சுஜாதா

வல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா?

அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பார்த்தா என்னமோ மாதிரி இருக்குமாம் என்பார்கள் பெருசுகள். அந்த என்னமோவில் வருவது என்ன வார்த்தை என்று மனதில் உறுதி வேண்டும் படத்து விவேக் போல மண்டையை உடைத்துக் கொண்டதுண்டு.

அது போல அண்ணா நூற்றாண்டு நூல்நிலையம் வந்த பிறகு கன்னிமாரா நூல்நிலையம் எனக்கு அந்த என்னமோவாக ஆகியிருந்தது. பல காலம் கழித்து நேற்றுத்தான் போயிருந்தேன். தமிழ் இலக்கியங்கள் பகுதியையும் ஏஸி பண்ணிவிட்டார்கள். தவறாமல் ஏஸி போடுகிறார்கள்.

சொ. விருத்தாச்சலம் எனப்படும் புதுமைப் பித்தன், கு. ப. ரா எனப்படும் ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இவர்கள் மூவரையும் தமிழ் இலக்கியத்தின் டிரெண்ட் செட்டர்கள் என்பார்கள். (புதுமைப்பித்தனின் எழுத்தில் என்ன விசேஷம் என்பது என் சிற்றறிவுக்குப் புரிகிறதில்லை)

அதற்கடுத்த தலைமுறையில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், லா. ச. ராமாமிர்தம் இவர்களைச் சொல்லலாம்.

அதையடுத்து வந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம். இப்படி எண்ணிக்கையில் அடக்கி விட முடியாத அளவுக்கு நல்ல எழுத்தாளர்கள் வந்தார்கள். வல்லிக் கண்ணன் அவர்களில் ஒருவர். மணிக்கொடிக் காலம் தொடங்கி மாத நாவல்கள் காலம் வரையிலான ஏராளமான எழுத்தாளர்களைப் பற்றி வல்லிக் கண்ணன் எழுதியிருக்கும் ’தமிழ் உரைநடை வரலாறு’ என்கிற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன்.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களையும் சிலாகித்துத்தான் எழுதியிருக்கிறார். சுஜாதா ஒருவர்தான் விதிவிலக்கு. அவரைக் குறித்து எழுதுகையில் மெலிதான எரிச்சல் வெளிப்படுகிறது.

‘…….கதாபாத்திரம் ஒன்றிடம் பேசுகிறவர் “எப்படி சார் எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க?” என்று கேட்பது போல் ஒரு இடத்தில் எழுதுகிறார். தான் எழுதும் போதும் இப்படி எல்லாரும் கேட்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது போல பல விஷயங்கள் எழுதுவார்….’ என்று எழுதுகிறார். ஆன் தி அவுட் செட் இது பாராட்டு போலத்தான் இருக்கிறது.

கு. ப. ரா பற்றி எழுதும் போது அவர் சொல்வதைக் கவனியுங்கள் :

‘….. தனது பேரறிவையும் ராசிக்கியத்தையும் (ராசிக்கியம் என்றால் என்ன? – ஜவர்லால்) வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் கு. ப. ரா எழுதவில்லை. வாசகனை மிரட்ட வேண்டும், குழப்ப வேண்டும், திகைக்க வைக்க வேண்டும் என்பது போன்ற உயர்ந்த நோக்கம் எதுவும் அவருக்கு இருந்ததில்லை….’

மேற்சொன்ன வாக்கியங்கள் கு. ப. ராவை சிலாகிக்கச் சொன்னதை விட வேறு யாரையோ ரேக்குவதற்குச் சொன்னது என்பது தெளிவு இல்லையா?

இப்போது சுஜாதா பற்றி சொன்னதை மீண்டும் வாசியுங்கள்

Advertisements

சென்னை புத்தகச் சந்தை 2014 – ரிப்போர்ட்:1

முதல் ரவுண்டில் பொதுவாக புஸ்தகங்கள் வாங்க மாட்டேன்; கை ரொம்ப துரு துருவென்றால் அடக்க முடியாமல் வாங்கி விடுவேன்.

 நேற்று என் கையைத் துரு துருக்க வைத்த புஸ்தகங்கள் :

  1. அரசு பதில்கள்      1977 (குமுதம் ஸ்டால்)
  2. கல்கியின்      சிறுகதைத் தொகுப்புக்கள் இரண்டு வால்யூம்கள் சேர்ந்து ரூ.360!
  3. வாலிப வாலி      (பொதிகை டிவி நிகழ்ச்சியின் டெக்ஸ்ட் ஃபார்ம்)
  4. ஜெயகாந்தன்      பேட்டிகள்
  5. என்றும்      சுஜாதா (தொகுப்பு எஸ்.ரா-உயிர்மை ஸ்டால்)

 ஆர்வம் தாங்க முடியாமல் ராத்திரியே உட்கார்ந்து நான் படிக்க ஆரம்பித்த புஸ்தகம் : அரசு பதில்கள்.

 எல்லா பதில்களிலும் வைத்து (including Sujatha) நான் முதல் பரிசு தரும் பதில்கள் அரசு பதில்கள். ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு சாம்பிள் :

 கி. சர்வோத்தமன், சென்னை

 பெரும் ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்ஜரின் பதவி பறி போய் விட்டதே?

