திருக்குறள்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

Advertisements

மானங்கெட்ட மானம் என்றால் என்ன?

முன்னர் எழுதப்பட்டதைக் கொஞ்சம் Value Added ஆக மாற்றி எழுதுவதை காப்பி அடிச்சுட்டான் என்று நிராகரிக்கிறார்களே, திருக்குறளில் சொல்லப்பட்ட பலவிஷயங்கள் புறநானூறு, பதிற்றுப் பத்து, குறுந்தொகை இவற்றில் சொல்லப்பட்டவைகளின் நறுக்குத் தெரிப்புத்தான்.

 பரிமேலழகரின் உரையில் பல இடங்களில் புறநானூறிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். முதற்சங்க காலம் வள்ளுவருக்கு மிகவும் முந்தையது.

 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

 (அல்பத்தனம், மானங்கெட்ட மானம், அதிகமான சந்தோஷம் இவையெல்லாம் தலைவன் அல்லது அரசனுக்கு இழிவு சேர்ப்பவை)

 என்கிற குறளில் எனக்கிருப்பது போலவே பரிமேலழகருக்கும் நிறைய ஐயங்கள் இருந்திருக்க வேண்டும். இவறல் என்றால் அல்பத்தனம் அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் மாண்பிறந்த மானம் என்றால் என்ன? மானம் என்பதே மாண்புதானே, மாண்பிறந்த மானம் எப்படி இருக்கும்?

 அதற்குத்தான் புறநானூற்றிலிருந்து மேற்கோள் தருகிறார் மிஸ்டர். பரி.

 ‘அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தம் முன்னோர், தந்தை தாய் என்றிவரை வணங்காமை….’ என்பதை மாண்பிறந்த மானமாக புறநானூறு சொல்கிறது. அதாவது நாமார்க்கும் குடியல்லோம் என்கிற மதர்ப்பும் தன்னம்பிக்கையும் சிறப்பானவைதான். ஆனால் மேற்சொன்னவர்களை வணங்காமல் இருத்தல் அந்தச் சிறப்பில் அடங்கா.

 முன்வைத்த காலைப் பின்வைக்காமை சிறப்புத்தான். ஆனால் தவறு என்று தெரிந்த பின்னும் பின்வைக்க மாட்டேன் என்று அதைத் தொடர்வது மாண்பு அல்ல. பல பேர் முட்டாள்தனமாகப் பேசி விட்டு சப்பைக் கட்டு கட்டி அதை நியாயப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி மாண்பிறந்த மானத்துக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

 மாணா உவகை என்றால் எல்லையில்லாத சந்தோஷம்தானே அதில் என்ன பிழை என்பதற்கு இன்னும் கொஞ்சம் ரிஸர்ச் பண்ணியிருக்கிறார். அதை அப்புறமாகப் பார்க்கலாம்.

நரி மேலழகர் உரை

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

 தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

 எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

 “தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

 “சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

 “என்னது சொல்லு?” என்றார்.

 “திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

 இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

 “பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

தும்மலை அடக்கினால் என்ன ஆகும்?

என்றைக்காவது தும்மலை அடக்க முயன்றிருக்கிறீர்களோ?

 அப்படி அடக்க முயன்றால் ஹக்ஸூ என்பதற்கு பதில் ஹெப்ஸீ என்றோ, ஹிக்ஸி என்றோ தும்முவீர்களே ஒழிய தும்மல் அடங்காது. எப்படித் தும்மல் நம் கட்டுப்பாட்டில் இல்லையோ அப்படித்தான் காமமும்.

 மறைப்பேன்மன் காமத்தை  யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்

 என்பார் வள்ளுவர்.

 தும்மல் என்பது ஏன் வருகிறது? ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது ஆகாத காற்றை (ஒவ்வாத மணமோ அல்லது தூசியோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சுவாசித்தாலோ வருகிறது. தும்மல் தோன்றாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், ஒவ்வாத மணங்களை நுகராமல் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து தும்மலை வரவழைத்து விட்டு அந்த ஸ்டேஜில் அதை அடக்குவது என்பது துர்லபம்.

 அதே போலத்தான் காமத்தை உண்டாக்கும் காட்சிகள், பேச்சுக்கள், எழுத்துக்கள், எண்ணங்கள், மனிதர்கள் இவைகளைத் தவிர்க்காமல் காமம் தோன்றிய பிறகு அதை அடக்க முயல்வதும்.

