சுய முன்னேற்றம்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

Advertisements

நீங்களும் இப்படித்தான் நினைச்சிருப்பீங்க

இந்தக் குட்டிக் கதை Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது. (கவனக் குறைவா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா அதுதான் எல்லார் கண்ணுலயும் படுது! விஷயத்தை விட்டுடறாங்கெ!  🙂 )

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் நான் எழுதியது)

குரு உசத்தியா, சீடன் உசத்தியா?

”’நீ தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்’ என்று சொல்வார்களே, அதற்கு அர்த்தம் தெரியுமோ?”

 “சீடனாக இருப்பதற்கு சில தகுதிகளோ அல்லது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தகுதியோ அவசியம். அந்தத் தகுதியைப் பெற்று விட்டால் இத்தனை நாள் தேடியும் புலப்படாத குரு, தானே வலிய தென்படுவார் அப்டீன்னு அர்த்தம் பண்ணிக்கறேன்”

 “ரொம்ப சரி. அந்தத் தகுதி என்னன்னும் தெரியுமா?”

 “ஒருவரை குருவாக ஏற்கிற பக்குவம்”

 “அந்தப் பக்குவம் ஏன் இல்லாமல் போகிறது?”

 “அந்தப் பக்குவம் இல்லாமல் போகிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தகுதியான குரு இன்னமும் என் கண்ணில் தென்படாததே காரணம்”

 “உனக்கு குருவாக இருக்க என்னென்ன தகுதிகள் இருக்கணும்ன்னு நினைக்கிறே?”

 “என்னை விட வயது, கல்வி, அனுபவம், அறிவு எல்லாம் அதிகமாக இருக்கிற ஒருவரா இருக்கணும் அவ்வளவுதான்”

 “அதாவது உன்னை விட எல்லா விதத்திலும் உயர்வா இருக்கிற ஒருவரை, ஆம், இவர் என்னை விட உயர்ந்தவர்தான் அப்டீன்னு ஒப்புக்குவே? அப்படித்தானே?”

 “ஆமாம்”

 “அப்படி ஒப்புக்கிறதுக்கு எந்த உயர்வும் அவசியமில்லையே? சொல்லப் போனா உயர்வே அவசியமில்லையே? ஒருவர் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்ன்னு ஒப்புக்கிறதை வேறே விதமாவும் சொல்லலாமே?”

“எப்படி?”

 “எல்லா விதத்திலும் நீ தாழ்ந்து இருக்கேன்னு ஒப்புக்கிறதாவும் சொல்லலாமில்லையா?”

 “அவரை விட”

 “வாட் எவர். அப்படி ஒரு கோணம் இருப்பது நிஜம்தானே?”

 “ஆமாம்”

 “ஒருத்தரை குருவாக ஏற்கிற போதே உன் உயர்வு வெளிப்படற மாதிரி இருந்தாத்தானே உனக்குச் சிறப்பு? உசத்தியை உசத்தின்னு ஒப்புக்க உயர்வு அவசியமில்லையே?”

 “ஆமாம்”

 “தெரியாத ஒன்றை ஒருவரிடம் கற்கிற போது அவருக்கு குரு ஸ்தானம் தரணும். உனக்குத் தெரியாத ஒண்ணு அவருக்குத் தெரிஞ்சிருப்பதுதான் தகுதி. சிவபெருமான் முருகனுக்கு குரு ஸ்தானம் கொடுத்து பிரணவத்தின் அர்த்தத்தைக் கற்றுகிட்டதா ஒரு கதை உண்டு தெரியுமோ?”

 “ஆமாம், சுவாமிமலை”

 “அது சிவனின் பெருமையைக் காட்டுதா, முருகனின் பெருமையைக் காட்டுதா?”

 “சந்தேகமில்லாமல் சிவனின் பெருமையைத்தான் காட்டுது”

 “அப்போ நீ ஒருவரை குருவாக ஏற்கிற போது நீதான் உயர்ந்து நிற்கிறே என்பது சரிதானே?”

 “சரிதான்”

 “கூடிய விரைவில் உன் கண்களுக்கு குரு தென்படுவார்”

தும்மலை அடக்கினால் என்ன ஆகும்?

என்றைக்காவது தும்மலை அடக்க முயன்றிருக்கிறீர்களோ?

 அப்படி அடக்க முயன்றால் ஹக்ஸூ என்பதற்கு பதில் ஹெப்ஸீ என்றோ, ஹிக்ஸி என்றோ தும்முவீர்களே ஒழிய தும்மல் அடங்காது. எப்படித் தும்மல் நம் கட்டுப்பாட்டில் இல்லையோ அப்படித்தான் காமமும்.

