தலைவர்

துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு

துள்ளு கிற மாடு

பொதி சுமக் காது

என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.

தன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.

சினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.

போகட்டும்.

துள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா? அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா?

இல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.

பொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.

தலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத்திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.

தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.

தலைவர் ஆக சில யோசனைகள்

தேர்தல் வந்தாலே கூடவே வாக்காளர்களுக்குக் குழப்பமும் வருவது இந்த நாட்டின் தேசியக் கட்டாயம்.

 காரணம் என்ன?

 அந்த மாதிரித் தலைவர்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். இன்னாருக்குத்தான் வோட்டுப் போட வேண்டும், போடுவேன் என்று உறுதியாக, தெளிவாக சொல்ல முடியாத நிலை. எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்ப்பதே கட்டாயமாகிப் போயிற்று.

சுதந்திரத்துக்கு முன்னால் உருவான தலைவர்கள், நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. நாடு தழுவிய ஒரு போராட்டத்திற்கு ஆங்காங்கே பொருப்பேற்க ஒவ்வொருவர் தேவைப்பட்டார். அந்தப் போராட்டம் பதவிக்கோ, அதிகாரத்திற்கோ, சம்பாத்யத்துக்கோ அல்ல என்பதால் போட்டி இல்லை. நிஜமாகவே சேவை மனப்பான்மை இருப்பவர்கள் மட்டுமே முன்வந்தார்கள். விவேகானந்தர் சொன்ன ப்யூர் அண்ட் செல்ஃப்லெஸ் என்கிற இலக்கணத்துக்குப் பொருந்தினார்கள். ஆகவே அவர்கள் ஒன்று சொன்னால் அப்பீல் இல்லாமல் மக்கள் கேட்டார்கள்.

ஆனால் அதெல்லாம் காமராஜர் காலத்தோடு சரி.

அதற்குப் பிறகு வந்த டிரெண்ட் செட்டர்கள் புது இலக்கணங்களை வகுத்துவிட்டார்கள். இந்த ஆள் சுத்தமானவனா, சுயநலம் இல்லாதவனா என்றெல்லாம் பார்ப்பதையே மக்கள் நிறுத்திவிட்டார்கள்.

எனக்கு ஒரு ஜாதியோடு ஆகவில்லை. காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தக் காரணம் சமூகத்தோடு, தேசத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ஜாதிக்காரர்களைத் தரக் குறைவாக விமரிசிக்க ஆரம்பித்தால், அவர்களைப் பிடிக்காதவர்கள் எல்லாம் என் பின்னால் வருவார்கள். நான் தலைவர். என்னை தந்தை, தாய், அண்ணன், தம்பி என்றெல்லாம் அடைமொழி கொடுத்துக் கூப்பிட ஆரம்பிப்பார்கள்.

எனக்கு சமூகத்தில் இருக்கும் சில நம்பிக்கைகளில் விருப்பமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? என் நம்பிக்கை என்னோடு என்று சும்மா இருப்பதா? அதெப்படி? அப்புறம் எப்படி தலைவர் ஆவது? சரி, அதை அறிவுப்பூர்வமாகத் தவறு என்று நிரூபிக்க முயல்வதா? அதெப்படி? அறிவு இருந்தால் நான் ஏன் இதற்கெல்லாம் வருகிறேன்! அந்த நம்பிக்கை இருப்பவர்களைத் தரக் குறைவாக விமரிசிக்க வேண்டும். அவர்கள் கொடும்பாவி எரிக்க வேண்டும். படத்துக்கு செறுப்பு மாலை போட வேண்டும். அசிங்கமான கேலிச் சித்திரங்கள் போட வேண்டும். அப்போது நான் சமூக சீர்திருத்தவாதி! என் பெயர் தமிழ்நாட்டு சரித்திரத்தில் இடம் பெரும்! எனக்கென்று ஒரு கூட்டம் உருவாகும். என்னைப் பேர் சொல்லிக் குறிப்பிடுவதே மரியாதைக் குறைவு என்று ஆகும். சின்னவர், பெரியவர், நடுவர் என்று ஏதாவது பெயரில் என்னை அழைக்க ஆரம்பிப்பார்கள்.

