பெரியார்

ஓ.. அவனா நீயி?

”என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா?”

 “ஆமாம்; காமராஜ் சிலைக்கு நீ சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு”

 “தாடி, கைத்தடியா? எந்த ரூட்ல வந்தே?”

 “ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா?”

 “ப்ச்.. ரூட்டைச் சொல்லு”

 “அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னே இல்லே?”

 “ஆமாம்”

 “கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்”

 “ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே?”

 “கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தோம்”

 “தப்பு பண்ணிட்டியே”

 “என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா?”

 “நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா?”

 “நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்?”

 “ஐய்ய்யோ…. சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே?”

 “பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னே?”

 “அது நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”

 “தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே?”

 “என்ன உளர்ரே?”

 “ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே?”

 “முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே?”

 “இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீ சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்”

 “ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு”

 “போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இரு…. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”

 “தெருப் பேராத்தான் இருக்கும். படி”

 “இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”

 “ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு”

 “ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..”

 “நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா”

“இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…”

“அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா”

 “ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு”

 “அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே”

 “பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே?”

 “அந்தத் தெரு பேரே அதாண்டா. சரி. அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு”

 “ஆச்சு.. சொல்லு”

 “இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா.”

 “வந்தாச்சு”

 “வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்.”

 “அமல…..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே”

 “அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு”

 “ஆச்சு”

 “என்ன தெரியுது?”

 “பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது”

 “அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்”

 “அவங்க திருப்பி அடிப்பாங்களே?”

 “நான் உன்னைச் சொன்னேன்”

 “என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?”

 “மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…”

 “போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?”

 “டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?”

 “இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?”

 “டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?”

 “பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?”

 “விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?”

 “நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?”

 “அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா”

 “ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது?”

 “என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ”

 “போயி?”

 “உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை”

அது நீ சொல்றது…

”யோவ்.. காவி வேட்டி, நா ஒருத்தன் குத்துக் கல்லு மாதிரி திண்ணையில உட்கார்ந்திருக்கேன்… இங்கே யாருமே இல்லை மாதிரி நீ பாட்டுக்க போய்கிட்டு இருக்கே?”

”அடேடே.. கறுப்புச் சட்டையா, நா கவனிக்கவே இல்லைய்யா”

“நா உன்ன கவனிச்சிகிட்டுத்தான் இருப்பேன். இங்கே வாயேன், ரொம்ப நாளா உன்னை ஒண்ணு கேக்கணும்ன்னு”

“ம்ம்ம்… உனக்கு பொழுது போகல்லை, எனக்கும் வேறே வேலை இல்லை. போய் டிஃபனைச் சாப்டுட்டு வரலாம், அப்புறமா வெச்சிக்கலாம் நம்ம அக்கப் போரைன்னு நினைச்சேன்”

“அந்த டிஃபனை நம்ம வீட்ல சாப்பிடக் கூடாதா? தமிழரசி, வெங்கி வந்திருக்கான். அவனுக்கும் சேர்த்து இட்லி எடுத்துகிட்டு வா”

“தொட்டுக்க என்ன?”

“தொட்டுக்கத்தான் நீ இருக்கியே. உங்கூட விவாதம் பண்ணிகிட்டே ஒரு டஸன் இட்லி தின்னுடலாம்”

“சீரியஸா சொல்லுய்யா”

“தேங்கா சட்னிதான்”

“மன்னி, எனக்கு மிளகாய்ப் பொடி. கலைக்கு மட்டும் தேங்கா சட்னி”

“ஏன்ண்ணே.. மிளகாப் பொடி வேற எதுவும் இல்லாதப்பதான, அதான் தேங்கா சட்னி இருக்கே?”

“அங்கதான் தப்பு பண்றீங்க மன்னி. அந்தக் காலத்துல ஒண்ணுமில்லாதவன் கூழ் குடிச்சிகிட்டு இருந்தான். அது ஒண்ணுமில்லாதவன் சாப்பிடறதுன்னு விட்டு வெச்சிருக்காங்களா? ஸ்டேஷன் பக்கத்துல புதுசா வந்திருக்கே கீதா பவன், அங்கே ஏ.ஸி. ரெஸ்டாரண்ட்ல கேப்பைக் கூழ் தர்ரான். விலை தெரியுமா, ஒரு கிளாஸ் எழுபத்தஞ்சு ரூபா”

“இப்ப என்னடா சொல்ல வர்ரே, மிளகாய்ப் பொடியில ஏழு வைட்டமின்கள் எட்டு மினரல்கள் இருக்குங்கிறியா?”

“சீச்சீ.. எளிமையானதெல்லாம் ஏளனத்துக்குரியது இல்லைன்னு சொல்றேன்”

“அண்ணன உங்களால மடக்கவே முடியாது”

“உங்கண்ணன் என்ன ஃபோல்டிங் சேரா மடக்கறதுக்கும் பிரிக்கிறதுக்கும்”

“மடங்கினாத்தான் மன்னி உடையாம இருக்க முடியும். இல்லைன்னா உடைஞ்சி போக வேண்டியிருக்கும். அவன் மடக்கட்டும், நான் மடங்கிக்கறேன். இந்தாங்க கோமளவல்லித் தாயார் பிரசாதம்”

“ம்ம்க்கும். நீ எதையாவது கொண்டாந்து நீட்டு. அவ பக்தியோட வாங்கி பூசிக்கட்டும். இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொன்னாலும் திருந்த மாட்டீங்கடா”

“சரியாச் சொன்னே. மூட நம்பிக்கைதான். மனசில இருக்கிற இருட்டை மூட நம்பிக்கை.”

