தி.மு.க.

அ.தி.மு.க – தே.மு.தி.க – உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஏற்படாதது கலாகாரின் ராஜதந்திரம் என்று எழுதுகிறார்கள்.

அவருக்கே இது ஆச்சரியமாக இருக்கும்.

எங்களைக் கூப்பிடவே இல்லை என்கிறது தே.மு.தி.க. அவர்கள் வரவே இல்லை என்கிறது அ.தி.மு.க. பட்டியலை முன்னாலேயே வெளியிட்டார்கள் என்கிறது தே.மு., திருத்திக் கொள்ளலாம் என்றோம் என்கிறார்கள் அ.தி., எப்படி முடியும் என்கிறது தே.மு.,

கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் இது வெறும் ஈகோ கிளாஷ்தான். நான் பெரிய கட்சி, சீனியர், ஆளும் கட்சி, நீதான் வந்து கேட்கணும் என்பது ஒரு பக்கத்து ஈகோ. நான் முன்ன மாதிரி இல்லை, இப்ப எதிர்க் கட்சி அந்தஸ்துல இருக்கேன், கொடுத்த இடம் பூரா ஜெயிச்சி காமிச்சேன், கூப்பிட்டாதான் என்ன என்பது இன்னொரு பக்கத்து ஈகோ. வெற்றி இரு சாராருக்கும் ஈகோவை வளர்த்து விட்டிருக்கிறது. எதிர்க்கட்சி மீடியாக்கள் லேசாக ஊதி விட்டார்கள்,

அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு!

கூட்டணி அவசியம் என்று இரண்டு சாராருமே சீரியஸாக முனையவில்லை என்பதே நிஜம்.

எதிர் அணியிலும் கூட்டணிகள் இல்லை என்றால், கொண்டாட்டம் ஆளும்கட்சிக்குத்தான். யாருடைய பலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதர தேர்தல்களில் கட்சிக்குத்தான் ஓட்டு விழும். உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளரின் இன்ஃப்ளுயன்ஸும் ஒரு ஃபேக்டர். எங்கள் வார்டில் (குரோம்பேட்டை, லக்‌ஷ்மிபுரம்) கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் அபிமானத்தை தி.மு.க வைச் சேர்ந்த திரு. ஜெயக்குமார் பெற்றிருக்கிறார். என்னைத் தேர்ந்தெடுத்தால் அது செய்வேன், இது செய்வேன் என்று பேசுகிறவர்கள் மத்தியில் ஏகப்பட்ட நன்மைகள் செய்து விட்டு எனக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்கிறார்! யாரைப் பார்த்தாலும் நம்மை முந்திக் கொண்டு தானாக ஒரு குழந்தைச் சிரிப்பும், வணக்கமும் தருவார். இது தேர்தலுக்கு மட்டுமில்லை, பொதுவாக எப்போதுமே!

பல இடங்களில், பல கட்சிகளில் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருக்கும். அவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள்!

அடிச்சிக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லாதிங்க

தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கும், அவர்களுக்குப் பெரும்பாலும் துணையாக இருந்த தமிழகக் காவல்துறைக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

 மன்னிக்கவும், ’பிடிச்சது அறுபது கோடின்னா விட்டது எவ்வளவு இருக்கும்’ என்கிற பாமரச் சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் திருமங்கலம் அளவு மோசமில்லை என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.

 போஸ்ட்மேன் மூலமும், செய்தித்தாள் மூலமும், ஸ்ட்ரேஞ்சர்கள் மூலமும் பணப்பட்டுவாட நடந்திருப்பதை ஆங்கில செய்தி அலைவரிசைகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. பால் பாயிண்ட் பேனாவுக்குள், போஸ்டர்களின் பின்புறம் சொருகி என்றெல்லாம் லஞ்சம் கொடுப்பதில் இன்னவேஷன்களைக் காட்டியிருக்கிறது மதுரை மாவட்டம். வாங்குவதில் மட்டும்தான் விற்பன்னர்கள் என்று நினைத்தோம், கொடுப்பதிலும் விற்பன்னர்கள் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.

