பாட்டு

துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு

துள்ளு கிற மாடு

பொதி சுமக் காது

என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.

தன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.

சினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.

போகட்டும்.

துள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா? அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா?

இல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.

பொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.

தலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத்திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.

தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.

தலைவா – சினிமா விமர்சனம்

Thalaiva-Movie-Stills _4_

நம்ம ஊரில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும், பெங்களூரில் இருப்பதாலும் படத்தைப் பார்க்கிற ஆர்வம் உண்டாயிற்று. பெங்களூர் ஃபோரம் மாலில் ஏற்கனவே 2012 படம் பார்த்த அனுபவம் அந்தத் தியேட்டருக்குத் திரும்பப் போகும் ஆவலை வேறு தூண்டியது! படம் ஆரம்பித்ததிலிருந்து இடைவேளை வரை பிரமிப்பு, சிலிர்ப்பு, ரசனை, திரில்!

 அடடா.. அட்டஹாசமான படம் ஒன்று தமிழில் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறதே…  சத்தியராஜுக்கு இப்படிப்பட்ட கிளாஸ் நடிப்பு வருமா? இத்தனை வருஷமும் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்! ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப எஞ்சாயபிள். அறிமுகம் ஆகிற காட்சியில் அமலா பால் மனசை அள்ளுகிறார். சந்தானம் பிராண்ட் ஜோக்குகள் நிறைய இருக்கின்றன. தியேட்டரில் பார்த்தால் மட்டும் சந்தானம் ஜோக்குகள் சில ரசனையாக இருக்கின்றன.

 புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் அமலா பால் விஜயையும் சந்தானத்தையும் இன்வைட் செய்கிறார்.

 “நாளைக்கு ஃபங்ஷனுக்கு வர்ரப்போ சாப்பிடாம வாங்க”

 “ஏன்? வந்ததும் பிளட் டெஸ்ட் பண்ணப் போறீங்களா?”

 இடைவேளை வரை கட்டிக் காத்திருக்கும் சஸ்பென்ஸை நிஜமாகவே ஊகிக்க முடியவில்லை. அருமையான கதையமைப்பு. இடைவேளையில் காபி குடிக்க வந்த போது ஏறக்குறைய எல்லாருக்குமே எனக்கிருந்த அதே சிலிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

 இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தது.

 என் பிரமிப்பும் சிலிர்ப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. அதற்கப்புறம் வில்லனையும் அவன் ஆட்களையும் அடித்துத் துவைக்கிற சாதாரண விஜய் படம். கைப்பற்ற வேண்டிய வீடியோ கேஸட் வைத்திருக்கும் பிக்பாக்கெட்காரனுக்கு வில்லன் ஃபோன் செய்யாமல் என்கேஜ் செய்து வைப்பது நல்ல ஐடியா. வில்லனை ஜெயிலிலிருந்து தப்ப வைத்து (வில்லன் ஒளிந்திருந்து ஏமாற்றி தன் சொந்த முயற்சியில் தப்புவதாகத்தான் காட்டுகிறார்கள். விஜய், ‘நீ தப்பிச்சதும் என் ஐடியாதான்’ என்கிறார்!) மந்திரி கொலையில் சிக்க வைப்பதும் நல்ல ஐடியாதான்.

 ஆனால் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்.

 வில்லன் திரும்பவும் தப்பித்துப் போய் மலைக் குகையில் ஒளிந்து கொண்டு அப்புறம் சொத்து சொத்து சண்டைகள். இடுப்பில் கத்தியை சொருகிய பிறகு விஜய் எட்டு பேரைப் போட்டுத் தள்ளுகிறார். சித்தப்பா திடீரென்று கட்சி மாறுவது சஸ்பென்ஸ் இல்லை, சொதப்பல்.

 ரெக்கார்டிங் வெகு சிறப்பு. 3டி ஒலி அமைப்பை நன்றாக உணர முடிகிறது. விஜய் பாடும் பாட்டும் நன்றாக இருக்கிறது. அமலா பால் அழகோ அழகு.. மிடுக்கோ மிடுக்கு. இடைவேளை விட்டதும் ஓடி விடுங்கள்…

அப்படி ஒரு தேவாரம் இருக்கிறதா?

