பழமொழி

துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு

துள்ளு கிற மாடு

பொதி சுமக் காது

என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.

தன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.

சினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.

போகட்டும்.

துள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா? அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா?

இல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.

பொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.

தலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத்திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.

தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.

மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்றால் என்ன?

குரோம்பேட்டையில் எல்லாரும் 300 அடி, 400 அடி என்று நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீருக்காக.

நான் மாத்திரம் இன்னமும் 100 அடி போரில் போரடிக்காமல் ஒரு மணிக்கு 5 நிமிஷம், அந்த 5 நிமிஷத்தில் 30 லிட்டர், மொத்தம் 12 பம்ப்பிங் என்று காலை 5 மணி தொடங்கி மாலை 7 30 வரைக்கும் இதே வேலையாய் இருக்கிறேன். வருகிற 360 லிட்டர் தொட்டுக்கோ தொடைச்சிக்கோதான்! (ஆமாம், தொடைச்சிக்கோதான்!)

புது போர் போடத்தான் வேண்டும், ஆனால் முதலில் ஒரு வாட்டர் டிவைனர் வைத்துப் பார்த்து விடுவது என்று தீர்மானித்தேன். எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்யும் ஒரு ஆசாமி எங்கள் தெருவில் இருக்கிறார். அவரிடம் கேட்டதும்,

“இதோ எதுத்தூட்ல பார்த்துகிட்டு இருக்காரு வாங்க” என்று அழைத்தார்.

போனேன்.

டிவைனர் எங்கே நின்றாலும் கையிலிருந்த எலக்ட்ரோட் பின்பக்கத்தைக் காட்டியது. இடப்புறம், வலப்புறம், முன்னால் பின்னால் எங்கே போனாலும் பின்னால் காட்டுகிறது. அப்புறம் நடூ செண்ட்டருக்கு வந்தார். கையிலிருந்த எலெக்ரோட் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சுழல,

“இங்க தோண்டுங்க. தண்ணி இருக்கு. அஞ்சடில இருக்கு” என்றார்.

எல்லாரும் “ஏஏஏஏஏஏஏஏஏஏஏ” என்று கட்டை விரலை உயர்த்திக் கூச்சலிட வீட்டுக்காரர் டென்ஷன் ஆகிவிட்டார்.

“யோவ்.. அது ஸெப்டிக் டேங்க்குய்யா” என்றார்.

ஓ.. அதான் பின்னாலேயே காட்டிச்சா!

எனக்கு ஏமாற்றம் ஆகிப் போனது.

“என்ன சார் இப்படி ஆகிப் போச்சு?” என்றேன் எதிர் வீட்டுக்காரரிடம்.

“எதுவும் ஆகல்லை. அஞ்சு காசு செலவில்லாம, பிரச்சினை எதுவும் ஆகாம ஸெப்ட்டிக் டேங்க் கிளீன் பண்ற ஸ்டேஜுக்கு வந்திருக்கிறது தெரிஞ்சி போச்சே” என்றார்.

இதான் மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்பதா அல்லது அது வேறயா?

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா என்ன?

”கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்கிற பழமொழியை You can’t have the cake and eat it too என்கிற ஆங்கிலப் பழமொழிக்கு இணையாகச் சொல்லலாமா?” என்று கேட்டார் நண்பர்.

“முழுமையான இணை என்று சொல்ல முடியாது” என்றேன்.

“முழுமையான என்றால்?”

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்கிற Dilemma வரும் போது எப்படி Decision எடுக்கணும்ன்னு நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழி வழி காட்டுது. ஆனா ஆங்கிலப் பழமொழி இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்கிறதை மட்டும்தான் சொல்லுது”

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைல எப்படி Decision எடுக்கணும்ன்னு சொல்லியிருக்கா?”

“ஆமாம்”

“எப்படி?”

“மீசையை சிரைச்சி எறிஞ்சிட்டு கூழைக் குடின்னு அர்த்தம்”

“எது கூழ் எது மீசைன்னு தெரியாததுதானே நிதர்சனம்?”

