செய்தி

ரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்

பள்ளிப் பருவத்தில் தமிழ்வாணன் கதைகளை அடுத்து நான் ரசித்துப் படித்தது ரா.கி. ரங்கராஜன் கதைகள்தான்.

எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்றாலும் மூவிரண்டு ஏழு, இருபத்தி மூன்றாவது படி, புரஃபஸர் மித்ரா இந்த மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மூவிரண்டு ஏழு ரொம்ப ஸ்பெஷல்.

சென்னையில் ‘என்னம்மா.. வாம்மா.. போம்மா’ என்று அழைப்பது ஆரம்பித்திருந்த சமயம். கதையில் வரும் தில்லைநாயகம் என்கிற கேரக்டர் கதாநாயகன் சேதுவிடம் பேசும் போது ‘யாரும்மா.. சேதுவாம்மா’ என்கிற மாதிரி பேசுவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அன்றைக்கு என்ன டிரெண்ட் என்று கவனித்துக் கொண்டே இருப்பார், அதைக் கதையில் ரொம்ப எளிமையாகப் பயன்படுத்துவார்.

சுஜாதா கதைகளில் கதாநாயகன் ரொம்ப இண்டலக்சுவலாக இருப்பான்; அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். நாயகன் நமக்கு எப்போதும் படற்கையாகத்தான் இருப்பான். ஜெயகாந்தன் கதைகளில் நாயகன் பெரிய சிந்தனாவாதியாக இருப்பான். அவன் சமூகத்தின் அபூர்வ சாம்ப்பிளாக இருப்பான். அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். தி. ஜானகிராமனின் கதாநாயகர்கள் தஞ்சாவூர் மாவட்டத்து கிராம லெவல் புத்திசாலிகளாக இருப்பார்கள். கர்நாடக சங்கீதம் பாடுவார்கள். தவில்காரரின் தாள நடை பற்றிப் பேசுவார்கள். கிராமத்துக்கே உரித்தான பலவீனங்களும் அவர்களிடம் இருக்கும். ஆகவே அவர்களும் சமூகத்தின் காமன் சாம்ப்பிள் என்று சொல்ல முடியாது.

ரங்கராஜன் கதைகளில் கதாநாயகன் பட்டணத்து நடுத்தர வர்க்க ஆசாமியாக இருப்பான். ரொம்ப சிந்திக்க மாட்டான். இண்டலக்சுவல் இல்லை. வட்டார வழக்கில் பேசுவதில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற நூற்றுக் கணக்கானவர்களில் ஒருவனாக இருப்பான். ஆகவே அவனோடு ஐக்யமாவது ரொம்ப எளிது. அவன் ஆசைகள், அவன் வெறுப்புக்கள், அவன் காதல் எல்லாம் சட்டென்று உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும்.

மூவிரண்டு ஏழு கதையின் நாயகன் சேது அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான். அவன் காதலிக்கும் கிருத்திகாவை நீங்களும் காதலிப்பீர்கள். அவளுடைய அக்கா ரஜினி மீது உங்களுக்கும் கோபம் வரும். கிருத்திகா செத்துப் போய் விட்டாள் என்று சேது இடிந்து போகும் போது நீங்களும் இடிந்து போவீர்கள். ஒரு கதையின் வெற்றி அந்தக் கதாநாயகனாக படிக்கிற நாமே மாறிக் கொள்வதுதான். இப்படி உங்களை மாற்றுவதில் ரங்கராஜன் சமர்த்தர்.

இந்தக் கதை தொடர்கதையாக வரும் போது அதை எடுத்து, தைத்து பைண்டிங் செய்தோம் நானும் என் சகோதரரும். எங்கள் கனவு நூலகத்தில் மூன்றாவது புத்தகம் அது. (முதல் இரண்டும் தமிழ்வாணன்!)

சினிமாப் பகுதியில் என்ன பெரிதாக எழுதி விட முடியும் என்று நினைக்காமல் அதையும் புதுமையாகச் செய்தார். வினோத் என்கிற புனைப் பெயரில் குமுதத்தில் சினிமாப் பகுதி எழுதினார். லைட்ஸ் ஆன் என்கிற தலைப்பில் வந்த அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சுவாரஸ்யமான ஆங்கில ஃபிரேஸ் எழுதுவார். Devil’s advocate, Talking through the hat என்கிற மாதிரி ஃபிரேஸ்களை நான் தெரிந்து கொண்டதே அதைப் படிக்கிற போதுதான்.

எழுதும் போது ரா.கி. ரங்கராஜன் சொன்ன பல யுக்திகளை நான் கையாள்வதுண்டு. உரையாடல்களில் நகர்த்துவது, தெளிவுதான் உங்கள் ஸ்டைல் என்பது, இனிமேல் ஒரு வார்த்தை கூடக் குறைக்க முடியாது என்கிற அளவுக்கு கச்சிதமாக இருப்பது இப்படி நிறைய.

பொதுவாக யாராவது இறந்து போகும் போது ‘எல்லாருக்கும் ஒருநாள் மரணம் உண்டு’ என்று சமாதானப் படுத்திக் கொள்வோம். வயசாகிப் போச்சு, எல்லாம் பாத்தாச்சு கல்யாண சாவு என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வோம். ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

சுஜாதா, ரா. கி. ரங்கராஜன் போன்றவர்கள் இறக்கிற போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது.