 பதில் : ரொடான் என்ற சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சிந்தனையாளன்’,’எண்ணம்’,’முத்தம்’ இவை போன்ற பல அற்புதமானசிற்பங்களைச் செய்த அமரர் அவர். ஒருமுறை, ஃபிரெஞ்சு கதாசிரியர் பல்ஸாக்கின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தவர், முடிவுறும் கட்டத்தில், ஒரு நண்பரைக் கூப்பிட்டுக் காட்டினார்.

 அந்த மனிதர் சிலையை வெகுவாகப் புகழ்ந்து விட்டு, “எல்லாவற்றுக்கும் மேலாக பாஸ்லாக் கைகளை வைத்திருக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது” என்று சொல்லிச் சென்றார்.

 பிறகு இன்னொரு ரசிகரை அழைத்துக் காண்பித்தார். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி. “இவ்வளவு இயற்கையாக எந்தச் சிற்பியுமே கைகளை வடித்ததில்லை” என்று பாராட்டினார்.

 வந்து பார்த்த எல்லாருமே, “இந்தக் கைகள்! அபாரம்!” என்றார்கள்.

 ரொடான் ஒரு சுத்தியலை எடுத்து பால்ஸாக் சிலையின் கைகளை உடைத்துத் தள்ளினார். அவர் சொன்ன நியாயம், ‘கை என்பது ஒரு உறுப்பு. அது உறுப்பாகத்தான் இருக்க வேண்டும். மொத்த உருவத்தை மறக்கடிக்கும் அளவுக்குத் தனி சிறப்போடு அது அமைந்து விடுவது நல்ல சிற்பத்துக்கு லட்சணமாகாது’

 ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு ரத்தின பதில் கட்டாயம் இருக்கும்.

 ராத்திரியோடு ராத்திரியாக அந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்பியதன் காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண டிப்ஸ்

BSNL ன் ராஜிவ் காந்தி நினைவு தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் திரு. பாபு ஸ்ரீநிவாஸ் ரெயின்போ FM (101.4) இல் வேலைவாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணவர் ஒருவர் In Plant Training இல் Campus Interview வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி தருமாறு விண்ணப்பம் செய்து கொண்டார். திரு. பாபு ஸ்ரீநிவாஸ் இதை உடனடியாக ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை இது குறித்து எழுதியிருந்தார். உட்கார்ந்தவுடன் ஃபைலை நீட்டாதீர்கள், கேட்ட பிறகு கொடுங்கள்; தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்; கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; அவர்கள் நிறுவனம் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைக் கேளுங்கள்… என்பது மாதிரி விஷயங்கள் சொல்லியிருந்தார்.

நானும் கூட அவ்வப்போது இண்டர்வியூ கமிட்டியில் இருந்திருக்கிறேன். கேண்டிடேட்டைக் கவனிப்பதை விட இண்டர்வியூ செய்பவர்களை அதிகம் கவனிப்பேன். வந்தவனுக்கு என்ன தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்பதை விடத் தனக்கு என்னென்ன தெரியும் என்று காண்பித்துக் கொள்ளும் அவசரம் அவர்களிடம் தெரியும். பொதுவாக அழகன் படத்து எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் ஆட்டிட்யூட் அவர்களிடம் தெரியும்.

சிங்க்ரோ ஹைவாக் வேக்யூம் பம்ப் எப்படி வேலை செய்கிறது?

ஆக்டேன் வேல்யூவை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்?

கார்பன் ஒரு கண்டக்டரா?

என்பது மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்டு கேண்டிடேட்டின் முழியைப் பிதுங்கச் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது தங்கள் பாஸையும் யூனிட் ஹெட்டையும் பெருமையாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரி ஆசாமிகளை எப்படி ஃபேஸ் செய்வது என்று டிரைனிங் கொடுப்பது அசாத்தியம். ஒரு இண்டர்வியூ பேனல் மெம்பராக எதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று என்னால் சொல்ல முடியும்.

சூயிங்-கம் மென்றபடி வருவது, சொல்வதற்கு முன்னாலேயே உட்கார்வது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது இதெல்லாம் இருந்தால் அவர்களின் ஆட்டிட்யூடைக் கொஞ்சம் ஆழ்ந்து செக் செய்ய ஆரம்பிப்பேன். தலை முடியை பிளீச் செய்வது, ஸ்ட்ரைட்டனிங் என்கிற பெயரில் வேற்றுக் கிரகத்து ஆசாமி போல வருவது, காரே பூரே என்று கட்டிங் செய்து கொள்வது, ஒற்றைக் காதில் கடுக்கன் என்பது போன்ற கோமாளித்தனங்கள் இருந்தால் ஆட்டிட்யூடுக்கு உடனே சைஃபர் மார்க் போட்டு விடுவேன். மேற்சொன்ன கந்தர்கோலங்களுக்கு அவர்கள் சொல்லும் பெயர் இன் திங்! என்னைப் பொறுத்தவரை இன் திங் இருந்தாலே அவன் அவுட் ஆஃப் தி திங்.

ரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்

பள்ளிப் பருவத்தில் தமிழ்வாணன் கதைகளை அடுத்து நான் ரசித்துப் படித்தது ரா.கி. ரங்கராஜன் கதைகள்தான்.

எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்றாலும் மூவிரண்டு ஏழு, இருபத்தி மூன்றாவது படி, புரஃபஸர் மித்ரா இந்த மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மூவிரண்டு ஏழு ரொம்ப ஸ்பெஷல்.