 Lust is an effect. It needs to be controlled at cause level என்பது வள்ளுவர் சொல்ல விழையும் கருத்து. Product audit செய்வதற்கு பதில் Process Audit செய்ய ஆரம்பித்த போதுதான் Quality Control ஆக இருந்த தொழில் Quality Assurance ஆக மாறியது.

ஜெயகாந்தனின் சமாளிஃபிகேஷனா இது?

ஜெயகாந்தன் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த காலம் உண்டு.

 அப்போதும், அங்கிருந்து விலகிய பிறகும் கூட சோவியத் யூனியன் குறித்து மிகுந்த உயர்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்தவர். சோவியத் யூனியன்தான் உலகுக்கே வழிகாட்டி என்று சொன்னவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்தது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டியதற்குக் காரணம் சோவியத் யூனியனில் நிகழ்ந்த மாறுதல்களே.

 ஆனால் தன் நிலைப்பாட்டு மாறுதலை அவர் விளக்கும் போது பொத்தாம் பொதுவில் சோவியத் மீது பழி போடவில்லை. அவர் சொன்ன விளக்கமும் சுவாரஸ்யமானது.

 “………………. மறுக்கவில்லை. ஆனால் அதைப் பொய்யென்று காலம் நிரூபித்து விட்டது. அப்படியானால் நான் என் விருப்பத்தைச் சொன்னேன் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்?”

 இதை உலக மகா சமாளிஃபிகேஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.

 தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

 என்கிற குறள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் ஜெயகாந்தன் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ அல்லது அமைப்போ சம காலத்தில் உண்டாக்கும் தாக்கங்களை விட தங்களுக்குப் பின்னால் நெடுங்காலம் இந்தச் சமூகத்தால் எப்படி அறியப்படுகிறார்கள் என்பதை வைத்தே தகுதிகள் முடிவு செய்யப்பட வேண்டும். காலம் அதைப் பொய்யென்று நிரூபித்து விட்டது என்று சொல்லும் போது ஜெயகாந்தன் இதைத்தான் உணர்த்துகிறார்.

 Desire, Goal, Achievement இந்த மூன்றுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. ஒன்றைச் சாதிக்க முதல் தேவை Desire. ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அந்த இலக்கை அடைந்து விட்டால்தான் அதை இலக்கு – Goal என்று சொல்ல முடியும். இல்லாவிட்டால் அது வெறும் Desire தான்.

 A desire becomes a goal only when it is reached; else, it is just a desire என்று அவர் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இட்லி சாப்டா என்ன வரும்?

உயர்நிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தும் அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். யாராவது வாத்தியார் வராத போது அவர்களை ஆக்டிங்குக்குப் போட்டு விடுவார்கள்.

 தொலைந்தோம்.

 சிங்காரவேலு என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார். அவர் ஆக்டிங்குக்கு வந்தால் திருக்குறளை எடுத்துக் கொண்டு விடுவார். ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து அதன் அர்த்தத்தை நன்றாக டப்பா அடித்துக் கொண்டு வந்திருப்பார். ஆனால் பரிமேலழகரே தான்தான் போல ஒரு மணி நேரம் அறுத்து விடுவார்.

 இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகி விடுவார் என்கிற ரகசியம் ஃபெயிலாகி இரண்டாம் வருஷம் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சீனிவாசன் போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 “திருக்குறள் எல்லாம் ரொம்ப சிம்ப்பிள்டா. அதுலயே அர்த்தம் இருக்கும். இப்பப் பாருங்க, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லைன்னா என்ன அர்த்தம்?”

 “அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை”

 “வெரிகுட். ரெண்டாவது வருஷம் படிச்சாலும் திருக்குறள் உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சரி. இப்ப அடுத்த வரி. அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.. இதுக்கென்ன அர்த்தம்?”

 இப்போதுதான் எஸ்.ஆர்.சீனிவாசனின் திருவிளையாடல் ஆரம்பிக்கும்.

 “அதை மறந்தாலும் ஒண்ணும் கெடுதல் இல்லை”

 “என்ன உளர்ரே? திருவள்ளுவர் இப்படியா எழுதுவார்?”

 ”திருவள்ளுவர் எப்படி எழுதுவார்ன்னு எனக்குத் தெரியாது சார். ஷண்முகசுந்தரம் சார் அப்படித்தான் பொழிப்புரை எழுதிப் போட்டிருக்காரு” என்று ஒரு நோட்புக்கைக் காட்டுவான்.