இது சங்கரராமன் கொலை பற்றிய இடுகை அல்ல

கொலை என்றாலே மூன்று விஷயங்கள் முக்கியம். மோட்டிவ், எவிடன்ஸ், விட்னஸ். மூன்றுமே ஒரே நபரைச் சுட்டிக் காட்டினால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுகிறது.

சரி. இந்த விஷயத்தில் மோட்டிவ் இருப்பது மாதிரித்தான் தெரிகிறது. தெரிகிறது என்றால் செய்தித் தாள்களிலும், இணையத்திலும், வார மாத பத்திரிகைகளிலும் படித்ததன் வாயிலாகத் தெரிகிறது. அவை தவறாகக் கூட இருக்கலாம். அதனால்தான் மோட்டிவ் இருக்கிறது என்று சொல்லாமல் இருப்பது மாதிரித் தெரிகிறது என்று சொன்னேன்.

அடுத்தது விட்னஸ்.

ஏறக்குறைய 75% சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாக பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவர்கள் தப்பாக ஆரம்பித்து சரியான வழிக்குப் போனார்களோ அல்லது சரியாக ஆரம்பித்து தப்பான வழிக்குப் போனார்களோ…. நமக்குத் தெரியாது. சாட்சி நிலையில் மாறுதல் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குப் புரிகிறது. நீதி மன்றமும் நீதிபதிகளும் திறமை படைத்தவர்கள். எங்கே ஆரம்பித்து எங்கே போயிற்று என்று கண்டுபிடித்து விடுவார்கள்.

எவிடன்ஸ்?

குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் தர உத்தரவிட்டபோது அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சொன்னதாக இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஓரளவு நினைவிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட எவிடன்ஸ்கள் எல்லாம் மாறிக் கொண்டே வந்து கடைசியில் எவிடன்ஸே இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டது, இது ஒரு கேஸே இல்லை என்கிற அளவில் அந்தத் தீர்ப்பு இருந்ததாக நினைவு.

எல்லாம் போகட்டும்.

வழக்கைப் பதிவு செய்த காவலதிகாரி (எதிர்க் கட்சி ஆட்சியில்) முதலில் சஸ்பென்ஷனும், பிறகு டிஸ்மிஸலும் செய்யப்பட்டார். அதற்கு அவரது சர்வீஸில் அவர் எடுத்த சில நடவடிக்கைகள் காரணம் என்பது வெளிப்படை. அதற்குப் பிறகு இறந்தும் விட்டார். அவர் இறந்த பிறகுதான் சாட்சிகள் பல்டி ஆரம்பமாயிற்று என்பது எனது அப்சர்வேஷன். இதற்கு என்ன காரணம் என்பதை நீதிமன்றமும், நீதிபதிகளும் நிச்சயம் உணர்வார்கள். அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.

கொலையுண்டவருக்கு வேறு எதிரிகள் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் (at least) எனக்கு இப்போது வரை இல்லை. எதிரிகள் இருந்து அவர்கள் பெயர் வெளிவரவில்லையா, இல்லவே இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

இடையே நீதிபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பேசியது போன்ற ஒலிப்பதிவுகளை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தொடர்புடைய நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கி வைத்து விட்டார்கள்.

மோட்டிவ் இருப்பது போல செய்திகளிலிருந்து தோன்றுகிறது. எவிடன்ஸ் இல்லை போல உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்தால் தோன்றுகிறது. விட்னஸ்கள் பல்டி அடித்த செய்திகள் வந்தன, ஆனால் வழக்கு பதிவு செய்த காவலதிகாரி இறந்த பிறகு போலத் தோன்றுகிறது. வேறு யாருக்கும் மோட்டிவ் இல்லை போலவும் செய்திகளிலிருந்து நினைக்கத் தோன்றுகிறது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது நண்பர்களே? கம் ஆன்…………… ஸ்டார்ட் மீசிக்.

என்கௌண்ட்டர் விவகாரம்

ஆரம்பத்திலேயே இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தி விடுகிறேன் :

 1. திருடுகிற      எல்லாரையும் போலீஸார் போட்டுத் தள்ள வேண்டும் என்பது என் கருத்தல்ல.
 2. மனித உரிமை      அமைப்புக்கள் இது போன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு      இருக்க வேண்டும் என்பதும் என் கருத்தல்ல.

 பட்டப் பகலில், பரபரப்பாக இருக்கிற நகர்ப்பகுதியில், மாநிலத் தலைநகரில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஒன்றல்ல, ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கொள்ளைகள் நடந்துள்ளன.  கொள்ளை அடித்தவர்களைச் சுற்றி வளைத்து சரணடையச் சொன்ன போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இரண்டு இன்ஸ்பெக்டர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதைத் தொடர விட்டிருந்தால் ஒன்றிரண்டு போலிஸார் மரணமே அடைந்திருக்கக் கூடும்.

