ஜாதி

இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா?

இட ஒதுக்கீடு என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்பது மாதிரியான மனப்பாங்கு சற்றுக் குறைந்திருக்கிறது.

நேற்று இண்டியா டுடே செய்தி அலைவரிசையில் கரண் தாப்பர் ஒருங்கிணைப்பாளராய் இருந்து நடத்திய விவாதம் சுவாரஸ்யமான விஷயங்களைத் தொட்டது. ஒதுக்கீடு பெற்றவர்கள் வசதி அடைந்து விட்டார்களா என்பதும் அவர்கள் தொட்டுப் பார்த்த சங்கதிகளில் ஒன்று. ஏழை பிராமணர்களுக்கும், ஷத்ரியர்களுக்கும் கூட ஒதுக்கீடு தரப்படலாமே என்றார் தாப்பர்.

 நல்ல சிந்தனை. ஆனால்,

 அங்கே எனக்கொரு சின்ன அபிப்ராய பேதம். இட ஒதுக்கீடு பொருளாதார மேம்பாட்டுக்கு மாத்திரம் தரப்பட்டது அல்ல. பொருளாதார மேம்பாட்டின் வழியே சமூக அங்கீகாரம் பெற்றுத் தருவதுதான் முக்கிய நோக்கம் என்று கருதுகிறேன். அந்த அங்கீகாரம் இன்னும் முழுமையாய்க் கிடைக்கவில்லை என்றும் கருதுகிறேன்.

கிடைக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் நடந்த கொலையும் சொல்லும் உண்மை. சம்பந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார்தான் கொலைக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தானே முன்வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் முகத்தில் ஆத்திரமோ, அவமானமோ, ஏமாற்றோ இல்லை. அவரை ஆதிக்க சாதிக்காரர் என்று குறிப்பிடுவதே தவறோ என்று கூடத் தோன்றுகிறது. வெறும் ஜாதியை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியுமோ?

எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் பணக்காரராக இருந்தால்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வசதியானவராய்த் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பா. ம. க வின் ராமதாஸ் ஏன் கருத்துக் கூற மறுத்திருக்கிறார்? நடந்த கொலையில் அரசியல் தலையீடு உண்டா என்கிற கோணத்திலும் போலிஸார் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஆரம்பித்த இடத்துக்குத் திரும்ப வருவோம். விவாதத்துக்கு அடிப்படைக் காரணம் ஆர். எஸ். எஸ் ஸின் சுரேஷ் ஜோஷி தெரிவித்த கருத்தே. அவரது கருத்து இட ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் என்பதாக இருப்பது போல விவாதித்தவர்கள் பேசினார்கள்.

இட ஒதுக்கீட்டால் பலன் பெற்று விட்ட குடும்பங்கள், தங்களைக் காட்டிலும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் இது ஓரளவு சரிதான் என்றே தோன்றுகிறது. ஏன் ஓரளவு என்று சொல்கிறேன் என்றால், அவர் குறிப்பிடும் குடும்பங்களுக்கு சமூக அங்கீகாரமும் கிடைத்திருக்குமானால் அவர்கள் விட்டுக் கொடுக்கலாம்.

சமூக அங்கீகாரத்தைப் பொருளாதார மேம்பாட்டின் மூலம் மாத்திரம் பெற்றுவிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. மக்களின் மனப்பாங்கு மாற வேண்டும். மக்கள் என்று நான் குறிப்பிடுவது தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்துபவர்கள் இரு சாராரையுமே.

விவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மாறுதல்கள் மெல்ல உருவாகலாம்.

 

Advertisements

வருமா ஏழைகளுக்கு ஒதுக்கீடு?

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் என்று பலதிறப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடுகள் இருக்கின்றன. இந்த எல்லாப் பிரிவுகளையும் இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று ஏழை, இன்னொன்று பணக்காரன்.

அரசாங்கம் தருகிற சலுகைகள் சரியாக ஏழைகளுக்குப் போய்ச் சேருகின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி. பொருளாதார நோக்கில் எந்த ஒதுக்கீடுமே இதுவரை இல்லை. இப்போது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய வழிநடத்தல் புதிய ஒதுக்கீடுகள் எதையும் புகுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதாவது ஐம்பது சதவீதத்துக்கு அதிகமாக ஒதுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பது தற்போதைய நிலை.

ஏழைகள் பிழைக்க வழி செய்வதுதான் ஜாதியை ஒழிக்கச் சிறந்த வழி.

சிபாரிசு சட்டமாகிறதா என்று பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

இளையராஜா சங்கீத ஜாதி

இசைஞானி என்ன ஜாதி, அவருக்கு ஜாதி உணர்வு இருக்கிறதா என்பது குறித்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்தேன்.

என்னைப் பொறுத்தவரை அவர் சங்கீத ஜாதி.

அவர் தனது சங்கீதத் திறமையால் எல்லா சங்கீதக்காரர்களையும் தாழ்த்தி விட்டார் என்பதுதான் நிஜம். அதனால் அவர் சங்கீத ஜாதியில் மிக உயர்ந்தவர். என்றாவது அவரை நேரில் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவர் பாதத்தில் என் நெற்றியை ஒற்றிக் கொள்கிற உந்துதல் எனக்கு நெடுங்காலமாகவே உண்டு.

ஒரு மனிதன் ஜாதியால் உயர்வதோ தாழ்வதோ இல்லை. அவன் உயர்வும் தாழ்வும் அவனது திறமையில் இருக்கிறது என்பதை அவரை விடத் திறமையாக நிரூபித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை.

ராசய்யா… நீ ராசாய்யா…