 மறைப்பேன்மன் காமத்தை  யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்

 என்பார் வள்ளுவர்.

 தும்மல் என்பது ஏன் வருகிறது? ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது ஆகாத காற்றை (ஒவ்வாத மணமோ அல்லது தூசியோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சுவாசித்தாலோ வருகிறது. தும்மல் தோன்றாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், ஒவ்வாத மணங்களை நுகராமல் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து தும்மலை வரவழைத்து விட்டு அந்த ஸ்டேஜில் அதை அடக்குவது என்பது துர்லபம்.

 அதே போலத்தான் காமத்தை உண்டாக்கும் காட்சிகள், பேச்சுக்கள், எழுத்துக்கள், எண்ணங்கள், மனிதர்கள் இவைகளைத் தவிர்க்காமல் காமம் தோன்றிய பிறகு அதை அடக்க முயல்வதும்.

 Lust is an effect. It needs to be controlled at cause level என்பது வள்ளுவர் சொல்ல விழையும் கருத்து. Product audit செய்வதற்கு பதில் Process Audit செய்ய ஆரம்பித்த போதுதான் Quality Control ஆக இருந்த தொழில் Quality Assurance ஆக மாறியது.

இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண டிப்ஸ்

BSNL ன் ராஜிவ் காந்தி நினைவு தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் திரு. பாபு ஸ்ரீநிவாஸ் ரெயின்போ FM (101.4) இல் வேலைவாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணவர் ஒருவர் In Plant Training இல் Campus Interview வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி தருமாறு விண்ணப்பம் செய்து கொண்டார். திரு. பாபு ஸ்ரீநிவாஸ் இதை உடனடியாக ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை இது குறித்து எழுதியிருந்தார். உட்கார்ந்தவுடன் ஃபைலை நீட்டாதீர்கள், கேட்ட பிறகு கொடுங்கள்; தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்; கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; அவர்கள் நிறுவனம் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைக் கேளுங்கள்… என்பது மாதிரி விஷயங்கள் சொல்லியிருந்தார்.

நானும் கூட அவ்வப்போது இண்டர்வியூ கமிட்டியில் இருந்திருக்கிறேன். கேண்டிடேட்டைக் கவனிப்பதை விட இண்டர்வியூ செய்பவர்களை அதிகம் கவனிப்பேன். வந்தவனுக்கு என்ன தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்பதை விடத் தனக்கு என்னென்ன தெரியும் என்று காண்பித்துக் கொள்ளும் அவசரம் அவர்களிடம் தெரியும். பொதுவாக அழகன் படத்து எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் ஆட்டிட்யூட் அவர்களிடம் தெரியும்.

சிங்க்ரோ ஹைவாக் வேக்யூம் பம்ப் எப்படி வேலை செய்கிறது?

ஆக்டேன் வேல்யூவை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்?

கார்பன் ஒரு கண்டக்டரா?

என்பது மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்டு கேண்டிடேட்டின் முழியைப் பிதுங்கச் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது தங்கள் பாஸையும் யூனிட் ஹெட்டையும் பெருமையாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரி ஆசாமிகளை எப்படி ஃபேஸ் செய்வது என்று டிரைனிங் கொடுப்பது அசாத்தியம். ஒரு இண்டர்வியூ பேனல் மெம்பராக எதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று என்னால் சொல்ல முடியும்.

சூயிங்-கம் மென்றபடி வருவது, சொல்வதற்கு முன்னாலேயே உட்கார்வது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது இதெல்லாம் இருந்தால் அவர்களின் ஆட்டிட்யூடைக் கொஞ்சம் ஆழ்ந்து செக் செய்ய ஆரம்பிப்பேன். தலை முடியை பிளீச் செய்வது, ஸ்ட்ரைட்டனிங் என்கிற பெயரில் வேற்றுக் கிரகத்து ஆசாமி போல வருவது, காரே பூரே என்று கட்டிங் செய்து கொள்வது, ஒற்றைக் காதில் கடுக்கன் என்பது போன்ற கோமாளித்தனங்கள் இருந்தால் ஆட்டிட்யூடுக்கு உடனே சைஃபர் மார்க் போட்டு விடுவேன். மேற்சொன்ன கந்தர்கோலங்களுக்கு அவர்கள் சொல்லும் பெயர் இன் திங்! என்னைப் பொறுத்தவரை இன் திங் இருந்தாலே அவன் அவுட் ஆஃப் தி திங்.