 வம்புகளைச் சுடச்சுட வழங்கும் ஆங்கில செய்தி அலைவரிசைகளைப் பார்ப்பது ஒரு அடிக்‌ஷனாகப் போய்விட்டது. டைம்ஸ் நெளவிலும், ஹெட்லைன்ஸ் டுடேவிலும் தி.மு.க வின் சார்பாக குஷ்பூ மாட்டிக் கொண்டு முழி பிதுங்கினார்.

 ராகுல், கையில் தேர்தல் கமிஷனின் ஸ்டேட்மெண்ட்டுடன், திமுகவிடம் பிடிபட்ட ஐம்பது கோடிக்கு என்ன சொல்கிறீர்கள் என்று மறுபடி மறுபடி கேட்டார்.

 ‘அடிச்சிகூடக் கேப்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க’ என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள் போலிருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் ஆறாயிரம் கொண்டு போனால் கூடப் பிடிக்கிறார்கள் என்று அதே பல்லவியை எல்லா டிவியிலும் பாடினார்.

 இந்தப் பரிதாபத்தைப் பார்த்து சிரிக்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல் திங்கட்கிழமைக் காலை மேனேஜர் மாதிரி முகபாவத்துடன் மணிசங்கர் ஐயர் உட்கார்ந்திருந்தார். ஆனால் அதே கேள்விக்கு அருமையான பதில் கொடுத்தார்,

 “பாக்கி பத்துகோடி எதிர்க்கட்சிகள் தந்ததுதானே? அதுக்கென்ன சொல்றீங்க?” என்று மட்டும் கேட்டார். “அந்தப் பட்டியல்லே காங்கிரஸ் தலைவர்கள் பேர் இல்லை” என்று திருப்திப்பட்டுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் ’வாங்குவதை’ டிசெண்ட்ரலைஸ் செய்தால்தானே தருவதற்கு காசு இருக்கும்? அதுதான் சிங்கிள் விண்டோ சிஸ்டம் ஆயிற்றே!

 ‘நீங்களும் ஊழல் பேர்வழிகள்தானே?’ என்கிற கேள்விக்கு மைத்ரேயன்,

 “போடப்பட்ட 13 வழக்குகளில் 12ல் தலைவி மேல் தப்பில்லை என்று தீர்ப்பு வந்தாயிற்று. இன்னொன்றை தி.மு.க தாமதித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே எங்களை ஊழல் என்று சொல்வது அனெதிக்கல்” என்றார்.

 வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிற போதெல்லாம் தி.மு.க தான் ஜெயித்திருக்கிறது என்கிற சன் டிவியின் ஹேஷ்யத்திற்கு,

 “வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிற போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது” என்று சொல்லி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் மைத்ரேயன்.

 ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த ரஜினி வார்த்தைகளைக் கவனமாகப் பேச ரொம்பக் கஷ்டப்பட்டார். பேசின நாற்பது வார்த்தைகளில் இருபத்திமூன்று “ஆக்சுவல்லி”. அன்னா ஹஸாரேக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார்.

 எஸ்.வி.சேகரை மடியில் கட்டிக் கொண்ட காங்கிரஸ் அவிழ்த்து உதறிவிட்டது. நீக்குவதற்கு தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

 உண்மைதான், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு தலைமை என்றைக்கு அதிகாரம் தந்திருக்கிறது!

இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

எதிர்க் கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளை மக்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாக்குப் பதிவு சதவீதத்தில் எந்த மாறுதலும் இல்லை. போட்டால் என் கட்சிக்கு இல்லாவிட்டால் யாருக்குமே கிடையாது என்கிற மாதிரி தீவிர ரசிகர்கள் எந்த கட்சிக்கும் இல்லை என்பது தெரிகிறது. இது ஆரோக்யமான விஷயமாகவே நமக்குப் படுகிறது.

ஆளும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிதாக அதிருப்தி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

எதிர்க் கட்சிகளின் (பெரும்பாலும் அ.தி.மு.க.) ஓட்டுக்களை யாரெல்லாம் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அடுத்த சுவாரஸ்யமான விஷயம்.