 இந்த நிலையில், போலீஸார் துப்பாக்கியை முதுகு சொறியப் பயன்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மேல் நடக்கும் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக் கொண்டு, எந்த வன்முறையும் இல்லாமல் போராட இது சுதந்திரப் போராட்டம் அல்ல. இது ஒரு எமெர்ஜென்ஸி சூழ்நிலை. அப்போது போய் மேஜிஸ்ட்ரேட்டிடம் ஷூட்டிங் ஆர்டர் வாங்கிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் திருடர்களே இல்லை என்றாலும் (அவர்கள்தான் திருடினார்கள் என்று வங்கி அதிகாரிகள் உறுதி செய்தாகி விட்டது வேறு விஷயம்) இது போன்ற சூழ்நிலையில் போலிஸார் திருப்பிச் சுட்டே ஆக வேண்டும். அப்படி இருட்டில், ஒரு வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுடுகிற போது இடுப்புக்குக் கீழே ஃபார்முலாவெல்லாம் நடக்காது.

 பொதுமக்களுக்கு தைரியத்தையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் தருவது கவல்துறையின், அரசின் முதற்பொறுப்பு. கொலை கூடப் பண்ணலாம். ஆனால் அவர்களுக்கு தூக்குதண்டனை கூடாது என்று போராட ஒரு கூட்டம் இருக்கிறது. திருடுகிறவர்களை கைது பண்ணக் கூடாது என்று அவர்கள் சீக்கிரமே போராட ஆரம்பிக்கலாம். ஆஃப்டர் ஆல் இல்லாத குறையில்தானே இருபது லட்சம் திருடுகிறான். பாவம்! என்று வாதிடுவார்கள்.

 அரசாங்கம் பொதுமக்களின் பயத்தைப் போக்குகிற மாதிரி செயல்படும் போது பாராட்ட வேண்டாம், அதைக் குறை கூறாமலாவது இருக்கலாமே?

 பேர் தப்பாகிப் போன ஒரே காரணத்தால் கொல்லப்பட்டது திருடர்களே அல்ல என்கிற மாதிரி பிரச்சாரத்தை சில மஹாத்மாக்கள் செய்து வருகிறார்கள். திருடியது பேரா, ஆளா? ஆட்கள் அவர்கள்தான் என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். மஹாத்மாக்கள் பிரச்சினை வேறு! திருடர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு தெரிந்து விட்டால் பிழைப்பு நடக்காதே என்கிற கவலை! சமூக விரோதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது புதிதல்ல. அங்க அடையாளங்கள், ஊர், பேர், பிறந்த தேதி, நேரம், எந்த ஆஸ்பத்திரி, சுகப்பிரசவமா, ஆயுதக் கேஸா என்று எல்லா விவரங்களையும் தெள்ளத் தெளிவாக வைத்துக் கொண்டுதான் திருட வருவார்களா?

 தவறு நடந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும் சிலர் ஆட்சேபக் குரல் எழுப்புகிறார்கள். இது புரிந்து கொள்ளக் கூடியதே. சொல்லப் போனால் இது மாதிரி எதிர்ப்புகள் இல்லாவிட்டால் தவறான என்கௌண்ட்டர்களுக்கு வழிவகுத்து விடும் என்பது நிஜமே.

 ஆனால், எதிர்க்கிற எல்லோருமே சமூக நலனில் அக்கரை இருப்பவர்கள் அல்ல. கீழ்த்தரமாக அரசியல் செய்பவர்கள், திருடர்களுடன் இருந்த கூட்டணி வெளிப்பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் இருப்பவர்கள் என்று பலசாராரும் இருக்கிறார்கள்.

பாங்க் கொள்ளை தடுப்புக்கு யோசனைகள்

காவல்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக செய்தி பார்த்தேன். இது ஒரு நல்ல அணுகுமுறை. என் அறிவுக்கு எட்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 செக்யூரிட்டி      கார்ட் வைப்பது ஒரு தீர்வே அல்ல. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும்      செக்யூரிட்டியை ஔட் சோர்ஸ் செய்திருக்கிறார்கள். அந்தக் காண்ட்டிராக்டர்கள்      அற்ப சொற்ப சம்பளத்திற்கு வைத்திருக்கும் கார்டுகள் எத்தியோப்பியா பிரஜைகள்      போலப் பரிதாபமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் சக்தியில் கையில் இருக்கும்      துப்பாக்கியைக் கூடத் தூக்க முடியாது. (அந்தத் துப்பாக்கியால் குருவியைக் கூட      சுட முடியாது என்பது இன்று விரல் சப்பும் குழந்தைக்குக் கூடத்      தெரிந்திருக்கிறது) ஆகவே இவர்களை ஓவர் பவர் செய்வது கொள்ளைக்காரர்களுக்கு ஒரு      பெரிய விஷயமே அல்ல.

அபாய      அறிவிப்பு சைரன்களாலும் பெரிய ஆதாயம் எதுவுமில்லை. அதன் ஒலி போலிஸ் ஸ்டேஷன்      வரை சத்தியமாகக் கேட்கப் போவதில்லை.

 அப்புறம் என்னதான்யா செய்யலாம் என்று கேட்பீர்கள். நல்ல கேள்வி.