சென்னையில் ‘என்னம்மா.. வாம்மா.. போம்மா’ என்று அழைப்பது ஆரம்பித்திருந்த சமயம். கதையில் வரும் தில்லைநாயகம் என்கிற கேரக்டர் கதாநாயகன் சேதுவிடம் பேசும் போது ‘யாரும்மா.. சேதுவாம்மா’ என்கிற மாதிரி பேசுவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அன்றைக்கு என்ன டிரெண்ட் என்று கவனித்துக் கொண்டே இருப்பார், அதைக் கதையில் ரொம்ப எளிமையாகப் பயன்படுத்துவார்.

சுஜாதா கதைகளில் கதாநாயகன் ரொம்ப இண்டலக்சுவலாக இருப்பான்; அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். நாயகன் நமக்கு எப்போதும் படற்கையாகத்தான் இருப்பான். ஜெயகாந்தன் கதைகளில் நாயகன் பெரிய சிந்தனாவாதியாக இருப்பான். அவன் சமூகத்தின் அபூர்வ சாம்ப்பிளாக இருப்பான். அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். தி. ஜானகிராமனின் கதாநாயகர்கள் தஞ்சாவூர் மாவட்டத்து கிராம லெவல் புத்திசாலிகளாக இருப்பார்கள். கர்நாடக சங்கீதம் பாடுவார்கள். தவில்காரரின் தாள நடை பற்றிப் பேசுவார்கள். கிராமத்துக்கே உரித்தான பலவீனங்களும் அவர்களிடம் இருக்கும். ஆகவே அவர்களும் சமூகத்தின் காமன் சாம்ப்பிள் என்று சொல்ல முடியாது.

ரங்கராஜன் கதைகளில் கதாநாயகன் பட்டணத்து நடுத்தர வர்க்க ஆசாமியாக இருப்பான். ரொம்ப சிந்திக்க மாட்டான். இண்டலக்சுவல் இல்லை. வட்டார வழக்கில் பேசுவதில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற நூற்றுக் கணக்கானவர்களில் ஒருவனாக இருப்பான். ஆகவே அவனோடு ஐக்யமாவது ரொம்ப எளிது. அவன் ஆசைகள், அவன் வெறுப்புக்கள், அவன் காதல் எல்லாம் சட்டென்று உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும்.

மூவிரண்டு ஏழு கதையின் நாயகன் சேது அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான். அவன் காதலிக்கும் கிருத்திகாவை நீங்களும் காதலிப்பீர்கள். அவளுடைய அக்கா ரஜினி மீது உங்களுக்கும் கோபம் வரும். கிருத்திகா செத்துப் போய் விட்டாள் என்று சேது இடிந்து போகும் போது நீங்களும் இடிந்து போவீர்கள். ஒரு கதையின் வெற்றி அந்தக் கதாநாயகனாக படிக்கிற நாமே மாறிக் கொள்வதுதான். இப்படி உங்களை மாற்றுவதில் ரங்கராஜன் சமர்த்தர்.

இந்தக் கதை தொடர்கதையாக வரும் போது அதை எடுத்து, தைத்து பைண்டிங் செய்தோம் நானும் என் சகோதரரும். எங்கள் கனவு நூலகத்தில் மூன்றாவது புத்தகம் அது. (முதல் இரண்டும் தமிழ்வாணன்!)

சினிமாப் பகுதியில் என்ன பெரிதாக எழுதி விட முடியும் என்று நினைக்காமல் அதையும் புதுமையாகச் செய்தார். வினோத் என்கிற புனைப் பெயரில் குமுதத்தில் சினிமாப் பகுதி எழுதினார். லைட்ஸ் ஆன் என்கிற தலைப்பில் வந்த அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சுவாரஸ்யமான ஆங்கில ஃபிரேஸ் எழுதுவார். Devil’s advocate, Talking through the hat என்கிற மாதிரி ஃபிரேஸ்களை நான் தெரிந்து கொண்டதே அதைப் படிக்கிற போதுதான்.

எழுதும் போது ரா.கி. ரங்கராஜன் சொன்ன பல யுக்திகளை நான் கையாள்வதுண்டு. உரையாடல்களில் நகர்த்துவது, தெளிவுதான் உங்கள் ஸ்டைல் என்பது, இனிமேல் ஒரு வார்த்தை கூடக் குறைக்க முடியாது என்கிற அளவுக்கு கச்சிதமாக இருப்பது இப்படி நிறைய.

பொதுவாக யாராவது இறந்து போகும் போது ‘எல்லாருக்கும் ஒருநாள் மரணம் உண்டு’ என்று சமாதானப் படுத்திக் கொள்வோம். வயசாகிப் போச்சு, எல்லாம் பாத்தாச்சு கல்யாண சாவு என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வோம். ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

சுஜாதா, ரா. கி. ரங்கராஜன் போன்றவர்கள் இறக்கிற போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது.

சுஜாதாவுடன் பேசினேன்

”சார், நீங்க ரங்கராஜன்தானே?”

 “ஆமாம்”

 “சுஜாதா ரங்கராஜன்?”

 “ம்ம்ம்ம்ம்”

 “ஐ மீன்.. தப்பா நினைக்காதீங்க….. ரைட்டர் சுஜாதாதானே?”

 “ஆமாம்; ரைட்டர், சினிமா வசனகர்த்தா, ரிடயர்ட் ஜி.எம். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேறே என்னென்ன ஐடெண்டிட்டி அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியுமோ எல்லாமே நான்தான்” சிரித்தார்.