எதிர்க் கட்சிக்கு விழுகிற எல்லா ஓட்டுக்களுமே ஆளுங்கட்சிக்கு எதிரானவை அல்ல என்பது தெரிகிறது. அதிக பட்சம் 15 சதவீதமே ஆளுங்கட்சிக்கு எதிரானவை. மீதி எல்லாம் நீ பரவாயில்லை என்கிற ஓட்டுக்கள். அது, இருப்பவர்களில் ஓக்கே வாக இருக்கிறவர்களுக்கு விழும் என்பது தெரிகிறது. ஏனென்றால், தி.மு.க./காங்கிரசுக்கு 20 முதல் 25 சதவீதமும், தே.மு.தி.க. வுக்கு 10 முதல் 15 சதவீதமும் வாக்குகள் அதிகமாகி இருக்கின்றன.

தி.மு.க. வா அ.தி.மு.க. வா என்பதில் மக்களுக்கு உறுதி இன்மை இருப்பது மாதிரி தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது.

எதிர்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதையும், ஆளுங்கட்சி மீது குறை கண்டு பிடிப்பதையும் நிறுத்தி விட்டு, உயர்ந்த மக்கள் முன்னேற்ற திட்டங்களை தேர்தல் பிரச்சாரங்களில் அறிவித்தால், அவர்களுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு-பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கே எல்லாரும் முண்டி அடிக்கிற நிலை இன்று இருக்கிறது. எந்தப் படிப்புப் படித்தாலும், நல்ல ஊதியம் உண்டு என்கிற நம்பிக்கை வருகிற அளவுக்கு ஊதியத் திருத்தங்கள் செய்வது.

மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களுக்கு வருமான வரியைக் குறைத்து, திரைப்படக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், பள்ளி கல்லூரிகள் நடத்துகிறவர்கள் ஆகியோருக்கு சற்று கூடுதலான வரியை நிர்ணயிப்பது.

அத்தியாவசியப் பொருட்களின் மேல் வரியை ஏற்றுவதற்கு பதில், மதுபானங்கள், சிகரெட், சினிமா ஆகியவற்றுக்கு ஏற்றுவது. இவை எல்லாம் எவ்வளவு ஏறினாலும் மக்கள் ஆதரவு குறைவதில்லை.

உங்களிடம் ஏதாவது மக்கள் நலத் திட்டங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்…

கண்ணதாசனின் கிராஸ் கம்யூனிகேஷன்

அப்போது கவிஞர் கண்ணதாசன் ஒரு தி.மு.க. அனுதாபி.

பெருந்தலைவர் காமராஜின் கொள்கைகளிலும்,நடவடிக்கைகளிலும் கவரப் பட்டு அவருடைய அணிக்கு மாற ஆசைப் பட்டார். எப்படிச் சொல்வது?

பட்டணத்தில் பூதம் என்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத வேண்டியிருந்தது. அதன் பல்லவியை இப்படி எழுதினார் :

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னை
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

(திரு.காமராஜ் அவர்களின் தாயார் பெயர் – சிவகாமி)

அதற்கப்புறம், அவர் திரு.காமராஜின் அணிக்கு வந்த பிறகு, பழைய அணியின் திரு. அண்ணாதுரை சுகவீனம் அடைந்தார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய அவரை நலம் விசாரித்தாக வேண்டும். எப்படி?

தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஒரு பாட்டு.

நலந்தானா… நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா?

இந்த கம்யூனிகேஷன் வந்து சேர்ந்து விட்டது என்பதை திரு.அண்ணாதுரை எப்படி அங்கீகரித்தார் தெரியுமா?

இந்தப் பாட்டு வெளியான அடுத்த வாரம் ஆனந்த விகடன் பேட்டிக்கு அவர் புகைப் படத்துக்கு தந்த போஸில் நாதஸ்வரம் வாசிப்பது மாதிரி கையை வைத்துக் கொண்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்திருந்தார்.

அணிகளுக்கும் எதிர் அணிகளுக்கும் அன்று இருந்த நட்புணர்வு இன்று இல்லை!