தத்துவம்

மின்சாரமும் சம்சாரமும்

பொறியியல் தத்துவங்களிலிருந்து நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் படிக்கலாம்.

காதல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதால் அங்கிருந்து தொடங்கலாம்.

Like poles repel, opposite poles attract. இந்த ஆப்போஸிட் போல்களின் இடையில் நிலவும் ஈர்ப்பு விசைதான் காதல். துருவங்கள் இனைந்து விட்டால் பிறகு ஈர்ப்பு விசை இருக்காது. அது போலவே காதலும் தள்ளி இருக்கிற வரை இருக்கும். இணைந்தால் காலியாகிவிடும்.

ஒரு செப்புக் கம்பி நேராக இருக்கும் போது வெறும் மின் கடத்தி. ஆனால் அதை வளைத்துக் கம்பிச் சுருள் ஆக்கினால் என்னென்னமோ செய்யலாம். நீதி, விறைத்துக் கொண்டு நேராக இருப்பதை விட வளைந்து வளைந்து போவது நம் ஆளுமையை அதிகரிக்கும்.

Potential Difference இருந்தால்தான் மின்சாரம் பாயும். அதுவும் அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு. கற்க வேண்டுமானால் Low profile maintain செய்ய வேண்டும். விறைத்தால் கற்க முடியாது. வாலறிவன் நள்ளாள் தொழாஅர் எனின் என்று வள்ளுவர் சொன்னதும் இதுவே. மிகுந்த அறிவுடையவர்களைக் கண்டால் பணியுங்கள்.

மின்சாரத்தைக் கடத்த மறுத்து ரெஸிஸ்டர் ஆக இருக்கும் பொருட்கள் என்ன ஆகின்றன? தாங்கள் சூடாகின்றன. இப்படிச் சூடும், குளிர்ச்சியுமாக மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் Fatigue Failure ஆகின்றன. நமக்கும் விரோதங்களால் இதுவே நேரும். நாம்தான் சூடாவோம். கண்டக்டர் போல (பஸ் கண்டக்டர் இல்லை) வருவனவற்றைத் தேக்காமல் கடத்தி வைத்தால் மின்னோட்டம் போல நட்பும் உறவும் இனிதே தொடரும்.

இப்போதைக்கு இவ்வளவு போதும். இன்னும் சில தத்துவங்களைப் பிறகு பார்ப்போம்.

நானாக நான் இருந்தால்

நான் நானாக இருக்கும்போது என்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் பலபேருக்குப் பிடிக்கவில்லை.

 அதற்காக என்னை மாற்றிக்கொள்ள பலதடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் தோல்விதான். அந்தத் தோல்வியில் எனக்கு வருத்தமில்லை. சந்தோஷம்தான். நான் நானாக இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும்போது தோற்றால் நான் நானாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பது நிரூபணமாகிறது இல்லையா, அதனால்தான்.

என்னிடம் இந்தச் சமூகம் அங்கீகரிக்காத பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றியிருக்கும் சிலர் அவைகளை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான் முயன்றேன். அந்த முயற்சிகளில் போலித்தனம் நிறைய இருந்தது. போலித்தனத்தைவிட வெட்கமடையச் செய்கிற விஷயம் வெறெதுவும் கிடையாது.

 நான் வெட்கப்பட்டேன்.

 நிறைய வெட்கப்பட்டேன். பிறகு மெல்ல மெல்ல மாறி நான் நானாகவே இருப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை.

 நான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்?

 (மேலே சொன்னவை யாருடைய எண்ணங்கள் என்பது தெரிந்தவர்கள் சொல்லலாம்)

பயணங்கள் முடிவதில்லை

சில வேலைகளைப் பாதி முடிஞ்சிருக்கு என்று சொல்கிற போது ‘இந்தப் பாதி கிணறு தாண்டர வேலையெல்லாம் வேண்டாம்’ என்று சொல்கிறவர்களைப் பார்த்திருப்பிர்கள்.

இதற்கு என்ன அர்த்தம்?

முழுசும் முடிச்சாத்தான் முடிஞ்ச மாதிரி, பாதி கிணறைத் தாண்டி அங்கேயே நிற்க முடியுமா? உள்ளே விழுந்திட மாட்டோமா? என்றுதான் என் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்யாரிலிருந்து சிக்ஸ் சிக்மா ப்ரொஃபஸர் வரை எல்லோரும் சொல்கிறார்கள்.