 அவரைப் பத்தி என்று தன்னைப் படற்கையில், சேய்மைச் சுட்டில் குறிப்பிட்டது என் கவனத்தில் வரவில்லை அப்போது.

 “நீங்க இறந்துட்டதா……”

 “உண்மைதான்”

 “என்ன சார் இது… இறந்துட்டேன்னு சொல்லிட்டு என் எதிர்ல பலாச்சுளை மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே?”

 “இதுக்கு நான் புரிகிற மாதிரி பதில் சொல்லணும்ன்னா மரணம் என்கிற நிகழ்வை நீ முதல்ல புரிஞ்சிக்கணும்”

 “புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க”

 “இறப்புங்கிறது முடிவு இல்லை. அது ஒரு மாதிரி வேலை மாற்றலாகி வேறே ஊர் போகிற மாதிரி”

 “வேறே ஊர்ன்னா? அந்த ஊர் எங்கே இருக்கு?”

 “அதுவும் இதேதான்”

 ”என்ன சார் வாழைப்பழக் காமெடி மாதிரி பேசறீங்க. பின்னே ஏன் வேறே ஊர்ன்னு சொல்றீங்க?”

 “தனியாப் பேசணும்னு யாரையாவது கூப்பிட்டுப் பேசிகிட்டு இருந்திருக்கியோ?”

 “நிறைய”

 “அப்போ உனக்கும் அந்த ஆளுக்கும் நடுவில எதுவுமே அல்லது யாருமே இருந்ததில்லையா?”

 “இல்லைன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கேன்”

 “ஒரு ஒன் ஈஸ்டு ஃபைவ் ஹண்ட்ரட் மைக்ராஸ்கோப் வெச்சிப் பார்த்தா இரண்டு பேருக்கும் நடுவில் ஏகப்பட்ட நுண்ணுயிர்கள், இறந்த மனித ஸெல்கள், வாட்டர் மாலிக்யூல்ஸ்ன்னு ஒரே களேபரமா இருக்கும்”

 “ஓ..”

 “எவ்வளவு சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்புக்கும் பிடிபடாத விஷயங்களும் இருக்கும்”

 “அதெப்படி?”

 “நிறங்கள்ள ஆரம்பிக்கலாமா?”

 “ம்ம்ம்”

 “நிறங்கள் எப்படித் தோன்றுது?”

 “கடைல பெயிண்ட் வாங்கி கொஞ்சம் தின்னர் கலந்து அடிச்சா நிறங்கள் தோன்றும்”

 “இது மாதிரி மொக்கை போடுகிறவர்களுக்கு இந்த உலகத்தில் என்ன தண்டனை தெரியுமா?”

 “என்ன?”

 “தாடகை மாதிரி அரக்கிகளை……”

 “அரக்கிகளை?”

 “சரி அத விடு… நிறங்கள் பூராவுமே ஒளியில்தான் இருக்குங்கிறது தெரியுமா?”

 “அது.. அது எனக்கு சிலபஸ்ல கிடையாது சார்”

 “ஏன் நீ அஞ்சாவதுக்கு மேலே படிக்கவே இல்லையா?”

 “ஏன் சார்…. படிச்ச ஞாபகமே இல்லை; அதனாலதான் அப்படிச் சொன்னேன்”

 “சரி. ஒளி எல்லாப் பொருட்கள் மேலயும் படுது, எல்லார் மேலயும் படுது. ஒளியின் ஃப்ரீக்வன்ஸி ரேஞ்ச் ரொம்ப விசாலமானது. அதில் ஒவ்வொரு பொருள் அல்லது ஒவ்வொரு ஆளும் ஒரு குறிப்பிட்ட வேவ் லெங்க்தை மட்டும் பிரதிபலிக்கறாங்க. அது எந்த நிறத்தோட வேவ் லெங்தோ அந்த நிறமா நமக்குத் தெரியுது”

 “சரி..”

 “ரோஜா பாத்திருக்கியா?”

 “நேர்ல பாத்ததில்லை சார். படத்துல மட்டும்தான் பாத்திருக்கேன். செம ஃபிகர் சார்”

 “யோவ்.. நான் கேட்டது ரோஜாப் பூவை”

 “ஓ அந்த ரோஜாவா… ம்ம்ம் பார்த்திருக்கேன்”

 “அதைப் பறிக்காம செடியிலேயே விட்டுப் பார்த்திருக்கியா?”

 “ம்ம்ம்ம்”

 “என்ன ஆகும்?”

 “வெள்ளையா ஆயிடும்”

 “அதாவது பழசாகி வியர் ஔட் ஆகிற போது அதனோட ஃப்ரீக்வன்ஸி ரிஃப்ளக்‌ஷன் பிராப்பர்ட்டி மாறிடுது. சரியா?”

 “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

 “அந்த மாதிரி மரணமும் ஒரு வியர் ஔட்ன்னு வெச்சிக்கலாம். இறந்ததா சொல்லப்படுகிற மனிதர்கள் ரிஃப்ளக்ட் செய்கிற ஃப்ரீக்வன்ஸி மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஃப்ரீக்வன்ஸி. அவர்கள் பேசுகிறதும் மனிதக் காதுகளுக்குப் பிடிபடாத ஒரு ஃப்ரீக்வன்ஸி”

 “ஆக அவங்கள்ளாம் இன்னம் இருக்காங்க பேசறாங்கன்னு சொல்றீங்க?”

