போலீஸ்

அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

Advertisements

என்கௌண்ட்டர் விவகாரம்

ஆரம்பத்திலேயே இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தி விடுகிறேன் :

 1. திருடுகிற      எல்லாரையும் போலீஸார் போட்டுத் தள்ள வேண்டும் என்பது என் கருத்தல்ல.
 2. மனித உரிமை      அமைப்புக்கள் இது போன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு      இருக்க வேண்டும் என்பதும் என் கருத்தல்ல.

 பட்டப் பகலில், பரபரப்பாக இருக்கிற நகர்ப்பகுதியில், மாநிலத் தலைநகரில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஒன்றல்ல, ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கொள்ளைகள் நடந்துள்ளன.  கொள்ளை அடித்தவர்களைச் சுற்றி வளைத்து சரணடையச் சொன்ன போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இரண்டு இன்ஸ்பெக்டர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதைத் தொடர விட்டிருந்தால் ஒன்றிரண்டு போலிஸார் மரணமே அடைந்திருக்கக் கூடும்.

 இந்த நிலையில், போலீஸார் துப்பாக்கியை முதுகு சொறியப் பயன்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மேல் நடக்கும் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக் கொண்டு, எந்த வன்முறையும் இல்லாமல் போராட இது சுதந்திரப் போராட்டம் அல்ல. இது ஒரு எமெர்ஜென்ஸி சூழ்நிலை. அப்போது போய் மேஜிஸ்ட்ரேட்டிடம் ஷூட்டிங் ஆர்டர் வாங்கிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் திருடர்களே இல்லை என்றாலும் (அவர்கள்தான் திருடினார்கள் என்று வங்கி அதிகாரிகள் உறுதி செய்தாகி விட்டது வேறு விஷயம்) இது போன்ற சூழ்நிலையில் போலிஸார் திருப்பிச் சுட்டே ஆக வேண்டும். அப்படி இருட்டில், ஒரு வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுடுகிற போது இடுப்புக்குக் கீழே ஃபார்முலாவெல்லாம் நடக்காது.

 பொதுமக்களுக்கு தைரியத்தையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் தருவது கவல்துறையின், அரசின் முதற்பொறுப்பு. கொலை கூடப் பண்ணலாம். ஆனால் அவர்களுக்கு தூக்குதண்டனை கூடாது என்று போராட ஒரு கூட்டம் இருக்கிறது. திருடுகிறவர்களை கைது பண்ணக் கூடாது என்று அவர்கள் சீக்கிரமே போராட ஆரம்பிக்கலாம். ஆஃப்டர் ஆல் இல்லாத குறையில்தானே இருபது லட்சம் திருடுகிறான். பாவம்! என்று வாதிடுவார்கள்.

 அரசாங்கம் பொதுமக்களின் பயத்தைப் போக்குகிற மாதிரி செயல்படும் போது பாராட்ட வேண்டாம், அதைக் குறை கூறாமலாவது இருக்கலாமே?

 பேர் தப்பாகிப் போன ஒரே காரணத்தால் கொல்லப்பட்டது திருடர்களே அல்ல என்கிற மாதிரி பிரச்சாரத்தை சில மஹாத்மாக்கள் செய்து வருகிறார்கள். திருடியது பேரா, ஆளா? ஆட்கள் அவர்கள்தான் என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். மஹாத்மாக்கள் பிரச்சினை வேறு! திருடர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு தெரிந்து விட்டால் பிழைப்பு நடக்காதே என்கிற கவலை! சமூக விரோதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது புதிதல்ல. அங்க அடையாளங்கள், ஊர், பேர், பிறந்த தேதி, நேரம், எந்த ஆஸ்பத்திரி, சுகப்பிரசவமா, ஆயுதக் கேஸா என்று எல்லா விவரங்களையும் தெள்ளத் தெளிவாக வைத்துக் கொண்டுதான் திருட வருவார்களா?

