பத்திரிகை

குமுதமும் நானும்

நான் பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில், பத்திரிகை உலகின் கவர்ச்சிக் கன்னி குமுதம்.

 வீட்டில் குமுதம் வாங்க மாட்டார்கள். விகடன் மட்டும்தான். பக்கத்து வீட்டு சரோஜா மாமியிடம் லோக்கல் லைப்ரரி புத்தகத்துக்கு பண்ட மாற்றாக குமுதம் என்று எம்.ஓ.யு சைன் செய்திருந்தேன். வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து படித்து விட்டு அப்படியே கொடுத்து விடுவேன்.

 “அட்டையில் எப்பவுமே பொம்பளை படம்தான்” என்று விமரிசித்தவர்கள் கூட வாசன் கடை வழியாகப் போகிற போது அங்கே தொங்கும் குமுதத்தைப் பார்த்து ஜொள்ளு விடுவதைப் பார்த்திருக்கிறேன். உத்ராவின் புகைப்படங்கள் ரொம்ப ஸ்பெஷல். அந்தப் பளப்பளா ஆர்ட் பேப்பரில், வண்ணத்தில் பிச்சைக்காரியாக இருந்தால் கூட கவர்ச்சியாக இருக்கும்படி எடுக்க அவருக்குத் தெரியும்.

 அப்போது குமுதம் விலை நாலணா. அந்த விலையில் அவ்வளவு ரிச்சான பத்திரிகை வேறு கிடையவே கிடையாது.

 விமர்சனங்களைப் பார்த்து முகம் சுளிக்கிற குணமே கிடையாது.

 பிரபலங்கள் திட்டினால் அதை அப்படியே போட்டு விடுவார்கள். ஒரு பிரபல டைரக்டர், “ஒரு நடிகையின் கட்டை விரலைப் படமாகப் போட்டு இது யார் விரல் என்று கேட்கிறார்கள். வாசகர்களுக்கு விரல் சூப்பித்தனமான ரசனையை வளர்க்கிறது இந்தப் பத்திரிகை” என்று காட்டமாக விமர்சித்திருந்தார். அதை அப்படியே வெளியிட்டு, அதே பக்கத்தில் ஒரு நடிகையின் முதுகைப் போட்டு இது எந்த நடிகையின் முதுகு? என்று புதிரும் போட்டிருந்தார்கள்.

 வாசகர் கடிதத்தில் நையாண்டியாக எழுதப்படும் கடிதங்களுக்கு முன்னுரிமை! அந்த சூத்திரம் தெரிந்ததால்தான் என் எழுத்துலக வாழ்க்கை(!) குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் ஆரம்பித்தது.

 அரசு பதில்களில் சினிமா, இலக்கியம், அரசியல், ஏ ஜோக் என்று ஒரு சுவையான கலவை இருந்தது. சில சமயம் எஸ்.ஏ.பி (அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் என்கிற மாதிரி தெரிந்தாலும் அவரேதான் மொத்த பதில்களும் எழுதுபவர் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்) அவர்களின் பதில்கள் யோசிக்க வைக்கும்.

 கலைவாணருக்கு சிலை வைத்திருக்கிறார்கள், சிவாஜிக்கு ஏன் வைக்கவில்லை என்று ஒரு வாசகர் கேட்ட போது, அவருக்கு ஒரு சிலை வைத்தால் போதாது, ஒன்பது வைக்க வேண்டியிருக்கும் என்று பதில் சொல்லியிருந்தார்.

 அவர் சொல்லும் ஏ ஜோக்குகள் கூட கொஞ்சம் சிந்திக்க வைக்கிற மாதிரிதான் இருக்கும். வெளிநாட்டு ஹோட்டல்களில் பெண் வெயிட்டர்கள் உண்டு. (இப்போது நம்மூரிலும் ஆரம்பித்து விட்டார்கள்) மார்பில் பெயரைக் குத்திக் கொண்டு வந்த பெண் வெயிட்டரிடம் ஒருத்தர் கேட்டாராம், “பேஷ், இன்னொண்ணுக்கு என்ன பேர் வெச்சிருக்கே?”

 எழுத்தாளர் சாவி பத்திரிகை ஆரம்பிக்கும் போது என்.எல்.பி ஃபார்முலாவில் குமுதத்தை காபியிங் எக்ஸலன்ஸ் முறையில் அப்படியே பின் பற்றினார். ரங்கராஜன், புனிதன், சுந்தரேசன் மாதிரி அவருடைய ஆஸ்தான எழுத்தாளர்களும் சாவியில் மட்டுமே எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் அவருக்கு நிறைய ஏமாற்றமும், கோபமும்! துரதிஷ்டவசமாக அவருக்குப் பின் அந்தப் பத்திரிகை வரவே இல்லை.