“பாத்தீங்களா நா சொல்லல்லை, நீங்க சொன்னதை வெச்சே உங்களை மடக்கிரும் அண்ணன்”

“சரி, சரி.. நீ வேற ஜால்ரா அடிக்காத. இட்லிய வெச்சிட்டுப் போ”

“சரி, ஏதோ ரொம்ப நாளாக் கேக்கணும்ன்னு இருக்கேன்னு சொன்னியே… என்ன அது?”

“யாரோ கோமளவல்லின்னு சொன்னியே, அவங்க யாரு?”

“இங்கதான், உன் தெருக் கோடியில இருக்காங்க”

“பெருமா கோயில்ல இருக்கிற கோமளவல்லி சிலையா?”

“பெருமா கோயில்ல இருக்கிற கோமளவல்லி”

“அது நீ சொல்றது. ஆக்சுவலா அது சிலைதானே?”

“ஏங்க, அண்ணன் இட்லிய சாப்பிடட்டும். பசியோட இருப்பாரு, கோய்ச்சிகிட்டுப் போய்டப் போறாரு”

“எனக்கு ஏன் மன்னி கோபமெல்லாம் வருது. நானும் இவனும்தான் அம்பது வருஷமா இப்படிப் பேசிகிட்டு இருக்கமே. அந்த டிவி மேல இருக்கே, அதை எடுங்க”

“இதுவா…. நேத்துதான் அமெரிக்காலேர்ந்து மெயில்ல அனுப்பியிருந்தா மருமக… நம்ம செல்வி பிரிண்ட்டு போட்டு லேமினேட் பண்ணியிருக்கு.. நல்லா மூக்கும் முழியுமா இருக்கான் இல்லை?”

“அதை இப்படி எடுங்க மன்னி…. கலை, யார்ரா இது?”

“என் பேரன்டா”

“இது உன் பேரனா?”

“பின்னே.. இவன் நம்ம செழியன் புள்ளடா”

“இது உன் பேரந்தானா?”

“செழியன் புள்ளடாங்கிறேன். மறுபடி மறுபடி அதையே கேட்டுகிட்டு இருக்கியே. செழியன் எம்புள்ளதானே?”

“இது உன், பேரனா?”

“ஆமாண்டா, ஆமாம்”

“அது நீ சொல்றது.. ஆக்சுவலா இது ஃபோட்டோதானே?”

ஏன் நாத்திகமும்,மதமாற்றங்களும் வளர்கின்றன?

News-151009

நாத்திகம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக இருக்கிறது என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.

மேலே இருக்கும் செய்தியைப் படியுங்கள்.

ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த ராஜகோபாலாச்சாரியாரும், வைக்கம் வீரர் ஈ.வெ.ரா. அவர்களும் தமிழ் நாட்டவர்கள் என்கிற நம் பெருமையில் கரை படியச் செய்கிற நிகழ்ச்சி இது.

தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்காத போதும், தங்கள் பாசத்துக்கு உரியவர்கள் அநியாயமாக மரணம் அடைகிற போதும், தங்களுக்குத் தீங்கு விளைவித்தவர்கள் நன்றாக வாழ்கிற போதும் கடவுள் மேல் கோபம் ஏற்பட்டு நாத்திகர்கள் ஆன நண்பர்கள் எனக்கு உண்டு.

கடவுளை வழிபடுகிற உரிமையே மறுக்கப்படுமானால் ஏன் நாத்திகம் வளராது?

கடவுளுக்கு முன் எல்லோரும் சமம் என்கிற அடிப்படை உண்மை தெரியாதவர்கள் ஆத்திகர்களாக இருந்து என்ன பயன்?

ஜாதி ஒற்றுமையை வளர்க்க சிறந்த இடமே கோயில்தானே?

இப்படிப்பட்ட கடவுளும் எனக்கு வேண்டாம், இந்து மதமும் எனக்கு வேண்டாம் என்கிற நிலைக்கு மக்களைத் தள்ளுகிற செயலல்லவா இது!

எனதன்பு இந்து மத ஆர்வலர்களே, பிற மதங்களை இழித்துக் கூறுவதையும், அவர்களின் மதச் சின்னங்களை அழிப்பதையும் விடுத்து இங்கே வாருங்கள். இது போன்ற செயல்கள்தான் இந்து மதத்தை அழிக்கின்றன.

இவர்களுக்குப் புரிய வையுங்கள்.

இது மாதிரி சம்பவங்கள் தடுக்கப் படுமானால், ஆத்திகம் வளரும், இந்து மதம் வளரும், மனித நேயம் வளரும், ஜாதி வேற்றுமைகள் ஒழியும்.

ஆனால் இது போன்ற மனப்பான்மையை வன்முறையோ, சட்டமோ, காட்டமான விமர்சனங்களோ மாற்றாது. மனதளவில் மாற்றம் வர என்ன செய்ய வேண்டும்? நம் வாசகர்களுக்கு நல்ல யோசனைகள் உள்ளனவா?