பம்ப்பு

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..

ம்ம்ஹூம்.

மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,

“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.

காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?

படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.

அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து

“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்

“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,

ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.

இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,

“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.

அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.

தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,

“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.

“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.

“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.

“அவனுக்கு காது கேக்காதுங்க”

Advertisements

என்சைக்ளேபடி(ய்)யா

”எனக்கே எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கி, அதில் பாரில் சாட்டின் உறை போட்டு…….” என்று தன் இளம் பிராயக் கனவை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

 நீங்கள், நான் எல்லாருமே இந்தக் கனவைத் தாண்டி வந்தவர்கள்தான். இந்தியாவில் சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் எத்தனை பேர் என்று சென்சஸ் எடுத்தால் பதிவு பண்ண ஒரு நாற்பது பக்கம் நோட்டு போதும். (அதில் ஒருவராக என் எழுபத்தைந்து வயது சகோதரர் இருப்பார். குரங்குப் பெடல் கூட அவர் அடித்ததில்லை)

வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரமிருந்த பள்ளியில் நான் சேர்க்கப்பட்ட போது பஸ்சுக்குக் காசு கேட்டால் அப்பா,

“தர்பை மாதிரி இருக்கிற கிளி சாஸ்திரி பையன் தினம் நடந்துதானே போறான், உனக்கென்ன கேடு?” என்று நிராகரித்தார்.

“ஒரு சைக்கிளாவது வாங்கிக் குடு”

“உனக்கு சைக்கிள் வாங்கித் தர நான் என்ன காயாரோகணம் பிள்ளையா, கன்னியப்பச் செட்டியாரா இல்லை பாண்டிய நாடாரா?”

அப்பா சொன்னதில் எதுவும் மிகையில்லை. சைக்கிள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் அப்போது இருந்தது. அதிலும் சிலர் ராலே, ஒரிஜினல் பி.எஸ்.ஏ சைக்கிள் எல்லாம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் சுமார் பணக்காரர்கள் ஹெர்குலிஸ், அட்லாஸ் மாதிரி சுதேசி வண்டிகள் வைத்திருப்பார்கள்.

ரெண்டு பேர் ஒரே மாதிரி வண்டி வைத்திருக்கும் போது தங்கள் அந்தஸ்தைப் பரைசாற்றிக் கொள்ள சிலர் செய்யும் அலங்காரங்கள் சுவாரஸ்யமானவை.

டைனமோ லைட்டுக்கு மெத் மெத்தென்ற மஞ்சள் துணி மஃப்ளர், குஷன் சீட் கவர், ஃபுல் செயின் கார்ட், சுழற்றி அடிக்கும் மணி, ஹாண்டில் பாரின் செண்டரில் பிளாஸ்டிக் பூச்செடி, ஹாண்டில் பார் பிடியில் முள்ளம் பன்றி மாதிரி கிரிப், சக்கரங்களின் ஆக்ஸிலில் மிட்டாய் ரோஸ் கலரில் ஃபிளாஸ்க் கழுவும் பிரஷ் மாதிரி வளையம், காரியரின் பக்கவாட்டில் விதவிதமான பெட்டிகள், அதில் வண்ணத்தில் எழுதப்பட்ட பெயர், பாட்டரி போட்டால் வெட்டுப்படப் போகிற ஆடு மாதிரி கத்தும் ஹாரன் என்று பல்வேறு லக்சுரிகள்!

வீட்டிலேயே காற்றடிக்கிற பம்ப் வைத்திருப்பதும் ஒருவகை லக்சுரிதான். அந்தப் பம்ப்பில் காற்றடிக்க பலதடவை முயற்சித்திருக்கிறேன். எகிறி எகிறிக் குதிக்கவேண்டும். கிளிப் மாதிரி இருக்கும் இன்ஃப்ளேட்டர் நாஸில்கள் அமுக்கும்போது பறந்துபோய் விழுந்து தவடையைப் பதம்பார்க்கும். அடித்து முடித்ததும் வியர்த்து விறுவிறுத்து நாய்க்கு இரைக்கிற மாதிரி இரைக்கும். எட்டாங்கிளாஸ் வாத்தியார் லட்சுமணய்யர்,

“பாத்துடா, இரைக்கிற இரைப்புல கொட்டை தொண்டைக்கு ஏறி அடைச்சிக்கப் போகுது” என்பார்.

சைக்கிள் கடையில் செய்தால் ஒரு வீலுக்கு ஐந்து பைசா.

ஞாயிற்றுக் கிழமை ஆனால் போதும், ஒரே மெக்கானிக் வேலைகள்தான்! தேங்காயெண்ணையையும், மண்ணெண்ணயையும் கலந்து ஆக்சில், கிராங்க், செயின் எல்லாவற்றிலும் ஊற்றி மொழுகி, அது ஒரு கறுப்பான கொழகொழாவாக ஆங்காங்கே பரவியிருக்கும். வெள்ளை வேட்டியோடு கலெக்டர் மாதிரி ஜபர்தஸ்த்தாகப் புறப்படும் அப்பாக்கள் திரும்பி வரும்போது வேட்டி பிடிதுணி மாதிரி ஆகியிருக்கும். முகம் தூறல் நின்னுப் போச்சு படத்து பாக்கியராஜ் அஸிஸ்டண்ட் மாதிரி ஆகியிருக்கும்.

முதன்முதலில் எனக்குக் கிடைத்தது ஒரு செகண்ட் ஹேண்ட் அட்லாஸ் ஈஸ்டர்ன் ஸ்டார். வெளியூருக்கு மாற்றலான அண்ணன் அவர் உபயோகித்த சைக்கிளை எனக்கு சாசனம் செய்தார்.

அதைப் பள்ளிக்கூடத்து போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிப் போகும்போது பிளைமவுத் காரை பார்க் செய்துவிட்டு இறங்கிப் போகும் சிவாஜி கணேசன் மாதிரி உணர்ந்தேன்.