“நிதர்சனமும் இல்லை, சுதர்சனமும் இல்லை. கூழ் என்கிறது Need. பசிக்கு சாப்பிடுவது. மீசை என்கிறது Desire. அழகுக்காக வைப்பது. You have to choose between Need and Desire”

நரி மேலழகர் உரை

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

 தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

 எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

 “தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

 “சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

 “என்னது சொல்லு?” என்றார்.

 “திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

 இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

 “பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

முயலுக்கு மூணே கால்

”இந்த சுந்தரம் இருக்கானே ரொம்பப் பிடிவாதக்காரன். தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்ன்னா மூணு கால்தான், கடைசி வரைக்கும் மாத்திக்க மாட்டான். விதண்டாவாதம் பன்ணிகிட்டே இருப்பான்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

 “அனுபவம்தான்”

 “என்ன அனுபவம்?”

 “அவன் கூட எதைப் பத்தியாவது விவாதம் பண்ணியிருக்கியா?”

 “இல்லையே?”

 “நான் பண்ணியிருக்கேன். நேத்து பாரு, முட்டாள்தனம் வேறே, அறியாமை வேறேன்னு சொல்றேன், ஒத்துக்கவே மாட்டேங்கிறான்”

 “ஈஸ் இட்? ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்றானா?”

 “ஆமாம். அறியாமைங்கிறது முட்டாள்தனத்தோட ஆரம்பமாம். செடிதானே மரமாகுது, செடி வேறே மரம் வேறயான்னு விதண்டவாதம் பண்றான்”

 “அதுக்கு நீ என்ன சொன்னே?”

 “அதெப்படிடா அதுவும் இதுவும் ஒண்ணாகும், மரம்ங்கிறது செடியோட வளர்ச்சிடா, முட்டாள்தனம் அறியாமையின் வளர்ச்சியான்னு கேட்டேன்”

 “அருமை, அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

 “ஆமாம்டா, அறியாமை இருக்குன்னு தெரிஞ்சி அதைப் போக்கிக்கிட்டா அப்பவே அறியாமை காணாமப் போயிடும். போக்கிக்காம இருக்கிறதும் யாராவது சொன்னாலும் ஒத்துக்காம, புரியாம அப்படியே தொடர்வதும்தானே கடைசியில முட்டாள்தனமா வந்து முடியுதுன்னான்”

 “சரியாத்தான் சொல்லியிருக்கான். நீ என்ன சொன்னே?”

 “அறியாமை இருக்குன்னு அடையாளம் கண்டுகிட்டாலே அடுத்தது அதைப் போக்கிக்கிற முயற்சிதானே. அறியாமை இருக்கிறதே தெரியாமப் போனாத்தான் பிரச்சினைன்னேன்”

 “ம்ம்ம்ம்”

 “அப்படின்னா தான் ஒரு செடின்னு தெரிஞ்சாத்தான் எல்லாச் செடியும் மரமாகுமா? அல்லது தெரிஞ்சாலும் தெரியல்லைன்னாலும் மரமாயிடுமான்னு கேட்டான்”

 “அடேடே.. அப்புறம்?”

 “எல்லாச் செடியும் மரமாத்தான் போகுது. ஆனா எல்லா அறியாமையும் முட்டாள்தனமா ஆகிறதில்லைன்னேன்”

 “சரியாத்தான் இருக்கு. அதுக்கென்ன சொல்றான்?”

 “எல்லாச் செடியும் மரமா ஆகுதுன்னா ஏன் கொத்தமல்லி மரம், புதினா மரம், முளைக்கீரை மரம், நெல்லு மரம், உருளைக் கிழங்கு மரம், முட்டைக் கோஸ் மரம், வெங்காய மரமெல்லாம் இல்லைங்கிறான்”

 “ஹா.. ஹா… ஹா “

 “என்ன ஹா.. ஹா.. ஹா? புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு பேசறான்னு சொல்றேன். வெட்டி விவாதம் பண்றான்னு சொல்றேன். இதுல சிரிப்பு என்ன வேண்டியிருக்கு?”

 “நான் சிரிச்சது வேறே விஷயத்துக்கு”

 “எதுக்கு?”

 “எவ்வளவு நேரம் பேசினே?”