 என் முதல் ஒருபக்கக் கதை பிரசுரமானதில் ஊக்கமடைந்து நிறைய ஒருபக்கக் கதைகள் எழுதினேன். முதல் சிறுகதை வந்தது சாவி இதழில் என்றாலும், என் கதை எழுதும் திறனைத் தீட்டியது குமுதம்தான்.

 அண்ணாமலைக்குப் பிறகு குமுதம் நிறைய மாறி விட்டது.

 மூன்று பக்க சிறுகதைகள் போடுவதே இல்லை என்கிற கொள்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஒருபக்கக் கதைகள் கூட 180 வார்த்தைகள் கூட இல்லாமல் குறுக்கப்பட்டு விட்டன. அரசு பதில்களில் இருந்த ஃபார்முலா அப்படியே இருக்கிறது, ஆனாலும் ஏதோ குறைகிறது. சினிமா செய்திகளில் கூட ரங்கராஜன் (லைட்ஸ் ஆன் வினோத்) கடைசி லைன் பஞ்ச் வைத்து ஒரு புதுமை பண்ணிக் கொண்டிருந்தார். அது மிஸ்ஸிங்.

 ஒருவேளை இந்த மாற்றங்கள் இந்த ஜெனெரேஷனுக்கான அப்டேஷன்களாக இருக்கலாம்.

 இந்த ஜெனெரேஷனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அந்த மஹாசக்தி எது?

கிடைத்த ஸ்பெக்ட்ரம் அவலை ஜெயா டிவி நன்றாகவே மென்று கொண்டிருக்கிறது.

 வைகோ, சோ, சுப்ரமணியம் ஸ்வாமி என்று பல்வேறு பிரபலங்கள் அவல் கொண்டு வர ஊதி ஊதித் தின்று கொண்டிருக்கிறார்கள். சோ பேசுகிற போது ராஜாவுக்கும் கருணாநிதிக்கும் மிஞ்சிய ஒரு சக்தியின் தலையீடு இருக்கிறது, அந்த சக்தி நிச்சயம் பிரதமரை விட வல்லமை படைத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவில் மட்டுமே குறிப்பிட்டார்.

சோ அவரது வழக்கமான ராணுவ நிற சஃபாரியில் வராமல் வெளிர் மஞ்சள் நிறச் சட்டை அணிந்திருந்தார். மஞ்சள் துண்டு மாதிரி இதிலும் ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ?

பரபரப்புக்குப் பெயர் போன ஸ்வாமி இந்த இலைமறைக் காய் பேச்செல்லாம் பேசவில்லை. நெத்தியடியாக இன்னின்னாருக்கு இத்தனை சதவீதம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஒரு பத்திரிகை கூட இந்த மஹாசக்தியின் இன்வால்வ்மெண்ட் பற்றி சந்தேகம் எழுப்பவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. வம்பை மார்க்கெட்டிங் செய்யும் பத்திரிகைகளின் வாயை மூடி வைத்திருப்பது நிஜமா, பயமா, பிரியமா, பணமா?  

ஸ்வாமியின் மழலைத் தமிழில் இந்த வம்பைக் கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை அப்படியே நம்ப நான் தயாரில்லை. நான் மட்டுமில்லை, ஸ்வாமியைப் புரிந்த யாருமே அதை முழுசாக நம்ப மாட்டார்கள்.

திருடின பணம் வெளிநாட்டுக்குப் போயாகி விட்டது என்றால், நம்ம பொருளாதாரம் இத்தனை பெரிய ஓட்டையை அக்காமடேட் செய்யுமா?

சில ஆயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதற்கே அமெரிக்கா சோற்றுக்கு சிங்கி அடிக்கும் நிலைக்கு வந்ததே, லட்சம் கோடியை இந்த நாடு தாங்குமா?

’இவர்கள் பட்டாடையைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவு போய் விட்டது’ என்கிற தமிழன்பனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்கள். நின்றால் கூட தோட்டா காலிடுக்கு வழியாகப் போய்விடுகிற அளவுக்கு குள்ளமான தெய்வம் போலிருக்கிறது. அதுதான் எல்லாரும் தப்பித்து விடுகிறார்கள்.

*******************************************************************************************************

ஜகன்மோஹன் ரெட்டி புதுக் கட்சி ஆரம்பிக்கிறாராம்.

ஆந்திரக் காற்றில் சிரஞ்சீவி அம்மியே பறந்து விட்டது. ஜகன்மோஹன் எல்லாம் வெறும் கூழாங்கல்!