சிறுகதை

மஹாசக்தியே வந்து பிறந்தாலும்….

“என்னென்ன காரணத்துக்கோ அவதாரம் எடுத்து அலுப்பா இருக்கு. பூலோகத்தில் ஒரு சாதாரணப் பெண்ணாப் பிறந்து கொஞ்ச காலம் வாழணும் போல இருக்கு” என்றார் சக்தி.

பரமேஸ்வரன் பதிலேதும் சொல்லவில்லை. லேசாகப் புன்னகை மட்டும் செய்தார்.

“இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்?”

“புன்னகைக்கு எதுக்கு அர்த்தம் இருக்கணும்? புன்னகையே வேறே ஏதோ ஒண்ணின் அர்த்தம்தானே?”

“அர்த்தமே புரியல்லை, ஆகவே கட்டாயம் இது எதோட அர்த்தமோ அது எனக்குப் புரியப் போகிறதில்லை. நான் பூலோகத்தில் பிறக்க இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபமில்லையே?”

“என் ஆட்சேபத்தை மீறி நீ போனதில்லையா?”

“உண்டு, ஆனால் அது உங்களை மீற வேண்டும் என்பதற்காக அல்ல. மனைவியர் மீது ஆண்கள் அனாவசியமான ஆதிக்கம்………”

“ஓ.. மேன். இதைப் பலமுறை கேட்டாகி விட்டது. உன்னுடைய ஆட்டிட்ட்யூட் காரணமாய் இப்போது பூலோகத்தில் எந்தப் பக்கம் போனாலும் பெண்கள் மேல் சாவனிஸம் பேசுகிறார்கள் “

“இதோ.. இப்படிப் பெண்களைப் பேசக் கூட அனுமதிக்காத ஆட்டிட்யூட்தான் அதற்குக் காரணம். சரி, என்னுடைய சார்ஜையும் சேர்த்து ஹேண்டில் பண்ணுவீர்களா, எனி அப்ஜெக்‌ஷன்ஸ் ஆர் ப்ரெஜுடிஸஸ்?”

”மனிதப் பிறவி என்பது ஆஃப்டர் ஆல் நம் கணக்கில் அதிக பட்சம் இரண்டு மாதங்கள். நீ புறப்படு, ஐ ஹேவ் நோ அப்ஜக்‌ஷன்ஸ் வாட் ஸோ எவர். எந்த ஊர்?”

“பழகின ஊர்தான், மதுரை”

“என்னுடன் பழகின ஊரா?”

பரமேஸ்வரனின் மொக்கைக்கு ஒரு வாய்ச் சுளிப்பை விடையாகக் கொடுத்து விட்டு பார்வதி புறப்பட்டார்.

பரமேஸ்வரன் வாட்சைப் பார்த்தார். மணி பத்து. பார்வதி இப்போது கருவாக உருவானால் ஜனிப்பதற்கு இன்னும் ஒன்றேகால் மணிநேரம் ஆகலாம். மொபைல் அடித்தது.

எமன்.

“எமா, ஒரு ஒண்ணரை மணி நேரம் கழிச்சி வர்ரேன். பூமியில் இன்னைக்குப் பிறக்கப் போற ஒரு உயிருக்கு ஆசி வழங்கி ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வரணும்”

“ஓ.. மேடம் அவதாரம் எடுக்கறாங்களா? யாரை சம்ஹாரம் பண்ண?”

“சம்ஹாரம் பண்ண ஏகப்பட்ட பேர் இருக்காங்க. ஒரு அவதாரத்தில் அவ்வளவு பேரையும் தீர்த்துக் கட்டணும்ன்னா அணுகுண்டாத்தான் அவதாரம் எடுக்கணும்”

“வாஸ்தவம்தான். அதுக்கு அமெரிக்காக்காரன் கிட்டே பர்மிஷன் வாங்கணுமே” என்று அறுத்து விட்டு எமன் ஃபோனை வைத்து விட்டான்.

முற்பகல் செய்யின் முற்பகலே விளையும் போலிருக்கு. நான் போட்ட மொக்கை எனக்கே ரிட்டர்ன் ஆகுதே என்று நினைத்தபடி கொஞ்சம் டென்ஷனாக, பதினொன்றேகால் ஆகக் காத்திருந்தார். ஏதாவது யோசனையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்று மொபைலில் ரிமைண்டரும் போட்டு வைத்தார்.

மொபைலில் ரிமைண்டர் அடிக்கும் போது பார்வதி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சு? ஐடியாவை டிராப் பண்ணிட்டியா?” என்றார் ஆச்சரியமாக.

“ப்ச்.. முடிஞ்சது” என்றார் பார்வதி.

வாயிலிருந்து கள்ளிப் பால் வழிந்து கொண்டிருந்தது. ஜனிக்கப் போகும் ஊர் மதுரை என்று சொன்னது ஞாபகம் வந்தது.

நல்ல வேளை, அதைக் கேக்கல்லை

ஒரு மீன்பிடிப் படகு கரைதிரும்பும் போது வழி மாறி பாறையில் மோதி சேதமானது. விபத்துக்குக் காரணம் கலங்கரை விளக்கத்தின் ஆப்பரேட்டரின் பொறுப்பின்மைதான் என்று வழக்குப் பதிவு செய்தார்கள்.

தன் கட்சிக்காரர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபிக்க விரும்பிய அவரது வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்.

“கலங்கரை விளக்கம் மீன்பிடிப் படகுகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்?”