தவப்புதல்வன் படத்தையும் அந்தக் காலத்தில் ரசித்துப் பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தின் பாடல்களும் என் அபிமானப் பாடல்களாகவே இன்று வரை இருக்கின்றன.

 ஆனால், அந்தப் படத்தில் வரும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலையும் அந்தக் காட்சியையும் இன்று பார்த்தால் வேறு மாதிரி சிந்தனைகள் வருகின்றன.

 அந்தக் காட்சியில் வரும் முதியவர் அக்பர் என்கிற கண்ணோட்டத்துடன் சின்ன வயதில் பார்த்தேன். அவர் ஒரு வைத்தியர் என்று இப்போது புரிகிறது. தான்சென், வைத்தியர், ஒரு இளம்(?)பெண். அந்தப் பெண் அக்பர் மகள் மெஹருன்னிஸாவாக இருக்கலாம். அவள் தான்செனுக்கு ரூட் விட்டதால்தான் அவர் இஸ்லாமியராக மதம் மாறி அவளை மணந்து கொண்டார் என்கிறது சரித்திரம். ஆகவே அது மெஹருன்னிஸா என்பது தொண்ணூறு சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

 காட்சி அமைப்பைப் பார்த்தால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதும், பாட்டைக் கேட்டதும் குணமாகி எழுந்திருப்பதும் புரிகிறது. தான்சென் பாடியது குணமாகவா? தீபத்துக்காகவா அல்லது இரண்டுக்குமா?

 சீக்காளிக்குப் பாடியதாக சரித்திரத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. தீபத்துக்காகப் பாடியதாகவும் இல்லை. அவருடைய இசை தீபங்களை ஒளிபெறச் செய்யுமளவு சக்தி வாய்ந்தது என்று சரித்திரம் சொல்கிறது. சரி, அது ஒரு கனவுக் காட்சி; கனவுகள் சரித்திர வரையரைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால்,

 ஒளி பெருங்கள் தீபங்களே, இன்னும் ஒளி வரவில்லையே பாவியா நான், ஒளி வேண்டும் என்று கெஞ்சுகிறேன் என்கிற அர்த்தத்திலெல்லாம் அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ஏதோ தான்சென் கெஞ்சிக் கூத்தாடி ஒளி வரவழைத்தது போல இருக்கிறது இது. சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு இசை வித்தகனை இது இழிவு படுத்துவது போலில்லை?

 இந்தக் காம்ப்ரமஸுக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். சிவாஜி படங்களுக்கென்று சில ஸ்டாண்டர்ட் காட்சிகள் அவசியம் என்று அன்றைக்கு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், ஏன்… சிவாஜியும் கூட நினைத்தார்கள். தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசைக் கலைஞர். தத்தித் தகஜுண தகதிமி தகஜுண என்று குதித்து வீரு கொண்டு எழுகின்ற பாடல்களை ஹிந்துஸ்தானியில் பார்க்க சாரி கேட்க முடியாது. அதே படத்தில் வரும் போட்டிப் பாடலில் கூட ஹிந்துஸ்தானி கலைஞருக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதிகள் ரொம்பக் குழைவாகத்தான் இருக்கும்.

 நடிப்பது சிவாஜி என்பதால் தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கலைஞர் என்பதை சௌகர்யமாக மறந்து விட்டு எம்.கே.டி. பாணி பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை அங்கும் இங்கும் சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி பாடி நடித்திருக்கிறார் சிவாஜி. இது காலத்தின் கட்டாயம். அவர் ரசிகர்கள் இதை எதிர்பார்த்தார்கள், ரசிக்கவும் செய்தார்கள்.

 திருவருட் செல்வர் படத்தில் வரும் ‘தாள் திறவாய்’ பாடல் குறித்தும் எனக்கு இதே சந்தேகம் உண்டு. தாளே திறவாய் என்கிற பொருள் வருமாறு அப்பர் தேவாரம் ஏதேனும் இருக்கிறதா என்று தேவாரப் புலிகள் பகிரலாம்.

சிவபெருமானுக்கு அரைக் கண்தான்

”சினிமாப் பாட்டுல இருந்து ஒரு விடுகதை போடறேன், விடை சொல்றியா?”