 1. அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத அமைப்பு அவசியம்.      அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு அடையாள அட்டை தந்து அதை ஸ்வைப் செய்தால்தான்      திறக்கிற மாதிரி கதவுகள் அமைக்க வேண்டும். இந்தக் கதவில் கண்ணாடி இருக்கக்      கூடாது. முழுக்க முழுக்க ஸ்டீல் கதவாக இருக்க வேண்டும். அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு யாராக இருந்தாலும் (வேறு நுழைவாயில் வழியாகப் போகிற      மாதிரி) தனியாக அமைக்கப்பட்டிருக்கும் அறையில்தான் ஊழியர்கள் அவர்களைச்      சந்திக்க வேண்டும். புது அக்கவுண்ட்டாக இருந்தாலும் இதே முறைதான்.
 2. ஜெர்மன்      ஷெபர்ட், அல்சேஷன் மாதிரி ராட்சஸ நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். பிஸ்கட்டைப்      பார்த்தாலே பாய்ந்து பிடுங்கித் தின்கிற அளவு பஞ்சத்தில் அதை வளர்க்கக்      கூடாது. அதன் ஆரோக்யமான வளர்ப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.      செக்யூரிட்டி கார்டைப் பார்த்து பயப்படாதவன் கூட இதற்கு நிச்சயம்      பயப்படுவான். இந்த நாய்களை லாக்கர் அருகிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
 3. சர்வீலியன்ஸ்      கேமிராவுக்கு முகத்தைக் காட்டாமல் உள்ளே நுழைய முடியாதபடி வாசற்புறம் ஒரு      கேமிரா அவசியம். அது பதிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஸ்பேர் காமிரா      அவசியம். பழுதானால் சில மணி நேரங்களுக்குள் சரி செய்தாக வேண்டும்.
 4. எந்நேரத்திலும்      வங்கிக்குள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.      ஐந்து வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக உள்ளே ஆட்கள் அனுமதிக்கப்படக் கூடாது.      (இந்த ஐந்து என்பது தெய்வீக எண்ணிக்கை அல்ல. வங்கி ஊழியர்களின் எண்ணிகையைப்      பொறுத்து இதை மாற்றிக் கொள்ளலாம். ஐடியா என்னவென்றால் ஊழியர்கள் எல்லாரும்      சேர்ந்து விரோதிகளை ஓவர்பவர் செய்ய முடிய வேண்டும் என்பதே)
 5. எல்லா      வங்கிகளிலும் மெடல் டிட்டக்ட்டர் கேட்கள் அவசியம். அதைக் கடந்துதான் உள்ளே      பிரவேசிக்க முடிய வேண்டும். இல்லையென்றால் கதவு திறக்காது என்று இருக்க      வேண்டும்.
 6. எல்லா      ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான பயிற்சி      வகுப்புகள் நடத்த வேண்டும். கொஞ்ச காலத்துக்கு ஒருமுறை ரெஃப்ரஷர்      வகுப்புக்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
 7. எல்லா      ஊழியர்களும் ஒரே சமயம் உணவருந்தப் போகக் கூடாது. பேட்ச் பேட்சாகத்தான் போக      வேண்டும். உணவு இடைவேளையின் போது உள்ளே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இருக்கக்      கூடாது.
 8. பாதுகாப்பு      தொடர்பான விஷயங்களில் காஸ்ட் கண்ட்ரோல் செய்யவே கூடாது. இதை ஏன் சொல்கிறேன்      என்றால் எனக்குத் தெரிந்த ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் அதன் மேலாளர் (அவர்      முன்னாள் ராணுவ அதிகாரி வேறு!) காஸ்ட் கண்ட்ரோல் என்று செக்யூரிட்டிக்களின்      எண்ணிகையைக் குறைத்து விட்டார்.
 9. ஒவ்வொரு      வங்கிக்கும் அருகிலிருக்கும் காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும் ஹாட்லைன்      ஃபோன்கள் அவசியம். ரிஸீவரை எடுத்ததுமே எதிர்முனையில் மணி ஒலிக்கிற மாதிரி      அமைப்புகள் மிக எளிதாக செய்ய முடியும்.
 10. இவைகளுடன் கூட      ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பாதுகாப்புச் சாதனங்கள் அமைக்க முடியும். ஒரு சில      ஐடியாக்களை அடுத்த பதிவில் சொல்ல உத்தேசம்.

ஐநூறாவது இடுகை கொஞ்சம் உருப்படியாக இருக்கட்டுமே என்கிற ஆவலில் எழுதப்பட்டது.

சிறுவனின் கொலைவெறி-சில சிந்தனைகள்

சென்னையில் நடந்திருக்கும் பள்ளி ஆசிரியைக் கொலை அதிர்ச்சி மட்டும் அளிக்கவில்லை, ரொம்ப யோசிக்கவும் வைக்கிறது.

 இதுவரை செய்திகளில் வந்திருப்பவை சரியான, நம்புதற்குரிய தகவல்கள்தான் என்று வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.

 மாணவன் பற்றிய புகார்களைத் தொடர்ந்து குறிப்பேட்டில் அந்த ஆசிரியை எழுதியதுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எழுதுகிறவரைக் கொலை செய்கிற அளவு துணிச்சல் இருந்தவனுக்கு, அதைப் பெற்றோரிடம் காட்டி அதன் விளைவுகளை எதிர்கொள்கிற துணிவு ஏன் இல்லாமல் போயிற்று? கொலை செய்கிற அளவு துணிகிறதென்றால் பெற்றோர் அவ்வளவு கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று அர்த்தமா?

 அதை அப்புறம் பார்க்கலாம்.

 கொலை என்பது வேண்டாதவர்களை ஆஃப் செய்கிற ஒரு சாதாரண எளிய வழி என்கிற மாதிரி மனப்பாங்கு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?