 அது ஷண்முக சுந்தரம் சார் எழுதிப் போட்டதா என்று கிராஸ் செக் செய்வது கஷ்டம். அவர் போன வருஷமே கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருப்பார்.

 சிங்காரவேலுவுக்கு சந்தேகம் வந்து விடும்.

 “இல்லையே.. மறத்தலின்னா மறக்கிறதை விடன்னுதானே அர்த்தம்?”

 “அப்ப கற்றபின்னா கற்கிறதை விடன்னு அர்த்தமா?”

 “என்னடா உளர்ரே.. கற்றபின்னும், மறத்தலின்னும் ஒண்ணா?”

 “தெரியாதா உங்களுக்கு?”

 “என்ன தெரியணும்?”

 “இரண்டுமே ஏழாம் வேற்றுமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகை”

 “ஏழாம் வேற்றுமை உருபா?”

 “ஆமாம்”

 “உடன் தொக்க தொகையா?”

 “ஆமாம் சார்”

 “இதெல்லாம் எங்க இருக்கு?”

 “சார்.. இலக்கணக் குறிப்பு வரைகல ஒரு மார்க் கேள்வி சார் இது”

 ஒரு மார்க் என்பது அவர் ஈகோவைக் கொஞ்சம் பிராண்டி விடும்.

 “சரி.. சரி.. சத்தம் போடாம ஏதாவது படிச்சிட்டு இருங்க” என்று முரசொலி படிக்க ஆரம்பித்து விடுவார்.

 நான் படித்த தொழிற்நுட்ப உயர்நிலைப் பள்ளியில் ஒர்க்‌ஷாப் ஆசிரியர்களுக்கும் அதே அரிப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 கிருஷ்ணசாமி என்கிற ஃபோர்மேன் ஒருவர் டர்னிங் வகுப்பு நடத்தி விட்டுத்தான் லேத்தைத் தொடவே விடுவேன் என்று சொல்லி விட்டார்.

 எங்களுக்கெல்லாம் ஏமாற்றம்.

 லேத்துக்கு லூப்ரிகேஷன் ரொம்ப முக்கியம் என்பதை விளக்க ரொம்பப் பிரயாசைப் பட்டார்.

 “காலைல இட்லி சாப்பிடறே, என்ன வரும்?” என்றார். (எனர்ஜி என்பது அவர் எதிர்பார்த்த பதில்)

 அப்துல் சலாம் என்றொரு குசும்பு பிடித்த பையன் இருந்தான்.

 “ஏப்பம்” என்று பதில் சொன்னான்.

 கிருஷ்ணசாமி மனம் தளர்ந்து விடவில்லை.

 “முதல்ல ஏப்பம் வரும். அப்புறம்?” என்றார் என்கரேஜிங்காக.

 “அப்புறம் கக்கூஸ் வரும் சார்”

 “ரெண்டுக்கும் மத்தியில எதுவுமே வராதா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.

 “வாந்தி”

 “த்ச்ச்ச்ச்”

 “மறுபடியும் பசி வரும் சார்”

 ’அடப் போங்கடா’ என்று ஒர்க்‌ஷாப்புக்குள் அனுப்பி விட்டு வெளியே போய்விட்டார்.

புத்தகச் சந்தை-2012, கொஞ்சம் சுய விளம்பரம்

என்னதான் உபயோகமான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சுய முன்னேற்ற நூல்கள் என்றால் சிலருக்கு அலர்ஜி. அவர்களுக்கும் கருத்துக்கள் போய்ச் சேர வேண்டுமே, என்ன செய்வது?

 அதை ஒரு நாவல் வடிவத்தில் எழுதி விட்டால் போயிற்று!

 கதை நகர்ந்து கொண்டே இருக்கும். கதையினூடே சுய முன்னேற்றக் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கும். ஆங்காங்கே சின்ன குட்டிக கதைகள், சில நகைச்சுவைத் துணுக்குகள்.

 போதாதா சுவாரஸ்யத்திற்கு?

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்று. அதைப் படிக்கிற ஆசை இருந்தாலும் சில பயங்கள். அந்த இலக்கண, இலக்கிய நடை புரியுமா? பக்கத்தில் அகராதி வைத்துக் கொண்டே படிக்க வேண்டுமா? ஏகப்பட்ட பக்கங்கள் இருக்குமே, எப்படிப் பொறுமையாகப் படிப்பது? சுவாரஸ்யமாக இருக்குமா?