 ”என்ன கேக்கப் போறே, இளநீர் காய்க்கும் கொடி எதுன்னா?”

 “அட, இந்தக் கேள்வி கவர்ச்சியா இருக்கே.. எந்தப் பாட்டுல இது?”

 “’இது என்ன கூத்து அதிசயமோ, இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ ந்னு புதியவன் படத்துல ஒரு பாட்டு. இந்தக் கவர்ச்சி விடுகதை சினிமாக் கவிஞர்களைப் பலகாலமா தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கு. இடுப்பைப் பார்த்தேன் பிரம்மன் கஞ்சன், நிமிர்ந்து பார்த்தால் அவன் வள்ளல்ன்னு வேறொரு பாட்டு.”

 “கரெக்ட்டுதான். வெறும் கவர்ச்சி மட்டும் இல்லாம கவித்துவமும் சேர்ந்த விடுகதையும் இருக்கு இது மாதிரி”

 “எது அந்தப் பாட்டு?”

 “இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல, மழை மேகம் குடை பிடிக்கும் குளிர்நிலவும் அல்ல, இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ந்னு வர்ர வரிகள் கூட விடுகதைதான். வாலி எழுதினதுன்னு நினைக்கிறேன்.”

 “அவரே இன்னொரு பாட்டில காதலன் பெண்ணிடம் தேடுவது, காதலி கண்களை மூடுவது அது எது? ந்னு விடுகதை போட்டிருக்கார். நீ போட வந்த விடுகதை என்னன்னு சொல்லவே இல்லையே?”

 “அது ரொம்ப ஸில்லி. அதுல கவர்ச்சியும் இல்லை பெரிய கவித்துவமும் இல்லை. ஆனா கொஞ்சம் குசும்பு மட்டும் இருக்கு”

 “இதுவே ஒரு விடுகதை மாதிரி இருக்கு. பாட்டைச் சொல்லு”

“கமலா கல்யாணி, வசந்தா வந்தாளாம் மூணும் மூணு பொண்ணுங்க. பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரைக் கண்ணுங்க.. அதான் பாட்டு”

 ”அது சரி. எனக்கு ஒண்ணரைக் கண் பத்தி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

 “என்னது?”

 “ரெண்டு கண்ணால பார்த்தா ஒரு பொருள்தான் தெரியுது. ஒன்றரைக் கண்ணால பார்த்தா ரெண்டு பொருள் தெரியுதே எப்படி?”

 “ஏன், ஒன்றரைக் கண்ணுக்கு ரெண்டு பொருள்ன்னா, ரெண்டு கண்ணுக்கு பழிக்குப் பழி ஒன்றரை பொருள்தான் தெரியணும்ங்கிறியா?”

 “ஈக்வேஷன் சரியா இல்லையே. ஒண்றைக்கு ரெண்டுன்னா ரெண்டுக்கு டூ பாயிண்ட் சிக்ஸ் சிக்ஸ் பொருள் தெரியணும்”

 ”அப்டியெல்லாம் நேர் விகிதத்தில ஏத்திகிட்டு போக முடியாது. அப்ப சிவபெருமானுக்கு நாலு பொருளா தெரியும்?”

 “ஏன் சிவபெருமானுக்கு மூணு கண்ணா?”

 “இது தெரியாதா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஏ.பி.நாகராஜன்.. சாரி நக்கீரர் சேலஞ்ச் பண்ணது தெரியாதா?”

 “ஆக்சுவலா சிவ பெருமானுக்கு அரைக் கண்தான்”

 “என்ன இது ஈ இஸ் ஈக்வல் டு எம் ஸி ஸ்கொயர் மாதிரி புது ஈக்வேஷன் ஏதாவது சொல்லப் போறியா?”

 “கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா அவ்வளவு காம்ப்ளிகேட்டட் ஈக்வேஷன் இல்லை. ரொம்ப சிம்ப்பிள்”

 ”எப்படி? சொல்லு?”

 “சிவனுக்கு இடப்பாகத்தில யார் இருக்காங்க?”

 “உமைக்கு இடப்பாகத்தைத் தந்து பெண்களுக்கு சம உரிமை….”