 முழ நீளக் கத்தியால் தலையை சீவி எறிவது, கத்தியை வயிற்றில் சொருகி குடலைச் சரிப்பது, சம்மட்டியால் மண்டையில் ஒரே போடு போட்டு மூஞ்சியெல்லாம் ரத்தமாக வருவது, குண்டு வைத்து ஆளை துண்டு துண்டாகச் சிதற வைப்பது இதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? யார் செய்கிறார்கள், யாரைச் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் பகுத்து அறிகிற பருவமா அது?

 இது போன்ற காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிற போது அதன் பயங்கரம் பழகிப் போய் ஒரு சாதாரண நிகழ்வாகி விடுகிறது.

 எமர்ஜன்ஸி காலத்தில் வன்முறை, பாலுணர்வு இந்த இரண்டும் வலுக்கட்டாயமாக வெட்டி எறியப்பட்டது. இந்த இரண்டும் இல்லாமல் எப்படிப் படம் எடுப்பது என்று சினிமா உலகம் திணறினாலும், எடுப்பதற்குக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது அப்போதுதான்.

 வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்…. மன்னிக்கவும் வயலன்ஸ் எனக்கும் பழகி விட்டது.

திருக்குறள் என்னும் திங்கிங் டூல்

”அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா என்ன சார்?”

 “இதுக்கு நான் உடனே பதில் சொல்ல மாட்டேன்”

 “ஏன், உங்களுக்கே தெரியாதா?”

 “அப்படி இல்லை. ஒரு விஷயம் என்னன்னு விளக்கிச் சொல்லணும்ன்னா உன் வழியிலயே போய் சொன்னாத்தான் ஈஸியாப் புரியும். முதல்ல அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா உனக்கு என்ன ஐடியா இருக்குன்னு சொல்லு. அதைத் திருத்தியோ, கூட்டியோ, குறைச்சியோ சொல்றது எனக்கும் ஈஸி, உனக்கும் நல்லாப் புரியும்”

 “எனக்கு ஒரு இழவு ஐடியாவும் இல்லை. இருந்தா உங்களை ஏன் கேட்கப் போறேன். இருந்தா அதுதான் கரெக்ட்டுன்னு நினைச்சிகிட்டுப் போயிருக்க மாட்டேனா?”

 “அதைக் கேட்கிறப்போ மனசில ஒரு பிக்சர் வருமில்லே? உனக்கு என்ன பிக்சர் வருது?”

 “ஒரு ஆள் உட்கார்ர மாதிரி பெரிய அட்டைப் பொட்டி ஒண்ணு இருக்கு. அதுக்குப் பக்கத்துல உட்கார்ந்து ஒருத்தன் யோசிக்கிற மாதிரி பிக்சர் வருது”

 “அவ்வளவுதான். யு காட் தி பாயிண்ட்”

 “என்னது, அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா அட்டைப் பொட்டிக்கு பக்கத்தில உட்கார்ந்து யோசிக்கிறதுதானா? உலகத்திலேயே ரொம்ப இன்னவேட்டிவ் ஆட்கள் எல்லாம் பேக்கிங் செக்‌ஷண்லதான் இருப்பாங்களா அப்ப?”

 “ஒரு பாக்ஸுக்குள்ள உட்கார்ந்து இருக்கும் போது உன்னுடைய வியூ ரொம்பச் சின்னதா இருக்கும். ஒரு ஆறடிக்கு நாலடி எல்லைதான் அது. வெளியே வந்தா மொத்த உலகமும் உன் பார்வைல இருக்கும்.”

“கொஞ்சம் புரியுது”

 “அதாவது எதை எடுத்தாலும் ஒரு கண்டிஷண்ட் தின்கிங்தான் நமக்கு இருக்கு. அதிலேர்ந்து வெளியில வந்தாத்தான் புதுமைகள் செய்ய முடியும். முன்னேற்றங்கள் அடைய முடியும். உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா ஆட்டுக்கல்லுக்கு மிஷின் கண்டுபிடிக்கும் போது கல்லைத்தான் சுத்த விட்டாங்க, குழவியை இல்லை. ஏன்னா, அப்படிப் பண்ணாத்தான் மாவைத் திரும்பத் திரும்ப குழிக்குள் போக வைக்க இன்னொரு மோட்டார் வைக்க வேண்டியதில்லை.”

 “ஆஹா, ஐடியா நல்லா இருக்கே. எப்படி சார் அந்த மாதிரி திங்கிங்கை வளர்த்துக்கிறது?”

 “நான் ஒரு திருக்குறள் சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்றியா?”

 “அதுதான் அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்கா?”

 “அவசரப்படாதே. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு ந்னு ஒரு குறள் இருக்கு”

 “இருக்கா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

 “அதுக்கு என்ன அர்த்தம்?”

 “இதுல என்ன சார் பெரிய அர்த்தம், சாவுங்கிறது உறக்கம் மாதிரி, பிறப்பு உறங்கி முழிக்கிற மாதிரின்னு அர்த்தம்”

 “இதுல என்ன கருத்து?”

 “பிறப்பும் சாவும் தூக்கமும் முழிப்பதும் போல ரொம்பச் சாதாரணமான விஷயங்கள். மாறி மாறி நடந்துகிட்டுத்தான் இருக்கும். வாழ்க்கை நிரந்தரமில்லை”

 “அதாவது, நிலையாமைங்கிற அதிகாரத்தில் சொன்னதால இந்த அர்த்தம் சொல்றே?”