 கவலையை விடுங்கள்.

 எளிய நடை. பள்ளிக்கூடப் பையனுக்குக் கூடப் புரியும். ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள், விறுவிறுப்பகப் போய்க் கொண்டே இருக்கும். மொத்தம் 130 பக்கங்கள்தான். முழு சிலப்பதிகாரமும் சுவாரஸ்யமான நாவலாக… ரூ.80/= க்கு.

 திருக்குறள் உரைகள் படித்துச் சலித்திருப்பீர்கள்.

 ஒவ்வொரு குறளாக, அதற்கு அர்த்தமாக…. இப்படித் தனித் தனியாகப் படித்தால் சொல்லப்பட்ட கருத்து என்ன என்று எப்படித் தெரிந்து கொள்வது?

 ஒவ்வொரு அதிகாரத்தையும் தொகுத்து ஒரு கட்டுரை. அந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் கோர்வையாக. விலை ரூ.160/=

 ஜென் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 ஆனால் ஒவ்வொரு கதையும் என்ன நீதியைச் சொல்கிறது என்பது பல கதைகளில் புதிராக இருக்கும். அந்த நீதியைச் சுருக்கமாக, சுவையாக சில சமயம் நகைச்சுவையாகச் சொல்லி எழுதப்பட்ட கதைகள். ஜென்னை முழுதாகப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகம்.

 கதைகளின் வழியே ஜென். விலை ரூ.115/=

 மேற்சொன்ன எல்லாப் புத்தகங்களும் புத்தகச் சந்தையில் F-7, கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கும்.

தமிழ்ப் ‘படுத்தல்’

”நான் பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை” என்று ஒருவர் சொல்வது ஒரு மாயச் சுழல். அது பொய் என்றால் என்ன அர்த்தம், நிஜம் என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை நான் செய்து கொண்டிருந்த போது ஒரு போலிஷ் (போலிஸ் இல்லை) ஜோக் ஞாபகம் வந்தது.

ஒரு போலந்துக்காரரை பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து விட்டால் போதும்!

************************************************************************

வேற்று மொழியிலிருந்து ஒரு கதையைத் தமிழில் எழுதும் போது அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன ஆகும்? கீழ்வரும் வரிகளைப் படியுங்கள் :

சோட்டா சேட் ஜூனா பஸாரில் பாவு பாஜி சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்தான். பட்பட் வாலா அருகில் நிறுத்தி வருகிறாயா என்கிற மாதிரிப் பார்த்தான். வாஸ்வானி சிலை பக்கத்தில்தான் இருக்கிறது செளரங் லேன். அதற்குப் போய் பட்பட்டில் போவானேன்?

இதே ரீதியில் முழுப் புத்தகத்தையும் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் ஒரு முரட்டு இலக்கிய ரசிகர். ஆனால் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அப்படி இல்லை.

போன வாரம் ‘வாகை சூடும் சிந்தனை’ என்றொரு புத்தகம் வாங்கினேன். அது தமிழாக்கம் செய்யப்பட்ட சுய முன்னேற்ற நூல். முழுக்க முழுக்க டிவியில் காலையில் வரும் டப்பிங் செய்த கிறிஸ்தவ நிகழ்ச்சி போலவே இருக்கிறது.

************************************************************************

அறிவகற்றும் என்கிற பதத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அறிவில்லாமல் செய்து விடும் என்றுதான் தொண்ணூறு சதவீதம் பேர் பதில் சொல்கிறார்கள். கீழ் வரும் குறளில் அந்தப் பதம் அறிவை விசாலப்படுத்தும் என்கிற பொருளில் வருகிறது :

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

இல்லை என்கிறவர்கள் பின்னூட்டலாம்!

***********************************************************************

சளியால் காது அடைக்கிற போது எந்த மருந்தும் பயன்படாது போலிருக்கிறது. மூக்குக்கும், காதுக்கும் டிராப்ஸ் கொடுத்தார் டாக்டர். ஐந்தாறு பாட்டில் வாங்கி ஊற்றி கழுத்துவரை நிறைத்தும் பிரயோஜனமில்லை. காக்காய் மாதிரி தலையைச் சாய்த்துச் சாய்த்துத்தான் கேட்கிறேன் யாராவது பேசும் போது.