பகுத்தறிவும் வாலில்லாக் குரங்குகளும்

பகுத்தறிவு என்பது ஒரு extra-human நிலையோ, superhuman நிலையோ அல்ல. It is quite human.

வாலில்லாக் குரங்குகளுக்கு ஏறக்குறைய மனிதர்கள் அளவு அறிவும் உணர்வுகளும் இருப்பதாகச் சொல்வார்கள். பகுத்தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் வால் முளைப்பது நின்று போனது என்று சொல்லலாம். இந்த நிலையின் அடுத்த பரிமாணம்தான் மனிதன் என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. Sensory organ கள் தருகிற இன்புட்களை எந்த பிராஸஸிங்கும் செய்யாமல் அப்படியே எடுத்துக் கொள்வது ஐந்தறிவு நிலை. அவைகளைப் பிராஸஸ் செய்து ஒரு அவுட்புட் டிர்ரைவ் செய்வது மனிதநிலை. இந்த பிராஸஸிங்தான் பகுத்தறிவு செய்கிற வேலை. ஆறாவது அறிவு.

இதற்கு மேற்பட்ட ஒருநிலை என்று ஒன்று இல்லாவிட்டால் கொஞ்ச காலத்தில் பழையபடி முந்தைய பரிமாணமான வாலில்லாக் குரங்கு நிலைக்குப் போய் விடுகிற அபாயம் உண்டு.(Darvin!) அதே சமயம் இந்த மேற்பட்ட நிலை மெல்ல வளர்ந்து கொண்டு போனால் மனிதனுக்கு அடுத்த பரிமாணத்தை அடையும் சாத்தியமும் இருக்கிறது.

அந்த மேற்பட்ட நிலை எல்லோருக்குமே கொஞ்சம் இருக்கிறது. Instinct என்கிற இன்புட்தான் அந்த அடுத்த நிலை. Instinct என்பது எந்த sensory organ லிருந்தும் வருவதல்ல. Decision making பற்றிச் சொல்லும் போது இந்த instinct க்கு ஒரு முக்கிய இடம் தருகிறார்கள்.

ஒரு முடிவை எடுப்பதற்கான எல்லா இன்புட்களும் இருந்துவிட்டால், வாலில்லாக் குரங்கே அந்த முடிவை எடுத்துவிட முடியும். சில இன்புட்கள் இல்லாதிருக்கும் போதுதான் மனிதன் தேவை. அப்போது கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும், கொஞ்சம் instinct ஐப் பயன்படுத்த வேண்டும். எந்த விஷயத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானிக்க இந்த instinct பயன்படும். (குறிப்பு : இந்த instinct ஃபேக்டர் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம்!)

இந்த instinct அறிவு, அனுபவம் இவற்றாலும் வரலாம், அல்லது இது தவறாகப் போகாது என்கிற நம்பிக்கையிலும் வரலாம். அறிவு வளர்ச்சி என்பது ஞான யோகம். அனுபவம் என்பது கர்ம யோகம். நம்பிக்கை என்பது சரணாகதி, அதாவது பக்தி யோகம்.

அறிவை வளர்த்துக் கொள்ள நிறையக் கற்க வேண்டும் அதற்குக் கால அவகாசம் நிறைய அவசியம். அனுபவம் என்பதும் காலத்தின் அளவைத்தான் குறிக்கும். சரணாகதி உடம்பில் வலிமை இருக்கும் வரை வராது. அதனால்தான் பொதுவாக பக்தி யோகம் முதுமையில் வருகிறது. (அப்போதும் இல்லாமலும் இருப்பதுண்டு சிலருக்கு!)

எனக்கு instinct வேண்டும்; ஆனால் காத்திருக்க முடியாது, என்கிறவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா?

ஆம்.

அது என்ன?

தெரிந்து கொள்ள எத்தனை பேர் ஆவலாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகே இதற்கு பதில் சொல்லப் போகிறேன்.

உங்களை யாராவது முட்டாள் என்று சொன்னால்…

பேரட்டோவின் 80-20 சித்தாந்தத்துக்கும், ஸ்டீஃபன் கோவேயின் 90-10 சித்தாந்தத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு உண்டு.

 ஒரே டேட்டாவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு கோணங்களில் அணுகச் சொல்கிறார்கள்.