“கரை எந்தப்பக்கம் என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்”

“எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று எப்படித் தெரியும்?”

“கலங்கரை விளக்கத்தில் இருப்பது சுழல் விளக்கு”

“சம்பவம் நடந்த அன்று வேலைக்குப் போயிருந்தீர்களா?”

“போயிருந்தேன்”

“எத்தனை மணிக்கு?”

”மாலை ஐந்தரைக்கு”

“எப்போது ட்யூட்டி முடிந்தது?”

“காலை ஏழு மணிக்கு”

“சம்பவம் நடந்த நேரம் என்ன?”

“இரவு பனிரெண்டு மணிக்கு சற்று முன்னதாக இருக்கலாம்”

“எப்படித் தெரியும்?”

“மீட்புப் படகு கரை சேரும் போது மணி பனிரெண்டு”

“கலங்கரை விளக்கில் சுழற்சி வேலை செய்கிறதா?”

“வேலை செய்கிறது”

“அதில் என்ன பிழை வந்தாலும் உடனடியாக சரி செய்யப் போதுமான பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது” (மேலும்…)

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

அம்புலிமாமா ஸ்டைலில் ஒரு கதை தோன்றியது.

ம்க்க்குக்கும்.

பரமசிவனும், பார்வதியும் பொழுது போகாமல் பூலோகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாறுவேடத்தில் இருந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பூலோகத்தில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது சோதனைகள் வைத்து யார் சிறந்தவர் என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொள்வது சிவனுக்கும் பார்வதிக்கும் பிடித்த பொழுது போக்கு. அந்த ஊரிலும் அதே விளையாட்டை விளையாடத் தீர்மானித்தார்கள்.

வழியில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் “உங்க ஊர்லயே பெரிய வள்ளல் யாருப்பா?” என்று கேட்டார் சிவன்.

“அண்ணாமலை ஐயாதானுங்க” என்றார் அவர்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இன்னொருவரை பார்வதி கேட்க, அவர்

“பெரியண்ணன் ஐயாதானுங்கம்மா” என்றார்.

தொடர்ந்து கேட்டுக் கொண்டே போக மாற்றி மாற்றி இந்த இருவரின் பெயரையே எல்லாரும் சொன்னார்கள். யார்தான் சிறந்த வள்ளல் என்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். முதலில் அண்ணாமலை வீட்டுக்குப் போனார்கள். தாங்கள் ஒரு வண்டி நிறைய பணம் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஒரு மணி நேரத்துக்குள் மக்களுக்கு தானம் செய்து விட வேண்டும் என்றும் மிச்சமிருந்தால் அவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். அண்ணாமலை ஒப்புக் கொண்டார். சிவனும் பார்வதியும் தங்களை மறைத்துக் கொண்டு கவனித்தார்கள்.

அண்ணாமலை வருவோர் போவோருக்கெல்லாம் ஒவ்வொரு கட்டாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து ஏகப்பட்ட பணம் மிச்சமாகி விட்டது.

அடுத்ததாக பெரியண்ணன் வீட்டுக்குப் போய் ஆக்‌ஷன் ரீபிளே செய்தார்கள்.

பெரியண்ணன் வந்தவர்கள் எல்லாருக்கும் கைநிறைய கட்டுக் கட்டாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒரு மணி நேரம் கழித்து பத்துப் பதினைந்து கட்டுகள் மிச்சமிருந்தன.

பெரியண்ணன்தான் சிறந்த வள்ளல் என்று பரமசிவன் முடிவு செய்தார். இல்லை அண்ணாமலைதான் என்று பார்வதி சொன்னார். விவாதிக்க ஆரம்பித்தார்கள். தனக்கு நிறைய வேண்டும் என்றுதான் அண்ணாமலை ஒவ்வொன்றாகக் கொடுத்தார் என்பது சிவபெருமானின் வாதம். பார்வதி வாதிடவில்லை. ‘நாளைக்குச் சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னார்.

மறுநாள் இருவரும் நகர்வலம் போனார்கள்.

பெரியண்ணனிடம் பணம் வாங்கியவர்கள் எவ்வளவு செலவு செய்தும் இன்னும் பணம் மீதமிருக்க பணத்தைக் குடிப்பதிலும், விபச்சாரத்திலும் செலவு செய்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலையிடம் பணம் வாங்கியவர்கள் பணம் கொஞ்சமாக இருந்ததால் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தின்பண்டங்களும், உடைகளும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.

இதைச் சொல்லி விட்டு ”மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்ன?” என்று இல்லத்தரசியிடம் கேட்டேன்.

“எப்பவுமே பொண்டாட்டி சொல்றதுதான் சரியா இருக்கும். இதான் மாரல்” என்கிறார்.

அப்பா பை பை

புரண்டு படுத்த மகள் தூக்கத்தில் பேசிய வார்த்தைகள் அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

 ’அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா குட்நைட் பாட்டி பை பை’ என்றாள். ம்ம்க்கும்.. பாட்டி மட்டும் தனியா ஊருக்குப் போவாளாக்கும் என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.

 மகள் என்றால் அவனுக்கு உயிர். கல்யாணமாகிப் பத்து வருஷம் குழந்தைகள் இல்லை. எல்லாரும் விசேஷம் உண்டா, விசேஷம் உண்டா என்று கேட்பது தாங்காமல் ஊரையே காலி பண்ணிக் கொண்டு இந்த ஊருக்கு வந்தார்கள்.