 “ஒரு மணி நேரம்”

 “ஒன் அவர் பேசியும் நீ சொன்னதை அவன் ஒத்துக்கல்லை?”

 “ஆமாம்ப்பா.. அதான் பிடிவாதக்காரங்கிறேன்”

 “அவன் சொன்னதை நீ ஒத்துக்கிட்டியோ?”

 “இல்லையே?”

 “அப்ப நீ பிடிவாதக்காரன் இல்லையா?”

முன்றுரையரையனாரா முன்றுரை முழுவனாரா?

இந்தக் காலக் குழந்தைகளை ‘முன்றுரையரையனார்’ என்று சொல்லச் சொல்லுங்கள். சரக்கு அடித்தவன் தெளிவாகப் பேச முயல்வது மாதிரி ஒரு பலவீனமான முயற்சியாக அது இருக்கும். முதல் அட்டெம்ப்ட்டில் சொல்கிற குழந்தைக்கு செம்மொழி வித்தகர் பட்டம் தரலாம்.

 இந்த முன்றுரையரையனார் யார் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். இன்னும் சிலர் மறந்திருப்பீர்கள். பலர் கேள்விப்பட்டே இருக்க மாட்டீர்கள்.

 தமிழ்நாட்டில் ஆதிக்காலத்திலிருந்து வழங்கி வரும் பழமொழிகளை, அவை சொல்லும் கருத்தோடு இணைத்து செய்யுள் வடிவம் கொடுத்தவர் முன்றுரையரையனார். இது ரொம்ப ரொம்பப் பாராட்டப் படவேண்டிய செயல். காரணம் பழமொழிகள் எல்லாம் ஸ்க்ரிப்ட் இல்லாமல் வாய்ச்சொல் வழக்கில் தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருப்பவை.

 வாய்ச்சொல் மூலம் பரவும் விஷயங்கள் வெகு சீக்கிரத்தில் அனர்த்தம் ஆகிவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். உடனடி உதாரணமாக ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கும்’ பழமொழி. அது மண் குதிரையாக மாறி, பல வருஷங்களுக்கு நிஜக்குதிரையாக இருந்தால் மட்டும் ஆற்றைக் கடக்க உதவுமா என்று யாருமே யோசிக்கவில்லை. ஒரு சிலர், “தமிழன் ஆதி காலத்தில் ஆற்றைக் கடக்க குதிரைகளைப் பயன்படுத்தி இருப்பதற்கு இந்தப் பழமொழி சான்று” என்று கூட மேடைகளில் பேசியிருக்கக் கூடும். இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான விளக்கம் வேண்டுமென்றால் நம்முடைய ‘அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா’ என்கிற பதிவைப் படிக்கவும்.

 முன்றுரையரையனார் செய்ததில் இரண்டு நல்ல விஷயங்கள். பழமொழிகள் மிஸ் இண்டர்ப்ரெட் ஆகுமுன் அவற்றை டாகுமெண்ட் செய்து விட்டார். இரண்டாவது அவைகளை விளக்க நல்ல உவமைகளையும் உதாரணங்களையும் சொல்லியிருக்கிறார்.

 நேற்று ஒரு பழமொழிப் பாடல் படித்தேன். முதலில் ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்த ஒரு பாடல் கொஞ்சம் யோசித்ததில் நிறைய விஷயங்களை உள்ளடக்கி இருப்பது தெரிந்தது. முதலில் அந்தப் பாடலைக் கவனியுங்கள் :

 தாயானும் தந்தையா லானும் மிகவின்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்று எனினும், அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்.

 இதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க கோனார் நோட்ஸோ, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தமிழகராதியோ தேவையில்லை.

 அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல் என்பது பழமொழி. அதாவது, ’அடுப்படியில படுத்திருக்கிற நாயைப் புலின்னு சொன்னா மாறி’ என்று கல்யோக்கலாக மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள்.