 வில்ஃப்ரெட் பேரட்டோவின் சித்தாந்தப்படி, எந்த ஒரு லார்ஜ் கலெக்‌ஷன் ஆஃப் டேட்டாவிலும் கவனிக்கப்பட வேண்டியவைகளின் எண்ணிக்கை 20% ம், ஒதுக்கப்பட வேண்டியவை 80% ம் இருக்கும். இந்த சதவீதம் கொஞ்சம் ஜென்ரிக்கானது. அதனால் பொதுவாக Vital few and Trivial many என்று குறிப்பிடுவார்கள்.

 உதாரணமாக ஒரு வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு சமூகத்தில் ஒழுக்கமில்லாதவர்கள் எண்ணிக்கை, பணக்காரர்கள் எண்ணிக்கை, பலனில்லாமல் போன கடின உழைப்புகளின் எண்ணிக்கை, தரக் கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை என்று நிறைய சொல்லலாம். அந்த குறைந்த சதவீத சமாச்சாரங்களில் கவனத்தைச் செலுத்தினால் போதும். அடுத்த சாம்ப்பிளில் பிரம்மாண்டமான முன்னேற்றத்தைச் பார்க்கலாம். இதனால்தான் பேரட்டோவின் சித்தாந்தம் எல்லா நிறுவனங்களிலும் பயன்படுகிறது.

 ஆனால் ஸ்டீஃபன் கோவே சொல்வதைப் பாருங்கள்.

 ஒருநாளில் நாம் செய்கிற காரியங்களில் 10% தான் ஆக்‌ஷன்கள். பாக்கி பூரா ரியாக்‌ஷன்கள் என்கிறார். இந்த டேட்டாவை பேரட்டோவிடம் கொடுத்தால் ஆக்‌ஷன்கள்தான் கவனிக்கப்பட வேண்டியவை என்பார். அதாவது ரியாக்‌ஷன்கள் பேரட்டோவைப் பொறுத்தவரை Trivial many ஜாதியில் சேர்ந்து விடும்.

 ஆனால் நம் செயல்களின் விளைவுக்கு (குறிப்பாக எதிர்மறை விளைவுகளுக்கு) நாம் ரியாக்ட் செய்யும் விதம்தான் காரணம்.

 ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

 “நீ ஒரு முட்டாள்” என்று யாராவது சொல்லும் போது நம்மில் எத்தனை பேர் சிரித்தபடி “தேங்க் யு” என்று சொல்கிறோம், அல்லது ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறோம்?

 நானும் கூட சும்மா இருப்பதில்லை.

 “நான் ஒரு கண்ணாடி; அதில் பார்க்கிறவர்கள் தெரிவது ஆச்சரியமில்லை” என்றுதான் சொல்வேன். இந்த ஆட்டிட்யூடால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன்.

ஒரு வார்த்தைக்குள் இத்தனை விஷயமா?

”பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“அதுவும் தெரியும், நீ என்ன சொல்லப் போறேன்னும் தெரியும்”

“ஒண்ணொண்ணா சொல்லு”

“பசித்திருன்னா அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”

“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”

“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தே”

“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”

“சரி, நீ சொல்ல வந்ததையும் நானே சொல்லிட்டேனே?”

“முழுசா சொல்லல்லையே?”

“முழுசான்னா?”

“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”

“இது என்ன கேள்வி, பசி ஆறும்”

“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”

“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்ட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”

“ஜீரணம் ஆகல்லைன்னா?”

“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”

“எப்ப அந்த மாதிரி ஆகும்?”

“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”

“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”

“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”

“அது மட்டும்தானா?”

“சரி, சக்கையெல்லாம் மலமா மாறி வெளியேறும். அப்படி வெளியேறினாத்தான் பசிக்கும்”

“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”

“பெரிய்ய கண்டு பிடிப்பு. அப்படித்தான்”

“அப்போ அறிவுப் பசிக்கும் நிஜமான அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி சத்தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் பசிக்கும். தப்பான விஷயங்கள் ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்ரது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”

“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”

“இன்னும் கூட இருக்கு”

“என்னது?”

“பசித்து + இரு ந்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு ந்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”

“அதென்ன?”

“திருன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”

“அது சரி. கழிந்திருன்னு சொன்னா கழியறதே ஒரு செல்வம்ன்னு சொல்வியோ?”

“இல்லை. கழிந்திரு அப்டீன்னா, கழிந்த பிறகும் இரு… அதாவது….”

