வாலி

துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு

துள்ளு கிற மாடு

பொதி சுமக் காது

என்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.

தன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.

சினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.

போகட்டும்.

துள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா? அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா?

இல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.

பொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.

தலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத்திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.

தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.

Advertisements

சென்னை புத்தகச் சந்தை 2014 – ரிப்போர்ட்:1

முதல் ரவுண்டில் பொதுவாக புஸ்தகங்கள் வாங்க மாட்டேன்; கை ரொம்ப துரு துருவென்றால் அடக்க முடியாமல் வாங்கி விடுவேன்.

 நேற்று என் கையைத் துரு துருக்க வைத்த புஸ்தகங்கள் :

  1. அரசு பதில்கள்      1977 (குமுதம் ஸ்டால்)
  2. கல்கியின்      சிறுகதைத் தொகுப்புக்கள் இரண்டு வால்யூம்கள் சேர்ந்து ரூ.360!
  3. வாலிப வாலி      (பொதிகை டிவி நிகழ்ச்சியின் டெக்ஸ்ட் ஃபார்ம்)
  4. ஜெயகாந்தன்      பேட்டிகள்
  5. என்றும்      சுஜாதா (தொகுப்பு எஸ்.ரா-உயிர்மை ஸ்டால்)

 ஆர்வம் தாங்க முடியாமல் ராத்திரியே உட்கார்ந்து நான் படிக்க ஆரம்பித்த புஸ்தகம் : அரசு பதில்கள்.

 எல்லா பதில்களிலும் வைத்து (including Sujatha) நான் முதல் பரிசு தரும் பதில்கள் அரசு பதில்கள். ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு சாம்பிள் :

 கி. சர்வோத்தமன், சென்னை

 பெரும் ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்ஜரின் பதவி பறி போய் விட்டதே?

 பதில் : ரொடான் என்ற சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சிந்தனையாளன்’,’எண்ணம்’,’முத்தம்’ இவை போன்ற பல அற்புதமானசிற்பங்களைச் செய்த அமரர் அவர். ஒருமுறை, ஃபிரெஞ்சு கதாசிரியர் பல்ஸாக்கின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தவர், முடிவுறும் கட்டத்தில், ஒரு நண்பரைக் கூப்பிட்டுக் காட்டினார்.

 அந்த மனிதர் சிலையை வெகுவாகப் புகழ்ந்து விட்டு, “எல்லாவற்றுக்கும் மேலாக பாஸ்லாக் கைகளை வைத்திருக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது” என்று சொல்லிச் சென்றார்.

 பிறகு இன்னொரு ரசிகரை அழைத்துக் காண்பித்தார். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி. “இவ்வளவு இயற்கையாக எந்தச் சிற்பியுமே கைகளை வடித்ததில்லை” என்று பாராட்டினார்.

 வந்து பார்த்த எல்லாருமே, “இந்தக் கைகள்! அபாரம்!” என்றார்கள்.

 ரொடான் ஒரு சுத்தியலை எடுத்து பால்ஸாக் சிலையின் கைகளை உடைத்துத் தள்ளினார். அவர் சொன்ன நியாயம், ‘கை என்பது ஒரு உறுப்பு. அது உறுப்பாகத்தான் இருக்க வேண்டும். மொத்த உருவத்தை மறக்கடிக்கும் அளவுக்குத் தனி சிறப்போடு அது அமைந்து விடுவது நல்ல சிற்பத்துக்கு லட்சணமாகாது’

 ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு ரத்தின பதில் கட்டாயம் இருக்கும்.

 ராத்திரியோடு ராத்திரியாக அந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்பியதன் காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

சிவபெருமானுக்கு அரைக் கண்தான்

”சினிமாப் பாட்டுல இருந்து ஒரு விடுகதை போடறேன், விடை சொல்றியா?”

 ”என்ன கேக்கப் போறே, இளநீர் காய்க்கும் கொடி எதுன்னா?”