 என்ன ஆச்சரியம்!

 பத்தாம் மாசம் இவள் பிறந்தாள். அந்த வீட்டின் மீதும், மகளின் மீதும் விசேஷ பாசம் உண்டாயிற்று. தாத்தா பாட்டி என்றால் குழந்தைக்கு உயிர். எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மாவின் அப்பா அம்மா என்றால் விசேஷ பிரியம். கனவில் கூட அவர்கள் வருகிறார்கள். பாட்டி அந்தக் காலத்து மனிஷி. தனியாக ஊருக்குப் போக மாட்டாள் என்று காலையில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 அடுத்த நாள் ஊரிலிருந்து மாமியார் இறந்து விட்டதாக தந்தி வரும் போது அதிர்ச்சியாக இருந்தது. சரி இது ஏதோ அன் எக்ஸ்பெக்டட் கோயின்ஸிடன்ஸ் என்று விட்டுவிட்டான். ஏறக்குறைய ஒரு வருஷம் ஆகி விட்டது. ஒரு நாள் இரவு மறுபடியும் அதே போல ஒரு சம்பவம்.

 அன்றைக்குத் தூக்கத்தில் ‘அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா பை பை’ என்றாள். ஏதோ ஒரு தரம் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ஆகியிருக்கும். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.

 ஆனால்,

 அடுத்த நாள் மாமனார் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது.

 அன்றிலிருந்து மகள் புரண்டு படுக்கிற போதெல்லாம் அவனுக்கு ரத்தம் சில்லிட்டு மூச்சு ஒடுங்கியது. அவன் பயந்த அந்த நாளும் வந்தது.

 ‘அம்மா குட்நைட், அப்பா பை பை’ என்றாள் அன்றைக்கு.

 அன்று இரவு கடப்பதே பெரிய விஷயமாக இருந்தது. தூக்கமே வரவில்லை. வியர்த்தது. பொழுது விடியும் போது உயிருடன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டான்.

 அப்பாடா.. காக்காய் உட்கார இரண்டு பனம்பழம் கூட விழுவதுண்டு போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

 எதிர்வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.

கிமுவில் பாலச்சந்தர் கதை

”இளவரசே, அரசியார் உங்களை அழைக்கிறார்கள்” சேவகன் இடுப்பை வளைத்து உணர்வின்றிச் சொன்னான்.

 ”வருகிறேன் என்று சொல்” என்றான் குணால். அவன் சேவகன் பக்கம் திரும்பக் கூட இல்லை.

 “இல்லை இளவரசே, ஏதோ தலையாய செய்தியாம், கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றான் மீண்டும். இப்போது அவன் சொன்ன விதம் இது உறவுமுறை அழைப்பல்ல, அரசியின் கட்டளை என்பது போல் ஒலித்தது.

 “அரசியின் கோபம் நமக்கெதற்கு? போய் என்னவென்று கேட்டு வாருங்களேன்” என்றாள் காஞ்சனமாலா.

 அரசியைச் சந்திக்கச் செல்லத் தான் தயங்குவதன் காரணத்தை மனைவி காஞ்சனமாலாவிடம் குணாலால் சொல்ல முடியாது. சொன்னால் அவளால் தாங்க முடியாது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

 நேற்று நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்த போது அவன் மேல் ஒரு ரோஜா வந்து விழுந்தது. மல்லிகைக் கொடியிலிருந்து ரோஜா எப்படி விழும் என்கிற ஆச்சரியத்தில் நிமிர்ந்து பார்த்தால் உப்பரிகையில்  திஷ்யரக்‌ஷா!

 ’இங்கே வாயேன்’ என்பது போலக் கையை ஜாடை செய்து வெட்கத்தோடு சிரித்தாள்.

 குணால் ஒரு வினாடி பதறினான்.

 இதை அவன் பெற்றோரோ, மனைவி காஞ்சனமாலாவோ பார்த்தால் என்ன ஆவது!

 சட்டென்று அரண்மணைக்குள் நுழைந்து மறைந்து போனான்.

 அது முதல் தடவையல்ல. போன வாரம் தயா நதிக்கரைக்குக் குளிக்கப் போயிருந்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த போதே அவளும் ஆடைகளைக் களைந்து விட்டு நீரில் இறங்கி விட்டாள். கையால் முகத்தை மறைத்துக் கொண்டு கரையேறி ஓடி வந்து விட்டான். அவன் எங்கே போனாலும், என்ன செய்தாலும் தொடர்கிறாள். இதெல்லாம் காஞ்சனமாலாவுக்குத் தெரியாது. தான் இப்போது அழைக்கப்படுவது இது விஷயமாகத்தான் என்பது அவனுக்குத் தெரியும்.

 என்ன சொல்வது?

 என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என் மனதில் தப்பில்லை என்று எண்ணிக் கொண்டான். எழுந்தான்.

 “அரசியிடம் வாதிட வேண்டாம். அவர் என்ன சொன்னாலும் அதன்படி நடந்து கொள்ளுங்கள்” என்றாள் காஞ்சனமாலா.

 பைத்தியக்காரி. நடக்கப் போவது தெரியாமல் பேசுகிறாள். அரசி சொற்படி நடந்தாலும் பிழை, நடக்கவில்லையென்றாலும் பிழை என்பது இவளுக்கெங்கே புரியப் போகிறது.