இதே பிரச்சின சில வருஷங்களுக்கு முன் வேலூரில் இருந்த போது வந்தது. அப்போது வாசன் என்று ஒரு டாக்டர், “நீங்க செவிடெல்லாம் ஆயிட மாட்டீங்க. இதுக்கு மருந்தெல்லாம் இல்லை. ஆப்பரேஷன் டூ மச். மூக்கைப் பொத்திகிட்டு எச்சல் முழுங்கிகிட்டே இருங்க, ப்ளக்குன்னு விட்டுடும். உடனே நடக்காது பொறுமையா பண்ணிகிட்டே இருங்க” என்று அட்வைஸ் செய்தது நினைவு வந்து அதை முயற்சித்தேன்.

பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.

ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது!

திருக்குறள் என்னும் திங்கிங் டூல்

”அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா என்ன சார்?”

 “இதுக்கு நான் உடனே பதில் சொல்ல மாட்டேன்”

 “ஏன், உங்களுக்கே தெரியாதா?”

 “அப்படி இல்லை. ஒரு விஷயம் என்னன்னு விளக்கிச் சொல்லணும்ன்னா உன் வழியிலயே போய் சொன்னாத்தான் ஈஸியாப் புரியும். முதல்ல அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா உனக்கு என்ன ஐடியா இருக்குன்னு சொல்லு. அதைத் திருத்தியோ, கூட்டியோ, குறைச்சியோ சொல்றது எனக்கும் ஈஸி, உனக்கும் நல்லாப் புரியும்”

 “எனக்கு ஒரு இழவு ஐடியாவும் இல்லை. இருந்தா உங்களை ஏன் கேட்கப் போறேன். இருந்தா அதுதான் கரெக்ட்டுன்னு நினைச்சிகிட்டுப் போயிருக்க மாட்டேனா?”

 “அதைக் கேட்கிறப்போ மனசில ஒரு பிக்சர் வருமில்லே? உனக்கு என்ன பிக்சர் வருது?”

 “ஒரு ஆள் உட்கார்ர மாதிரி பெரிய அட்டைப் பொட்டி ஒண்ணு இருக்கு. அதுக்குப் பக்கத்துல உட்கார்ந்து ஒருத்தன் யோசிக்கிற மாதிரி பிக்சர் வருது”

 “அவ்வளவுதான். யு காட் தி பாயிண்ட்”

 “என்னது, அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா அட்டைப் பொட்டிக்கு பக்கத்தில உட்கார்ந்து யோசிக்கிறதுதானா? உலகத்திலேயே ரொம்ப இன்னவேட்டிவ் ஆட்கள் எல்லாம் பேக்கிங் செக்‌ஷண்லதான் இருப்பாங்களா அப்ப?”

 “ஒரு பாக்ஸுக்குள்ள உட்கார்ந்து இருக்கும் போது உன்னுடைய வியூ ரொம்பச் சின்னதா இருக்கும். ஒரு ஆறடிக்கு நாலடி எல்லைதான் அது. வெளியே வந்தா மொத்த உலகமும் உன் பார்வைல இருக்கும்.”

“கொஞ்சம் புரியுது”

 “அதாவது எதை எடுத்தாலும் ஒரு கண்டிஷண்ட் தின்கிங்தான் நமக்கு இருக்கு. அதிலேர்ந்து வெளியில வந்தாத்தான் புதுமைகள் செய்ய முடியும். முன்னேற்றங்கள் அடைய முடியும். உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா ஆட்டுக்கல்லுக்கு மிஷின் கண்டுபிடிக்கும் போது கல்லைத்தான் சுத்த விட்டாங்க, குழவியை இல்லை. ஏன்னா, அப்படிப் பண்ணாத்தான் மாவைத் திரும்பத் திரும்ப குழிக்குள் போக வைக்க இன்னொரு மோட்டார் வைக்க வேண்டியதில்லை.”

 “ஆஹா, ஐடியா நல்லா இருக்கே. எப்படி சார் அந்த மாதிரி திங்கிங்கை வளர்த்துக்கிறது?”

 “நான் ஒரு திருக்குறள் சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்றியா?”

 “அதுதான் அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்கா?”

 “அவசரப்படாதே. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு ந்னு ஒரு குறள் இருக்கு”

 “இருக்கா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

 “அதுக்கு என்ன அர்த்தம்?”

 “இதுல என்ன சார் பெரிய அர்த்தம், சாவுங்கிறது உறக்கம் மாதிரி, பிறப்பு உறங்கி முழிக்கிற மாதிரின்னு அர்த்தம்”

 “இதுல என்ன கருத்து?”

