லேத்

இட்லி சாப்டா என்ன வரும்?

உயர்நிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தும் அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். யாராவது வாத்தியார் வராத போது அவர்களை ஆக்டிங்குக்குப் போட்டு விடுவார்கள்.

 தொலைந்தோம்.

 சிங்காரவேலு என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார். அவர் ஆக்டிங்குக்கு வந்தால் திருக்குறளை எடுத்துக் கொண்டு விடுவார். ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து அதன் அர்த்தத்தை நன்றாக டப்பா அடித்துக் கொண்டு வந்திருப்பார். ஆனால் பரிமேலழகரே தான்தான் போல ஒரு மணி நேரம் அறுத்து விடுவார்.

 இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகி விடுவார் என்கிற ரகசியம் ஃபெயிலாகி இரண்டாம் வருஷம் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சீனிவாசன் போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 “திருக்குறள் எல்லாம் ரொம்ப சிம்ப்பிள்டா. அதுலயே அர்த்தம் இருக்கும். இப்பப் பாருங்க, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லைன்னா என்ன அர்த்தம்?”

 “அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை”

 “வெரிகுட். ரெண்டாவது வருஷம் படிச்சாலும் திருக்குறள் உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சரி. இப்ப அடுத்த வரி. அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.. இதுக்கென்ன அர்த்தம்?”

 இப்போதுதான் எஸ்.ஆர்.சீனிவாசனின் திருவிளையாடல் ஆரம்பிக்கும்.

 “அதை மறந்தாலும் ஒண்ணும் கெடுதல் இல்லை”

 “என்ன உளர்ரே? திருவள்ளுவர் இப்படியா எழுதுவார்?”

 ”திருவள்ளுவர் எப்படி எழுதுவார்ன்னு எனக்குத் தெரியாது சார். ஷண்முகசுந்தரம் சார் அப்படித்தான் பொழிப்புரை எழுதிப் போட்டிருக்காரு” என்று ஒரு நோட்புக்கைக் காட்டுவான்.

 அது ஷண்முக சுந்தரம் சார் எழுதிப் போட்டதா என்று கிராஸ் செக் செய்வது கஷ்டம். அவர் போன வருஷமே கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருப்பார்.

 சிங்காரவேலுவுக்கு சந்தேகம் வந்து விடும்.

 “இல்லையே.. மறத்தலின்னா மறக்கிறதை விடன்னுதானே அர்த்தம்?”

 “அப்ப கற்றபின்னா கற்கிறதை விடன்னு அர்த்தமா?”

 “என்னடா உளர்ரே.. கற்றபின்னும், மறத்தலின்னும் ஒண்ணா?”

 “தெரியாதா உங்களுக்கு?”

 “என்ன தெரியணும்?”

 “இரண்டுமே ஏழாம் வேற்றுமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகை”

 “ஏழாம் வேற்றுமை உருபா?”

 “ஆமாம்”

 “உடன் தொக்க தொகையா?”

 “ஆமாம் சார்”

 “இதெல்லாம் எங்க இருக்கு?”

 “சார்.. இலக்கணக் குறிப்பு வரைகல ஒரு மார்க் கேள்வி சார் இது”

 ஒரு மார்க் என்பது அவர் ஈகோவைக் கொஞ்சம் பிராண்டி விடும்.

 “சரி.. சரி.. சத்தம் போடாம ஏதாவது படிச்சிட்டு இருங்க” என்று முரசொலி படிக்க ஆரம்பித்து விடுவார்.

 நான் படித்த தொழிற்நுட்ப உயர்நிலைப் பள்ளியில் ஒர்க்‌ஷாப் ஆசிரியர்களுக்கும் அதே அரிப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 கிருஷ்ணசாமி என்கிற ஃபோர்மேன் ஒருவர் டர்னிங் வகுப்பு நடத்தி விட்டுத்தான் லேத்தைத் தொடவே விடுவேன் என்று சொல்லி விட்டார்.

 எங்களுக்கெல்லாம் ஏமாற்றம்.

 லேத்துக்கு லூப்ரிகேஷன் ரொம்ப முக்கியம் என்பதை விளக்க ரொம்பப் பிரயாசைப் பட்டார்.

 “காலைல இட்லி சாப்பிடறே, என்ன வரும்?” என்றார். (எனர்ஜி என்பது அவர் எதிர்பார்த்த பதில்)

 அப்துல் சலாம் என்றொரு குசும்பு பிடித்த பையன் இருந்தான்.

 “ஏப்பம்” என்று பதில் சொன்னான்.

 கிருஷ்ணசாமி மனம் தளர்ந்து விடவில்லை.

 “முதல்ல ஏப்பம் வரும். அப்புறம்?” என்றார் என்கரேஜிங்காக.

 “அப்புறம் கக்கூஸ் வரும் சார்”

 “ரெண்டுக்கும் மத்தியில எதுவுமே வராதா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.

 “வாந்தி”

 “த்ச்ச்ச்ச்”

 “மறுபடியும் பசி வரும் சார்”

 ’அடப் போங்கடா’ என்று ஒர்க்‌ஷாப்புக்குள் அனுப்பி விட்டு வெளியே போய்விட்டார்.

Advertisements