தொலைக்காட்சி

லோக்பால்-சில சந்தோஷங்கள், சில பயங்கள்

லோக்பால் வெற்றியை எங்கள் தெரு சமூக ஆர்வலர்கள் பாலாஜியும், நாராயணனும் பட்டாஸ் வெடித்து ஃபைனலில் பாகிஸ்தானை இந்தியா ஜெயித்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 நிச்சயமாக இதில் சந்தோஷம் இருக்கிறது.

 ஆனால் இதை வெற்றி என்று வர்ணிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. இது வெற்றி என்றால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தோல்வி என்றாகிறது. அதற்கு அப்புறம் வரலாம்.

 நாட்டின், நாட்டு மக்களின் நன்மையைக் கருதி தைரியமாக, விடாமுயற்சியுடன் குரல் கொடுக்க ஒரு மாமனிதர் கிடைத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய சந்தோஷம். அவரை ஆஃப் செய்ய அடக்குமுறையிலிருந்து அவதூறுப் பிரச்சாரம் வரை எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டும் அவை எடுபடாமல் போனது மிக மிகப் பெரிய சந்தோஷம்.

 சாந்திபூஷன் பெயரை ரிப்பேராக்குவதற்கு அரசியல் மாமாக்கள் உதவியுடன் முயற்சி நடந்தது. வெளியிடப்பட்ட ஒலித் தகடு ஜெனூயினானதுதான் என்று லேப்கள் சான்றிதழ் வழங்கும் அளவுக்குப் போனார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாதது மிக மிக மிகப் பெரிய சந்தோஷம்.(எதிரிகளுக்கு ஆப்பு வைக்க எலக்ட்ரானிக் மீடியாவை பயன்படுத்தும் ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி இந்த நாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. பொதுநலச் சிந்தை இருக்கும் மின்னணுப் பொறியாளர்கள் இந்த மாதிரி விஷயங்களின் ஜென்யூனிட்டி இன்மையை எவ்விதம் கண்டறியலாம் என்கிற அவேர்னஸைப் பரப்பினால் நல்லது)

 அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற உறுதியைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. பள்ளிப் பிள்ளைகள் முதல், ரிடையர் ஆனவர்கள் வரை எல்லாத் தரப்பினரும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆதரவுக் குரல் தந்தது ஒரு சந்தோஷம்.

 ஆங்கில, செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கின்றன. நாடெங்கும் இந்த நல்ல முயற்சி பரவவும், ஆதரவு பெருகவும் இந்தத் தொலைக் காட்சி நிறுவனங்கள் முக்கிய காரணம். இவைகளின் முயற்சியின்றி இது நடந்திருக்கவே முடியாது என்று கூடச் சொல்வேன். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மீடியாக்கள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமேயானால் ஆங்கிலேயர்கள் இருநூறு வருஷம் ஆண்டிருக்க முடியாது என்பது மட்டுமில்லை, இரண்டு வருஷம் கூடத் தாக்குப் பிடித்திருக்க முடியாது என்பது திண்ணம்!

 பிரபல தமிழ் செய்தி சேனல் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் லோக்கல் அரசியலின் குழாயடிச் சண்டைகளை ஒளிபரப்பிக் கொண்டு, படுதோல்விகளின் ஒரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்றித் துளிகளை வெளிச்சம் பொட்டுக் காட்டிக் கொண்டு, கொலைகாரர்களுக்கு மன்னிப்புக் கோரி உருக்கமாக வேண்டிக்கொண்டு நேரத்தை உபயோகமாகச் செலவு செய்து கொண்டிருந்தது.

 சந்தோஷங்களைச் சொல்லியாகிவிட்டது. இப்போது சில பயங்கள்.

 இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், ஊழலைக் கட்டுப்படுத்த, இருக்கிற சட்டங்கள் போதாது என்று உலகம் பூரா தமுக்கடித்து அறிவித்த மாதிரி இருக்கிறது. இருக்கிற சட்டங்கள் போல இதுவும் புஸ்வாணமாகிப் போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

  1. லோக்பால் உறுப்பினர்கள் எல்லாரும் நியமன உறுப்பினர்கள். நியமிக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்களின் நேர்மையைப் பொறுத்துதான் குழுவின் நேர்மையும் நம்பகத் தன்மையும் அமையும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசை காட்டப்பட்டோ, மிரட்டப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ தவறான தேர்வுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
  2. உண்ணாவிரதத்துக்கே அரசாங்கத்துடன் பேரத்தில் இறங்கி, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட கால அவகாசம் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கைக்கு மட்டும் மக்கள் கூட்டம் சேர்த்து போராடியவர்கள், அரசாங்கத்தின் இதர பேரங்களுக்கும் படிப்படியாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
  3. அன்னா ஹஸாரேவும் அவர் ஆதரவாளர்களும், ஆசையினாலோ, மக்களின் வற்புறுத்தலாலோ, அரசியலின் நிலையின்மை காரணமாகவோ, வேறு ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாகவோ முழுநேர அரசியல்வாதிகளாக மாறமட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
  4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, நியமன உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, முசோலினி டைப் அரசாங்கம் இங்கே அமைய முன்னோடியாய் அமைந்து விடாதா?

 வழக்கமான Devil’s advocate வேலையைச் செய்துவிட்டேன். Devil க்கு தகுதியான விடை தரும் Angel களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

வந்தாச்சு.. தேர்தல் முடிவுகள் வந்தாச்சு!

போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 120 இடமும் அதிமுக கூட்டணி 105 இடமும் இருந்தன.

 நேற்று சிஎன்என் ஐபிஎன் வெளியிட்ட முடிவுகள் அதற்கு நேர் எதிரிடையாக இருந்தன. ந்யூஸ் எக்ஸ் (சேர்த்துச் சொன்னால் அர்த்தம் வில்லங்கமாக இருக்கும்!) அதிமுக கூட்டணி 172 இடம் பிடித்து ஸ்வீப் செய்யும் என்றார்கள். ஸ்டார் ஹிந்தி சேனல் திமுக வுக்கு தனிப் பெரும்பான்மை என்றது.

 ஆக மொத்தம் வாநிலை அறிக்கை மாதிரி எல்லா மாதிரியும் சொல்லி விட்டார்கள்!

 எல்லாரும் ஒத்துக் கொண்ட இரண்டு விஷயங்கள் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது, திமுக இப்போது இருப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கைகளை மட்டுமே பெற முடியும்.

 2ஜி, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஓட்டுக்குப் பணம் இத்தனை ஃபேக்டர்களைத் தாண்டி, தேர்தல் கமிஷனின் அதிரடிகளைத் தாண்டி, விஜயகாந்த்-ஜெயலலிதா என்கிற பலம் வாய்ந்த கூட்டணியைத் தாண்டி,

 திமுக 100 இடம் பிடிக்கிறது என்றால், அது ஏறக்குறைய வெற்றி மாதிரிதான்! நிஜ முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்ப்போம்.

 கருத்துக் கணிப்புகளில் நிறைய டிரா பேக்குகள் உண்டு.

 எல்லாரும் அவர்கள் ஆசைப் படுவதைச் சொல்வார்களே ஒழிய, ஆய்ந்ததைச் சொல்வதில்லை. இந்த சாம்ப்பிள் அளவு சரியா என்று சிக்ஸ் சிக்மா ஆசாமியான என்னைக் கேட்டால், ம்ம்ஹூம்! இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் நாலாயிரத்திச் சில்லரை வாக்காளர்களின் கருத்து சரியாக இருக்க ஆயிரத்தில் ஒரு பிராபபிலிட்டிதான் இருக்கிறது. 234 தொகுதிகள் இருக்கும் இடத்தில் 70 தொகுதிகளைக் கேட்டால் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிராபபிலிட்டியே இருக்கிறது.

 எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் கருத்துக்கள் 40% க்கு அதிகமாக இருக்கும். கோமதியின் காதலன் கதையில் வரும் பிரணதார்த்தி ஹர அய்யர் மாதிரி, தங்களுக்குப் பிடித்த முடிவு வரும் வரைக்கும் கணிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். வரும்போது நிறுத்தி விடுகிறார்கள்.