 “பிறப்பும் சாவும் தூக்கமும் முழிப்பதும் போல ரொம்பச் சாதாரணமான விஷயங்கள். மாறி மாறி நடந்துகிட்டுத்தான் இருக்கும். வாழ்க்கை நிரந்தரமில்லை”

 “அதாவது, நிலையாமைங்கிற அதிகாரத்தில் சொன்னதால இந்த அர்த்தம் சொல்றே?”

 “நான் மட்டுமில்லை. திருக்குறள் உரை எழுதின எல்லாருமே இதைத்தான் சொல்றாங்க”

 “சரி, இது இல்லை அர்த்தம். இதுக்கு வேறே அர்த்தம் சொல்லித்தான் ஆகணும்ன்னு வெச்சிக்க. மறுபிறவின்னு ஒண்ணு கிடையவே கிடையாது, அப்ப என்ன சொல்வே?”

 “கஷ்டம்தான்”

 “கஷ்டம்தான், அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங் ஈஸி இல்லை. பிறப்பு, இறப்பு, மறுபிறவி எல்லாத்தையும் மறந்துடணும். அந்த வரையரைகளைக் கடந்து வெளியில வா”

 “ம்ம்ம்ம்… கொஞ்சம் ரிமோட்டா இருக்கும் பரவாயில்லையா?”

 “எவ்வளவு ரிமோட்டா இருக்கோ அவ்வளவு இன்னவேட்டிவ்”

 “இப்ப ரோட்ல ஏதோ யோசனையா போய்கிட்டு இருக்கோம். பின்னால ஒரு கார் இடிக்கிற மாதிரி வருது. வந்து பிரேக் போடறான். நமக்கு உயிரே போய்ட்டு வருது. ‘யோவ்.. என்ன தூங்கிகிட்டே நடக்கிறியா? போய்ச் சேர்ந்திருப்பேடா’ ந்னு சொல்றான். நாமே சரியான சமயத்தில பார்த்து சடக்குன்னு விலகியிருந்தா அப்பா, பிழைச்சோம்டான்னு உயிர் வரும்”

 “வெரிகுட், நல்ல சிச்சுவேஷன்”

 “மரணம்ங்கிறதை உணர செத்துப் பார்க்கணும்ன்னு அவசியமில்லை. சுற்றிலும் நடக்கிறதில கவனமில்லாம தூங்கிகிட்டு இருக்கிறது மரணத்துக்கு சமமானது. சரியான சமயத்தில் முழிச்சிக்கிறது பிறப்பு மாதிரின்னு அர்த்தம்”

 “எக்ஸல்லண்ட். இதே மாதிரி எல்லாக் குறளுக்கும் சொல்வியா?”

 “சொல்வேனான்னு தெரியாது. ஆனா டிரை பண்றது நல்ல திங்கிங் எக்ஸர்சைஸா இருக்கும்ன்னு தெரியுது”

கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க!

பல உரையாசிரியர்கள் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவே இல்லை.

 அவர் இன்று உயிரோடு இருந்தால் ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே!’ என்று வேதனைப்படலாம்!

சிந்திப்பதற்கு எட்வர்ட் டி போனோ சொன்ன வழிகளைவிடச் சிறப்பானது திருக்குறள் படிப்பதுதான். ஒவ்வொரு திருக்குறளையும் படித்துவிட்டு, இதற்கு நேராகச் சொல்லப்பட்டதற்கு மிகுதியாக, அல்லது வித்யாசமாக ஏதாவது அர்த்தம் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். ரெண்டு வரியில் அவர் எழுதினதற்கு இதுதான் நோக்கம். ரெண்டு நாள் உங்களை யோசிக்க வைக்கிற குறள்கள் நிறைய உண்டு.

சில சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பேசுவதை ஒன்றரை நிமிஷத்தில் மறந்து போய்விடலாம்!

‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, ‘காப்பி ஆத்தத்தான் போவே’, ‘சிரைக்கவா வந்தே?’ என்கிற ரீதியில் பேசும் முட்டாள் வாத்தியார்கள் லிஸ்டில் உரையாசிரியர்கள் அவரை வைத்தது சோகம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

என்பது ஒரு சுவாரஸ்யமான குறள்.

