பரிமேலழகர்

மானங்கெட்ட மானம் என்றால் என்ன?

முன்னர் எழுதப்பட்டதைக் கொஞ்சம் Value Added ஆக மாற்றி எழுதுவதை காப்பி அடிச்சுட்டான் என்று நிராகரிக்கிறார்களே, திருக்குறளில் சொல்லப்பட்ட பலவிஷயங்கள் புறநானூறு, பதிற்றுப் பத்து, குறுந்தொகை இவற்றில் சொல்லப்பட்டவைகளின் நறுக்குத் தெரிப்புத்தான்.

 பரிமேலழகரின் உரையில் பல இடங்களில் புறநானூறிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். முதற்சங்க காலம் வள்ளுவருக்கு மிகவும் முந்தையது.

 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

 (அல்பத்தனம், மானங்கெட்ட மானம், அதிகமான சந்தோஷம் இவையெல்லாம் தலைவன் அல்லது அரசனுக்கு இழிவு சேர்ப்பவை)

 என்கிற குறளில் எனக்கிருப்பது போலவே பரிமேலழகருக்கும் நிறைய ஐயங்கள் இருந்திருக்க வேண்டும். இவறல் என்றால் அல்பத்தனம் அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் மாண்பிறந்த மானம் என்றால் என்ன? மானம் என்பதே மாண்புதானே, மாண்பிறந்த மானம் எப்படி இருக்கும்?

 அதற்குத்தான் புறநானூற்றிலிருந்து மேற்கோள் தருகிறார் மிஸ்டர். பரி.

 ‘அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தம் முன்னோர், தந்தை தாய் என்றிவரை வணங்காமை….’ என்பதை மாண்பிறந்த மானமாக புறநானூறு சொல்கிறது. அதாவது நாமார்க்கும் குடியல்லோம் என்கிற மதர்ப்பும் தன்னம்பிக்கையும் சிறப்பானவைதான். ஆனால் மேற்சொன்னவர்களை வணங்காமல் இருத்தல் அந்தச் சிறப்பில் அடங்கா.

 முன்வைத்த காலைப் பின்வைக்காமை சிறப்புத்தான். ஆனால் தவறு என்று தெரிந்த பின்னும் பின்வைக்க மாட்டேன் என்று அதைத் தொடர்வது மாண்பு அல்ல. பல பேர் முட்டாள்தனமாகப் பேசி விட்டு சப்பைக் கட்டு கட்டி அதை நியாயப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி மாண்பிறந்த மானத்துக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

 மாணா உவகை என்றால் எல்லையில்லாத சந்தோஷம்தானே அதில் என்ன பிழை என்பதற்கு இன்னும் கொஞ்சம் ரிஸர்ச் பண்ணியிருக்கிறார். அதை அப்புறமாகப் பார்க்கலாம்.

Advertisements

லஜ்ஜாவதியே….

காலமில்லாத காலத்தில் பெய்த மழை கழுத்தறுப்பாகத்தான் இருக்கிறது.

 காரைத் துடைத்து வைத்தால் புள்ளிப் புள்ளியாக ஆகிவிடுகிறது. துணியை எல்லாம் காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று மொட்டை மாடியில் விட்டு வந்தால் காலையில் பிடிதுணி மாதிரி சொதசொதா. கொஞ்சம் காற்றோடு மழை அடித்தால் நம்ம ஆட்கள் கரண்ட்டை வேறு கட் செய்து விடுகிறார்கள்.

நேற்று காலையில் கோடம்பாக்கத்துக்கு நண்பரின் மகனின் கல்யாணத்துக்குப் போயிருந்தேன்.

“பசும்பொன் தேவர் கல்யாண மண்டபம் போகணும்” என்றதற்கு ஆட்டோக்காரர்,

“முப்பது ரூபா” என்றார்.

“நடக்கிற தூரம்தான் இருக்கு இவ்ளோ கேக்கறயேப்பா?”

“டிரெஸ்ஸு நாஸ்தியாகாம கல்யாணத்துக்குப் போகத் தாவலை?”

அப்போதுதான் கவனித்தேன்.