 குணால் எழுந்ததைப் பார்த்ததும் சேவகன் நடக்க ஆரம்பித்தான். நேராக அந்தப்புறம் சென்றார்கள். சேவகன் பணிந்து கையை உட்புறம் நீட்டி நின்றான். குணால் உள்ளே பிரவேசித்ததும் உள்ளேயிருந்து ஒரு குரல் சேவகனுக்குக் கட்டளை பிறப்பித்தது,

 “நாங்கள் ராஜ ரகசியம் பேசப் போகிறோம். கதவைச் சாத்திக் கொண்டு வெளியில் இரு. மன்னர் வந்தால் மட்டும் எனக்குத் தெரிவி”

 “ஆகட்டும் அரசி”

 அவன் கதவை மூடிக் கொண்டு வெளியேறினான்.

 உள்ளே யாரையும் காணாமல் “அழைத்தீர்கள் என்று சொன்னான்” என்று பொதுவாகச் சொன்னபடி சுற்றிலும் பார்த்தான் குணால்.

 அவன் கொஞ்சமும் எதிர்பாராமல் பின்னாலிருந்து யாரோ அணைத்தார்கள். சுகந்தமான நறுமணமும் மல்லிகைப் பந்து போன்ற மென்மையும் ஒருவினாடி அவனைக் கிறங்கச் செய்தன. சட்டென்று விலகித் திரும்பினான்.

 திஷ்யரக்‌ஷா!

 “இது தவறு” என்றான்.

 ”என்ன தவறு?” என்றாள் வேல்விழிகளைச் சிமிட்டியபடி.

 “நான் திருமணமானவன்”

 “உங்கள் தந்தையும் திருமணம் ஆனவர்தானே? திருமணம் ஆகிவிட்டதென்று அவர் உங்கள் தாயை மணக்காமல் இருந்திருந்தால் உங்களால் சாம்ராட் அசோகரின் மகனாகப் பிறந்திருக்கவே முடியாதே?”

 “என் தந்தையைப் போல் இன்னொரு மணம் செய்வதில் தவறில்லை. ஆனால் தந்தையின் மனைவியையே மணப்பது தவறு. தயவு செய்து கதவைத் திறக்கச் சொல்லுங்கள் அரசி”

 (அசோகர் தன் இறுதிக் காலத்தில் மணந்த திஷ்யரக்‌ஷா குறித்தும், அசோகரின் மகன் குணால் குறித்தும் வரலாற்றில் இருக்கும் தகவலின் அடிப்படையில் நான் எழுதியிருக்கும் கதை இது)

இசைத்தலும் இசைய வைத்தலும்

ஐந்தாவது முறையாக ஃபோனை எடுத்துப் பார்த்து விட்டுப் பையில் வைத்துக் கொண்டான் இளவரசு.

 “என்ன அடிக்கடி பார்க்கிறே?” என்றேன்.

 “இல்லே.. இன்னைக்கு ஒரு கம்போஸிங் கம்மிட் பண்ணியிருந்தேன். டைரக்டர்தான் ஃபோன் பண்ணிகிட்டே இருக்காரு. சைலண்ட்ல போட்டிருக்கேன்”

 “ஐயய்யோ.. ஐயாம் சாரிடா. நான் கிளம்பறேன். நீ உன் தொழிலைப் பாரு” என்று எழுந்தேன்.

 “அதெப்படி.. பல வருஷம் கழிச்சி வந்திருக்கே. உன்னை எழுந்து போன்னு சொல்லிட்டு நான் போக முடியுமா?”

 “அதெல்லாம் கவலை இல்லை. நீ உன் தொழிலைப் பாரு, நான் அப்புறமா வர்ரேன்”

 “நான் என் தொழிலைப் பார்க்கிறது இருக்கட்டும்; நீ என் தொழிலைப் பார்க்க வேணாமா? வா, ஸ்டூடியோவுக்குப் போகலாம்”

 “நானா?”

 “நீயேதான் வா. கார்ல பேசிகிட்டே போகலாம். டியூனை ஓக்கே பண்ணியாச்சுன்னா நம்ம அரட்டையை வந்து தொடரலாம்”

 “அவ்வளவு சீக்கிரம் ஓக்கே ஆகுமா? திரும்பத் திரும்ப கம்போஸ் பண்ணி பல்லவி ஓக்கே ஆகவே ராத்திரி ஆயிடும்ன்னெல்லாம் இசையமைப்பாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கேனே?”

 “வாஸ்தவம்தான். பட் நான் எப்பவுமே ஒன் அவர்லே ஒரு ட்யூனை ஓக்கே பண்ணிடுவேன்”

 “ம்ம்.. உன் மாதிரி இசை ஞானம் எல்லாருக்கும் இருக்குமா? இல்லாதவன் கஷ்டப்பட்டுத்தானே ஆகணும்?”

 இதற்கு இளவரசு பதிலொன்றும் சொல்லவில்லை. லேசாகச் சிரித்துக் கொண்டான். நாங்கள் அடுத்த விஷயம் பேசுமுன் ஸ்டூடியோ வந்து விட்டது.

 எங்களை வரவேற்ற டைரக்டர் ரொம்பப் பெரிய ஆள். அவர் வாங்காத அவார்ட் இல்லை, அறிமுகம் செய்யாத பெரிய ஸ்டார்கள் இல்லை, காணாமல் அடிக்காத கர்விகள் இல்லை.. யாருக்கும் தலை வணங்க மாட்டார் அதே சமயம் யாரையும் தூக்கி எறிந்தும் பேச மாட்டார். இளவரசுவின் டெம்பர்மெண்டுக்கு இவரிடம் எப்படி வேலை செய்கிறான் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவர் டைரக்‌ஷனில் எப்படியோ அப்படி இசையில் இவன்.