“புரியுது. கழிஞ்சதும் எழுந்து வந்துடாதே. இன்னும் கூடக் கழிய வேண்டியிருக்கும்ன்னு அர்த்தம்”

“இல்லை. நீ போனப்புறமும் உன் புகழ் நிலைத்து இருக்கிறதுதான் கழிந்திரு”

“சூப்பர்பா….”

“என்ன தேடறே?”

“பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”

“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”

“ஐய்யய்யோ… இன்னைக்கு இது போதும்; என்னை விட்டுடு”

தமிழ்ப் ‘படுத்தல்’

”நான் பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை” என்று ஒருவர் சொல்வது ஒரு மாயச் சுழல். அது பொய் என்றால் என்ன அர்த்தம், நிஜம் என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை நான் செய்து கொண்டிருந்த போது ஒரு போலிஷ் (போலிஸ் இல்லை) ஜோக் ஞாபகம் வந்தது.

ஒரு போலந்துக்காரரை பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து விட்டால் போதும்!

************************************************************************

வேற்று மொழியிலிருந்து ஒரு கதையைத் தமிழில் எழுதும் போது அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன ஆகும்? கீழ்வரும் வரிகளைப் படியுங்கள் :

சோட்டா சேட் ஜூனா பஸாரில் பாவு பாஜி சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்தான். பட்பட் வாலா அருகில் நிறுத்தி வருகிறாயா என்கிற மாதிரிப் பார்த்தான். வாஸ்வானி சிலை பக்கத்தில்தான் இருக்கிறது செளரங் லேன். அதற்குப் போய் பட்பட்டில் போவானேன்?

இதே ரீதியில் முழுப் புத்தகத்தையும் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் ஒரு முரட்டு இலக்கிய ரசிகர். ஆனால் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அப்படி இல்லை.

போன வாரம் ‘வாகை சூடும் சிந்தனை’ என்றொரு புத்தகம் வாங்கினேன். அது தமிழாக்கம் செய்யப்பட்ட சுய முன்னேற்ற நூல். முழுக்க முழுக்க டிவியில் காலையில் வரும் டப்பிங் செய்த கிறிஸ்தவ நிகழ்ச்சி போலவே இருக்கிறது.

************************************************************************

அறிவகற்றும் என்கிற பதத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அறிவில்லாமல் செய்து விடும் என்றுதான் தொண்ணூறு சதவீதம் பேர் பதில் சொல்கிறார்கள். கீழ் வரும் குறளில் அந்தப் பதம் அறிவை விசாலப்படுத்தும் என்கிற பொருளில் வருகிறது :

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

இல்லை என்கிறவர்கள் பின்னூட்டலாம்!

***********************************************************************

சளியால் காது அடைக்கிற போது எந்த மருந்தும் பயன்படாது போலிருக்கிறது. மூக்குக்கும், காதுக்கும் டிராப்ஸ் கொடுத்தார் டாக்டர். ஐந்தாறு பாட்டில் வாங்கி ஊற்றி கழுத்துவரை நிறைத்தும் பிரயோஜனமில்லை. காக்காய் மாதிரி தலையைச் சாய்த்துச் சாய்த்துத்தான் கேட்கிறேன் யாராவது பேசும் போது.

இதே பிரச்சின சில வருஷங்களுக்கு முன் வேலூரில் இருந்த போது வந்தது. அப்போது வாசன் என்று ஒரு டாக்டர், “நீங்க செவிடெல்லாம் ஆயிட மாட்டீங்க. இதுக்கு மருந்தெல்லாம் இல்லை. ஆப்பரேஷன் டூ மச். மூக்கைப் பொத்திகிட்டு எச்சல் முழுங்கிகிட்டே இருங்க, ப்ளக்குன்னு விட்டுடும். உடனே நடக்காது பொறுமையா பண்ணிகிட்டே இருங்க” என்று அட்வைஸ் செய்தது நினைவு வந்து அதை முயற்சித்தேன்.

பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.

ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது!

ஆசையும் கவலையும் சேர்ந்தால் யோசனை

”ஒரு கார் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

“நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?”

“ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்”

“என்ன யோசனை பண்ணே?”

“கார் வாங்கணும்ன்னுதான்”

“கார் வாங்கணும், கார் வாங்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?”

“ஆமாம், கார் வாங்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?”

“அதுக்குப் பேர் யோசனையில்ல”

“பின்னே?”

“அது ஆசை”

“பின்னே யோசனைன்னா என்ன?”

