நீதிக் கதை

நீங்களும் இப்படித்தான் நினைச்சிருப்பீங்க

இந்தக் குட்டிக் கதை Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது. (கவனக் குறைவா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா அதுதான் எல்லார் கண்ணுலயும் படுது! விஷயத்தை விட்டுடறாங்கெ!  🙂 )

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் நான் எழுதியது)

இது போதும்

ஒரு அரசருக்கு எவ்வளவு செல்வம் சேர்த்தும், எத்தனை நாடுகளைப் பிடித்தும் திருப்தியே இல்லாமல் இருந்தது.

மனம் எப்போதும் சஞ்சலத்திலேயே இருந்தது. யார் யாரையோ கேட்டார், எந்தெந்தக் கோயிலுக்கோ போனார். எதிலும் பலனில்லை.

 ‘இது போதுமென்ற மனம்தான் திருப்தியும் சந்தோஷமும்’ என்று யாரோ சொன்னார்கள். அதைக் கேட்டதும் செல்வம் சேர்ப்பதையும், நாடு பிடிப்பதையும் அரசர் நிறுத்தி விட்டார். ஆனாலும் மனம் அமைதிப்படவில்லை. செய்வதறியாமல் தவித்த அரசரிடம் அவரது மந்திரி பக்கத்து ஊரில் இருந்த முனிவர் ஒருவரைப் பார்க்கும்படி சிபாரிசு செய்தார்.

 அரசர் அந்த முனிவரைச் சந்தித்தார்.

 “சுவாமி. இந்த உலகத்திலேயே அதிக செல்வமும் மிகப் பெரிய ராஜ்யமும் என்னுடையது. ஆனாலும் மனதில் இன்னும் அமைதியில்லை. இது போதுமென்ற மனம்தான் முக்கியம் என்றார்கள். அந்த மனப்பான்மைக்கும் வந்துவிட்டேன். ஆனாலும் நிம்மதியில்லை. என்ன செய்வது?” என்று கேட்டார்.

 “ரொம்ப சுலபம்” என்றார் முனிவர்.

 அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுவிட்டு வந்தால் இவர் சுலபம் என்கிறாரே!

 “எப்படி சுவாமி?”

 “உன் ஆட்களை அனுப்பி ’இது போதும்’ என்கிற திருப்தியில் இருக்கிறவனை அழைத்து வரச் சொல். அவனுடைய வேட்டியை வாங்கி ஒருநாள் நீ அணிந்து கொள். உன் சஞ்சலம் உடனே அகன்று மனதில் திருப்தி ஏற்படும்”

 அரசர் உடனே தன் ஆட்களை எட்டுத் திசையும் அனுப்பினார்.

 இது போதும் என்கிற திருப்தி இருக்கிறவன் அத்தனை எளிதில் அகப்பட்டு விடுவானா? தேடினார்கள் தேடினார்கள், ஆறு மாதம் தேடினார்கள். கடைசியில் ஒருத்தன் அகப்பட்டான். அவனை அரசரிடம் அழைத்துப் போனார்கள்.

 அவனைப் பார்த்த அரசர் துணுக்குற்றார். அவன் வேட்டி, சட்டையே போட்டிருக்கவில்லை. ஒரு கோவணம் மட்டுமே கட்டியிருந்தான்.

 “உன் வேட்டி எங்கே?” என்றார் அவனைப் பார்த்து.

 “வேட்டி எதுக்கு ராஜா, இது போதும்” என்றான் அவன்.

 (என் நாலாங்கிளாஸ் வாத்தியார் சிங்காரம் பிள்ளை மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் வகுப்பில் சொன்ன கதையை ஃப்ரெட்ரிக் ஃபோர்சித்தின் நோ கம்பேக்ஸ் ஃபார்முலாவில் எழுத முயன்றிருக்கிறேன்)

கட்டாததை எப்படி அவிழ்ப்பது?

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

 “அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

 “அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”

“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

 “சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.

இது சுரேஷ் பத்மனாபன் எழுதிய On cloud 9 என்கிற ஆங்கில நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் கதை. எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா?

15,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கும் இந்த நூல் தமிழில் வர இருக்கிறது. அதில் இதற்கு விடை இருக்கிறது. தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர் யார் தெரியுமா?

ஜென் கற்க ஒரு சுவாரஸ்யமான வழி

ஜென் கதைகள் என்றால் நிறையப் பேருக்கு அலர்ஜி.

புரிந்தது என்று சொல்லிக் கொள்ள தைரியம் இருக்காது. புரியவில்லை என்று சொல்லவும் ஈகோ இடம் தராது.

 ஏதாவது ஒரு ஜென் கதையை உங்கள் நண்பரிடம் சொல்லி,

 “என்ன, புரியுதா?” என்று கேட்டுப் பாருங்கள்.

 “புரியாம என்ன…. இந்த மாதிரி எல்லாத்தையும் ஃபிலசாஃபிக்காவே பார்த்துகிட்டு இருந்தா லைஃபை அனுபவிக்கவே முடியாது.” என்று பொதுப்படையாகச் சொல்லி விட்டு உங்கள் முகத்தைப் பார்ப்பார்.

