துக்ளக்

அநீதியா? காலில் இருப்பதைக் கழற்றிக் கேளுங்கள்

துக்ளக் இதழில் அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டது.

 

‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பற்றிய ஒரு அவேர்னஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரம் அது. என்னைக் கவர்ந்தது அந்த டீம் காம்பொசிஷன்தான்.

 

சி.வி.சி யின் முன்னாள் தலைவர் விட்டல் ஐ.ஏ.எஸ், பொருளாதார வல்லுனர் குருமூர்த்தி, சொற்பொழிவாளர் சுகி.சிவம், ஆவணப்பட இயக்குனர்-தயாரிப்பாளர் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி என்று ஒரு துல்லியமான கிராஸ் ஃபங்க்‌ஷனல் டீம்!

 

திங்கட்கிழமை மாலை. ஆறரை மணிக்கு ஆரம்பம் என்றாலும் ஆறு பத்துக்கே வாணி மஹாலில் பத்துப் பனிரெண்டு இருக்கைகளே காலியாக இருந்தன. ஆறு இருபதுக்கு எல்லா இருக்கைகளும் நிரம்பி மக்கள் ஓரத்திலும், நுழைவாயிலிலும், நடைபாதையிலும் நிற்க ஆரம்பித்தார்கள். ஆறு இருபத்தைந்திற்கே தொடங்கி விட்டார்கள். எழுத்தாளர் சிவசங்கரியும், ராமகோபாலனும் பார்வையாளர்களாக முன் வரிசையில் வந்து உட்கார்ந்தார்கள். அப்பா வேஷ சங்கரன் உள்ளிட்ட சில துணை நடிகர்கள் எளிய பார்வையாளர்களாக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. வி சப்போர்ட் அன்னா ஹாஸாரே என்று மார்பிலும் முதுகிலும் எழுதி மாட்டிக் கொண்டு வந்த சில இளைஞர்கள்!

 

விட்டல் ஐ.ஏ.எஸ் பேசும் போது சில தமிழ்ப்பதங்களுக்கு சிரமப்பட்டாலும் பெரும்பாலும் தமிழிலேயே பேசினார். புள்ளி விவரங்கள், உணர்வுகளைத் தவிர்த்து விட்டு நேரடியாக ரூட் காஸ் அனாலிஸிஸில் இறங்கி, கரெக்டிவ் ஆக்‌ஷன்களையும் தெரிவித்தார். அவர் சொன்னதில் முக்கியமானது, அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் முதல்நிலை அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடமாற்றம், சஷ்பென்ஷன் உள்ளிட்ட விஷயங்கள் செய்ய முடியாதபடி ஆர்டினன்ஸ் வரவேண்டும் என்றார். (ஆர்டினன்ஸ் என்பது சட்டத் திருத்தத்தில் இருக்கும் தடங்கல்கள் இல்லாத ஒரு வழிமுறை என்றார்- அந்த ஐ.ஏ.எஸ் ஜார்கன் எனக்குப் புரியவில்லை) அப்படி ஒருவேளை அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் சூழல் வந்தால் சி.வி.சி யின் ஒப்புதலோடுதான் செய்கிற மாதிரியும் இருக்க வேண்டும் என்றார். சி.வி.சி க்கு தாமஸ் மாதிரி ஆசாமிகள் தலைமை ஏற்பதை எப்படித் தடுப்பது என்பதை தெளிவாக விளக்கவில்லை!

 

குருமூர்த்தி சொன்ன புள்ளி விவரங்களைக் கேட்ட போது அஸ்தியில் ஜுரம் வரும் போலிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியப் பிரஜைகள் எல்லாரும் பிச்சை எடுக்க ஆரம்பிக்க வேண்டுமோ என்ற பயம் ஏற்பட்டது. சுவிஸ் பாங்கில் இருக்கும் இந்தியக் கறுப்புப் பணம் வந்தால் இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் முதல் இடத்திற்கு உயரும் என்று உறுதியாகச் சொன்னார். லஞ்சம் வாங்கவும், கறுப்புப் பணம் சேர்க்கவும் வெட்கமே இல்லாமல் போய் விட்டது என்றார். முன்காலத்தில் ஊழல் அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் மாதிரி அழுக்காக வருவார்கள், ஆனால் இன்றைக்கு ரைட் ராயலாக மெர்சிடிஸ் வண்டியில் போகிறார்கள் என்றார். ஆட்டோ டிரைவர்களின் நாணயம் பற்றிக் குறிப்பிட்டார். ஐந்து லட்சம் பணத்தை காவல் ஆணையரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கூடச் சாப்பிட முடியாத ஏழைக் குடும்பத்தைத் தாங்கி நிற்பவர் என்றார். இப்படிப்பட்ட ஆட்டிட்ட்யூட் எளிய மக்களிடம் இருப்பதால் விழிப்புணர்ச்சியும், எழுச்சியும் உண்டாக்குவது எளிது என்றார்.