 நாய் என்பது ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதைக் கவனியுங்கள். நாயைப் புலியென்று சொன்னதைப் போல என்று சொல்லவில்லை. அடுப்பின் கடைமுடங்கும் நாயை என்றார்கள். நாய் என்ன செய்யும்? வாசலில் படுத்திருக்கும். அறிமுகமில்லாதவர்கள் வந்தால் குலைத்து எஜமானை உஷார் படுத்தும். இது நாயின் அடிப்படை குணாதிசயம். ஆனால், வாசலில் படுக்க வேண்டிய நாய், எஜமானுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நாய், அடுப்படியில் வந்து படுத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வோம்?

 “அடச் சீ, எழுந்து ஓடு” என்று விரட்டுவோம். அப்படிச் செய்தால் அது இயற்கை. அதற்கு பதில்,

 “புலிய்யா அது, பாயறதுக்காகத்தான் பதுங்கியிருக்கு” என்று பாராட்டத் தலைப்பட்டால், என்ன அர்த்தம்? நமக்கு ஜன்னி கண்டு விட்டது என்று அர்த்தம்.

 ரொம்ப சுவாரஸ்யம் அவர் இதை எதோடு பொருத்துகிறார் என்பதில் இருக்கிறது.

 உவமை சொல்லும் போதும் நாய் – அடுப்பின் கடைமுடங்கும் நாய் மாதிரி நுணுக்கமாக ஒன்றைச் சொல்கிறார். தாயோ, தந்தையோ உயர்த்திச் சொல்ல ஏதுமில்லாதவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் போது அவனைத் துதி பாடுதலுக்கு ஒப்பானது என்கிறார்.

 ஏன் தாய், தந்தையை சொல்கிறார்?

 திருஷ்டிப் பூசணிக்காய் மாதிரி முகமும், பல்தேய்க்கும் வேப்பங்குச்சி மாதிரி கைகளும், குச்சியில் கட்டின பலூன் மாதிரி கால்களும் இருக்கிற மாதிரி ஒரு படம் வரைந்து குழந்தை காட்டியதும்,

 “இங்க வந்து பாருங்க, தத்ரூபமா உங்களை மாதிரியே போட்டிருக்கான் பிள்ளை” என்று அம்மாக்கள் சிலாகிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

 கோபால் பல்பொடி, புளி, உப்பு என்று கண்டதையெல்லாம் போட்டு கலக்கி அதைச் சுடப்பண்ணி கொண்டுவரும் மகளிடம்,

 “ஆஹா, உங்கம்மா வைக்கிற சாம்பாரை விட நல்லா இருக்கு” என்று சான்றிதழ் வழங்கும் அப்பாக்களைப் பார்த்திருப்பீர்கள்.

 தம்மாத்தூண்டு சாத்தியம் இருந்தாலும் குழந்தைகளைப் பாராட்டி விடுவது பெற்றோர்களின் குணம். அப்படிப்பட்ட பெற்றோர்களே பெருமையாகச் சொல்ல ஏதுமில்லாமல் போகும் போது ஒருவன் வெத்துவேட்டு என்பதை கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

அப்படிப்பட்டவன் தன்னைப் பாராட்டிக் கொள்ளும் போது, அவனைத் துதி பாடுதலுக்கு ஒப்பானது என்கிறார்.

 தன்னைத் தானே உயர்வாகப் பேசிக் கொள்ளுதலே மட்டம் என்று அவர் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். வித்யா கர்வம் என்பது அணிகலன் மாதிரி என்பார்கள். வித்தையே இல்லாத கர்வம் புண் மாதிரி. அளவோடு தன்னைப் பற்றின உயர்வான எண்ணம் இருப்பது முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாக இருக்கும். தன்னிடம் உயர்வாக ஒன்றுமே இல்லாத போது உயர்வாகப் பேசிக் கொள்பவனை என்றுதான் சொல்கிறார். அந்த ஒன்றுமே இல்லை என்பதற்கு ஆதாரமாகத்தான் ஆயி அப்பனே ஒசத்தியா ஒண்ணும் சொன்னதில்லை என்கிறார்.