 “இது ஒண்ணைத்தான்யா டக்குன்னு புரிஞ்சிகிட்டே”

 “சரி சார், ஒரு சந்தேகம்”

 “இந்த இடத்துல அந்த சந்தேகம் வந்தே ஆகணும். அதுதான் லாஜிக்”

 “இறந்தவங்க ரிஃப்ளெக்ட் பண்ணுகிற வேவ் லெங்த்களை உணர முடியாதுன்னு சொன்னீங்க. என்னாலே உணர முடியுதே?”

 “இதை வேவ் லெங்த் மேட்ச்ன்னு வெச்சிக்கலாம்”

 “அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான வேவ் லெங்த்களை உணர முடியுதுங்கிறீங்க?”

 “கரெக்ட்”

 “எப்படி திடீர்ன்னு அந்த வேவ் லெங்த் மேட்சிங் சாத்தியமாகும்?”

 “ஆகும். அதுக்கு இரண்டு பிராபபிலிட்டி உண்டு. அதிலே ஒண்ணுதான் பாஸிபிலிட்டி”

 “என்னென்ன ரெண்டு பிராபபிலிட்டி, எது அந்த பாஸிபிலிட்டி?”

 “பொதுவா அது சம்பந்தப்பட்ட யாருக்குமே உடனே புரியாது. எல்லாருக்குமே பத்து அல்லது பதிமூணாம் நாள் புரிஞ்சிடும்”

காமராஜர் என்னும் உலக அதிசயம்

நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?

 நாடே பேசும் அந்தத் தலைவர், முதலமைச்சராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பல வருஷங்கள் இருந்தவர். இறந்து போகிற போது வாடகை வீட்டில்தான் இருந்தார். ஐந்து வருஷம் மந்திரியாக இருந்தவர்கள் எத்தனை வீடு (ஐ மீன் ஹெளஸ்) வைத்திருக்கிறார்கள்?

 இறக்கும் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய்தான் வைத்திருந்தார். மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!

 சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே? இன்றைக்கு உதைத்து உருட்டி விட்டாலும் ஓடி வந்து நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொல்கிறார்கள்.

 எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கர்வம் வந்தால் அம்பேல். நாங்கள் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்று முதன்முதலில் கர்வமாக அவர் பேசிய போது டாக்டர் மத்தியாஸ் ஜெயித்தார்.

 அட இதையாவது கற்றுக் கொண்டார்களா? ம்ம்ஹூம், என்ன ஆணவம், என்ன பேச்சு…..

 ரிப்பீட் ஆகிற விஷயங்களைத்தான் விஞ்ஞானம் ஏற்கிறது. அப்படி ஆகாததெல்லாம் ஒண்டர். அந்த வகையில் பார்த்தால் காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்.

ஒல்லி பார்த்திபனும் உயரமான குஷ்பூ மகளும்

லேண்ட் மார்க்கில் 3 ஃபார் 2 என்று ஒரு ஆஃபர் போட்டிருக்கிறார்கள்.

 மூன்று புத்தகங்கள் வாங்கினால் அவற்றுள் குறைந்த விலையிலானது இலவசம். எனக்கு அப்படிக் கிடைத்தது : சுஜாதா பதில்கள். லேண்ட் மார்க்கில் இலவசமாக இன்னொன்றும் கிடைத்தது. அது : மகளை விண்டோ ஷாப்பிங் செய்ய விட்டு ஸ்டூலில் உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பூவின் தரிசனம்! யாரும் பேசிவிடக் கூடாதே என்று தடுக்கவோ என்னவோ மொபைலிலேயே பேசிக் கொண்டிருந்தார். மகள் அவரைக் காட்டிலும் உயரமாக இருக்கிறார்.

************************************************************************ 

ஐநாக்ஸில் எங்கேயும் எப்போதும் பார்க்க நடிகர் பார்த்திபனும் வந்திருந்தார். திரையில் கொஞ்சம் தாட்டியாகத் தெரிபவர் நேரில் சராசரியாகத்தான் இருக்கிறார். தொள தொளா சட்டையாலோ என்னவோ! கேண்டீன்காரரிடம் என்ன பேசினார் என்பது பக்கத்திலேயே நின்றிருந்த எனக்கு காதை சொருகினாலும் கேட்கவில்லை. ஆனால் கேண்டீன்காரப் பையன் அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான்!

 முகத்தைப் பார்த்ததும் என்னை முந்திக் கொண்டு அவர் புன்னகை செய்தார். அடையாளம் கண்டு கொண்ட சில பள்ளி மாணவர்களுடன் சலிக்காமல் ஐந்தாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 ************************************************************************

 ஐநாக்ஸிலிருந்து கடற்கரை காந்தி சிலை பத்து நிமிஷ நடைதான். செப்டம்பர் மாதத்து மாலை மெரினாவில் ரொம்ப இதமாக இருக்கிறது. பிச்சுக் பிச்சுக் உப்புக் காற்றை மட்டும் சகித்துக் கொள்ள வேண்டும்.

 கடல்நீரில் கால் நனைத்துவிட்டு வரும் போது இன்னொரு எதிர்பாராத சந்திப்பு.

என்னையே முழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்த அவர்,

 “நீங்க சொன்னது கரெக்ட்தான், ஆர்பிட்டல் சாண்டரில் இருப்பது எஸ்.கே.எஃப் மேக் பேரிங்தான் 6000Z” என்றார்.

 ஒரு வினாடி யோசித்த எனக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும்.

