ரஜினிகாந்த்

நசுக்கப்படுகிறதா தமிழ் சினிமா உலகம்?

அனுஹாசனுக்கு டாக்டர் அஃப் டாக் ஷோ என்று பட்டமே தரலாம் போலிருக்கிறது. கோபி கூட இரண்டாம் இடம்தான்.

 விஜய் டிவியின் காஃபி வித் அனு என் அபிமான நிகழ்ச்சிகளில் ஒன்று. விருந்தினர்களோடு அவர் பேசும் போது, அவர் கண்களைப் பாருங்கள். ஃபேஸ் இஸ் தி இண்டெக்ஸ் அஃப் மைண்ட் என்பதன் அர்த்தம் புரியும். இப்போது ஜெயா டிவிக்காக கண்ணாடி என்று ஒரு நிகழ்ச்சி செய்கிறார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பார்கள். இன்றைக்குக் கலையுலத்துக்கு வந்திருக்கும் புண்ணுக்குக் கண்ணாடி அவசியம் தேவையோ என்று தோன்றியது.

பணபலம் மிகுந்த சில நிறுவனங்களின் வரவு பெரும்பாலான தயாரிப்பாளர்களை முடக்கி வைத்திருக்கிற நிலை இருப்பதாக, நேற்றைய கண்ணாடி நிகழ்ச்சியில் வந்திருந்த தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். ரொம்பப் பிரபலங்கள் யாரும் வரவில்லை என்பதால் மிகைப்படுத்தலோ என்கிற சந்தேகம் எழுந்தது. சில துணை நடிகைகளும், ஆரம்ப இயக்குனர்களும் அப்பட்டமாக அரசியல் பேசினார்கள்.

நடுவர் பொறுப்பில் அமர்ந்திருந்த ஆர்.வி.உதயகுமார் பாதிக்கப்பட்ட பல தயாரிப்பாளர்கள் பயம் காரணமாக வரவில்லை என்று வேறு குறிப்பிட்டார்.

தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பணபலத்தின் பாதிப்பு இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

கலைப்புலி சேகரன், இருக்கிற தியேட்டர்களின் எண்ணிக்கையைவிட தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு லாஜிக்கை முன் வைத்தார்.

சினிமாக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை இரக்க மனதோடு அணுகுகிற பக்குவம் நமக்கில்லை. அதை ஒரு கேளிக்கையாகத்தான் பார்க்கிறோம். கூத்தாடிகள், கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், எப்படியோ ஒழியட்டும் என்றுதான் நினைக்கிறோம். நம் கண் முன்னால் வருவது பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்களும் இதர கலைஞர்களுமே. அங்கேயும் பலநூறு தொழிலாளர்கள் உண்டு. சின்ன அளவில் தயாரித்து கொஞ்சமாக சம்பாதிக்கிற தயாரிப்பாளர்களும் உண்டு.

பெரிய நிறுவனங்கள் காய்கறி வியாபாரத்துக்கு இறங்கியது எத்தனை ராட்சஸத்தனமானதோ அத்தனை ராட்சசத்தனம் இதுவும். எத்தனை ஆயாக்களும், காய்கறி வண்டிக்காரர்களும் பாதிக்கப் பட்டார்கள்? ஆனால் அதையே அரசாங்கம் மட்டுமில்லை, ஏழைகளின் பங்காளன் என்று பரைசாற்றிக் கொள்ளும், தொழிற்சங்கங்களின் தாத்தாவான கட்சிகளுமே எதுவும் செய்ய முடியவில்லை.

குடிசைத் தொழிலுக்கென்று சில பொருட்களை ஒதுக்கி அதற்கான உரிமத்தைப் பெரிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் தாராமலிருப்பது போல் இதில் செய்ய முடியாது. காரணம் சினிமாவைத் தொழிலாகவே அங்கீகாரம் செய்யவில்லை.

காரண்டியாக வியாபாரம் தரமுடிந்த சூப்பர் ஹீரோக்களாவது சாதா தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே படம் பண்ணுவோம் என்று சொல்லலாம். ஆனால் அவர்களையும் பணத்தாசை விடவில்லை. எல்லாம் வல்ல ரஜினிகாந்த், நான் கார்ப்பரேட் தயாரிப்பாளர்கள் படத்தில்தான் நடிப்பேன் என்று பேசுகிறார்.

ஓ.. பெரிய்ய்ய தயாரிப்பாளர்களே! உங்களிடம் பணமும் இருக்கிறது, மார்கெட்டிங் செய்கிற திறனும் இருக்கிறது, தொழில் திறனும் இருக்கிறது. தொடர்ந்து மூன்று தோல்விகளைத் தாங்கும் சக்தியும் இருக்கிறது. திறமையான இளையவர்களைத் தூக்கிவிடலாமே?

அதனால் வரும் பெருமை உங்களுக்குத்தானே? நிறைய டிமாண்ட் செய்கிற கலைஞர்களின் பல்லைப் பிடுங்கின மாதிரியும் இருக்குமே? உங்களால் உருவான கலைஞர்கள் எப்போதும் உங்களுக்கு ஜால்ரா அடிப்பார்களே!

ரஜினியின் தைரியமும் ’சோ’வின் சான்றிதழும்

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வழக்கமாக வருகை தரும் ரஜினிகாந்த் இந்த வருஷம் ஆப்ஸண்ட். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய ஒரு வாசகர் உட்பட வந்திருந்த பலரும் அவர் ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டு வரவில்லை என்று சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது.

 பயமெல்லாம் அவருக்குக் கிடையாது என்று சோவே சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு கைசொடக்கிக் கேள்வி கேட்பவர், அந்தம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசாதிருப்பதும், துக்ளக் விழாவுக்கு வராமல் இருப்பதும் நேரமின்மை காரணமாகத்தான் என்பதை நாம் நம்புவோம். முதலமைச்சருக்கு நடத்தப்படும் பாராட்டுவிழாக்களிலும், அவர் கலந்து கொள்ளும் விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்வதும் ஏகப்பட்ட நேரம் இருப்பதால்தான் என்றும் நம்புவோம். பயத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நம்புவோம். படத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனத்தின் மனக்கசப்பைத் தேடிக்கொள்ள அவருக்கு பயம் என்பது பிதற்றல் என்றும் நம்புவோம்.

குருமூர்த்தி பேசும்போது, ஸ்விஸ் பாங்கிலும், பெயர் வெளியிடத் தேவையில்லாத சில வெளிநாட்டு முதலீடுகளிலும் இருக்கும் இந்தியப் பணத்தில் நாலில் ஒரு பங்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் இந்தியப் பொருளாதாரம் 16 சதவீதம் உயர்வடையும் என்றார். சோ உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் நேரடியாகச் சொல்லத் தயங்கும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் மருமகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசினார்.

நீங்கள் தலித்துகளுக்கு எதிராவர் என்பது மாதிரி ஒரு கருத்து இருக்கிறதே என்று ஒருவர் கேட்டபோது, ஜகஜீவன்ராம் பிரதமராக வருவதற்காக ஐந்து மாநிலங்களில் தான் கான்வாஸ் செய்ததையும், ‘பாப்பாத்தி’(”அவர் பாஷைல சொல்லணும்ன்னா” என்று குறிப்பிட்டார்) இந்திராவுக்கு ஆதரவாக கருணாநிதி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.