 இளவரசின் அஸிஸ்டண்ட் ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து காமாட்சியைப் பிரதிஷ்டை செய்யும் ஆதிசங்கரர் போல பவ்யமாக வைத்தான். இளவரசு உட்காரும் வரை காத்திருந்து தப்லாக்காரரும் உட்கார்ந்தார்.

 “சார்.. இது ஹீரோயின் தன்னோட வருத்தத்தை பூடகமா சொல்ற மாதிரிப் பாட்டு, அதனாலே சிந்து பைரவி ராகத்துல..” என்று ஆரம்பித்தான்.

 “இல்லை அரசு.. சோகம் மெட்டுல தெரியக் கூடாது. சொற்கள்ள மட்டும்தான் தெரியணும்”

 “சரி, அதை மாத்திக்கலாம். சோகம்ங்கிறதாலே டெம்போ குறைவா தன்னம்த்த தந்தன்னன்னன்னு ஒரு எய்ட் பீட் ரிதம்….” இளவரசு முடிப்பதற்குள் டைரக்டர் குறுக்கிட்டார்,

 “ம்ம்ஹூம்.. பாட்டு மேலோட்டமாக் கேட்டா குத்துப் பாட்டு போல இருக்கணும். வார்த்தைலதான் சோகம்” என்றார்.

 “ஓஹோ.. ஓக்கே. மாத்திக்கலாம். சந்தம் எப்படி, ஒரு லைனுக்கு ஆறு வார்த்தை வர்ராப்பல இருக்கலாமா? நல்ல ஃப்ளோவும் கண்டிநியுட்டியும் இருக்கும்”

 “ம்ம்ஹூம். வந்தானா.. வர்லியா; தந்தானா.. தர்லியா; அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் வந்து பழகு வந்து பழகுங்கிற மாதிரி இருக்கட்டும் சந்தம். அதான் பல்லவி”

 இளவரசு தியானம் செய்கிறவன் போல இரண்டு நிமிஷம் கண்மூடி உட்கார்ந்தான். பிறகு பக்கத்திலிருந்த தப்லா வித்வானிடம், “தந்தன தத்தா தந்தன தத்தா தன்னம்னம்.. இதான் ரிதம்” என்றான்.

 அவர் தன் தப்லாவைக் குமுக்கி அந்த தந்தன தத்தாவுக்கு உயிர் கொடுக்க இளவரசு ஹார்மோனியத்தில் வந்தானா வர்லியா சந்தத்தை ஷண்முகப்பிரியாவில் வாசித்தான்.

 “எக்ஸல்லண்ட்.. உனக்குள்ள இருக்கிற திறமை உனக்குத் தெரியல்லை. நான் தோண்டி எடுக்க வேண்டியிருக்கு. நாளைக்கு ரிக்கார்டிங் முடிச்சிடு” என்றார் டைரக்டர்.

 எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 “என்னடா, இந்த டைரக்டர் மஹா ஈகோ பிடிச்சவன்ம்பாங்க.. பத்து நிமிஷத்துல ஓக்கே பண்ணிட்டியே?”

 சிரித்தான்.

 “எப்படிடா ரெண்டு நிமிஷத்துல அவர் கேட்ட மாதிரி ட்யூனைப் போட்டே?”

 ”இது ரெண்டு நிமிஷத்தில் போட்டதில்லை. நான் நேத்து பூரா யோசிச்சி போட்ட ட்யூன்” என்றான்.

கடவுள் ஏன் காக்க வைக்கிறான்?

வைகுண்ட ஏகாதசி என்பதால் வழக்கமாய் ஃப்ரீயாகச் சந்திக்கிற அனுமாரையும், ராமனையும் கொஞ்சம் காத்திருந்துப் பார்க்க வேண்டியதாயிற்று நேற்று.

 வரிசையில் எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு பெரியவர் யார் குறுக்கே புகுந்தாலும் ‘போங்க.. போங்க’ என்று அனுமதித்துக் கொண்டிருந்தார்.

 கோயிலாக இருந்தாலும் சரி, வேறெந்த இடமானாலும் சரி. வரிசையில் குறுக்கே பூர்கிறவர்களைக் கண்டால் எனக்கு அசாத்திய எரிச்சல் வரும். வயசில் ரொம்ப மூத்தவர் என்பதால் எரிச்சலை அடக்கிக் கொண்டு,

 “சார், இப்படி வர்ரவங்களையெல்லாம் விட்டுகிட்டிருக்கீங்களே, தரிசனம் முடிச்சி வீட்டுக்குப் போகிற எண்ணமே இல்லையா?” என்றேன்.

 “தம்பி.. பெரிய மனிஷங்களை மணிக்கணக்கா கியூவில நின்னு பாக்கிறவங்களைத் தெரியுமா உங்களுக்கு?” என்றார்.

 “தெரியும்”

 “ஒரு வணக்கம், இல்லைன்னா ஒரு புன் சிரிப்பு, இல்லைன்னா கொஞ்சம் நன்கொடை அல்லது கொண்டு வந்த புகார் மனுவை வாங்கிக்கிறதுன்னு சட் சட்டுன்னு டிஸ்போஸ் பண்ணிகிட்டே இருப்பாங்க தெரியுமா?”