 பதினைந்து வருஷம் முன்பு அவரிடம் நான் கடைசியாகப் பேசிய வாக்கியம்,

 “சார், அது Koyo மேக் இல்லை, எஸ்.கே.எஃப் 6000Z ன்னு போட்டிருக்கும் பாருங்க”

 ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

 எழுந்திருக்கும் போது நான் சொன்னது,

 “மன்னிக்கணும், அது Koyo தான். ஏன்னா 6000Z பேரிங்குக்கு எல்லா மேனுஃபேக்சரரும் அதே டெசிக்னேஷந்தான் தர்ராங்க”

 இதற்கு பதிலை எத்தனை வருஷம் கழித்துச் சொல்வாரோ!

ஒரு சுஜாதா கதையின் அனாட்டமி

சில வருடங்களுக்கு முன் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கதை கொஞ்சம் சிந்தனையைத் தூண்டும் தன்மையுடையது.

 திருடன் ஒருவனை ஒரு போலீஸ் அதிகாரி மிதி மிதியென்று மிதித்துக் கொண்டிருப்பார். ஒரு சமூக ஆர்வலர் குறுக்கிட்டு ’குற்றங்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது, நீ எப்படி அவனைச் சவட்டலாம்?’ என்று கண்டிப்பார்.

 ’அவன் என்ன தப்பு செய்தான் என்று தெரியுமா?’ என்பார் அதிகாரி.

 சமூக ஆர்வலர் விடை சொல்வதில்லை.

 ‘அரைப் பவுன் தோட்டைத் திருடியிருக்கிறான்’

 ‘பூ.. ஆஃப்டர் ஆல் திருட்டுத்தானே, அதுவும் பிசாத்து அரைப் பவுன் தோடுதானே?’

 ‘ஆமாம், ஆனால் எப்படித் திருடினான் என்று பாருங்கள்’ என்று மேசை இழுப்பறையிலிருந்து கருரத்தம் கட்டிய காதோடு சேர்ந்த ஒரு தோட்டைக் காட்டுவார்.

 ‘இது ஒரு எழுபது வயதுப் பாட்டியின் காது’ என்பார்.

 அரைப் பவுன் தோடு திருடினால் என்ன தண்டனையோ அதுவே இதற்கும் போதுமா? ‘போதும்’ என்று சொல்பவர்கள் வாருங்கள்.

 கழற்றி வைத்திருக்கும் போது திருடுவதும், காதை அறுத்துத் திருடுவதும், இரண்டுமே திருட்டுத்தான். ஒரே தண்டனை போதும் என்பது உங்கள் வாதம். இந்த வாதம் ஏற்கப்பட்டால், அறுபட்டது கழுத்தாக இருந்தாலும் திருட்டுக்கான இந்தச் சமநீதி காக்கப்படும் அபாயம் இருக்கிறது. உடனே இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல வந்துவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மாற்றங்கள் தவிர்க்கப் படமுடியாதவை.

என் பள்ளிக் காலத்தில் ஏ சர்ட்டிஃபிகேட் தரப்பட்ட படங்களை இன்றைக்குப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இன்றைய யு சர்ட்டிஃபிகேட் படங்கள் பலவற்றில் அன்று ஆபாசம் என்று உணரப்பட்ட விஷயங்கள் சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகின்றன. சமூகத்துக்கு எதிரானது என்று நினைக்கப்பட்ட விஷயங்கள் ‘ஆண்ட்டி ஹீரோ’ சப்ஜெக்ட் என்கிற பெயரில் சொல்லப்படுகின்றன. அவன் நல்லவனா, கெட்டவனா என்று தாங்களே கேள்வி கேட்டு தெரியாது என்கிற மழுப்பலான பதில்கள் சொல்வது சென்சார் போர்டைத் திருப்திப் படுத்தப் போதுமானதாக இருக்கிறன.

 மிதமிஞ்சிப் போனால், யு-ஏ என்று ஒரு ரெண்டுங்கெட்டான் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதாவது, தப்பான விஷயங்களை, பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்த்தால் கெடுதல் இல்லை என்று அர்த்தமாகிறது.(அதைப் பெரியவர்கள் அருகிலில்லாத போது முயன்று பார்ப்பதை யார் தடுப்பது என்று கேட்பவர்கள் பத்தாம்பசலிகள்)

 இதெல்லாம் தப்பு, ரைட்டு என்று தரம் பிரித்துப் பார்க்க முடியாதவை, பார்ப்பதில் பிரயோஜனமும் இல்லை. மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சட்டம் போட்டுத் தடுத்தாலும் அவை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே காதை அறுப்பதும் கழுத்தை அறுப்பதும் ஒரே விதத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டியவை என்கிற நிலைக்குப் போக மாட்டோம் என்று நம்புவது அறியாமை. அந்த நிலைக்குப் போக எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாமல் இருப்பதுதான் அறியாமை.

 கழற்றி வைத்த போது திருடுவதும், காதை அறுத்துத் திருடுவதும் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ள வேண்டியவை என்று நினைப்பவர்கள் இப்போது வாருங்கள்.

 உங்களிலும் சில பிரிவுகள் இருக்கும்.