எனக்கென்னமோ நம் முன்னோர்கள் இவ்வளவு வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்கிற அர்த்தத்தை சொல்லியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் அதில் ஆழமான கருத்தைச் சொல்வதுதான் நம் முன்னோர்களின் ஸ்பெஷாலிட்டி. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியில் டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் சொல்லிக் கொடுத்ததை ஏற்கனவே வேறொரு இடுகையில் எழுதியிருந்தோம்.

இதில் கூட ஏதாவது இருந்தே தீரும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து யோசித்தேன்.

“இப்படி அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருக்காம வீடு கட்டற வேலை எவ்வளவு தூரம் வந்திருக்குன்னு பார்த்துட்டு வரலாமில்லே?”

உடனடியாக அங்கிருந்து கழன்று கொண்டேன்.

“என்ன மேஸ்திரி, வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கு?”

“பாதி முடிஞ்சது சார்”

“இதைத்தானே ரெண்டு மாசாம சொல்றீங்க…. அப்போ ரெண்டு மாசமா வேலையே எதுவும் ஆகல்லையா?”

“போன மாசம் சொன்னது மொத்தத்தில பாதி. இப்போ சொல்றது மீதியில பாதி சார்”

“அடுத்த மாசம் வந்தா அந்த மீதியில  பாதி முடிஞ்சதுன்னு சொல்வீங்களா?”

மேஸ்திரியிடமிருந்து அழுகின வாழைப்பழம் வாசனை வந்தது. இன்றைய குவாட்டரை ஏற்கனவே ஏற்றிக் கொண்டாகி விட்டது போலிருந்தது. நான் கேட்ட கேள்வியை இரண்டு மூன்று தரம் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.

“சரக்கு அடிக்கும் போதுதான் இப்டி பாதி, பாதியில பாதின்னு அடிப்போம். கடைசீலே கொஞ்சம் மிச்சமாய்டும் சார்” என்றார்.

மேஸ்திரி சொன்னதை யோசித்துக் கொண்டே வந்தேன்.

இங்கிருந்து ஓசூர் போகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். அந்தப் பயணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் பாதி முடிந்ததும் பாக்கி இருக்கிற பாதி என் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்புறம் மீதிப் பாதிதான் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்…….

இந்தப் பயணம் முடியவே முடியாது.

பப்பாதியாக டார்கெட் செய்தால் மேஸ்திரி சொன்ன மாதிரி கொஞ்சம் மிச்சம் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கும். X, 0.5X, 0.25X, 0.125X, 0.0625X, 0.03125X என்று போய்க்கொண்டே இருக்குமே ஒழிய சைபர் வராது.

இதைத்தான் பாதிக் கிணறு தாண்டுவது முடியவே முடியாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சொன்னது யாரென்று கூடத் தெரியவில்லை. பதினாறு வயதினிலே படத்து குருவம்மா மாதிரி ஒரு கிழவியாகக் கூட இருக்கலாம்.

ஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீனோ என்கிற கிரேக்கத் தத்துவ ஞானியும் இதையே சொல்லியிருக்கிறார். ஜீனோஸ் பாரடாக்ஸ் என்று சொல்லப்படும் ஜல்லிகளில் இதுவும் ஒன்று.

நம்முடைய பிளாக் ஒரு வருஷம் முடித்ததை ஒட்டி (ஜூலை 13) வாசகர்களுக்கு ஒரு புதிர்.

நான் உங்களிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதில் அடுத்த மாசம் முதல் தேதியிலிருந்து பைசாக் கணக்கில் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்கிறேன். முதல் நாள் ஒரு பைசா. இரண்டாம் நாள் இரண்டு பைசா. மூன்றாம் நாள் நாலு பைசா, இப்படி ஒவ்வொரு நாளும் முதல் நாள் கொடுத்த மாதிரி இரட்டிப்புப் பைசா தந்தால் போதும். மாச முடிவில் எவ்வளவு கிடைத்திருந்தாலும் போதும் என்கிறேன்.

இந்த டீலிங் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?