 “ஆமாம்”

 “ஆனா சில குறிப்பிட்ட ஆசாமிகளை மட்டும், ஏய்.. சுப்புணி நீ கொஞ்சம் வெய்ட் பண்ணுன்னு நிக்க வைப்பாங்க”

 “ஆமாம்”

 “எல்லாரும் போனப்புறம் வாடா சுப்புணி உக்காருன்னு உக்கார வச்சி பொறுமையாப் பேசுவாங்க”

 “ஆமாம் சார்”

 “அப்படிப்பட்ட ஆட்கள் யாரு?”

 “ரொம்ப நெருக்கமானவங்களா இருப்பாங்க”

 ”நீங்களும் நானும் தனக்கு ரொம்ப நெருக்கம்ன்னு ராமன் நினைக்கிறான் சார், புரியல்லையா உங்களுக்கு?”

 இதற்கப்புறம் நான் எப்படிக் கோபப்பட முடியும்?

முயலுக்கு மூணே கால்

”இந்த சுந்தரம் இருக்கானே ரொம்பப் பிடிவாதக்காரன். தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்ன்னா மூணு கால்தான், கடைசி வரைக்கும் மாத்திக்க மாட்டான். விதண்டாவாதம் பன்ணிகிட்டே இருப்பான்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

 “அனுபவம்தான்”

 “என்ன அனுபவம்?”

 “அவன் கூட எதைப் பத்தியாவது விவாதம் பண்ணியிருக்கியா?”

 “இல்லையே?”

 “நான் பண்ணியிருக்கேன். நேத்து பாரு, முட்டாள்தனம் வேறே, அறியாமை வேறேன்னு சொல்றேன், ஒத்துக்கவே மாட்டேங்கிறான்”

 “ஈஸ் இட்? ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்றானா?”

 “ஆமாம். அறியாமைங்கிறது முட்டாள்தனத்தோட ஆரம்பமாம். செடிதானே மரமாகுது, செடி வேறே மரம் வேறயான்னு விதண்டவாதம் பண்றான்”

 “அதுக்கு நீ என்ன சொன்னே?”

 “அதெப்படிடா அதுவும் இதுவும் ஒண்ணாகும், மரம்ங்கிறது செடியோட வளர்ச்சிடா, முட்டாள்தனம் அறியாமையின் வளர்ச்சியான்னு கேட்டேன்”

 “அருமை, அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

 “ஆமாம்டா, அறியாமை இருக்குன்னு தெரிஞ்சி அதைப் போக்கிக்கிட்டா அப்பவே அறியாமை காணாமப் போயிடும். போக்கிக்காம இருக்கிறதும் யாராவது சொன்னாலும் ஒத்துக்காம, புரியாம அப்படியே தொடர்வதும்தானே கடைசியில முட்டாள்தனமா வந்து முடியுதுன்னான்”

 “சரியாத்தான் சொல்லியிருக்கான். நீ என்ன சொன்னே?”

 “அறியாமை இருக்குன்னு அடையாளம் கண்டுகிட்டாலே அடுத்தது அதைப் போக்கிக்கிற முயற்சிதானே. அறியாமை இருக்கிறதே தெரியாமப் போனாத்தான் பிரச்சினைன்னேன்”

 “ம்ம்ம்ம்”

 “அப்படின்னா தான் ஒரு செடின்னு தெரிஞ்சாத்தான் எல்லாச் செடியும் மரமாகுமா? அல்லது தெரிஞ்சாலும் தெரியல்லைன்னாலும் மரமாயிடுமான்னு கேட்டான்”

 “அடேடே.. அப்புறம்?”

 “எல்லாச் செடியும் மரமாத்தான் போகுது. ஆனா எல்லா அறியாமையும் முட்டாள்தனமா ஆகிறதில்லைன்னேன்”

 “சரியாத்தான் இருக்கு. அதுக்கென்ன சொல்றான்?”

 “எல்லாச் செடியும் மரமா ஆகுதுன்னா ஏன் கொத்தமல்லி மரம், புதினா மரம், முளைக்கீரை மரம், நெல்லு மரம், உருளைக் கிழங்கு மரம், முட்டைக் கோஸ் மரம், வெங்காய மரமெல்லாம் இல்லைங்கிறான்”

 “ஹா.. ஹா… ஹா “

 “என்ன ஹா.. ஹா.. ஹா? புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு பேசறான்னு சொல்றேன். வெட்டி விவாதம் பண்றான்னு சொல்றேன். இதுல சிரிப்பு என்ன வேண்டியிருக்கு?”

 “நான் சிரிச்சது வேறே விஷயத்துக்கு”

 “எதுக்கு?”

 “எவ்வளவு நேரம் பேசினே?”

 “ஒரு மணி நேரம்”

 “ஒன் அவர் பேசியும் நீ சொன்னதை அவன் ஒத்துக்கல்லை?”

 “ஆமாம்ப்பா.. அதான் பிடிவாதக்காரங்கிறேன்”

 “அவன் சொன்னதை நீ ஒத்துக்கிட்டியோ?”

 “இல்லையே?”

 “அப்ப நீ பிடிவாதக்காரன் இல்லையா?”

எங்க பாட்டி கல்யாணத்தில..