 “நான் மட்டுமில்லை. திருக்குறள் உரை எழுதின எல்லாருமே இதைத்தான் சொல்றாங்க”

 “சரி, இது இல்லை அர்த்தம். இதுக்கு வேறே அர்த்தம் சொல்லித்தான் ஆகணும்ன்னு வெச்சிக்க. மறுபிறவின்னு ஒண்ணு கிடையவே கிடையாது, அப்ப என்ன சொல்வே?”

 “கஷ்டம்தான்”

 “கஷ்டம்தான், அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங் ஈஸி இல்லை. பிறப்பு, இறப்பு, மறுபிறவி எல்லாத்தையும் மறந்துடணும். அந்த வரையரைகளைக் கடந்து வெளியில வா”

 “ம்ம்ம்ம்… கொஞ்சம் ரிமோட்டா இருக்கும் பரவாயில்லையா?”

 “எவ்வளவு ரிமோட்டா இருக்கோ அவ்வளவு இன்னவேட்டிவ்”

 “இப்ப ரோட்ல ஏதோ யோசனையா போய்கிட்டு இருக்கோம். பின்னால ஒரு கார் இடிக்கிற மாதிரி வருது. வந்து பிரேக் போடறான். நமக்கு உயிரே போய்ட்டு வருது. ‘யோவ்.. என்ன தூங்கிகிட்டே நடக்கிறியா? போய்ச் சேர்ந்திருப்பேடா’ ந்னு சொல்றான். நாமே சரியான சமயத்தில பார்த்து சடக்குன்னு விலகியிருந்தா அப்பா, பிழைச்சோம்டான்னு உயிர் வரும்”

 “வெரிகுட், நல்ல சிச்சுவேஷன்”

 “மரணம்ங்கிறதை உணர செத்துப் பார்க்கணும்ன்னு அவசியமில்லை. சுற்றிலும் நடக்கிறதில கவனமில்லாம தூங்கிகிட்டு இருக்கிறது மரணத்துக்கு சமமானது. சரியான சமயத்தில் முழிச்சிக்கிறது பிறப்பு மாதிரின்னு அர்த்தம்”

 “எக்ஸல்லண்ட். இதே மாதிரி எல்லாக் குறளுக்கும் சொல்வியா?”

 “சொல்வேனான்னு தெரியாது. ஆனா டிரை பண்றது நல்ல திங்கிங் எக்ஸர்சைஸா இருக்கும்ன்னு தெரியுது”

அநீதியா? காலில் இருப்பதைக் கழற்றிக் கேளுங்கள்

துக்ளக் இதழில் அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டது.

 

‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பற்றிய ஒரு அவேர்னஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரம் அது. என்னைக் கவர்ந்தது அந்த டீம் காம்பொசிஷன்தான்.

 

சி.வி.சி யின் முன்னாள் தலைவர் விட்டல் ஐ.ஏ.எஸ், பொருளாதார வல்லுனர் குருமூர்த்தி, சொற்பொழிவாளர் சுகி.சிவம், ஆவணப்பட இயக்குனர்-தயாரிப்பாளர் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி என்று ஒரு துல்லியமான கிராஸ் ஃபங்க்‌ஷனல் டீம்!

 

திங்கட்கிழமை மாலை. ஆறரை மணிக்கு ஆரம்பம் என்றாலும் ஆறு பத்துக்கே வாணி மஹாலில் பத்துப் பனிரெண்டு இருக்கைகளே காலியாக இருந்தன. ஆறு இருபதுக்கு எல்லா இருக்கைகளும் நிரம்பி மக்கள் ஓரத்திலும், நுழைவாயிலிலும், நடைபாதையிலும் நிற்க ஆரம்பித்தார்கள். ஆறு இருபத்தைந்திற்கே தொடங்கி விட்டார்கள். எழுத்தாளர் சிவசங்கரியும், ராமகோபாலனும் பார்வையாளர்களாக முன் வரிசையில் வந்து உட்கார்ந்தார்கள். அப்பா வேஷ சங்கரன் உள்ளிட்ட சில துணை நடிகர்கள் எளிய பார்வையாளர்களாக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. வி சப்போர்ட் அன்னா ஹாஸாரே என்று மார்பிலும் முதுகிலும் எழுதி மாட்டிக் கொண்டு வந்த சில இளைஞர்கள்!

 

விட்டல் ஐ.ஏ.எஸ் பேசும் போது சில தமிழ்ப்பதங்களுக்கு சிரமப்பட்டாலும் பெரும்பாலும் தமிழிலேயே பேசினார். புள்ளி விவரங்கள், உணர்வுகளைத் தவிர்த்து விட்டு நேரடியாக ரூட் காஸ் அனாலிஸிஸில் இறங்கி, கரெக்டிவ் ஆக்‌ஷன்களையும் தெரிவித்தார். அவர் சொன்னதில் முக்கியமானது, அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் முதல்நிலை அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடமாற்றம், சஷ்பென்ஷன் உள்ளிட்ட விஷயங்கள் செய்ய முடியாதபடி ஆர்டினன்ஸ் வரவேண்டும் என்றார். (ஆர்டினன்ஸ் என்பது சட்டத் திருத்தத்தில் இருக்கும் தடங்கல்கள் இல்லாத ஒரு வழிமுறை என்றார்- அந்த ஐ.ஏ.எஸ் ஜார்கன் எனக்குப் புரியவில்லை) அப்படி ஒருவேளை அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் சூழல் வந்தால் சி.வி.சி யின் ஒப்புதலோடுதான் செய்கிற மாதிரியும் இருக்க வேண்டும் என்றார். சி.வி.சி க்கு தாமஸ் மாதிரி ஆசாமிகள் தலைமை ஏற்பதை எப்படித் தடுப்பது என்பதை தெளிவாக விளக்கவில்லை!