 தவறு நடந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும் சிலர் ஆட்சேபக் குரல் எழுப்புகிறார்கள். இது புரிந்து கொள்ளக் கூடியதே. சொல்லப் போனால் இது மாதிரி எதிர்ப்புகள் இல்லாவிட்டால் தவறான என்கௌண்ட்டர்களுக்கு வழிவகுத்து விடும் என்பது நிஜமே.

 ஆனால், எதிர்க்கிற எல்லோருமே சமூக நலனில் அக்கரை இருப்பவர்கள் அல்ல. கீழ்த்தரமாக அரசியல் செய்பவர்கள், திருடர்களுடன் இருந்த கூட்டணி வெளிப்பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் இருப்பவர்கள் என்று பலசாராரும் இருக்கிறார்கள்.

பாங்க் கொள்ளை தடுப்புக்கு யோசனைகள்

காவல்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக செய்தி பார்த்தேன். இது ஒரு நல்ல அணுகுமுறை. என் அறிவுக்கு எட்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 செக்யூரிட்டி      கார்ட் வைப்பது ஒரு தீர்வே அல்ல. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும்      செக்யூரிட்டியை ஔட் சோர்ஸ் செய்திருக்கிறார்கள். அந்தக் காண்ட்டிராக்டர்கள்      அற்ப சொற்ப சம்பளத்திற்கு வைத்திருக்கும் கார்டுகள் எத்தியோப்பியா பிரஜைகள்      போலப் பரிதாபமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் சக்தியில் கையில் இருக்கும்      துப்பாக்கியைக் கூடத் தூக்க முடியாது. (அந்தத் துப்பாக்கியால் குருவியைக் கூட      சுட முடியாது என்பது இன்று விரல் சப்பும் குழந்தைக்குக் கூடத்      தெரிந்திருக்கிறது) ஆகவே இவர்களை ஓவர் பவர் செய்வது கொள்ளைக்காரர்களுக்கு ஒரு      பெரிய விஷயமே அல்ல.

அபாய      அறிவிப்பு சைரன்களாலும் பெரிய ஆதாயம் எதுவுமில்லை. அதன் ஒலி போலிஸ் ஸ்டேஷன்      வரை சத்தியமாகக் கேட்கப் போவதில்லை.

 அப்புறம் என்னதான்யா செய்யலாம் என்று கேட்பீர்கள். நல்ல கேள்வி.

