போட்ட போதும், டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் தலைப்பில் ‘அச்சா தோ ஹம் சல்தேஹே’ என்று போட்டிருந்ததைப் பார்த்த போதும் இரண்டு சொட்டு கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.