 

குருமூர்த்தி சொன்ன புள்ளி விவரங்களைக் கேட்ட போது அஸ்தியில் ஜுரம் வரும் போலிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியப் பிரஜைகள் எல்லாரும் பிச்சை எடுக்க ஆரம்பிக்க வேண்டுமோ என்ற பயம் ஏற்பட்டது. சுவிஸ் பாங்கில் இருக்கும் இந்தியக் கறுப்புப் பணம் வந்தால் இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் முதல் இடத்திற்கு உயரும் என்று உறுதியாகச் சொன்னார். லஞ்சம் வாங்கவும், கறுப்புப் பணம் சேர்க்கவும் வெட்கமே இல்லாமல் போய் விட்டது என்றார். முன்காலத்தில் ஊழல் அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் மாதிரி அழுக்காக வருவார்கள், ஆனால் இன்றைக்கு ரைட் ராயலாக மெர்சிடிஸ் வண்டியில் போகிறார்கள் என்றார். ஆட்டோ டிரைவர்களின் நாணயம் பற்றிக் குறிப்பிட்டார். ஐந்து லட்சம் பணத்தை காவல் ஆணையரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கூடச் சாப்பிட முடியாத ஏழைக் குடும்பத்தைத் தாங்கி நிற்பவர் என்றார். இப்படிப்பட்ட ஆட்டிட்ட்யூட் எளிய மக்களிடம் இருப்பதால் விழிப்புணர்ச்சியும், எழுச்சியும் உண்டாக்குவது எளிது என்றார்.

 

சுகி.சிவம் ஒரு வெடிச்சிரிப்பை அரங்கத்தில் உண்டாக்கி கலகலப்பாக ஆரம்பித்தார். ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டைக் குறிப்பிட்டு, அவர் காலத்துல ரெண்டு கூட்டமும் வேறே வேறேயா இருந்திருக்கு என்றார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றி அடித்ததற்கு புது விளக்கம் சொன்னார். அரசாங்கம் அநீதி இழைத்தால் பிரஜைகள் காலில் இருப்பதைக் கழற்றி கேள்வி கேட்கலாம் என்று அதற்கு விளக்கம் சொன்னார்.
சுவாரஸ்யமான, விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சி.

 

அமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுப்பினராகவோ, வெளியிலிருந்தோ நம் ஆதரவை நல்குவோம்.

 

இந்தத் தீப்பொறியை ஊதிப் பரப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஊதி விட்டுவிட்டேன். இந்தப் பதிவை வலையாசிரியர்கள் எல்லாரும் தாராளமாக அவரவர் வலையில் வெளியிடலாம், வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்மால் சில ஆயிரம் பேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படட்டும்.

 

ஜெய்ஹிந்த்.

வந்தாச்சு.. தேர்தல் முடிவுகள் வந்தாச்சு!

போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 120 இடமும் அதிமுக கூட்டணி 105 இடமும் இருந்தன.

 நேற்று சிஎன்என் ஐபிஎன் வெளியிட்ட முடிவுகள் அதற்கு நேர் எதிரிடையாக இருந்தன. ந்யூஸ் எக்ஸ் (சேர்த்துச் சொன்னால் அர்த்தம் வில்லங்கமாக இருக்கும்!) அதிமுக கூட்டணி 172 இடம் பிடித்து ஸ்வீப் செய்யும் என்றார்கள். ஸ்டார் ஹிந்தி சேனல் திமுக வுக்கு தனிப் பெரும்பான்மை என்றது.

 ஆக மொத்தம் வாநிலை அறிக்கை மாதிரி எல்லா மாதிரியும் சொல்லி விட்டார்கள்!

 எல்லாரும் ஒத்துக் கொண்ட இரண்டு விஷயங்கள் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது, திமுக இப்போது இருப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கைகளை மட்டுமே பெற முடியும்.

 2ஜி, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஓட்டுக்குப் பணம் இத்தனை ஃபேக்டர்களைத் தாண்டி, தேர்தல் கமிஷனின் அதிரடிகளைத் தாண்டி, விஜயகாந்த்-ஜெயலலிதா என்கிற பலம் வாய்ந்த கூட்டணியைத் தாண்டி,

 திமுக 100 இடம் பிடிக்கிறது என்றால், அது ஏறக்குறைய வெற்றி மாதிரிதான்! நிஜ முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்ப்போம்.

 கருத்துக் கணிப்புகளில் நிறைய டிரா பேக்குகள் உண்டு.