திருவள்ளுவர் எதை வலியுறுத்துகிறாரோ அதற்கு நேர் எதிரிடையாகத்தான் பெரும்பாலான உரையாசிரியர்களும்,(பரிமேலழகர் உள்பட!) தமிழாசிரியர்களும் இதற்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மு.வரதராசனார் மட்டும் விதிவிலக்கு.

அறத்தின் பயன் இன்னதென்று சொல்லத் தேவையில்லை, பல்லக்கைத் தூக்குகிறவர்களையும், அதில் பயணம் செய்பவர்களையும் பார்த்தாலே போதும் என்கிற ரீதியில்தான் எல்லாரின் உரையும் அமைந்திருக்கிறது. அதிலும் கலைஞர் கருணாநிதி இதே அர்த்தத்தை இன்னும் அவருடைய திறமையெல்லாம் சேர்த்து எழுதியிருக்கிறார்.

அது பொருளாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நானும், மு.வ. அவர்களும் மட்டும்தான் சரி என்று சொல்வது அறியாமையாக இருக்கும். பரிமேலழகரை விட நான் மேதாவி என்று நினைத்துக் கொண்டால் அது அறியாமையின் உச்சம். ஆனால் இந்தக் குறளை வேறொரு கோணத்திலும் பார்க்க முடியும். அந்தக் கோணத்தில் பார்க்க முதலில் திருவள்ளுவர் மேல் ஒரு நம்பிக்கை வேண்டும்.

பல்லக்குத் தூக்குகிறவனுக்கு அது தலையெழுத்து என்றோ, முன்வினைப் பயன் என்றோ அர்த்தம் வருகிற மாதிரி வள்ளுவர் பேசுவாரேயானால், சில தொழில்களைக் கேவலமாக அவர் நினைக்கிறார் என்று பொருளாகிவிடும். எந்தத் தொழிலும் கீழானது அல்ல என்பதே நிஜம். இதை வள்ளுவரும் கூட வேறொரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்

என்கிற குறளை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

சிறப்பு ஒவ்வா என்று ஏன் சொல்கிறார் என்றால், தொழிலை வைத்துச் சிறப்பை (உயர்வு, தாழ்வை) சொல்ல முடியாது என்கிறார். தொழிலில் வித்யாசங்கள் உண்டே ஒழிய ஏற்றத் தாழ்வு கிடையாது என்கிறார்.

அறத்தைச் செய்யாததால் விதி உனக்கு ஆப்பு வைத்துவிட்டது. அறம் செய்தவன் நோகாம நுங்கு தின்கிறான் பார் என்கிற தொனியில் ஒரு அறவுரையை சொல்கிற ஆட்டிட்யூட் இருந்திருந்தால் அவரை இந்தச் சமூகம் எப்போதோ நிராகரித்திருக்கும்.

அந்த இடத்தில் போய் அறவுரையே சொல்லக் கூடாது.

ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் ஒருத்தனிடம் இப்படிச் சொன்னால், “அறமாவது, ……………வது, இப்படி ஆப்பு வைக்கிற அறம் எனக்குத் தேவையே இல்லை” என்பது அவனுடைய ரியாக்‌ஷனாக இருக்கும். பல்லக்கில் போய்க் கொண்டிருக்கிறவனிடம் இப்படிச் சொன்னால் மண்டைக்கனம் ஏறி, ஆஹா…. ஏற்கனவே நிறைய அறம் செய்தாகிவிட்டது. பாக்கி வாழ்க்கை அனுபவிக்க மட்டுமே என்கிற எண்ணம் வந்துவிடும். ஆக இரண்டு பேருக்குமே அறன் வலியுறுத்தல் ஒர்கவுட் ஆகாது.

பல்லக்குத் தூக்குவது ஒரு உதாரணம்தான்.

ஊர்ந்தான் இடை என்று முடித்திருக்கிறார் பாருங்கள்.

உழைக்கிறவனுக்கும், உழைப்பை அனுபவிக்கிறவனுக்கும் இடையே ஒப்பீடாக அறத்தை போதிக்காதீர்கள் என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவந்தது. அறத்தாறு இதுவென வேண்டா – என்றால் அறத்தால் வந்த வினை இது என்று சொல்லாதீங்கடா என்று அர்த்தம்.

இதை மிகச் சரியாகத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறவர்கள்தான் அதிகம். இந்த மாதிரி அபரேஷன்கள் கூடுமானவரை வராமல் எழுதியிருக்கிறேன் என் திருக்குறள் புத்தகத்தை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.