”அம்மா.. வீட்டை ஒழிக்கறேன் வீட்டை ஒழிக்கறேன்னு சொல்றீங்களே ஒழிய எதுவுமே நடக்கிறதில்லை. முதல்லே வேண்டாத பொருளைத் தூக்கி எறிஞ்சாத்தான் வீட்ல இடம் கிடைக்கும். சும்மா நாலு மூலைத் தாச்சி மாதிரி இங்கேர்ந்து அங்கே அங்கேர்ந்து இங்கேன்னு நகர்த்திகிட்டு இருக்கிறதுக்குப் பேர் ஒழிக்கிறது இல்லை”

”சரிடா.. வேண்டாத பொருளை எல்லாம் எடுத்து பரண்ல வச்சிடறேன்”

“வேண்டாததை ஏம்மா பரண்ல வைக்கணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே?”

“வேண்டாம்ன்னா? உடனே தூக்கிப் போட்டுடுவியா? பின்னாலே ஒருநாள் பிரயோஜனப்படும்”

“எனக்குத் தெரிஞ்சி கடந்த முப்பது வருஷமா வீட்டைக் காலி பண்றப்ப எல்லாம் பழைய வீட்டுப் பரண்லேர்ந்து புது வீட்டுப் பரண்க்கு எல்லாம் வந்துகிட்டு இருக்கே ஒழிய எதையும் யூஸ் பண்ணதாவும் தெரியல்லை, தூக்கிப் போட்டதாவும் தெரியல்லை”

“சரிடா.. எதைத் தூக்கிப் போடலாம்ன்னு நீ சொல்லு. போட்டுடுவோம்”

“இந்த கங்காளம்? இதை வச்சிகிட்டு என்ன பண்றோம்?”

“இதுவா?”

“ஆமாம்.. இதேதான்”

“உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா?”

“இன்னும் இல்லை, இப்படியே போனா கொஞ்ச நாள்ள பிடிச்சிடும். அப்படி என்ன மடத்தனம் இதைத் தூக்கிப் போடறதிலேன்னு சொன்னா தெரிஞ்சிக்கறேன்”

“இன்னைக்கு இந்த மாதிரி ஒரு பாத்திரம் வாங்கணும்ன்னா என்ன விலை ஆகும் தெரியுமா?”

“நிறையதான் ஆகும்”

“நிறைய ஆகிறது இருக்கட்டும். முதல்லே இப்படி ஒரு கங்காளம் இன்னைக்கு கடைல கிடைக்குமா?”

“கிடைக்காதும்மா.. அதுக்காக வச்சிருக்கணுமா?”

“அபூர்வமான பொருள்டா இதெல்லாம்”

“அம்மா.. ஒரு காலத்துல இடுப்புல மரப்பட்டைதான் கட்டிக்கிட்டாங்க. இன்னைக்கு லட்ச ரூபா குடுத்தாலும் அதெல்லாம் கிடைக்காது. ஆனா இது எங்க தாத்தா கட்டிக்கிட்ட மரப்பட்டைன்னு யார் வீட்லயாவது பரண்ல வச்சிருக்காங்களா?”

“குதர்க்கம் பேசறதே உனக்கு வேலை. அந்தக் காலத்துல இந்த கங்காளம் நிறைய தண்ணியை ரொப்பி வச்சா ஒரு வாரத்துக்கு இருக்கும். இதுல சாம்பார் வச்சா ஒரு கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் போறுமா இருக்கும்”

“இன்னைக்கு தண்ணியை எங்கே பிடிச்சி வைக்கிறே?”

“ஓவர்ஹெட் டாங்க்ல”

“கல்யாணத்துக்கு நீயா சமைக்கிறே?”

“இல்லை.. சமையல் காண்டிராக்டர்தான்”

“அப்ப இந்த கங்காளம் என்னைக்காவது யூஸ் ஆகுமோ?”

“ஆகாது”

“அப்ப தூக்கிப் போடலாமா?”

“அதெப்புடி?”

“அதெப்புடின்னா? இதைப் போட்டுட்டு வேறே பொருள் ஏதாவது வாங்கிக்கலாம்.. அல்லது சமையல்காரங்க கிட்டே விக்கலாம்”

“ப்ச்.. இதோட மதிப்பு உனக்கு தெரியல்லை”

“எனக்குத் தெரியல்லைன்னா பரவாயில்லை. வாங்கிக்கிறவனுக்கு தெரியும்”

“நான் சொன்னது அந்த மதிப்பு இல்லை”

“பின்னே?”

“எங்க பாட்டியோட கல்யாணத்துல இந்த கங்காளத்துலதான் சாம்பார் வெச்சி….. “

”அம்மா.. ஒரு நிமிஷம்”

“என்ன?”

“உங்க பாட்டி கல்யாணத்துல சாம்பார் மிஞ்சவே இல்லையா?”

“மிஞ்சியிருக்கும்.. தூக்கி ஊத்தியிருப்பாங்க. ஏன் கேக்கறே?”

“அதையும் ஒரு தூக்குல ஊத்தி பரண்ல வச்சிருந்தா ஒரு ஆத்திர அவசரத்துக்கு யூஸ் ஆகுமேன்னுதான்”

இன்பத்துள் இன்பம் விழையாதான்

temp Blog

ரஞ்சனி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 ஃப்ளைட்டில் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. ஒவ்வொரு நொடியும் அவளைப் பார்த்ததும் ஆனந்த் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறான் என்பதே யோசனையாக இருந்தது. ஆறு வருஷங்களாகி விட்டன அவள் அமெரிக்கா போய். எம்.எஸ். செய்து, டாக்டரேட் முடித்து கொஞ்ச காலம் வேலையும் பார்த்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

 சினிமா ஹீரோ மாதிரி அப்படியே இடுப்புக்குக் கீழே அணைத்துத் தூக்கி மூன்று சுழற்றுச் சுழற்றுவானா? கட்டிப் பிடித்து நல்வரவு சொல்வானா? ய்ய்யேய் என்று இரு கைகளையும் உயர்த்தி கூச்சலிடுவானா? படு கிராண்டான பொக்கேயைக் கொடுத்து விட்டு ஆனந்தக் கண்ணீரை மறைத்துக் கொண்டு சிரிப்பானா?