 இந்த  Fishing Expedition ல் நிச்சயம் நீங்கள் சிக்குவீர்கள். புரிந்து விட்டது என்கிற மதர்ப்பு உங்களை அமைதியாக இருக்க விடாது என்பது அவருக்குத் தெரியும்.

 உடனே ‘அதெப்புடி?’ என்று அதை விளக்க முற்படாமல்,

 “ஏன் இந்த ஃபிலாசஃபி வாழ்க்கையை அனுபவிக்க உதவாதுன்னு சொல்லு?” என்று எதிர்க் கேள்வி கேட்டுப் பாருங்கள்.

 “எனக்கு இதில எல்லாம் இண்ட்ரஸ்ட் கிடையாது” என்று கழன்று கொள்வார். அப்போதும் புரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்.

 தெரியாததை எல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லிக் கொள்வது ஒரு இண்டெலெக்ச்சுவல் ஏமாற்று. (நான் கூட மாத்ஸில் இண்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லிக் கொள்வதுண்டு!)

 மண்டையில் அடித்த மாதிரி புரிய வைக்கக் கூடாது என்பதற்காகவே புதிராகச் சொல்லப்பட்டவை ஜென் கதைகள்.  ஆனால், ஒவ்வொரு கதையையும் படித்து விட்டு என்ன சொல்ல வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரமில்லை. வேலை நாட்களில் தூங்க மட்டும்தான் நேரமிருக்கிறது. ஒரே ஒரு ஞாயிற்றுக் கிழமைக்காக ஏற்கனவே மிக நீண்ட ஆதர்சப் பட்டியல் இருக்கிறது. (முட்டுக்காடு போட்டிங்கும், வல்லக் கோட்டை முருகன் கோவிலும் இன்னும் இது மாதிரி நிறைய ஆதர்சங்கள் பெண்டிங்கில் இருப்பது நிஜம்தானே?)

 வேலையே இல்லாத எவனாவது ஜென் கதைகளைப் படித்து விட்டு மோட்டுவளையைப் பார்த்தபடி யோசித்து அதைப் புத்தகமாக எழுதினால்தான் வசதிப்படும்.

 அட ஆமாம்! இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே! என்றுதானே யோசிக்கிறீர்கள்?

ஹி.. ஹி… அதைத்தாங்க நான் பண்ணியிருக்கேன். (ஆனா ஐடியா கிழக்கு பதிப்பகத்தினுடையது!)

 ‘கதைகளின் வழியே ஜென்’ என்கிற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 200 பக்கங்கள். விலை ரூ.100/=

 ஒரு விஷயம்.

 விளக்குகிறேன் பேர்வழி என்று படிக்கிறவர்களை தச்சி மம்மு சாப்பிட்டுவிட்டு தாச்சிக் கொள்கிற குழந்தை லெவலுக்கு இறக்கினால் என் பேச்சு ‘காய்’ விட்டு விடுவீர்கள்.

 ஃபிலசாஃபிக் சொசைட்டி சொற்பொழிவுகள் லெவலுக்குப் போவதற்கு எனக்கு ஞானம் போதாது. ஒருவேளை போனாலும் படிக்கிறவர்களுக்கு ஜூரம் வந்து நாக்கு இழுத்துக் கொள்கிற அபாயம் இருக்கிறது.

 நண்பர்களோடு சாயந்திரம் உட்கார்ந்து அரட்டை அடிப்பது நம் எல்லோருக்குமே பிடிக்கும். அப்போது எப்படிப் பேசுவோம்?

 அப்படித்தான் எழுதியிருக்கிறேன்.

அரட்டையில் இருக்கும் நகைச்சுவை, நம்முடைய சொந்த அனுபவங்கள், சில பிரபலஸ்தர்களின் அனுபவங்கள், டிவி, சினிமாக்களில் வரும் ஜோக்குகள் எல்லாமே இதில் இருக்கின்றன. கூடவே கொஞ்சம் மேலாண்மைத் தத்துவ விளக்கங்களும் இருக்கின்றன.

 நிச்சயம் இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

 சுவாரஸ்யத்தின் ஊடே சில நல்ல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

 பல கதைகளுக்கு நீங்கள் நினைக்கும் நீதி வேறு விதமாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் எழுதுங்கள். நம் வாசகர்கள் எல்லாரும் பயனடைவார்கள்.

 புத்தகத்தை எழுதி முடித்ததும் எழுத்தாளர் பாராவிடம்,

 “ஒவ்வொரு கதைக்கும் நீதி என்னன்னு முடியைப் பிச்சிகிட்டு யோசிச்சதிலே தலை மொட்டை ஆயிடிச்சு. கம்பெனி செலவில ஒரு விக் வாங்கிக் குடுங்க சார்” என்றேன்.

 “காஸ்ட் எஃபெக்டிவ்னஸ் பத்தி நீயே இந்தப் புத்தகத்தில எங்கியோ எழுதியிருக்கே இல்லை?” என்றார் மோவாயைச் சொறிந்தபடி.

 “ஆமாம் சார்” என்றேன் உற்சாகமாக.

 “விக் கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு காசித் துண்டு வாங்கித் தர்ரேன். தலையை மூடிக்க. வெய்யிலுக்கும் நல்லது” என்றார்.