சிரஞ்சீவி

பட் அந்த டீலிங் எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்தது

அடுத்த என்.டி.ஆர். என்கிற இன்பக் கனவில் கட்சியை ஆரம்பித்தார் சிரு.

 தேர்தல் முடிவுகள் அவரை என்.டி.ஆராகவும் அங்கீகரிக்கவில்லை, சிவாஜி பாக்கியராஜ் கட்சி மாதிரி சுத்தமாக நிராகரிக்கவும் இல்லை. கடையை மூடிவிட்டு சினிமா வேலையைத் தொடரலாம் என்றால் அவரை நம்பி பதினெட்டு எம்.எல்.ஏ க்கள்! அரசியலில் ஆர்வத்தைத் தொடரலாம் என்றால் இந்தப் பதினெட்டு முப்பத்தாறாகி, முப்பத்தாறு எழுபத்திரெண்டாகி…. ம்ம்ஹூம் அதற்குள் சந்திரபாபு நாயுடு சுதாரித்து விடலாம். அல்லது ஜூனியர் என்.டி.ஆரோ வேறே யாராவதோ கட்சி ஆரம்பிக்கலாம்.

கன்ஃப்யூஷன்! (ஜனகராஜ் மாதிரி படிக்கவும்)

ஓஹோ…. என்னைப் பார்த்தா ஒண்ணும் பண்ண முடியாதவன் மாதிரி இருக்கா என்று கொதித்தெழுந்த ஜகன்மோஹன் ரெட்டி அல்லும் பகலும் பேசி இருபத்திநாலு எம்.எல்.ஏ க்களின் ஆதரவோடு கட்சியை ஆரம்பித்து மீசையை நீவிக் கொண்டார்.

‘ஏண்டா டேய்…. நாங்க ஆனானப்பட்ட என்.டி.ஆருக்கே பாஸ்கர ராவை வச்சி ஆட்டம் காட்டினவங்க, நீங்கள்ளாம் பச்சாடா’ என்று காங்கிரஸ் யோசித்தது.

’டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ’ வில் இருந்த சிரஞ்சீவியை (கொம்பு) சீவியது. என்ன டீலிங்கோ நமக்குத் தெரியாது. அந்த டீலிங்க் சிருவுக்குப் பிடித்துப் போயிற்று.

சிரஞ்சீவிக்கு பிரெட்டு, ஜகனுக்குத் திரெட்டு!

சுபம்.

ஆந்திரா காங்கிரஸ்காரர்களிடம் உலக அரசியல் அரங்கு நிறையத் தெரிந்து கொள்ளவேண்டும்.

நம்ம ஊர்ல கூட காங்கிரஸ் கட்சியில ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கு. எஸ்.வி.சேகர் காங்கிரஸ்ல சேர்ந்திட்டாராம். எனக்கென்னமோ நடிகர் பொன்னம்பலம் அதிமுக வில் சேர்ந்ததுக்கும், இதுக்கும் பெரிய வித்யாசம் இருக்கிறதா தெரியல்லை.

அதே மைலாப்பூர் தொகுதிக்கு டிக்கெட்டும் கிடைச்சி ஜெய்ச்சியும் காமிச்சிட்டாருன்னா அதுவே பெரிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அந்த மஹாசக்தி எது?

கிடைத்த ஸ்பெக்ட்ரம் அவலை ஜெயா டிவி நன்றாகவே மென்று கொண்டிருக்கிறது.

 வைகோ, சோ, சுப்ரமணியம் ஸ்வாமி என்று பல்வேறு பிரபலங்கள் அவல் கொண்டு வர ஊதி ஊதித் தின்று கொண்டிருக்கிறார்கள். சோ பேசுகிற போது ராஜாவுக்கும் கருணாநிதிக்கும் மிஞ்சிய ஒரு சக்தியின் தலையீடு இருக்கிறது, அந்த சக்தி நிச்சயம் பிரதமரை விட வல்லமை படைத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவில் மட்டுமே குறிப்பிட்டார்.

சோ அவரது வழக்கமான ராணுவ நிற சஃபாரியில் வராமல் வெளிர் மஞ்சள் நிறச் சட்டை அணிந்திருந்தார். மஞ்சள் துண்டு மாதிரி இதிலும் ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ?

பரபரப்புக்குப் பெயர் போன ஸ்வாமி இந்த இலைமறைக் காய் பேச்செல்லாம் பேசவில்லை. நெத்தியடியாக இன்னின்னாருக்கு இத்தனை சதவீதம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஒரு பத்திரிகை கூட இந்த மஹாசக்தியின் இன்வால்வ்மெண்ட் பற்றி சந்தேகம் எழுப்பவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. வம்பை மார்க்கெட்டிங் செய்யும் பத்திரிகைகளின் வாயை மூடி வைத்திருப்பது நிஜமா, பயமா, பிரியமா, பணமா?  

ஸ்வாமியின் மழலைத் தமிழில் இந்த வம்பைக் கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை அப்படியே நம்ப நான் தயாரில்லை. நான் மட்டுமில்லை, ஸ்வாமியைப் புரிந்த யாருமே அதை முழுசாக நம்ப மாட்டார்கள்.

திருடின பணம் வெளிநாட்டுக்குப் போயாகி விட்டது என்றால், நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யுமா?

சில ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதற்கே அமெரிக்கா சோற்றுக்கு சிங்கி அடிக்கும் நிலைக்கு வந்ததே, லட்சம் கோடியை இந்த நாடு தாங்குமா?

’இவர்கள் பட்டாடையைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவு போய் விட்டது’ என்கிற தமிழன்பனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்கள். நின்றால் கூட தோட்டா காலிடுக்கு வழியாகப் போய்விடுகிற அளவுக்கு குள்ளமான தெய்வம் போலிருக்கிறது. அதுதான் எல்லாரும் தப்பித்து விடுகிறார்கள்.

*******************************************************************************************************

ஜகன்மோஹன் ரெட்டி புதுக் கட்சி ஆரம்பிக்கிறாராம்.

ஆந்திரக் காற்றில் சிரஞ்சீவி அம்மியே பறந்து விட்டது. ஜகன்மோஹன் எல்லாம் வெறும் கூழாங்கல்!