ஸ்டேஷனிலிருந்து இருபது மீட்டர் தூரத்துக்கு முழங்கால் ஆழத்துக்கு மழைத் தண்ணீர்.

“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்ன்னு வள்ளுவர் சொன்னது சரிதான்”

“திட்ணும்ன்னா நேராத் திட்டிடு சார். கெட்டார்க்குச் சார்வாய்ன்னா கெட்டவங்களுக்கு மளை சாதகமாப் பூடிச்சின்னுதானே சொல்றே?”

“நியூ டைமன்ஷனா இருக்கே…. பரிமேலழகர் உங்க தாத்தாவா?”

“பரின்னா குதுரதான சார்?”

“ஆமாம்”

“குதுரைலதான் சார் எங்க தாத்தா சொத்தையெல்லாம் வுட்டாரு”

’சொத்தையெல்லாம் விட்டுட்டா எல்லாம் நல்ல பல்லா ஆயிருக்குமே’ என்று கேட்க நினைத்தேன். மண்டபம் வந்துவிட்டது.

******************************************************************************************************

என்னுடைய ‘கதைகளின் வழியே ஜென்’ புத்தகம் ஐந்து பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பதால் சொல்லவில்லை, அண்ணா நூற்றாண்டு நூலகம் நன்றாகவே இருக்கிறது.

 இன்னமும் கட்டுமாணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 நான்கு ஃப்ளோர்கள்.

 முதலில் குழந்தைகள் பகுதியும், பத்திரிகைகளும். அதற்கு மேல் தமிழ் நூல்கள். அதற்கப்புறம் மின்னணு. அத்ற்குமேல் பொறியியல் மற்றும் விஞ்ஞானம். அசத்தியிருக்கிறார்கள். ஒருநாள் முழுக்க மளமளவென்று செலவாகிவிடும்.

மேலும், கன்னிமாரா லைப்ரரி மாதிரி வந்து உட்கார்ந்து தூங்குகிற பிரகிருதிகளும் இல்லை.

ஒரே ஒரு குறை.

எல்லாமே புதுப் புத்தகங்கள். கொஞ்சம் பழைய நூல்களும் வாங்கி வைக்கலாமே!

*****************************************************************************************************

திரும்பும் போது ரொம்பத் தாமதமாகிவிட்டதால் மதிய உணவுக்கு குரோம்பேட்டை அஞ்சப்பரில் புகுந்தேன். (பின்னே, அடையாறு ஆனந்த பவனில் போய் யார் கால் கடுக்கக் காத்திருப்பது?)

 எதிரில் ‘மோகமுள்’ யமுனா மாதிரி எழில் வாய்ந்த ஒரு பெண். அலைபேசியில் யாருடனோ முணுமுணுவென்று பேசி முகமெல்லாம் லஜ்ஜை. மோப்பக் குழையும் அநிச்சம் என்பது இவர்தானோ!

வெய்ட்டர் ஒரு பிளேட்டைக் கொண்டுவந்து வைத்ததும் அவருடைய சுயரூபம் தெரிந்தது. அதிலிருந்து ஒரு லெக் பீஸை உருவி காலைப் பிடித்துக் கொண்டு துடையைக் கடித்து இழுக்க ஆரம்பித்தார்.

“வேறே என்னங்க?” என்று வெய்ட்டர் கேட்டதும்

“ரத்தப் பொறியல் இருக்கா?” என்றார்.

மெதுவாக அவர் முகத்தில் கோரைப் பல் முளைத்து நாக்கு வெளியே வருவது போலத் தோன்றியது எனக்கு.

“இல்லைங்க ஈவினிங்தான் கிடைக்கும்”

“தலக் கறி இருக்கா?” என்று அடுத்த வன்முறைத் தாக்குதல் அவர் பண்ணிக் கொண்டிருந்த போதே,

“சார் உங்களுக்கு….? தலக் கறி ரெண்டு பிளேட்டா சொல்லிடவா?” என்றார் என்னிடம்.

“நோ… எனக்கு தலக் கறி வேணாம்…. விஜய் கறி… ச்சீ…. வெஜ் கறி” என்று உளறினேன் பயத்தில்.

கண்ணதாசன் ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டை எழுதுவதற்கு முன் முனியாண்டி விலாஸ் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.