 “ஸ்டாப். அப்படி சம உரிமை தந்தப்போ இடது கண்ணும், நெற்றிக் கண்ல பாதியும் போச்சா?”

 “சரி, பாக்கி ஒண்ணரைக் கண் இருக்கே?”

 “அதுலயும் வலக் கண் கண்ணப்ப நாயனார் கொடுத்ததாச்சே. அப்ப மீதி எவ்வளவு?”

 “அடக் கடவுளே. நீ என் இப்படி இருக்கே? ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை?”

 “மன்னிக்கவும். இது என் சிந்தனை இல்லை. சொக்கநாதப் புலவருடையது”

 “சுஜாதாவின் ராகவேனியம் கதைல செந்தில்நாதப் புலவர்ன்னு ஒருத்தர் வந்து இளநீர், நாமக்கட்டி, திரிபலை எல்லாம் போட்டு சரக்கு காய்ச்சி ஏமாத்துவாரு. இவர் யார் சொக்கநாதப் புலவர்?”

 “இவர் நிஜமாவே புலவர்தான்

 முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்

அக்கண்ணற் குள்ளதரைக் கண்ணே-மிக்க

உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்

றமையு மிதனாலென் றறி

 அப்டீன்னு ஒரு வெண்பா எழுதியிருக்கார்”

 “ஐய்யோ.. அழுக்கு அரதைப் பழசு புஸ்தகங்கள்ள எதையாவது படிச்சிடறே. படிச்சிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை. உடனே விடுகதை போட வேறே வந்துடறே.. முடியல”

 “கரெக்ட் இன்னும் முடியல்ல.. வேற ஒரு பாட்டுல மான், மான் ந்னு வான் நிலா பாட்டு மாதிரி…..”

 “ஹோல்டான்… இன்னைக்கு இவ்ளோ போதும்”

 “சரி, பிழைச்சிப் போ”

இசைத்தட்டு ஜோக்ஸ்

பெங்களூரில் ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளெக்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  
 
ஒரு கடை வாசலில் நூறு வருஷத்துக்கு முந்தைய கிராமபோன் ஒன்றை வைத்திருந்தார்கள். பித்தளைக் கூம்பை புளி போட்டு தேய்த்து பள பளவென்று வைத்திருந்தார்கள். ஒரு சின்ன உந்துதல் ஏற்பட்டு விலையை விசாரித்தேன்.
 
அவர்கள் சொன்ன விலையில் சோனி பத்தாயிரம் வாட்ஸ் மியூசிக் சிஸ்டமே வாங்கலாம். பர்சில் சில அழுக்கு பத்து ரூபாய் நோட்டுகளும் ஒன்றிரண்டு நூறு ரூபாய்களும் மட்டுமே இருந்ததால் அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன்.

கிராம போன் ஒரு அற்புதம்.

சாவி கொடுத்து ஓடுகிற மோட்டார்.  அதிர்வுகளை முழுக்க மெக்காநிக்கலாகவே ஒலிக்கூட்டுகிற அமைப்பு. ஊசியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இசைத்தட்டை நோண்டி நுங்கெடுத்து விடும். இந்த மாசம் நூற்றாண்டு காணுகிற மறைந்த என் சித்தப்பா  சப்பாத்திக் கள்ளி முள்ளை வைத்து கிராம போனை ஓட்டி அந்தக் காலத்திலேயே value functional analysis செய்தவர். கிராமபோன் காலத்தில் ஒரே ஸ்பீடுதான். 78 ஆர்பிஎம். பாட்டுக்களை எல்லாம் மூணரை நிமிஷத்துக்கு செதுக்க வேண்டிய கட்டாயம்! அதனால்தான் அந்தக் காலப் பாட்டுக்களில் பல இரண்டாம் சரணம் முடிந்து பல்லவி வரும் போதே கிணற்றுக்குள் போய் விடும்.

ரிக்கார்டுகள் நாளா வட்டத்தில் தேய்ந்து நீடிலை எடுத்துப் போட்டதுமே கர்ர் என்று உப்புத்தாளை காரைச் சுவரில் தேய்த்த மாதிரி சத்தம் வர ஆரம்பித்து விடும். கொஞ்ச காலம் கழித்து வேறே ரிக்கார்ட் வாங்கியே ஆக வேண்டும்.