காதை அறுத்தவனுக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனையும்,

 கிழவியின் மோவ்மெண்ட்டுகளை மோப்பமிட்டு, என்றைக்கு எந்த நேரத்தில், எந்த இடத்தில் காதை அறுப்பது உசிதம் என்று கன்ஸல்டன்ஸி கொடுத்தவன், ஒரே வீச்சில் காதை அறுக்கும் திறன் படைத்த கத்தி விற்றவன், அதற்குப் பிடி போட்டுக் கொடுத்தவன், கிழவி வரும் வரை சவுகர்யமான இடத்தில் ஒளிந்திருக்க இடம் தந்தவன், கத்தியை வீசும் போது தவறுதலாக அவர்கள் மேல் பட்டுவிடக் கூடாதே என்று மற்றவர்களை விலகி இருக்கும்படி முன்கூட்டியே எச்சரித்தவன், காதை அறுக்கும் போது கிழவி ஓடாமல் பிடித்துக் கொண்டவன், அறுத்துவிட்டு ஓடும் போது போலீஸிடமிருந்து காப்பாற்றி ஒளிய இடம் கொடுத்தவன் என்று

 பலவிதத்திலும் இந்தக் காதறுப்புக்குத் துணையாக இருந்தவர்களுக்கு தண்டனை தேவையில்லை. விசாரிக்கும் வரை கால்கடுக்க கூண்டில் நின்றதே பெரிய தண்டனை என்று நினைப்பவர்கள் உங்களில் பலர் இருக்கக் கூடும்.

 உங்கள் அம்மா அல்லது பாட்டியின் காது அறுபடும் போது உங்கள் கருத்து மாறுபடலாம். அல்லது அப்போதும் மாறாமல் குற்றவாளிகளை மன்னிக்கும் பண்பில் நீங்கள் உயர்ந்து நிற்கலாம்.

 ஆனால், எனக்கு அதில் சம்மதமில்லை.

குமுதமும் நானும்

நான் பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில், பத்திரிகை உலகின் கவர்ச்சிக் கன்னி குமுதம்.

 வீட்டில் குமுதம் வாங்க மாட்டார்கள். விகடன் மட்டும்தான். பக்கத்து வீட்டு சரோஜா மாமியிடம் லோக்கல் லைப்ரரி புத்தகத்துக்கு பண்ட மாற்றாக குமுதம் என்று எம்.ஓ.யு சைன் செய்திருந்தேன். வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து படித்து விட்டு அப்படியே கொடுத்து விடுவேன்.

 “அட்டையில் எப்பவுமே பொம்பளை படம்தான்” என்று விமரிசித்தவர்கள் கூட வாசன் கடை வழியாகப் போகிற போது அங்கே தொங்கும் குமுதத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவதைப் பார்த்திருக்கிறேன். உத்ராவின் புகைப்படங்கள் ரொம்ப ஸ்பெஷல். அந்தப் பளப்பளா ஆர்ட் பேப்பரில், வண்ணத்தில் பிச்சைக்காரியாக இருந்தால் கூட கவர்ச்சியாக இருக்கும்படி எடுக்க அவருக்குத் தெரியும்.

 அப்போது குமுதம் விலை நாலணா. அந்த விலையில் அவ்வளவு ரிச்சான பத்திரிகை வேறு கிடையவே கிடையாது.

 விமர்சனங்களைப் பார்த்து முகம் சுளிக்கிற குணமே கிடையாது.

 பிரபலங்கள் திட்டினால் அதை அப்படியே போட்டு விடுவார்கள். ஒரு பிரபல டைரக்டர், “ஒரு நடிகையின் கட்டை விரலைப் படமாகப் போட்டு இது யார் விரல் என்று கேட்கிறார்கள். வாசகர்களுக்கு விரல் சூப்பித்தனமான ரசனையை வளர்க்கிறது இந்தப் பத்திரிகை” என்று காட்டமாக விமர்சித்திருந்தார். அதை அப்படியே வெளியிட்டு, அதே பக்கத்தில் ஒரு நடிகையின் முதுகைப் போட்டு இது எந்த நடிகையின் முதுகு? என்று புதிரும் போட்டிருந்தார்கள்.

 வாசகர் கடிதத்தில் நையாண்டியாக எழுதப்படும் கடிதங்களுக்கு முன்னுரிமை! அந்த சூத்திரம் தெரிந்ததால்தான் என் எழுத்துலக வாழ்க்கை(!) குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் ஆரம்பித்தது.

 அரசு பதில்களில் சினிமா, இலக்கியம், அரசியல், ஏ ஜோக் என்று ஒரு சுவையான கலவை இருந்தது. சில சமயம் எஸ்.ஏ.பி (அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் என்கிற மாதிரி தெரிந்தாலும் அவரேதான் மொத்த பதில்களும் எழுதுபவர் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்) அவர்களின் பதில்கள் யோசிக்க வைக்கும்.

 கலைவாணருக்கு சிலை வைத்திருக்கிறார்கள், சிவாஜிக்கு ஏன் வைக்கவில்லை என்று ஒரு வாசகர் கேட்ட போது, அவருக்கு ஒரு சிலை வைத்தால் போதாது, ஒன்பது வைக்க வேண்டியிருக்கும் என்று பதில் சொல்லியிருந்தார்.

 அவர் சொல்லும் ஏ ஜோக்குகள் கூட கொஞ்சம் சிந்திக்க வைக்கிற மாதிரிதான் இருக்கும். வெளிநாட்டு ஹோட்டல்களில் பெண் வெயிட்டர்கள் உண்டு. (இப்போது நம்மூரிலும் ஆரம்பித்து விட்டார்கள்) மார்பில் பெயரைக் குத்திக் கொண்டு வந்த பெண் வெயிட்டரிடம் ஒருத்தர் கேட்டாராம், “பேஷ், இன்னொண்ணுக்கு என்ன பேர் வெச்சிருக்கே?”