 பெற்ற தகப்பனே ’அவன் உருப்படாதவன்னு தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்’ என்று சொன்னவர்களை சரித்திர நாயகர்களாகப் பத்திரிகைகளும், அரசியல்வாதிகளும் சொல்லும் அவலங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் பலநூறு வருஷங்களுக்கு முன்னாலே அதைச் சொல்லியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

 அவன் எதையாவது கிறுக்கி வெட்டிப் பொழுது போக்கிகிட்டு இருப்பான் என்று என் அப்பாவும் அம்மாவும் சொல்லும் போது,

 ஏஜோக் எழுதுவாரென்று எள்ள வேண்டா

தேஜோமயானந்தா தத்துவமும் – மற்று

வைதீகமென்று சமூகம் இழித்ததையும்

பெளதிகமென்று காட்ட வல்லார்

 என்று என்னைப் பற்றி நானே ஒரு வெண்பா (!) எழுதி அதைப் பத்தாங்கிளாஸ் தமிழ்ப்பாடத்தில் மனப்பாடப் பகுதியாக ஏற்றி விடுகிறேன் என்று வையுங்கள். நான் பதவியில் இருந்தால் என்னைச் சுற்றி இருக்கும் ஜால்ராக்கள் வெட்கமே இல்லாமல் என்னை கலியுகக் கம்பன், ஒளிமிகும் ஒட்டக் கூத்தன் என்றெல்லாம் துதி பாடி நான் போடப் போகும் பிச்சை.க்காகக் காத்திருப்பார்கள்.

 அப்போது சொல்ல வேண்டிய பழமொழிதான் ‘அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்’

 முன்றுரையரயனாரா அவர்? முன்றுரைமுழுவனார்!

ஆயிரங்காலத்துப் பயிரை ஆடு-மாடு மேயாதா?

”ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்”

 “பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?”

 “அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க”

 “அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?”

 “சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்”

 “பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?”

*********************************************************************************************************

“ஆறுலயும் சாவு நூறுலயும் சாவுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே கேட்டிருக்கீங்களா?”

“ஓ.. தெரியுமே”

“அதெப்படிங்க ஆறுல செத்தப்புறம் நூறுல ஒருதரம் சாவாங்க?”

**********************************************************************************************************

”கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்ன்னு பழமொழி தெரியுமா?”

“தெரியுமே, அதுக்கென்ன இப்போ?”

“கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டறதும் பார்த்துகிட்டு இருக்கத்தானா?”

*********************************************************************************************************

“கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்களே…”

“ஆமாம்”

“ஆடு மாடெல்லாம் வந்து மேய்ஞ்சிடாதா?”

*********************************************************************************************************

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமான்னு ஒரு பழமொழி இருக்கில்ல?”

“ஆமாம்”

“புள்ளைங்கள்ளாம் அஞ்சு வயசிலயே ஏகப்பட்ட புஸ்தகங்களை தூக்கிகிட்டு போறாங்களே, இப்ப வளைஞ்சது ஐம்பதுல நிமிருமா?”

*********************************************************************************************************

”எங்க அக்கா பையன் இஞ்சிநியரிங் காலேஜ்ல படிச்சி இஞ்சிநியர் ஆயிட்டான்”

”இதையே அவன் ப்ரெஸிடென்ஸி காலேஜ்ல படிச்சிருந்தா, பிரெஸிடெண்ட்டா ஆயிருப்பான். அத விடுங்க, எங்க அக்கா பையன் எத்திராஜா இருக்கான், அவன் ஒண்ணும் எத்திராஜ் காலேஜ்ல படிக்கலையே?”

பந்திக்கு முந்துவது என்றால் என்ன?

‘பந்திக்கு முந்து படைக்குப் பிந்து’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

இதற்கு யாரை அர்த்தம் கேட்டாலும் ‘சாப்பாடுன்னா முதல் பந்தியில் தேடித் போய் உட்கார்ந்து முழுங்கு. சண்டைக்குப் போகணும்ன்னா கடைசீல போ’ என்பார்கள்.

பழமொழிகள் உயர்ந்த கருத்துக்களைச் சொன்னதால்தான் அவை பன்னெடுங்காலமாய் பேசப்பட்டு வருகின்றன.

எனக்கென்னமோ நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட கருத்தை சொல்லியிருப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. விருந்தோம்பலிலும் வீரத்திலும் புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பழமொழிகள் காலப் போக்கில் திரிந்து போனதற்கு ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்பது உள்ளிட்ட நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியின் பொருளில் அறிவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

இதற்கு என்ன அர்த்தமாக இருந்திருக்க முடியும் என்று கொஞ்சம் ஆராய்வோமா?