ஹெச் எம் வீக்கு நல்ல வியாபாரம் ஆயிற்று.

அதற்கப்புறம் வைர ஊசி வைத்த ரிகார்ட் ப்ளேயர்கள் வரும் போது நிறைய முன்னேற்றங்கள். நாலு வெவ்வேறு ச்பீடுகள். தாம்பாளம் சைசில் எல்பி ரிக்கார்டுகள். நாற்பத்தைந்து ஆர்பிஎம் வேகத்தில் ஓட வேண்டிய காருக்குறிச்சி அருணாச்சலத்தை பதினாறில் போட்டு ஜாஸ் இசையில் டிரம்ப்பெட் ஊதுவது மாதிரி இருப்பதை ரசிப்போம்.

முப்பத்திமூன்றில் ஓடவேண்டிய பாலமுரளி கிருஷ்ணாவை நாற்பத்தைதில் ஓட்டும் போது “என்ன இழவு இது, ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியாம ஒரு குரல். யாரு பாடறா?” என்று பயப்படுவார்கள்.

இசைத்தட்டுக்கள் தொடர்பான சில அனாச்சார ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.
 
தேர்தலில் தோல்வியடைந்த ஒரு கட்சி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 
 ‘சித்திரம் பேசுதடி’என்கிற பாட்டைப் போட்டார்கள். இசைத்தட்டில் ‘பே’ க்கு அப்புறம் கீறல் விழுந்து விட்டதாம். அடுத்த மூன்று எழுத்துக்களை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்ததாம். அவசரமாக தலைவர் டென்ஷன் ஆகிவிடப் போகிறாரே என்று ரிக்கார்டை மாற்றினார்களாம்.
 
பிரம்மச்சர்யத்தின் சிறப்பைப் பற்றி பேசுவதற்காக ஒரு கூட்டம். அதில் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ என்கிற பாட்டைப் போட்டார்கள். அந்த நிலாவத்தான் என்று ஆரம்பித்ததுமே கீறல். அடுத்த மூன்று வார்த்தைகள் மாறி மாறி ஒலிக்க இசைத்தட்டைப் போட்டவர் ஓடிப்போய் நிறுத்தினார். 
 
இசைத்தட்டுக் கடையில் ஒரு பிரபல பாடகியின் பெயரை எழுதி, ‘மாலைப் பொழுதினில், காலைத் தூக்கி, கண்டதுண்டோ’ என்று எழுதியிருந்தார்கள். பயந்து போய் விசாரித்தால் அவர் பாடிய அந்த மூன்று பாடல் இசைத்தட்டுக்களும் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
 
உதைக்க வேண்டும் என்கிற உந்துதல் எழுந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு தரம் புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லிக் கொள்ளவும். உடம்புக்கு நல்லது.
 
கடைசியாக ஒரு கேள்வி, (பழசுதான்) ஹெச் எம் வி இன் லோகோவில் இருக்கும் நாய் ஆம்பிளையா பொம்பிளையா?

தமிழ் சினிமா இசை

எழுபத்தைந்தாம் வருஷம் வரை தமிழ் சினிமா இசையில் எழுதப்படாத சில வரையறைகள் இருந்தன.

அக்கார்டின் வாசித்தால் கதாநாயகி தொடர்பான லைட்டான காட்சி. டொயின்டோற டொயின்டோற என்று வீணை வாசித்தால் பாசப்பிணைப்பு. டுடுடுடுடுடு டும் என்று டிரம் வாசித்தால் போலீஸ். மேல் ஸ்தாயியில் ஷெனாய் வாசித்தால் சோகம். கித்தாரை தளர்ந்த கம்பியில் மீட்டி வயலினில் ஒரு தூக்கு தூக்கினால் காமெடி. சந்தூர் அல்லது சைலோபோனில் கீழ் சுரத்திலிருந்து மேல் சுரம் வரை ஒரு ஓட்டு ஓட்டினால் ‘வடுமாங்காய் பிலிம்சார் வழங்கும்’ என்று படம் ஆரம்பிக்கிறது. வயலின் கோஷ்டி ‘ச..நி…ச..’ என்கிற ஸ்வரத்தில் தேய்த்தால் எழுத்து முடிந்து டைரக்டர் பேர் வந்து விட்டது.

