தலித்

ரஜினியின் தைரியமும் ’சோ’வின் சான்றிதழும்

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வழக்கமாக வருகை தரும் ரஜினிகாந்த் இந்த வருஷம் ஆப்ஸண்ட். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு வாசகர் உட்பட வந்திருந்த பலரும் அவர் ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டு வரவில்லை என்று சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது.

 பயமெல்லாம் அவருக்குக் கிடையாது என்று சோவே சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு கைசொடக்கிக் கேள்வி கேட்பவர், அந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசாதிருப்பதும், துக்ளக் விழாவுக்கு வராமல் இருப்பதும் நேரமின்மை காரணமாகத்தான் என்பதை நாம் நம்புவோம். முதலமைச்சருக்கு நடத்தப்படும் பாராட்டுவிழாக்களிலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதும் ஏகப்பட்ட நேரம் இருப்பதால்தான் என்றும் நம்புவோம். பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோம். படத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனத்தின் மனக்கசப்பைத் தேடிக்கொள்ள அவருக்கு பயம் என்பது பிதற்றல் என்றும் நம்புவோம்.

குருமூர்த்தி பேசும்போது, ஸ்விஸ் பாங்கிலும், பெயர் வெளியிடத் தேவையில்லாத சில வெளிநாட்டு முதலீடுகளிலும் இருக்கும் இந்தியப் பணத்தில் நாலில் ஒரு பங்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் இந்தியப் பொருளாதாரம் 16 சதவீதம் உயர்வடையும் என்றார். சோ உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் நேரடியாகச் சொல்லத் தயங்கும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் மருமகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசினார்.

நீங்கள் தலித்துகளுக்கு எதிராவர் என்பது மாதிரி ஒரு கருத்து இருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, ஜகஜீவன்ராம் பிரதமராக வருவதற்காக ஐந்து மாநிலங்களில் தான் கான்வாஸ் செய்ததையும், ‘பாப்பாத்தி’(”அவர் பாஷைல சொல்லணும்ன்னா” என்று குறிப்பிட்டார்) இந்திராவுக்கு ஆதரவாக கருணாநிதி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

ஏன் நாத்திகமும்,மதமாற்றங்களும் வளர்கின்றன?

News-151009

நாத்திகம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக இருக்கிறது என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.

மேலே இருக்கும் செய்தியைப் படியுங்கள்.

ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த ராஜகோபாலாச்சாரியாரும், வைக்கம் வீரர் ஈ.வெ.ரா. அவர்களும் தமிழ் நாட்டவர்கள் என்கிற நம் பெருமையில் கரை படியச் செய்கிற நிகழ்ச்சி இது.

தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்காத போதும், தங்கள் பாசத்துக்கு உரியவர்கள் அநியாயமாக மரணம் அடைகிற போதும், தங்களுக்குத் தீங்கு விளைவித்தவர்கள் நன்றாக வாழ்கிற போதும் கடவுள் மேல் கோபம் ஏற்பட்டு நாத்திகர்கள் ஆன நண்பர்கள் எனக்கு உண்டு.

கடவுளை வழிபடுகிற உரிமையே மறுக்கப்படுமானால் ஏன் நாத்திகம் வளராது?

கடவுளுக்கு முன் எல்லோரும் சமம் என்கிற அடிப்படை உண்மை தெரியாதவர்கள் ஆத்திகர்களாக இருந்து என்ன பயன்?

ஜாதி ஒற்றுமையை வளர்க்க சிறந்த இடமே கோயில்தானே?

இப்படிப்பட்ட கடவுளும் எனக்கு வேண்டாம், இந்து மதமும் எனக்கு வேண்டாம் என்கிற நிலைக்கு மக்களைத் தள்ளுகிற செயலல்லவா இது!

எனதன்பு இந்து மத ஆர்வலர்களே, பிற மதங்களை இழித்துக் கூறுவதையும், அவர்களின் மதச் சின்னங்களை அழிப்பதையும் விடுத்து இங்கே வாருங்கள். இது போன்ற செயல்கள்தான் இந்து மதத்தை அழிக்கின்றன.

இவர்களுக்குப் புரிய வையுங்கள்.

இது மாதிரி சம்பவங்கள் தடுக்கப் படுமானால், ஆத்திகம் வளரும், இந்து மதம் வளரும், மனித நேயம் வளரும், ஜாதி வேற்றுமைகள் ஒழியும்.

ஆனால் இது போன்ற மனப்பான்மையை வன்முறையோ, சட்டமோ, காட்டமான விமர்சனங்களோ மாற்றாது. மனதளவில் மாற்றம் வர என்ன செய்ய வேண்டும்? நம் வாசகர்களுக்கு நல்ல யோசனைகள் உள்ளனவா?