இதெல்லாம் இல்லாவிட்டால், வக்கணையாகப் பேசத் தெரிய வேண்டும். நன்றாகப் பேசத் தெரிகிறதா? நான் ஒரு தலைவர். நான் எஸ்.எஸ்.எல்.சி கூடப் பாஸ் செய்திருக்க வேண்டாம். தமிழில் 26 மார்க் வாங்கியிருந்தால் கூடப் பரவாயில்லை. தமிழில் ஷேலோ ஞானத்தை வைத்துக் கொண்டு ரெண்டு நாடகம், ரெண்டு கவிதை, ரெண்டு கதை எழுதி விட்டால் நான் முத்தமிழ் வித்தகன். தமிழ் தெரிந்தாகிவிட்டது, அடுத்தது என்ன? தலைவர்தான்!

கும்பலாக எல்லாரும் சம்பாதிக்கிற போது எனக்கு வாய்ப்புத் தரவில்லை. இசகு பிசகாக எல்லாரையும் கேள்வி கேட்டு என்னை போய்ட்டு வா தம்பி என்று விலக்கி வைத்து விட்டார்கள். என் பின்னால் ஒரு கூட்டம். நான் ஒரு தலைவர்.

மக்கள் அபிமானத்தைப் பெற்ற ஒரு ஆள் இறந்துவிட்டார். அவருக்கு நாந்தான் ரொம்ப நெருக்கம் என்று காட்டிக் கொண்டு அந்த அபிமானிகளை என் பக்கம் இழுத்துக் கொண்டால் நான் ஒரு தலைவர்!

எனக்கு அபிமானிகள் ஜாஸ்தியானதால், என்னைக் கொலைகாரன் என்று பட்டம் கொடுத்து அனுப்பி விட்டார்கள். நான் ஒரு தலைவர்!

மரத்தை எல்லாம் வெட்டிப் போட்டு போக்குவரத்தை இடைஞ்சல் செய்து விளம்பரப் படுத்திக் கொண்டால் நான் ஒரு தலைவர்.

சினிமாவில் ஊழலைத் தட்டிக் கேட்டால் நான் ஒரு தலைவர்.

நமக்கெல்லாம் ரொம்ப உயர்ந்த மனம், தாராள மனம். எம்.பி.பி.எஸ் படிக்காவிட்டாலும் டாக்டர் என்று கூப்பிடுவோம், தமிழில் கோட் அடித்தாலும் கவிஞன், கலைஞன், புலவன் என்றெல்லாம் அழைப்போம்………… பஃபூன்களையெல்லாம் தலைவர் என்போம்…..

சினிமாக் காமெடியன்கள் எல்லாம் இப்போது பேச்சாளர்களாக இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் அவர்களுக்குத் தலைவர் அந்தஸ்து கொடுத்துவிடுவோம். அப்புறம் கொஞ்ச நாளில் அவர்களைப் பேர்சொல்லி குறிப்பிடுவதே மகாபாவம் ஆகிவிடும். வைகையார், வாழைப்பழார், சிங்கனார் என்றெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கும்.

இப்படியெல்லாம் தலைவராக்கி வைக்கிற தாராள மனசு மட்டுமில்லை, நகர்கள், சாலைகள், கட்டிடங்கள், கழிப்பிடங்கள் எல்லாவற்றுக்கும் பெயர் வைக்க வேறு ஆரம்பித்துவிடுவோம்.

இப்படி யார் தலைவர் ஆனாலும் வோட்டுப் போட நாம் இருக்கிறோம். நமக்கு, நம்மை ஆள்கிறவருக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே கிடையாது! பிரபலமாக இருந்தால் தலைவர். என்ன செய்து பிரபலம் ஆனேன் என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஜெயித்திருக்க முடியாது என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

சரி, சரி.

சம்பல் கொள்ளைக்காரனை விட பிக்பாக்கெட்காரன் மேல் என்பதுதான் இன்றைய நார்ம்ஸ். அதையே செய்து தொலைப்போம்.

அன்னா ஹஸாரே புண்ணியத்தில் அடுத்த தேர்தலிலாவது நிஜமான தலைவர்கள் வருகிறார்களா பார்ப்போம்!