கதாநாயகனுக்கு டிஎம்எஸ் தான் பாட வேண்டும். கதாநாயகிக்கு பிசுசீலா அல்லது சில சமயம் ஜானகி. விதி பாடுகிற பாட்டுக்களை சீர்காழி பாடுவார். காமெடியனுக்கு ஏ.எல்.ராகவன், கமேடிச்சிக்கு ஜமுனாராணி. கவர்ச்சி நடிகைக்கு எல்.ஆர்.ஈஸ்வரி. ஏ.எம்.ராஜாவை ஏறக்குறைய ஜெமினி கணேசனுக்காகவே ஒதுக்கி வைத்திருந்தார்கள். பி.பி.ஸ்ரீநிவாசும் அப்படியே. அவர் ஜெமினிக்கும் சில சமயம் முத்துராமனுக்கும் பாடுவார்.

எம்ஜிஆரோ, சிவாஜியோ பிபிஎஸ் அல்லது ஏஎம் ராஜா குரலில் பாடுவதை ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆனால் எம்ஜியார் இதை அந்தக் காலத்திலிருந்தே மெதுவாக உடைக்க முயன்றிருப்பது தெரியும்.

‘பால் வண்ணம் பருவம் கண்டு’ பாடலை பிபிஎஸ் ஐப் பாட வைத்தார்.

அடிமைப்பெண் படத்தில் எஸ்பிபி யைக் கொண்டு வந்தார்.(இன்னொரு டேக் கேட்டதற்கு டிஎம்எஸ் ஒப்புக் கொள்ளாததால்தான் இந்த மாற்றம் என்று பரவலாக ஒரு பேச்சு உண்டு. நிஜமோ இல்லையோ யாமறியோம்). உரிமைக்குரல் படத்தில் யேசுதாசை ரீ எண்ட்ரி செய்தார்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் ஜெயச்சந்திரனை பாட வைத்தார்.

ஆனாலும் கமல் ரஜினி காலத்திலும் இந்த மித் முழுசாக உடையவில்லை.

இளைய தலைமுறைக்கு டிஎம்எஸ் பாடுவதில்லை. எஸ்பிபிதான் பாடுவார். மலேஷியா வாசு பெரும்பாலும் ரஜினிக்குதான் பாடுவார். கமலுக்கு அவர் பாடுவது கேரக்டரைப் பொறுத்தே இருக்கும்.

கதாநாயகன் அறிமுகப் பாட்டு, குத்துப் பாட்டு (அல்லது ஐட்டம் சாங்), கிளைமாக்சுக்கு முன்னால் ஒரு பாஸ்ட் நம்பர் என்கிற மாதிரி சின்னச் சின்ன சூத்திரங்கள் இப்போதும் இருக்கின்றன.

ஆனாலும் இசைக்கென்று ஒரு சுதந்திரமும், நடிகர்களோடு தொடர்புப் படுத்தி நிறைய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு நல்ல நிலை என்று நினைக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள்?

எலும்பொடு சதை நரம் புதிரமும்

இளையராஜாவின் ‘பிச்சைப் பாத்திரம்’ பாட்டைப் பற்றி ஏகப்பட்ட ப்ளாக்கர்கள் எழுதிவிட்டார்கள்.
 
அதற்காக நான் எழுதாமல் இருக்க முடியுமா?
 
என்னை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பாட்டு ஆட்கொள்ளும். இது என் சின்ன வயசிலிருந்தே இருக்கிற சீக்கு.
 
ரொம்ப விவரம் புரியாத வயதில் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’. இந்தப் பாட்டை நான் பாட ஆரம்பிக்கிற போதே என்னை ‘ம்ம்ம்ம்’ என்று அதட்டி அடக்குவார்கள். அதெப்புடி? அதுக்கெல்லாமா நாங்க அடங்குவோம்? இந்த எச்சரிக்கை எல்லாம் நமக்கு சிகரெட் பெட்டியிலோ சரக்கு பாட்டிலிலோ எழுதப் படுகிற எச்சரிக்கை மாதிரிதான். அந்த எச்சரிக்கைகள் சிகரட் பழக்கத்தையோ, குடிப் பழக்கத்தையோ குறைத்தனவா என்ன?
 