 “அட, இந்தக் கேள்வி கவர்ச்சியா இருக்கே.. எந்தப் பாட்டுல இது?”

 “’இது என்ன கூத்து அதிசயமோ, இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ ந்னு புதியவன் படத்துல ஒரு பாட்டு. இந்தக் கவர்ச்சி விடுகதை சினிமாக் கவிஞர்களைப் பலகாலமா தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கு. இடுப்பைப் பார்த்தேன் பிரம்மன் கஞ்சன், நிமிர்ந்து பார்த்தால் அவன் வள்ளல்ன்னு வேறொரு பாட்டு.”

 “கரெக்ட்டுதான். வெறும் கவர்ச்சி மட்டும் இல்லாம கவித்துவமும் சேர்ந்த விடுகதையும் இருக்கு இது மாதிரி”

 “எது அந்தப் பாட்டு?”

 “இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல, மழை மேகம் குடை பிடிக்கும் குளிர்நிலவும் அல்ல, இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ந்னு வர்ர வரிகள் கூட விடுகதைதான். வாலி எழுதினதுன்னு நினைக்கிறேன்.”

 “அவரே இன்னொரு பாட்டில காதலன் பெண்ணிடம் தேடுவது, காதலி கண்களை மூடுவது அது எது? ந்னு விடுகதை போட்டிருக்கார். நீ போட வந்த விடுகதை என்னன்னு சொல்லவே இல்லையே?”

 “அது ரொம்ப ஸில்லி. அதுல கவர்ச்சியும் இல்லை பெரிய கவித்துவமும் இல்லை. ஆனா கொஞ்சம் குசும்பு மட்டும் இருக்கு”

 “இதுவே ஒரு விடுகதை மாதிரி இருக்கு. பாட்டைச் சொல்லு”

“கமலா கல்யாணி, வசந்தா வந்தாளாம் மூணும் மூணு பொண்ணுங்க. பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரைக் கண்ணுங்க.. அதான் பாட்டு”

 ”அது சரி. எனக்கு ஒண்ணரைக் கண் பத்தி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

 “என்னது?”

 “ரெண்டு கண்ணால பார்த்தா ஒரு பொருள்தான் தெரியுது. ஒன்றரைக் கண்ணால பார்த்தா ரெண்டு பொருள் தெரியுதே எப்படி?”

 “ஏன், ஒன்றரைக் கண்ணுக்கு ரெண்டு பொருள்ன்னா, ரெண்டு கண்ணுக்கு பழிக்குப் பழி ஒன்றரை பொருள்தான் தெரியணும்ங்கிறியா?”

 “ஈக்வேஷன் சரியா இல்லையே. ஒண்றைக்கு ரெண்டுன்னா ரெண்டுக்கு டூ பாயிண்ட் சிக்ஸ் சிக்ஸ் பொருள் தெரியணும்”

 ”அப்டியெல்லாம் நேர் விகிதத்தில ஏத்திகிட்டு போக முடியாது. அப்ப சிவபெருமானுக்கு நாலு பொருளா தெரியும்?”

 “ஏன் சிவபெருமானுக்கு மூணு கண்ணா?”

 “இது தெரியாதா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஏ.பி.நாகராஜன்.. சாரி நக்கீரர் சேலஞ்ச் பண்ணது தெரியாதா?”

 “ஆக்சுவலா சிவ பெருமானுக்கு அரைக் கண்தான்”

 “என்ன இது ஈ இஸ் ஈக்வல் டு எம் ஸி ஸ்கொயர் மாதிரி புது ஈக்வேஷன் ஏதாவது சொல்லப் போறியா?”

 “கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா அவ்வளவு காம்ப்ளிகேட்டட் ஈக்வேஷன் இல்லை. ரொம்ப சிம்ப்பிள்”

 ”எப்படி? சொல்லு?”