“உங்கிட்ட கார் வாங்கற அளவு பணம் இருக்கா?”

“அதான் பேங்கில லோன் தர்ராங்களே?”

“எவ்வளவு மாசா மாசம் கட்ட வேண்டியிருக்கும்?”

“அஞ்சாயிரம் ரூபா”

“மாசம் அஞ்சாயிரத்தை லோனுக்குக் கட்டிட்டா வீட்டு செலவுக்கு அஞ்சாயிரம் கம்மியா இருக்குமே.. என்ன பண்ணுவே?”

“அஞ்சாயிரம் கம்மியா செலவு பண்ணுவேன்”

“எதைக் குறைப்பே?”

“வாரம் ஒரு பீர் சாப்பிடறேன்.. அதைக் கட் பண்ணலாம்”

“முன்னூறு ரூபாதான் கிடைக்கும்.. நிச்சயமா அதைக் கட் பண்ண மாட்டேன்னு தெரியும்”

“சிகரெட்?”

“நோ சான்ஸ்.. அந்த அளவு வில் பவர் இருந்தா கார் வாங்கற ஆசையே வந்திருக்காது”

“எலக்ரிசிட்டி?”

“மாசம் எத்தனை ரூபா எலக்ரிக் சார்ஜ் வருது?”

“பில்லு எண்ணூறு ரூபா.. ஸோ மாசம் நானூறு”

“எலெக்ட்ரிசிட்டியே யூஸ் பண்ணல்லைன்னாலும் தேறாது.. ஏஸியை மட்டும் கட் பண்ணா ஒரு இருநூறு ரூபா தேறும். வேறே?”

“வேறே… எண்டர்டெயின்மெண்ட்டைக் குறைச்சிக்கலாம்”

“அது எவ்ளோ ஆகுது மாசம்?”

“அது.. அது ஒரு ஆயிரத்தி இருநூறு வரும்”

“போதாது.. அப்புறம்?”

“கேபிள் டிவியை கட் பண்ணலாம்..”

“பூ.. வெறும் நூத்தம்பது.. வேறே?”

“பேப்பர்.. புக்ஸ்…”

“முன்னூறுதான்.. வேறே?”

“காபி?”

“ஆயிரம் கூடத் தேறாது”

“கிட்டக் கிட்ட மூவாயிரம் வருதே.. தேறாதுங்கிறே?”

“அதாவது, பீர் சாப்பிடாம, காபி சாப்பிடாம, டிவி பாக்காம, பேப்பர், புக்ஸ் எதுவும் படிக்காம, சினிமா போகாம, ஹோட்டலுக்குப் போகாம, குடும்பமே ராத்திரி வியர்த்து வழிய தூங்கி பணம் சேர்த்தா மூவாயிரம் தேறுது. இவ்வளவு தியாகங்கள் ஒர்த்தா? பாக்கி ரெண்டாயிரத்துக்கு என்ன பண்ணுவே?”

“பால் பாக்கெட்டைக் குறைச்சிடலாம். எண்ணை வாங்க வேண்டாம், உடம்புக்கும் நல்லது. காய்கறியைக் குறைக்கலாம். வீட்டை வாடகைக்கு விட்டுட்டு சின்ன வீட்டுக்குக் குடி போகலாம். மத்யானம் சாப்பாடு கட்டி எடுத்துட்டுப் போறதுக்கு பதில் கேண்டீன்ல சாப்டுப்பேன்”

“அதாவது, குடும்பமே அரை வயிறு சாப்ட்டு, சத்தே இல்லாம, கீக்கிடமா ஒரு வீட்ல இருந்துகிட்டு பஞ்சப் பனாதிகள் மாதிரி, எத்தியோப்பியா ஃபேமிலி மாதிரி இருக்கப் போறிங்க?”

“ஆ.. ஆமாம்”

“எதுக்கு? நீ மட்டும் ஜாலியா தினம் கார்ல ஆஃபிஸ் போக?”

“ஏன் வீக் எண்ட்ல அவங்களும் வரலாமே?”

“பெட்ரோலுக்கும், மெயிண்டனன்ஸுக்கும் உங்க தாத்தா குடுப்பாரா? அதுக்காக ஒரு வேளை சோத்தை கட் பண்ணுவியா?”

“இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா”

“கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?”

“இருபத்தோறாயிரம் டேக் ஹோம் வர்ர மாதிரி ஒரு வேலைக்கு மாற வேண்டியதுதான்”

“இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கே”