அதற்கப்புறம் ‘ஆயிரம் நிலவே வா’
 
இந்தப் பாட்டு வருகிற போது நான் சௌந்தரராஜனின் டை ஹார்ட் பான். ‘அய்யோ, அய்யோ…. இவனெல்லாம் பாடி, அது ஹிட்டாகி…. ‘என்று கிண்டலோடு கேட்டேன். ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்தப் பாட்டு பயங்கர ஹிட்டாகி கல்லூரி மாணவர்களை கவர்ந்தது. மருத்துவக் கல்லூரியில் படித்த என் சகோதரரின் நண்பரை சீனியர்கள் வச்த்ராபரணம் செய்து பெண்கள் ஹாஸ்டல் வாசலில் போய் பாடச்சொன்ன பாட்டு அது!
 
அடுத்த ஸ்டேஜில் ‘வேலாலே விழிகள்’.
 
இந்தப் பாட்டில் ரொம்பக் கவர்ந்து போய் படத்தைப் பார்க்கப் போன எனக்கு ஆச்சரியம். அந்தப் பாட்டு வில்லியோடு கதாநாயகன் படுகிற பாட்டு. இதற்கப்புறம் பல வருஷம் கழித்து வந்த அடுத்த வாரிசு என்கிற படத்துக்காக ‘பேசக் கூடாது’ என்றொரு பாட்டு கம்போஸ் செய்திருந்தார்கள். ஸ்ரீதேவி ஹிந்தியில் பிசியாகி ஷூட்டிங்குக்கு வராமல் ஏவிஎம் மை சோதித்தார். அவர் கிட்டயா செல்லுபடியாகும்? சிலுக்கைப் போட்டு எடுங்கடா என்று சொல்லி விட்டார்.
 
எங்கே விட்டேன்…. ம்ம்ம்ம்…. வேலாலே விழிகள். அதற்கப்புறம் ‘இலக்கணம் மாறுதோ’. அப்புறம் ‘அவளே என் காதலி’.
 
அதற்கப்புறம் நிறைய. இப்போது, இந்த நிமிஷம் ‘பிச்சைப் பாத்திரம்’.
 
இளையராஜாவின் பல ஹிட் பாடல்களில் இருக்கும் ஒரு மதர்ப்பு இதிலும் இருக்கிறது.
 
சந்தங்களை சரியான வார்த்தைகள் கொண்டு நிரப்பி பாடுகிறவனுக்கு இம்ப்ரோவைஸ் செய்ய வாய்ப்பே இல்லாத தன்மை இதிலும் இருக்கிறது!
 
எலும்போடு சதை நரம் புதிரமும் அடங்கிய உடம்பு எனும்……
 
என்கிற வரிகளைக் கேளுங்கள். அது வெறும் இட்டு நிரப்பல் மட்டுமில்லை.
 
இந்தப் பாட்டை முதலில் கேட்ட போது எழுதியவர் பட்டினத்தாரோ அல்லது அகப் பேய்ச் சித்தரோ என்று நினைத்தேன்!

ஞாபகம் வருதா, ஞாபகம் வருதா….

பொழுது போகல்லை ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாமா?

கீழே சில சினிமாப் பாட்டுக்களின் சரணத்திலேர்ந்து சில வரிகள் தந்திருக்கேன். இந்தப் பாடல்களின் பல்லவி என்ன என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.

1 . எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும்……

2 . பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடையின்னும் நூறாண்டு சென்றாலும்

3 . ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளிக் கம்பி என்று ஆகியதே…

4 . உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும்….

5. நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
உள்ளங்கையில்தான் வந்து சேராதோ
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாளே….

இப்போதைக்கு இது போதும். பிடிச்சிருந்தா சொல்லுங்க அடிக்கடி விளையாடலாம். விடைகள் நாளை காலை பின்னூட்டமாக.

உதித் நாராயணின் மழலை

உதித் நாராயன் பாடும் தமிழ் பாடல்கள் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன.

ஒரு மேடையில் அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே விவேக் காமன்ட் அடித்தார்.

இது குறித்தான என் கருத்துக்கள் கொஞ்சம் முரண்பட்டவை.