 “சிவனுக்கு இடப்பாகத்தில யார் இருக்காங்க?”

 “உமைக்கு இடப்பாகத்தைத் தந்து பெண்களுக்கு சம உரிமை….”

 “ஸ்டாப். அப்படி சம உரிமை தந்தப்போ இடது கண்ணும், நெற்றிக் கண்ல பாதியும் போச்சா?”

 “சரி, பாக்கி ஒண்ணரைக் கண் இருக்கே?”

 “அதுலயும் வலக் கண் கண்ணப்ப நாயனார் கொடுத்ததாச்சே. அப்ப மீதி எவ்வளவு?”

 “அடக் கடவுளே. நீ என் இப்படி இருக்கே? ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை?”

 “மன்னிக்கவும். இது என் சிந்தனை இல்லை. சொக்கநாதப் புலவருடையது”

 “சுஜாதாவின் ராகவேனியம் கதைல செந்தில்நாதப் புலவர்ன்னு ஒருத்தர் வந்து இளநீர், நாமக்கட்டி, திரிபலை எல்லாம் போட்டு சரக்கு காய்ச்சி ஏமாத்துவாரு. இவர் யார் சொக்கநாதப் புலவர்?”

 “இவர் நிஜமாவே புலவர்தான்

 முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்

அக்கண்ணற் குள்ளதரைக் கண்ணே-மிக்க

உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்

றமையு மிதனாலென் றறி

 அப்டீன்னு ஒரு வெண்பா எழுதியிருக்கார்”

 “ஐய்யோ.. அழுக்கு அரதைப் பழசு புஸ்தகங்கள்ள எதையாவது படிச்சிடறே. படிச்சிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை. உடனே விடுகதை போட வேறே வந்துடறே.. முடியல”

 “கரெக்ட் இன்னும் முடியல்ல.. வேற ஒரு பாட்டுல மான், மான் ந்னு வான் நிலா பாட்டு மாதிரி…..”

 “ஹோல்டான்… இன்னைக்கு இவ்ளோ போதும்”

 “சரி, பிழைச்சிப் போ”

எம்.ஜி.ஆர். என்கிற தமிழ் ரசிகர்

எம்.ஜி.ஆர். என்கிற மூன்றேழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

அதற்கு காரணங்கள் பல.

அவற்றில் ஒன்று அவர் படத்தில் வந்த கவி நயம் மிக்க பாடல்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

இதோ அந்த ஒரு சோறு:

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி போகும் நிலவே நில்
என்மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல்

என்று ஆரம்பித்து

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிய செங்கனிச் சாறுண்ண
முன்வந்த பொன்னந்தி மாலைஎங்கே

என்று முதற்சரணமும்

தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
என்னத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கை பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்

என்று அடுத்த சரணமும்

வருகிற பாட்டில்

என்னடா சிறப்பு என்பீர்கள்….

இந்தப் பாடல் வல்லின மெல்லின இடையினத்தின் ஆபத்தான தொகுப்பு.

ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் தெரியுமா?

வல்லின, மெல்லின, இடையினங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் மாறுபட்டால் மட்டுமே உச்சரிப்புக்கு சௌகர்யமாக இருக்கும். அந்த சௌகர்யம் இந்தப் பாட்டில் இல்லை. இதைச் சரியாக உச்சரித்த டி.எம்.எஸ். க்கு ஹாட்ஸ் ஆப்.

எங்கே இந்தப் பாட்டைச் சரியான உச்சரிப்பில் பாடி பதிவு செய்து யாராவது அனுப்புங்கள் பார்ப்போம். அவர்களுக்கு செந்தமிழ் வித்தகன் என்கிற பட்டத்தை வழங்குவோம்!

சரி, இதை நான் சரியாக உச்சரித்திருக்கிறேனா என்று பார்க்க கீழே உள்ள ஒலிக் கோப்பை கேட்டுப் பாருங்கள்.

குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.

ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.