 எழுத்தாளர் சாவி பத்திரிகை ஆரம்பிக்கும் போது என்.எல்.பி ஃபார்முலாவில் குமுதத்தை காபியிங் எக்ஸலன்ஸ் முறையில் அப்படியே பின் பற்றினார். ரங்கராஜன், புனிதன், சுந்தரேசன் மாதிரி அவருடைய ஆஸ்தான எழுத்தாளர்களும் சாவியில் மட்டுமே எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் அவருக்கு நிறைய ஏமாற்றமும், கோபமும்! துரதிஷ்டவசமாக அவருக்குப் பின் அந்தப் பத்திரிகை வரவே இல்லை.

 என் முதல் ஒருபக்கக் கதை பிரசுரமானதில் ஊக்கமடைந்து நிறைய ஒருபக்கக் கதைகள் எழுதினேன். முதல் சிறுகதை வந்தது சாவி இதழில் என்றாலும், என் கதை எழுதும் திறனைத் தீட்டியது குமுதம்தான்.

 அண்ணாமலைக்குப் பிறகு குமுதம் நிறைய மாறி விட்டது.

 மூன்று பக்க சிறுகதைகள் போடுவதே இல்லை என்கிற கொள்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஒருபக்கக் கதைகள் கூட 180 வார்த்தைகள் கூட இல்லாமல் குறுக்கப்பட்டு விட்டன. அரசு பதில்களில் இருந்த ஃபார்முலா அப்படியே இருக்கிறது, ஆனாலும் ஏதோ குறைகிறது. சினிமா செய்திகளில் கூட ரங்கராஜன் (லைட்ஸ் ஆன் வினோத்) கடைசி லைன் பஞ்ச் வைத்து ஒரு புதுமை பண்ணிக் கொண்டிருந்தார். அது மிஸ்ஸிங்.

 ஒருவேளை இந்த மாற்றங்கள் இந்த ஜெனெரேஷனுக்கான அப்டேஷன்களாக இருக்கலாம்.

 இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?

பொன்னியின் செல்வன் படமாகிறதாமே?

பிரபல நாவல்கள் படமாகும் போது நிறைய ஏமாற்றங்கள் உண்டாகின்றன.

 எவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டாலும் சரி. என் கற்பனையில் இருக்கும் மோகமுள் யமுனாவை யாராலும் திரையில் காட்ட முடியாது. காரணத்தை என்னால் வெளியில் கூடச் சொல்ல முடியாது. நாம் எல்லோருமே கதைகளில் வரும் நாயகிகளுக்கு நமக்கு அறிமுகமான ஒருவரை உருவகப்படுத்திக் கொள்கிறோம். அது யார் என்பது அந்தக் கதையில் வரும் சம்பவங்களைப் பொறுத்தது. அந்த சம்பவங்கள் நமக்கே நிகழ்ந்திருக்கலாம். அல்லது அப்படி நிகழாதா என்று நாம் ஏங்கியிருக்கலாம். சம்பவங்கள் நடக்கும் இடங்களும் அப்படித்தான். அவை எல்லாமே நமக்குப் பரிச்சயமான இடங்களாகவே இருக்கும். மோகமுள் படத்தை நன்றாகத்தான் எடுத்திருந்தார்கள், ஆனாலும் என்னால் நாவல் அளவுக்கு ரசிக்க முடியவில்லை.

 என்னால் மட்டுமில்லை, ஒரு நாவலை ஆழ்ந்து படித்த யாராலுமே அதன் திரை வடிவத்தை முழுசாக ஒப்புக் கொள்ள முடியாது. உங்கள் எல்லாருக்குமே மேற்சொன்ன காரணம் பொருந்தும்.

 சுஜாதாவின் கணேஷ், வசந்துக்கு தமிழ் சினிமா தேர்ந்தெடுத்த எல்லா நடிகர்களுமே வியர்த்தம். அதிலும் காயத்ரியோ, இது எப்படி இருக்கு வோ, ஏதோ ஒரு படத்தில் வசந்த் பாத்திரத்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா காமெடி நடிகரைப் போட்டிருந்தார்கள். அந்த டைரக்டரைக் குறை சொல்வதா, பரிதாபப்படுவதா!

 சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு விதிவிலக்கு.

 முக்கிய பாத்திரங்களை சொந்தம் கொண்டாட முடியாமல், குணாதிசயங்களிலேயே ஒரு அந்நியம் இருக்கிறது. அது போன்ற பாத்திரங்கள் கொஞ்சம் அசாதாரணமானவர்கள். ஒய்ஜிபி மற்றும் பாட்டி பாத்திரம் மட்டும் அன்றாடம் பார்க்க முடிந்தவர்கள். அவர்கள் இருவருமே நன்றாகச் செய்திருந்தார்கள். நன்றாக என்றால், கதையையும் அந்தப் பாத்திரத்தையும் நன்றாகப் படித்தவர்கள் மாதிரி செய்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயகாந்தனின் நேரடி மேற்பார்வையும், ஆதிக்கமும் அந்தப் படத்தில் இருந்தன.

 பொன்னியின் செல்வன் படம் பற்றிக் கேள்விப்படுகிற விஷயங்கள் கல்கியின் ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தியாக இருக்காது என்பது என் துணிவு.

 என்ன சொல்கிறீர்கள்?