சுப்ரமணியம் ஸ்வாமி

பலியாடு கைது

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

 எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

தரணி படம் மாதிரி திரைக்கதை படுசுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காண்பித்தாகிவிட்டது. தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஃபாக்டரை பலஹீனப்படுத்தியாயிற்று. இப்போதைக்கு இது போதும். தேர்தல் முடிவதற்குள் தீர்ப்பு வருகிற வாய்ப்புக்கள் குறைவு.

நம் லோக்கல் தொலைக்காட்சிகள் நேற்று அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. எங்கேயாவது செய்தியில் இரண்டு வரி சொல்லியிருப்பார்கள். நான் பார்க்கவில்லை. ஆனால், டைம்ஸ் நெள, ஹெட்லைன்ஸ், என்.டி.டிவி, சி.என்.என் எல்லாரும் களத்தில் குதித்து பி.ஜே.பி, அ.தி.மு.க, காங்கிரஸ் (திமு.க தவிர!) எல்லாரையும் வைத்து டெலிகான்ஃபரன்ஸிங் செய்தார்கள்.

வந்திருந்தவர்கள் எழுப்பிய சில கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தன.

நிரா ரேடியா மீது நடவடிக்கை எதுவும் கிடையாதா? அவருடன் பேசிய மகள் மற்றும் மகளின் தாய் மீது நடவடிக்கை கிடையாதா? கொள்ளை லாபம் அடித்தவர்கள் மேல் நடவடிக்கை கிடையாதா?

காங்கிரஸ்காரர் ‘எடியூரப்பா விஷயத்தை மடியில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?’ என்று பி.ஜே.பி. யை ஆஃப் செய்தார்.

அரசாங்கத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சுப்ரமணியம் ஸ்வாமி காமெடி செய்தார்.

நிறையப் பேர் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை தெரிவித்தார்கள்.

அந்த நம்பிக்கை மட்டும் எனக்கும் இன்னும் இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அந்த மஹாசக்தி எது?

கிடைத்த ஸ்பெக்ட்ரம் அவலை ஜெயா டிவி நன்றாகவே மென்று கொண்டிருக்கிறது.

 வைகோ, சோ, சுப்ரமணியம் ஸ்வாமி என்று பல்வேறு பிரபலங்கள் அவல் கொண்டு வர ஊதி ஊதித் தின்று கொண்டிருக்கிறார்கள். சோ பேசுகிற போது ராஜாவுக்கும் கருணாநிதிக்கும் மிஞ்சிய ஒரு சக்தியின் தலையீடு இருக்கிறது, அந்த சக்தி நிச்சயம் பிரதமரை விட வல்லமை படைத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவில் மட்டுமே குறிப்பிட்டார்.

சோ அவரது வழக்கமான ராணுவ நிற சஃபாரியில் வராமல் வெளிர் மஞ்சள் நிறச் சட்டை அணிந்திருந்தார். மஞ்சள் துண்டு மாதிரி இதிலும் ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ?

பரபரப்புக்குப் பெயர் போன ஸ்வாமி இந்த இலைமறைக் காய் பேச்செல்லாம் பேசவில்லை. நெத்தியடியாக இன்னின்னாருக்கு இத்தனை சதவீதம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஒரு பத்திரிகை கூட இந்த மஹாசக்தியின் இன்வால்வ்மெண்ட் பற்றி சந்தேகம் எழுப்பவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. வம்பை மார்க்கெட்டிங் செய்யும் பத்திரிகைகளின் வாயை மூடி வைத்திருப்பது நிஜமா, பயமா, பிரியமா, பணமா?  

ஸ்வாமியின் மழலைத் தமிழில் இந்த வம்பைக் கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை அப்படியே நம்ப நான் தயாரில்லை. நான் மட்டுமில்லை, ஸ்வாமியைப் புரிந்த யாருமே அதை முழுசாக நம்ப மாட்டார்கள்.

திருடின பணம் வெளிநாட்டுக்குப் போயாகி விட்டது என்றால், நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யுமா?

சில ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதற்கே அமெரிக்கா சோற்றுக்கு சிங்கி அடிக்கும் நிலைக்கு வந்ததே, லட்சம் கோடியை இந்த நாடு தாங்குமா?

’இவர்கள் பட்டாடையைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவு போய் விட்டது’ என்கிற தமிழன்பனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்கள். நின்றால் கூட தோட்டா காலிடுக்கு வழியாகப் போய்விடுகிற அளவுக்கு குள்ளமான தெய்வம் போலிருக்கிறது. அதுதான் எல்லாரும் தப்பித்து விடுகிறார்கள்.

*******************************************************************************************************

ஜகன்மோஹன் ரெட்டி புதுக் கட்சி ஆரம்பிக்கிறாராம்.

ஆந்திரக் காற்றில் சிரஞ்சீவி அம்மியே பறந்து விட்டது. ஜகன்மோஹன் எல்லாம் வெறும் கூழாங்கல்!