 1. அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத அமைப்பு அவசியம்.      அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு அடையாள அட்டை தந்து அதை ஸ்வைப் செய்தால்தான்      திறக்கிற மாதிரி கதவுகள் அமைக்க வேண்டும். இந்தக் கதவில் கண்ணாடி இருக்கக்      கூடாது. முழுக்க முழுக்க ஸ்டீல் கதவாக இருக்க வேண்டும். அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு யாராக இருந்தாலும் (வேறு நுழைவாயில் வழியாகப் போகிற      மாதிரி) தனியாக அமைக்கப்பட்டிருக்கும் அறையில்தான் ஊழியர்கள் அவர்களைச்      சந்திக்க வேண்டும். புது அக்கவுண்ட்டாக இருந்தாலும் இதே முறைதான்.
 2. ஜெர்மன்      ஷெபர்ட், அல்சேஷன் மாதிரி ராட்சஸ நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். பிஸ்கட்டைப்      பார்த்தாலே பாய்ந்து பிடுங்கித் தின்கிற அளவு பஞ்சத்தில் அதை வளர்க்கக்      கூடாது. அதன் ஆரோக்யமான வளர்ப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.      செக்யூரிட்டி கார்டைப் பார்த்து பயப்படாதவன் கூட இதற்கு நிச்சயம்      பயப்படுவான். இந்த நாய்களை லாக்கர் அருகிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
 3. சர்வீலியன்ஸ்      கேமிராவுக்கு முகத்தைக் காட்டாமல் உள்ளே நுழைய முடியாதபடி வாசற்புறம் ஒரு      கேமிரா அவசியம். அது பதிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஸ்பேர் காமிரா      அவசியம். பழுதானால் சில மணி நேரங்களுக்குள் சரி செய்தாக வேண்டும்.
 4. எந்நேரத்திலும்      வங்கிக்குள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.      ஐந்து வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக உள்ளே ஆட்கள் அனுமதிக்கப்படக் கூடாது.      (இந்த ஐந்து என்பது தெய்வீக எண்ணிக்கை அல்ல. வங்கி ஊழியர்களின் எண்ணிகையைப்      பொறுத்து இதை மாற்றிக் கொள்ளலாம். ஐடியா என்னவென்றால் ஊழியர்கள் எல்லாரும்      சேர்ந்து விரோதிகளை ஓவர்பவர் செய்ய முடிய வேண்டும் என்பதே)
 5. எல்லா      வங்கிகளிலும் மெடல் டிட்டக்ட்டர் கேட்கள் அவசியம். அதைக் கடந்துதான் உள்ளே      பிரவேசிக்க முடிய வேண்டும். இல்லையென்றால் கதவு திறக்காது என்று இருக்க      வேண்டும்.
 6. எல்லா      ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான பயிற்சி      வகுப்புகள் நடத்த வேண்டும். கொஞ்ச காலத்துக்கு ஒருமுறை ரெஃப்ரஷர்      வகுப்புக்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
 7. எல்லா      ஊழியர்களும் ஒரே சமயம் உணவருந்தப் போகக் கூடாது. பேட்ச் பேட்சாகத்தான் போக      வேண்டும். உணவு இடைவேளையின் போது உள்ளே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இருக்கக்      கூடாது.
 8. பாதுகாப்பு      தொடர்பான விஷயங்களில் காஸ்ட் கண்ட்ரோல் செய்யவே கூடாது. இதை ஏன் சொல்கிறேன்      என்றால் எனக்குத் தெரிந்த ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் அதன் மேலாளர் (அவர்      முன்னாள் ராணுவ அதிகாரி வேறு!) காஸ்ட் கண்ட்ரோல் என்று செக்யூரிட்டிக்களின்      எண்ணிகையைக் குறைத்து விட்டார்.
 9. ஒவ்வொரு      வங்கிக்கும் அருகிலிருக்கும் காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும் ஹாட்லைன்      ஃபோன்கள் அவசியம். ரிஸீவரை எடுத்ததுமே எதிர்முனையில் மணி ஒலிக்கிற மாதிரி      அமைப்புகள் மிக எளிதாக செய்ய முடியும்.
 10. இவைகளுடன் கூட      ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பாதுகாப்புச் சாதனங்கள் அமைக்க முடியும். ஒரு சில      ஐடியாக்களை அடுத்த பதிவில் சொல்ல உத்தேசம்.

ஐநூறாவது இடுகை கொஞ்சம் உருப்படியாக இருக்கட்டுமே என்கிற ஆவலில் எழுதப்பட்டது.

மதுரையில் ஃபோர்வேணி சங்கமம்

டிவிஎஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு 5S பயிற்சி வகுப்பு எடுப்பதற்காக மதுரை போக வேண்டியிருந்தது.

 ஸ்லீப்பர் பேருந்தில் என் முதல் அனுபவம்.

 பெருங்குளத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் ராத்திரி பதினொன்றரை மணி வரை நிற்க வைத்து விட்டார்கள்.  மஃப்ளர் சுற்றின போலீஸ்காரர் வந்து ‘டொக்,டொக்’ என்று குச்சியைத் தட்டி,

“எல்லா வண்டியும் போயாச்சே, எதுக்கு வெய்ட் பண்றீங்க?” என்று சந்தேகப் பார்வை பார்த்தார்.