பந்தி என்பது இங்கே ஆகு பெயர். சாப்பிடப் போகிறவர்களைக் குறிக்கிறது. சாப்பிடப் போகிறவர்களுக்கு முன்னால் இரு என்று சொல்கிறார்கள். முன்னால் இருக்கிறவன் என்ன செய்வான்? பரிமாறுவான். அதாவது படைப்பான். அதனால்தான் படைக்கப் பிந்து என்றார்கள். அதாவது மற்றவர்களுக்குப் படைப்பதற்காக பிந்தி சாப்பிடு என்றார்கள்.

எல்லாருக்கும் படைத்து விட்டு இறுதியில் சாப்பிடு என்பதையே, பந்திக்கு முந்து, படைக்கப் பிந்து என்றார்கள்.

அதைத் தீனிப் பண்டாரங்களும், தொடை நடுங்கிகளும் பிற்காலத்தில் தங்கள் சௌகர்யத்திற்கு மாற்றியதில் படைக்க என்பது படைக்கு என்று ஆகி விட்டது.

சரிதானே?

தமிழ் ஆர்வலர்கள் விவாதத்துக்கு வரலாம்….

அலுத்துப் போனவனுக்கு புளுத்த கத்திரிக்கா!

இந்தப் படம் சில நடிகைகளின் அவியல். யார் யார்ன்னு தெரியுதா?

இந்தப் படம் சில நடிகைகளின் அவியல். யார் யார்ன்னு தெரியுதா?

“உலகத்திலேயே கஷ்டமான விஷயம் பையனுக்கு கல்யாணம் செய்வதுதான்” என்றார் நண்பர் சேஷாத்ரி.

சேஷாத்ரியிடம் ஒரு கெட்ட பழக்கம்.

சமீபத்தில் அவர் எதைச் செய்தாரோ அது ஹெர்கூலியன் டாஸ்க் என்கிற மாதிரி பேசுவது. ஆனால் ஒரு விஷயம். கஷ்டமோ நஷ்டமோ, அதை அவர் விவரிக்கிற ஸ்டைல் சுவாரஸ்யமாக இருக்கும்.

“இந்தப் பொண்ணு பார்க்கிற வேலையை ரெண்டு வருஷம் முன்னே ஆரம்பிச்சேன்” என்று ஆரம்பித்தார்.

“எத்தனை கண்டிஷன்களோ அவ்வளவு தூரம் பொண்ணு அமைகிற பிராபபிலிட்டி நேரோ ஆயிடுது. பிராபபிலிட்டி நேரோ ஆனா நம்பர் ஆப் அக்கேஷன்ஸ் அதிகமாயிடுத்து”

‘சார் ரொம்ப ஹை டெக்லே பேசறீங்க. நான் எசெல்சீ பெயில் ங்கிறதை ஞாபகம் வச்சிக்கணும் நீங்க”

“உனக்குப் புரியறாப்பலேயே சொல்றேன். ஒரு இருட்டு ரூமிலே பச்சை கலர் சாக்சுங்களும், சிகப்புக் கலர் சாக்சுங்களும் இருக்கு. ஒரே கலர்லே ரெண்டு சாக்ஸ் வேணும்ன்னா மொத்தம் எத்தனை சாக்ஸ் கைலே எடுத்துகிட்டு வரணும்?”

“மூணு”

“நீயே சொல்லிட்டியே! ரெண்டு டைப்புன்னா தப்பாப் போறதுக்கு ஒரு சான்சு. எத்தனை டைப்போ அதைவிட ஒண்ணு அதிகமா எடுத்து செலெக்ட் பண்றோம். பொண்ணு பாக்கிறதிலே எத்தனை டைப்பு, என்னென்ன நார்ம்சு, அப்ப எத்தனை தப்புக்கு சான்ஸ் இருக்கு அதை ஓவர்கம் பண்ணனும்ன்னா எவ்வளவு எடுத்து செலெக்ட் பண்ணனும்?”

