நிதீஷ்குமார்

எடியூரப்பா செய்யறது சரியாப்பா?

ஊழல் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்வது என்று பி.ஜே.பிக்கு தெரியவில்லை என்கிறார் சோனியா.

நிஜம்தான்.

குற்றச்சாட்டு சரியோ தவறோ, நிரூபணம் ஆனதோ இல்லையோ சம்பந்தப்பட்டவர்கள் காங்கிரஸ் அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சசி தரூர், அசோக் சவான், ராஜா என்று சமீபத்திய உதாரணங்களே நிறைய சொல்லலாம். எடியூரப்பா விவகாரத்தில் ஒதுக்கீடு செய்த நிலங்களை அவரது சொந்தக்காரர்களே திரும்பக் கொடுத்திருக்கும் நிலையில், அவர் விடாப்பிடியாகப் பதவியில் தொடர்வதும், அதை கட்சி மேலிடம் அங்கீகரிப்பதும் ஏற்புடையதாக இல்லை.

சில வருஷங்களுக்கு முன் எல்லாரும் போட்டு உலுக்கு உலுக்கென்று உலுக்கி உதறிய போதும் நாற்காலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த வி.பி.சிங் ஞாபகம் வருகிறார். ஸ்பெக்ட்ரம் கடலில் இந்தப் பெருங்காயம் கரைந்துவிடும் என்கிற அசட்டு தைரியத்தைத்தான் இது காட்டுகிறது. இதைச் சுட்டிக் காட்டி தங்களை நியாயப்படுத்திக் கொள்ள ஆளுங்கட்சிக்கு பி.ஜே.பி தருகிற வாய்ப்பு இது. ஸ்பெக்ட்ரம் ஊழலையே போட்டு உலுக்கிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் இதையும் கொஞ்சம் கவனிப்பது நல்லது.

எனக்கு 120 எம்.எல்.ஏ ஆதரவு என்று வேறு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் மிஸ்டர் எடியூர்! என்ன நம்பிக்கை இல்லாத் தீர்மானமா கொண்டு வந்திருக்கிறார்கள்? பொதுவாக ஊழல் இல்லாத கட்சி என்று பெயரெடுத்திருக்கும் பி.ஜே.பி யின் கேரியர் ரிகார்டில் கரியாக இது படியும். இதற்கப்புறம் கர்நாடகாவில் தலைதூக்கவே முடியாது. குஜராத்திலும், பிஹாரிலும் சேர்த்திருக்கும் நல்ல பெயரை இதர மாநிலங்களிலும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

********************************************************************************************************

பிஹாரில் காங்கிரஸுக்கும், லல்லுவுக்கும் சரியான ஆப்பு வைத்திருக்கிறார்கள் மக்கள். மாட்டுத் தீவன ஊழலை மக்கள் இன்னம் மறக்கவில்லை!

தமிழ்நாடு என்ன ஆகும்?

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியின் இம்பாக்ட் நம் தேர்தலில் இருக்குமா?

********************************************************************************************************

வெற்றி பெற்ற நிதீஷ்குமாருக்கு சோனியா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். வி.பி.சிங் பிரதமரான போது முதலில் ராஜிவ் காந்தி வாழ்த்தியது ஞாபகம் வந்தது. இதே போலவே வாஜ்பாயிக்கு மன்மோஹன் சிங் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தேசிய அரசியலில் அடிக்கடி நடக்கின்றன.

உள்ளுர் அரசியல்வாதிகள் இன்னமும் குழாய்ச் சண்டை ரேஞ்சிலேயே இருப்பது வருத்தமாக இருக்கிறது.