 எல்லாரும் அவர்கள் ஆசைப் படுவதைச் சொல்வார்களே ஒழிய, ஆய்ந்ததைச் சொல்வதில்லை. இந்த சாம்ப்பிள் அளவு சரியா என்று சிக்ஸ் சிக்மா ஆசாமியான என்னைக் கேட்டால், ம்ம்ஹூம்! இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் நாலாயிரத்திச் சில்லரை வாக்காளர்களின் கருத்து சரியாக இருக்க ஆயிரத்தில் ஒரு பிராபபிலிட்டிதான் இருக்கிறது. 234 தொகுதிகள் இருக்கும் இடத்தில் 70 தொகுதிகளைக் கேட்டால் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிராபபிலிட்டியே இருக்கிறது.

 எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் கருத்துக்கள் 40% க்கு அதிகமாக இருக்கும். கோமதியின் காதலன் கதையில் வரும் பிரணதார்த்தி ஹர அய்யர் மாதிரி, தங்களுக்குப் பிடித்த முடிவு வரும் வரைக்கும் கணிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். வரும்போது நிறுத்தி விடுகிறார்கள்.

 அம்மா ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால், ராமதாஸ் இடுப்பில் கட்டிக் கொண்ட பூனை என்றால் கேப்டன் வேட்டியில் புகுந்த ஓணான்.

 எப்படி சமாளிக்கிறார் பார்க்கலாம்!

சாயிபாபா சர்ச்சைகள்

ஏப்ரல் முதல் தேதியன்றே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்து விட்டார்களாம். சில தெலுங்கு சேனல்களில் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் கடையின் ரசீதைக் கூட காட்டினார்களாம். இன்றைய (28-04-2011) சென்னைப் பதிப்பு தினத் தந்தியில் 12ம் பக்கத்தில் செய்தி படித்தேன். நிஜமா என்பது எனக்குத் தெரியாது.

 பல விஷயங்களை செட்டில் செய்ய அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.

 சாயிபாபா மக்கள் ஞாபகத்தில் நிலைத்திருக்கப் போவது என்ன காரணத்தால், என்று நேற்று (27-04-2011) ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது.

 எனக்கு அவரது அபூர்வ சக்திகள் மீதும், ஆன்மீக அறிவின் மீதும் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது. நான் முட்டாளாக இருக்கலாம். விவேகானந்தருக்குப் பிறகு பிறந்த யாருக்குமே ஆன்மீகத்தில் தெளிவு இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம். ஆனால் அவர் அமைத்த கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் நன்றாகவே இயங்கி வருகின்றன. அவை பற்றி தப்பான பேச்செதுவும் இல்லை. குடிநீருக்கு நன்கொடை கொடுத்ததும் பாராட்டப்பட வேண்டியதே.

 நல்ல காரியம் செய்ய விரும்புகிறவர்களிடமிருந்தெல்லாம் நன்கொடை பெற்று அதில் ஒரு பகுதியை நல்ல விஷயங்களுக்குச் செலவிட்டிருக்கிறார். ஒரு நல்ல கோ-ஆர்டினேட்டர். பாக்கிப் பணமும் தர்மத்துக்கே வந்தால் நல்லது.

 மற்றபடி அவரைக் கடவுள் என்று சொல்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படுவேன். அவர் கடவுள் என்றால், மாஜிக் நிபுணர்கள் எல்லாருமே கடவுள்கள்தான்!

ரஜினியின் தைரியமும் ’சோ’வின் சான்றிதழும்

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வழக்கமாக வருகை தரும் ரஜினிகாந்த் இந்த வருஷம் ஆப்ஸண்ட். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு வாசகர் உட்பட வந்திருந்த பலரும் அவர் ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டு வரவில்லை என்று சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது.

 பயமெல்லாம் அவருக்குக் கிடையாது என்று சோவே சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு கைசொடக்கிக் கேள்வி கேட்பவர், அந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசாதிருப்பதும், துக்ளக் விழாவுக்கு வராமல் இருப்பதும் நேரமின்மை காரணமாகத்தான் என்பதை நாம் நம்புவோம். முதலமைச்சருக்கு நடத்தப்படும் பாராட்டுவிழாக்களிலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதும் ஏகப்பட்ட நேரம் இருப்பதால்தான் என்றும் நம்புவோம். பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோம். படத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனத்தின் மனக்கசப்பைத் தேடிக்கொள்ள அவருக்கு பயம் என்பது பிதற்றல் என்றும் நம்புவோம்.

குருமூர்த்தி பேசும்போது, ஸ்விஸ் பாங்கிலும், பெயர் வெளியிடத் தேவையில்லாத சில வெளிநாட்டு முதலீடுகளிலும் இருக்கும் இந்தியப் பணத்தில் நாலில் ஒரு பங்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் இந்தியப் பொருளாதாரம் 16 சதவீதம் உயர்வடையும் என்றார். சோ உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் நேரடியாகச் சொல்லத் தயங்கும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் மருமகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசினார்.

நீங்கள் தலித்துகளுக்கு எதிராவர் என்பது மாதிரி ஒரு கருத்து இருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, ஜகஜீவன்ராம் பிரதமராக வருவதற்காக ஐந்து மாநிலங்களில் தான் கான்வாஸ் செய்ததையும், ‘பாப்பாத்தி’(”அவர் பாஷைல சொல்லணும்ன்னா” என்று குறிப்பிட்டார்) இந்திராவுக்கு ஆதரவாக கருணாநிதி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.