 அம்மா ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால், ராமதாஸ் இடுப்பில் கட்டிக் கொண்ட பூனை என்றால் கேப்டன் வேட்டியில் புகுந்த ஓணான்.

 எப்படி சமாளிக்கிறார் பார்க்கலாம்!

மெல்ல டமில் இனிச் சாகும்

இன்றைய தினமலரில் ’Draft Voters’ List’ என்பதை ’வரைவு வாக்காளர் பட்டியல்’ என்று மொழி பெயர்த்திருந்தார்கள்.

Draftsman என்றால் வரைவாளர் என்கிற சூத்திரத்தைப் பயன்படுத்தியிருப்பது புரிகிறது. அதாவது ’ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்’ (இதில் கூட ஒரு தப்பு இருக்கிறது) மொழிபெயர்ப்பு, சொல்லளவில் இருந்தால் இதுமாதிரி பரிதாபங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதது.

முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, சமீபத்தில் தமிழன்பன், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சொன்னதையும் சோ குறிப்பிட்டு, அபராதம் வடமொழிச் சொல் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.

தொலைக்காட்சி செய்திகளில் தமிழ் படும் பாடு பரிதாபத்துக்குரியது.

’கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன். ’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே?

தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்.

பொருளைத்தான் மொழிபெயர்க்க வேண்டுமே ஒழிய சொற்களை அல்ல.

வாஷிங்டனில் திருமணம் நாவலில் இதை வைத்து நிறைய ஹ்யூமர் பண்ணியிருக்கிறார் சாவி. பாட்டிகள், ”முதலில் துணி காயப் போட கொடி கட்ட வேண்டும்” என்று அலுத்துக் கொள்ளும் போது ராக்ஃபெல்லர் மனைவி ”கொடி என்றால் என்ன?” என்று கேட்பார். அதற்கு சாம்பசிவ சாஸ்திரிகளின் பதில், “Flag”. திருமதி ராக்ஃபெல்லர் பாட்டிகளின் தேசப் பற்றை எண்ணிச் சிலிர்த்துப் போவார்.

Draft என்கிற பதத்துக்கு இந்த இடத்தில் தாற்காலிக, முதல்நிலை,ஆரம்ப என்று எதைச் சொன்னாலும் பொருந்தும். இதை நட்பான நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக் கொண்டால் பெரிய தமிழ்ச்சேவை செய்ததாகத் திருப்திப் பட்டுக்கொள்வேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தேங்காய்ச்சேவையைத் தின்றுவிட்டுப் படுத்துக்கொள்வேன்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாச நிகழ்ச்சிகள்

பள்ளிக் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன.

பணத்துக்காகவோ அல்லது பர்வர்ட்டட் செக்ஸுக்காகவோதான் இந்தக் குற்றங்கள் நிகழ்கின்றன என்று நினைக்கக் கூடாது. எனக்கு வேறு ஒரு கோணம் தோன்றுகிறது.

தீவிரவாதக் குழுக்கள் எவையேனும் குழந்தைகளைக் கடத்திச் சென்று பயிற்சி அளிக்கிற முயற்சியாகக் கூட இது இருக்கலாம்.

 பெற்றொருக்கு சில உபாயங்கள் :

  •  மொபைல் வாங்கித் தந்தால் குழந்தைகள் கெட்டுப் போகிறார்கள் என்கிற எண்ணத்தைக் கொஞ்சம் கைவிட்டு மொபைல் வாங்கிக் கொடுங்கள்.
  • பள்ளியிலிருந்து புறப்பட்டதும் எஸ்.எம்.எஸ் தரச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் ஒரு எஸ்.எம்.எஸ் தரச் சொல்லுங்கள். கடத்தல் நிகழ்ந்தால் குறைந்த பட்சம் இருபது நிமிடங்களிலும், அதிக பட்சம் அரை மணியிலும் தெரிந்து கொண்டு போலிஸுக்குத் தகவல் தர செளகர்யமாக இருக்கும். கடைசியாக எந்த ஏரியாவில் இருந்தார்கள் என்பதும் தெரிய வரும்.
  • குழந்தைகளை எப்போதும் கூட்டமாக இருக்கச் சொல்லுங்கள். தெரியாத நபர் யார் என்ன சொல்லி அழைத்தாலும் போக வேண்டாம் என்று சொல்லுங்கள்
  • கூடுமானவரை குழந்தைகள் பள்ளி வாகனத்திலேயே வரட்டும். சொந்த வாகனமோ பப்ளிக் டிரான்ஸ்போட்டோ வேண்டாம்.
  • குழந்தைகளுக்கு நகைகள் போட்டு அனுப்ப வேண்டாம்.