 

சுகி.சிவம் ஒரு வெடிச்சிரிப்பை அரங்கத்தில் உண்டாக்கி கலகலப்பாக ஆரம்பித்தார். ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டைக் குறிப்பிட்டு, அவர் காலத்துல ரெண்டு கூட்டமும் வேறே வேறேயா இருந்திருக்கு என்றார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றி அடித்ததற்கு புது விளக்கம் சொன்னார். அரசாங்கம் அநீதி இழைத்தால் பிரஜைகள் காலில் இருப்பதைக் கழற்றி கேள்வி கேட்கலாம் என்று அதற்கு விளக்கம் சொன்னார்.
சுவாரஸ்யமான, விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சி.

 

அமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுப்பினராகவோ, வெளியிலிருந்தோ நம் ஆதரவை நல்குவோம்.

 

இந்தத் தீப்பொறியை ஊதிப் பரப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஊதி விட்டுவிட்டேன். இந்தப் பதிவை வலையாசிரியர்கள் எல்லாரும் தாராளமாக அவரவர் வலையில் வெளியிடலாம், வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்மால் சில ஆயிரம் பேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படட்டும்.

 

ஜெய்ஹிந்த்.

ரஜினியின் தைரியமும் ’சோ’வின் சான்றிதழும்

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வழக்கமாக வருகை தரும் ரஜினிகாந்த் இந்த வருஷம் ஆப்ஸண்ட். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு வாசகர் உட்பட வந்திருந்த பலரும் அவர் ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டு வரவில்லை என்று சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது.

 பயமெல்லாம் அவருக்குக் கிடையாது என்று சோவே சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு கைசொடக்கிக் கேள்வி கேட்பவர், அந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசாதிருப்பதும், துக்ளக் விழாவுக்கு வராமல் இருப்பதும் நேரமின்மை காரணமாகத்தான் என்பதை நாம் நம்புவோம். முதலமைச்சருக்கு நடத்தப்படும் பாராட்டுவிழாக்களிலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதும் ஏகப்பட்ட நேரம் இருப்பதால்தான் என்றும் நம்புவோம். பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோம். படத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனத்தின் மனக்கசப்பைத் தேடிக்கொள்ள அவருக்கு பயம் என்பது பிதற்றல் என்றும் நம்புவோம்.

குருமூர்த்தி பேசும்போது, ஸ்விஸ் பாங்கிலும், பெயர் வெளியிடத் தேவையில்லாத சில வெளிநாட்டு முதலீடுகளிலும் இருக்கும் இந்தியப் பணத்தில் நாலில் ஒரு பங்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் இந்தியப் பொருளாதாரம் 16 சதவீதம் உயர்வடையும் என்றார். சோ உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் நேரடியாகச் சொல்லத் தயங்கும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் மருமகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசினார்.

நீங்கள் தலித்துகளுக்கு எதிராவர் என்பது மாதிரி ஒரு கருத்து இருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, ஜகஜீவன்ராம் பிரதமராக வருவதற்காக ஐந்து மாநிலங்களில் தான் கான்வாஸ் செய்ததையும், ‘பாப்பாத்தி’(”அவர் பாஷைல சொல்லணும்ன்னா” என்று குறிப்பிட்டார்) இந்திராவுக்கு ஆதரவாக கருணாநிதி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

மைக்கேல் ஜாக்சன் பற்றி சோ

யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

மைக்கேல் ஜாக்சன் செத்துப்போன பிறகு வந்த செய்திகள் அவர் உயிரோடு இருந்த போது வந்ததை விட அதிகமாக இருந்தன.

இளைஞர்கள் அத்தனை பெரும் வெறி பிடித்து அலைகிற போது நமக்கு இந்த சங்கீதத்தின் அருமையே தெரியவில்லையே. நாம் ஒரு ஞான சூன்யமோ என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன்.

ஜூலை பதினைந்து தேதியிட்ட துக்ளக் இதழில் மைக்கேல் ஜாக்சன் பற்றிய கேள்விக்கு ஆசிரியர் சோ அளித்திருக்கும் பதில் திருப்தியாக இருந்தது.

ஜாக்சனுக்கு ஆயிரத்து இருநூறு கோடி கடன் இருந்ததாக அறிகிறேன்.

இது முதலிலேயே தெரிந்திருந்தால் அவரால் கடனாளியான ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்!