வேற்று மொழியினர் பேசும் தமிழை மழலைக்கு ஒப்பிடலாம். நட்சத்திரம் என்பதை குழந்தை நக்கச்சரம் என்று சொல்கிற போது அதை நாம் கிண்டல் செய்வதில்லை. ரசிக்கிறோம்.

மேலும்

ஒரு வேற்று மொழிக்காரர் நம் மொழியைப் பேசவோ பாடவோ செய்கிற போது அதில் நமக்கு ஒரு பெருமிதம் இருப்பதை உணர வேண்டும். அவரை இன்னும் சிறப்பாகப் பேச அல்லது பாட நம்முடைய ஊக்கம் மட்டுமே துணையாக இருக்கும்.

சித்திரம் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

கொஞ்சம் பழகினால் வித்யாசம் நிச்சயம் தெரியும்.

அதற்கப்புறம் நம் மொழியைப் பேசுகிற ஒரு உபரி மனிதர் கிடைத்த பெருமை நமக்கு வந்து விட்டுப் போகிறது!

ஆங்கிலேயர் ஜான் ஹிக்கின்ஸ் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது அவரை ஊக்குவித்ததால்தானே ‘சிவ சிவ என ராதா’ பாடலை அட்சர சுத்தமாக அவரால் பாட முடிந்தது?

அவ்வளவு எதற்கு, நம்ம பக்கத்து ஊர் யேசுதாஸை விமர்சனம் செய்தார்களே… ‘தெருக் கோயிலே ஓடிவா’ என்று. ‘மோகம் என்னும் தீயில் என் மனம்’ பாட்டைக் கேளுங்கள். வல்லினமும், மெல்லினமும் இடையினமும் போட்டு பின்னி எடுத்த வைரமுத்துவின் வைர வரிகளை அவர் உச்சரிப்பு பட்டை தீட்டுகிறதே?

உதித்தின் சங்கீதத் திறமை அசாத்யமானது.

கொஞ்சம் பொறுத்திருங்கள். அதற்கப்புறம்,

‘அடடா கடலாடி வெள்ளைக் கோழி கிழடல்ல மலடல்லவே’ என்று எழுதிக் கொடுத்தால் கூட பிரமாதமாக உச்சரிப்பார்.

ஹிந்தி பேசுகிற பல மாநிலங்களுக்கு நான் போயிருக்கிறேன்.

என்னுடைய ஒண்ணரையணா ஹிந்தியை யாரும் விமர்சித்ததே கிடையாது. சந்தோஷமாக என்னோடு ஹிந்தியில் உரையாடுவார்கள்.மும்பையில் நடந்த நண்பர் வீட்டு திருமண ரிசப்ஷனில் ஹிந்தி பாட்டுக்களைக் கூடப் பாடி கை தட்டல் வாங்கியிருக்கிறேன்!

பெண் குளிப்பது…

தப்பான வார்த்தைகள் ஏதுமின்றி, ஒரு பாடல் வரிகள் படு கவர்ச்சியான காட்சியை மனக்கண்ணில் நிறுத்த முடியுமா?

இந்த வரிகளைப் பாருங்கள் :

‘கொடி நீருக்குள்ளே மலர் மேலே-

பெண் குளிப்பது தாமரை போலே’

‘அவளே என் காதலி’ என்று தொடங்குகிற இந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள்.

பாத்தீங்களா, படிச்சதும் காட்சி மனசிலே தெரியுது…

இதுவும் கண்ணதாசனின் சிறப்புக்களில் ஒன்று. பேரும் புகழும் படத்துக்காக அவர் எழுதிய இந்தப் பாடலின் அடுத்த வரி கொஞ்சம் விவாதத்துக்குரியது.

‘நான் நீராய்ப் பிறந்திருந்தாலோ

இந்நேரம் என்னென்னவோ’

‘நீராயா, மீனாயா?’ என்று இளைஞர்களுக்குள் விவாதம் நடக்கும்.

“என் சாயிஸ் நீர்தான்” என்றான் ஒருத்தன்.

“ஏண்டா?”

“திறந்திருக்கிற வீட்டிலே கதவை நாக் பண்ணிக்கிட்டு நிக்கிறது என் பழக்கமில்லே. நேரா உள்ளே போயிடுவேன்”