ச்பெக்ட்ரம்

இந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே

கலக்கிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹஸாரே!

இந்தியன் படம் பார்க்கிற போது இப்படி ஒரு தாத்தா நிஜமாகவே உருவானால் பரவாயில்லையே என்று உங்களை மாதிரியே நானும் ஏங்கினேன்.

ஷிவ் கேராவின் ஃப்ரீடம் இஸ் நாட் ஃப்ரீ படித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் வோட்டுப் போடுமுன் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைப் படிக்கிற போதும், ஏன் நம் நாடு இப்படி அழிந்து கொண்டிருக்கிறது, விடிவே இல்லையா என்கிற ஏக்கம் ஏற்படுகிறது.

அன்னா ஹஸாரே பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. இவர் சுபாஷ் சந்திர போசின் இந்தியன் தாத்தா அல்ல, காந்தியின் இந்தியன் தாத்தா. ஆனால் அரசியல்வாதிகளின் ஆணவமும், மெத்தனமும் இவரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.

அன்னா ஹஸாரேக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு தோன்றியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். கிரன் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தேசத்தில் நல்லது நடக்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.

லோக்பால் பில் என்றால் என்ன?

லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?

லோக்பால் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.

முதலில் அன்னா ஹஸாரேயின் செயலை இம்மெச்சூர் என்று காங்கிரஸ் வர்ணித்தது. பிறகு கொஞ்சம் காத்திருக்க வேண்டும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. பிறகு வீரப்ப மொய்லி அவர்கள் அடுத்த பார்லிமெண்ட் செஷனில் கொண்டுவருகிறோம் என்று உறுதி அளித்தார். எதற்குமே அன்னா மசியவில்லை. ஷரத் பவார் லோக்பால் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். ம்ஹூம்…..

மெச்சூராக இருப்பது என்றால் என்ன?

இந்தியாவின் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் ஸ்விஸ் வங்கியில் இருப்பதும், நூறு வருஷத்து இந்திய பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திருடப்பட்டிருப்பதும் தெரியவே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பதா?

அன்னா ஹஸாரேக்கு ஆதரவு தருவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்க்கவில்லை மக்கள். உமாபாரதியையும், சௌதாலாவையும் அப்படியே வண்டியேற்றி அனுப்பிவிட்டார்கள்.

கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி.

அவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.