அதுகூடப் பரவாயில்லை. அகாலத்தில் நடு ரோட்டில் வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றதால் ’மேற்படி’ மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் களும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

ஸ்லீப்பர் வசதி நன்றாகத்தான் இருக்கிறது. ஒற்றை பெர்த்காரர்களுக்கு பெட்டி வைக்க இடமில்லாமல் அநீதி இழைக்கிறார்கள். பொதுவாக இரட்டை பெர்த்களை ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்கிறார்கள். ஒரே ஒரு இரட்டை பெர்த்தில் மட்டும் தனியாக வந்த ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண்மணியின் சக பிரயாணி ஒரு கல்லூரி மாணவன்.

“மேடம், சாரோட மாத்திக்கிறிங்களா?” என்று என் அனுமதியின்றி தாராளமாகக் கேட்டார் டிராவல்ஸ் ஆசாமி.

“வேணாம்” என்று சொன்னதோடு, விலுக் என்று ஒரு ஜம்ப் செய்து ரஜினி ஸ்டைலில் அப்பர் பெர்த்தில் அமர்ந்தார் அந்தப் பெண்மணி. யாரையாவது அவர் ஒரு அறை விட்டால் ஐந்தாறு பற்கள் எகிறிவிடும் போல இருந்தார் பார்க்க. காலையில் யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்,

“ஸ்டேஷனுக்கு வரணுமா, நேரா கோர்ட்டுக்கு வந்துடட்டுமா?”

“………………………………………….”

“இல்லை சார், திருமங்கலம் ஸ்டேஷன்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கு”

அவர் பேசிய ஜோரைப் பார்த்து கிளீனர் பையன்

“வணக்கங்க்கா” என்றான் பணிவாக ஒதுங்கி நின்று.

அவனை முதுகில் தட்டிச் சிரித்தார் அந்தப் பெண்மணி.

எந்த சாமியையும் இப்போதெல்லாம் இலவசமாகப் பார்க்க முடிவதில்லை. மீனாட்சியைப் பார்க்க ஓஸி தரிசன க்யூவில் போனால் முப்பதடிக்குப் பின்னால் நிறுத்தி ஜருகண்டி செய்து விடுகிறார்கள். நூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால் பத்தடி தூரத்தில் பார்க்க முடிகிறது. (டிக்கெட் வாங்காமல் அதே நூறு ரூபாயை காசாகக் கொடுத்தால் இரண்டு பேர் உள்ளே போக முடிகிறது) மரகதக் கல்லிலிருந்து வரும் ரேடியேஷன் ரொம்ப விசேஷமாமே?

சொக்கநாதருக்கு இத்தனை மார்க்கெட் வால்யூ இல்லை. அவரைக் காசில்லாமலே பார்க்கலாம். இங்கே மட்டுமில்லை, காசு கொடுத்துப் பார்க்கிற சிவன் எங்கேயுமே இல்லை.

வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர் இங்கே விசேஷம் என்றார்கள் கோயிலில். எனக்கொரு சந்தேகம். ஒரு பாதம் மட்டும் தூக்கி எப்படி ஆட முடியும். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பாதத்தையும் தூக்கத்தானே வேண்டும்? பிறகெப்படி அது விசேஷமாகும்?

மழை பெய்த போது வெண்ணைக் கடை வாசலில் நின்றிருந்தேன். கடையே வெறும் ஆறடிக்கு நாலடிதான்.

“உள்ள வந்து உட்காருங்க சார்” என்று கடைக்காரர் உபசரித்தார்.

சென்னையாக இருந்தால்,

“மறைக்காம இப்படி நில்லுங்க சார்” என்று கடைக்காரர் காட்டும் இடத்தில் நின்றால் இடது கை விரல்கள் தவிர பாக்கி எல்லாம் நனைந்து விடும்.

இருபது நிமிஷ மழையில் நாறிப் போகிறது மதுரை. மேலமாசி வீதியிலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பும் ஜங்க்‌ஷனில் இடுப்பளவு தண்ணீராகி எல்லோரும் அப்படி அப்படியே நின்று விட்டார்கள். பழக்கடைக்காரர் பாதாள சாக்கடையின் மூடியை நெம்பித் தள்ளிவிட்டார். ஃபோர்வேணி சங்கமம்!