************************************************************************

இன்றைய தினமலரில் படித்த ஒரு செய்தி சிந்திக்க வைப்பதாக இருந்தது. (தினமலர்-சென்னை-18.11.2010.-பக்கம்-6)தனியார் மருத்துவமனை ஒன்றின் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு சம்பந்தமாக, சில ஆவணங்களைக் கேட்டு ஒரு ஆசாமி கோட்டுச்சேரி காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார். தன்னை சிறப்பு நீதிபதி என்று அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். அடையாள அட்டையைக் கேட்டதற்கு ஒரு அட்டையைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு புறம் இன்ஸ்பெக்டர் என்றும் இன்னொருபுறம் நீதிபதி என்றும் இருந்திருக்கிறது.

இதைவிட விசேஷமானது என்னவென்றால், அதிலிருந்த கையெழுத்து. சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார் என்கிற பின்னணியிலும், பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பின்னணியிலும் செந்தமிழ்கிழார் என்பவர் கையெழுத்திட்டிருந்தாராம். பெயரும், பின்னணியும் தீவிரவாத அமைப்போ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போலிஸ்காரர்களிடம் நீதிபதி என்று பொய் சொல்ல ஒன்று அதீத தைரியம் வேண்டும் இல்லாவிட்டால் முட்டாளாகவோ, பைத்தியமாகவோ இருக்க வேண்டும். அதிலும் இப்படிப்பட்ட டுபாக்குர் அடையாள அட்டையை தைரியமாகக் காட்ட!

பின்னணி என்னவாக இருக்கும்?

************************************************************************

என்.டி. டிவியின் பிக் பாஸ் மற்றும் ராக்கி சாவந்த்தின் ராகி கா இன்சாஃப் நிகழ்ச்சிகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு இரவு பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை ஆணை பிறப்பித்திருக்கிறதாம்.

மேலும் எஸ்.எஸ் ம்யூசிக்கின் தெலுங்கு அலைவரிசையில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவதால் ஒருவாரம் தடை விதித்திருக்கிறார்களாம்.

ச்சே… இந்த மாதிரி சமாச்சாரங்கள் நமக்குத் தெரியுமுன் தகவல் ஒலிபரப்புத் துறைக்குத் தெரிந்து போகிறதே!

தொலைக்காட்சியா, அழுகாச்சியா?

முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.

அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.

தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.

அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.

அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது. இன்றைக்குப் பார்க்கிறேன் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.

“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.

அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக

“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக மீரா.

“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

*********************************************************************************************************

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஹைதராபாத்தில் ஒரு குருக்கள் தன் வீட்டுக் கூரையைப் பிய்த்து பஸ் ஸ்டாப்பில் வெய்யிலில் கஷ்டப்படுகிறவர்களுக்காகக் கொடுத்திருக்கிறார்.

திருடுகிற குருக்கள், பொம்பளைப் பொறுக்கி குருக்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் விளம்பரம் பெருகிறார்கள். பேச்சு வராத குழந்தை கூட அவர்கள் பேரைச் சொல்கின்றன.

ஸ்ரீனிவாசாச்சார்லு மாதிரி நல்லது செய்கிற ஆசாமிகளைப் பற்றி எழுத நம்ம ஜனங்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் வந்து தடுத்து விடுகிறது.

இதைப் பார்த்தால் இன்னும் நாலு பேர் நல்லது செய்ய மாட்டார்களா என்கிற நப்பாசையில் அதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஜேபெக் இணைப்பைப் பாருங்கள்.