 ஒவ்வொரு பிராபபிலிட்டியும் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் போல இனிப்பாக இருந்தது.

 கன்வேயரிலிருந்து பேக்கேஜைக் கலக்ட் செய்து கொண்டு வாசல் நோக்கி நடக்கும் போதே அவள் கண்கள் ஆனந்தைத் தேடின. ஆனந்த ரொம்ப நேரமாக அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது கண்களைச் சந்தித்த பிறகு தெரிந்தது.

 “ய்ய்யேய்” என்று கையை உயர்த்தி வேகமாக அசைத்தாள்.

 ஆனந்திடமிருந்து ஒரு மெல்லிய புன்னகையும், அரைக் கை உயர்த்தலும் பதிலாகக் கிடைத்தன. சுற்றிலும் எல்லாரும் இருக்கிறார்களே என்கிற தயக்கமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

 ம்ம்ஹூம்.

 அருகில் போனதும் கூட சினிமா டிக்கெட்டுடன் காத்திருந்தவன் போல, படம் போடுவதற்குள் உள்ளே போக விழைகிறவன் போல பெட்டியை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்தான்.

 “ஏய்.. ஃபார்மல்ஸ் போட்டாக் கூட நீ அழகா இருக்கேடா” என்றாள் அவனைப் பார்த்து.

 “தேங்க் யூ” என்றான் பெட்டியுடன் நடந்தபடியே முதுகு வழியாக.

 காரில் ஏறிய அடுத்த வினாடி வெடித்தாள்.

 “ஆனந்த்.. என்னாச்சு?” என்றாள்.

 “எதுவுமில்லையே? ஏன்?”

 “இது என்ன ரியாக்‌ஷன்? நான் வந்ததில் உனக்கு சந்தோஷமே இல்லையா?”

 “சீச்சீ.. ஐயாம் ஹேப்பி ஒன்லி”

 “ப்ச்.. ஐயாம் ஹேப்பி ஒன்லி! இந்த வாக்கியமே சொல்லுது”

 “ஏய்.. ஐயாம் எக்ட்ரீம்லி ஹேப்பிப்பா”

 “ம்ம்க்கும்.. எங்களுக்கு ஒண்ணும் கேட்டு வாங்கிக்க வேண்டாம். பிரிஞ்சி இருந்ததிலே நீ சுத்தமா டிட்டாச் ஆயிட்டே”

 “நாட் தட். ஒரு வகைல சந்தோஷம் துக்கம் இரண்டுமே டீவியேஷன்கள்தான் ரஞ்சனி. சதோஷம்ங்கிறது பாஸிட்டிவ் டீவியேஷன், துக்கம்ங்கிறது நெகட்டிவ் டீவியேஷன்”

 “பிளீஸ்.. பிளீஸ்.. திரீ டைம்ஸ் ஸ்டாண்டர்ட் டீவியேஷன் லெவல்லதான் ரெண்டும் இருக்கணும் அதான் சிக்ஸ் சிக்மா எக்ஸல்லன்ஸுன்னு சொல்லாதே.. வாழ்க்கை வேறே சிக்ஸ் சிக்மா வேறே”

 “சேச்சே.. நான் சொல்ல வந்தது அதில்லை”

 “பின்னே? எனக்கு ரியாக்ட் பண்ணத் தெரியாதுன்னு கதை சொல்லப் போறியா? நான் ஊருக்குப் போன போது நீ எவ்வளவு கலங்கிப் போனேன்னு ஸ்கைப்ல நானே பார்த்தேன்”

 “எக்ஸாக்ட்லி.. அதைத்தான் சொல்ல வந்தேன். சந்தோஷமும் துக்கமும் ஃபோர்ஸஸ் மாதிரி. நாம ரியாக்ட் பண்றது அந்த ஃபோர்ஸ் செய்கிற ஒர்க். வென் எ வொர்க் இஸ் டன், ஃபோர்ஸ் வேனிஷஸ். ஃபோர்ஸ் எக்ஸிஸ்ட்ஸ் ஒன்லி அஸ் லாங் அஸ் தி வொர்க் இஸ் நாட் டன். சந்தோஷத்தை மட்டும் அதிகமா ரியாக்ட் பண்ணி டிரைன் பண்ணிடவே கூடாது. ரியாக்ட்டே பண்ணாம மனசுக்குள்ளே ரொம்ப நேரம் மெய்ண்ட்டெய்ன் பண்ணணும்”

 ரஞ்சனியின் புறமாகத் திரும்பி அவன் சிரித்த சிரிப்பில் கள்ளத்தனத்தை மறைக்க முயலும் ஒரு குழந்தையின் தோல்வி தெரிந்தது.

 ஒரு வினாடி அயர்ந்து போன ரஞ்சனி “வெரி ஸ்வீட்” என்று அவனுடைய சொற சொறா கன்னத்தில் முத்தமிட்டாள்.