“பின்னிட்டீங்க சார்”

“இரு. நான் இன்னம் சீவவே ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ளே எங்க பின்றது”

“சொல்லுங்க”

“எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் பிடிக்கல்லேங்கிறான். அவன் யார் யாரைப் பிடிக்கல்லேன்னு சொல்றான்னு ஒரு டேடா பேஸ் போட்டு ஆராயிஞ்சேன். ஒரு க்ளூவும் கிடைக்கல்லே. உசரம்,குள்ளம்,குண்டு,ஒல்லி,நீட்ட மூக்கு,சப்பை மூக்கு,ஏழை,பணக்காரி,கருப்பு,சிகப்பு எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிட்டான்.”

“சார், பொண்ணு பாக்கற பசங்களோட மைன்ட் செட் ரெண்டு விதமா இருக்கும்”

“என்னது?”

“முதலாவது பிடிச்ச நடிகைகளை ஸ்கேலா எடுத்துக்கிறது”

“அதுவும் கிடைச்சுதேப்பா… டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி ஒரு பொண்ணு திருச்சியிலே”

“கஷ்டம்..கஷ்டம்.. பொண்ணு உங்களுக்கா பையனுக்கா? ஸ்ரேயா மாதிரின்னு சொன்னீங்கன்ன கூட அர்த்தமிருக்கு”

“அப்டிக்கூட ஒரு பொண்ணு பார்த்தமே”

“நான் சொல்ல வந்தது அது இல்லே சார். ஸ்ரேயா மாதிரி கண்ணு, நயன்தாரா மாதிரி மூக்குன்னு ஒரு null set மனசிலே வச்சிருப்பாங்க.  ஒண்ணு அது மாதிரி பொண்ணு கிடைக்காது. அல்லது கிடைச்சாலும் எல்லாம் சேர்ந்து அங்கமுத்து அல்லது சி கே சரஸ்வதி மாதிரி இருக்கும்”

“ரெண்டு விஷயம் தப்பா இருக்கே”

“என்னது?”

“நீ எசெல்சி பெயில்ன்னு சொன்னே. இப்போ நல் செட் அது இதெல்லாம் பேசறே. ரெண்டாவது நீ சொல்ற நடிகைகளெல்லாம் எனக்கே கிழவிங்க. உன் வயசு என்ன?”

“இதெல்லாம் எங்க தாத்தா சொன்னது சார்”

“அவர் என்ன படிச்சாரு?”

“அவர் பி ஏ பெயில்”

“உங்க பாமிலீலே எல்லாரும் எய்ம் பண்றப்பவே எதை பெயில் பண்னலாம்ன்னுதான் எய்ம் பண்ணுவீங்களா?”

“அப்டி இல்லே.. பாஸ் பண்ணப் பண்ண படிச்சிகிட்டே இருப்போம். பெயில் ஆனதும் நிறுத்திடுவோம்”

“சரிதான். நடிகைகளை நார்ம்சா வைக்கிறது முதல் டைப்பு. ரெண்டாவது என்ன?”

“ரெண்டாவது அம்மாவை ஸ்கேலா வைக்கிறது. பையங்க முதல்லே பார்க்கிற பெண் அவங்கம்மாதான். அம்மாதான் மாஸ்டர் சாம்பிள். அதோட கம்பேர் பண்றப்போ ஐஸ்வர்யா ராயை கூட ரிஜக்ட் பண்ணிடுவாங்க. இந்த விஷயத்திலேயும் கிடைக்காத கோலைத்தான் சேஸ் பண்றாங்க”

“பின்னே எப்டித்தான் செட்டிலாவாங்க?”

“தலைப்பைப் பாருங்க”

“ஓஹோ, நீ அப்டித்தான் கல்யாணம் பண்ணிகிட்டியா?”

“அ… அதெப்புடி…நாங்க லவ்ஸ் வுட்டு இல்லே கல்யாணம் பண்ணிகிட்டோம்!”

“நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ்ஸ் வுட்டோம்”

“ம்ம் ஹூம்… நீங்க பண்ணதுக்கு வேறே சீனப் பழமொழி இருக்கு.”

“என்ன அது?”

“If rape is inevitable, why not enjoy it?”