விமர்சனம்

வல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா?

அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பார்த்தா என்னமோ மாதிரி இருக்குமாம் என்பார்கள் பெருசுகள். அந்த என்னமோவில் வருவது என்ன வார்த்தை என்று மனதில் உறுதி வேண்டும் படத்து விவேக் போல மண்டையை உடைத்துக் கொண்டதுண்டு.

அது போல அண்ணா நூற்றாண்டு நூல்நிலையம் வந்த பிறகு கன்னிமாரா நூல்நிலையம் எனக்கு அந்த என்னமோவாக ஆகியிருந்தது. பல காலம் கழித்து நேற்றுத்தான் போயிருந்தேன். தமிழ் இலக்கியங்கள் பகுதியையும் ஏஸி பண்ணிவிட்டார்கள். தவறாமல் ஏஸி போடுகிறார்கள்.

சொ. விருத்தாச்சலம் எனப்படும் புதுமைப் பித்தன், கு. ப. ரா எனப்படும் ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இவர்கள் மூவரையும் தமிழ் இலக்கியத்தின் டிரெண்ட் செட்டர்கள் என்பார்கள். (புதுமைப்பித்தனின் எழுத்தில் என்ன விசேஷம் என்பது என் சிற்றறிவுக்குப் புரிகிறதில்லை)

அதற்கடுத்த தலைமுறையில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், லா. ச. ராமாமிர்தம் இவர்களைச் சொல்லலாம்.

அதையடுத்து வந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம். இப்படி எண்ணிக்கையில் அடக்கி விட முடியாத அளவுக்கு நல்ல எழுத்தாளர்கள் வந்தார்கள். வல்லிக் கண்ணன் அவர்களில் ஒருவர். மணிக்கொடிக் காலம் தொடங்கி மாத நாவல்கள் காலம் வரையிலான ஏராளமான எழுத்தாளர்களைப் பற்றி வல்லிக் கண்ணன் எழுதியிருக்கும் ’தமிழ் உரைநடை வரலாறு’ என்கிற புத்தகத்தை நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன்.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களையும் சிலாகித்துத்தான் எழுதியிருக்கிறார். சுஜாதா ஒருவர்தான் விதிவிலக்கு. அவரைக் குறித்து எழுதுகையில் மெலிதான எரிச்சல் வெளிப்படுகிறது.

‘…….கதாபாத்திரம் ஒன்றிடம் பேசுகிறவர் “எப்படி சார் எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க?” என்று கேட்பது போல் ஒரு இடத்தில் எழுதுகிறார். தான் எழுதும் போதும் இப்படி எல்லாரும் கேட்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது போல பல விஷயங்கள் எழுதுவார்….’ என்று எழுதுகிறார். ஆன் தி அவுட் செட் இது பாராட்டு போலத்தான் இருக்கிறது.

கு. ப. ரா பற்றி எழுதும் போது அவர் சொல்வதைக் கவனியுங்கள் :

‘….. தனது பேரறிவையும் ராசிக்கியத்தையும் (ராசிக்கியம் என்றால் என்ன? – ஜவர்லால்) வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் கு. ப. ரா எழுதவில்லை. வாசகனை மிரட்ட வேண்டும், குழப்ப வேண்டும், திகைக்க வைக்க வேண்டும் என்பது போன்ற உயர்ந்த நோக்கம் எதுவும் அவருக்கு இருந்ததில்லை….’

மேற்சொன்ன வாக்கியங்கள் கு. ப. ராவை சிலாகிக்கச் சொன்னதை விட வேறு யாரையோ ரேக்குவதற்குச் சொன்னது என்பது தெளிவு இல்லையா?

இப்போது சுஜாதா பற்றி சொன்னதை மீண்டும் வாசியுங்கள்

Advertisements

தலைவா – சினிமா விமர்சனம்

Thalaiva-Movie-Stills _4_

நம்ம ஊரில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும், பெங்களூரில் இருப்பதாலும் படத்தைப் பார்க்கிற ஆர்வம் உண்டாயிற்று. பெங்களூர் ஃபோரம் மாலில் ஏற்கனவே 2012 படம் பார்த்த அனுபவம் அந்தத் தியேட்டருக்குத் திரும்பப் போகும் ஆவலை வேறு தூண்டியது! படம் ஆரம்பித்ததிலிருந்து இடைவேளை வரை பிரமிப்பு, சிலிர்ப்பு, ரசனை, திரில்!

 அடடா.. அட்டஹாசமான படம் ஒன்று தமிழில் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறதே…  சத்தியராஜுக்கு இப்படிப்பட்ட கிளாஸ் நடிப்பு வருமா? இத்தனை வருஷமும் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்! ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப எஞ்சாயபிள். அறிமுகம் ஆகிற காட்சியில் அமலா பால் மனசை அள்ளுகிறார். சந்தானம் பிராண்ட் ஜோக்குகள் நிறைய இருக்கின்றன. தியேட்டரில் பார்த்தால் மட்டும் சந்தானம் ஜோக்குகள் சில ரசனையாக இருக்கின்றன.

 புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் அமலா பால் விஜயையும் சந்தானத்தையும் இன்வைட் செய்கிறார்.

 “நாளைக்கு ஃபங்ஷனுக்கு வர்ரப்போ சாப்பிடாம வாங்க”

 “ஏன்? வந்ததும் பிளட் டெஸ்ட் பண்ணப் போறீங்களா?”

 இடைவேளை வரை கட்டிக் காத்திருக்கும் சஸ்பென்ஸை நிஜமாகவே ஊகிக்க முடியவில்லை. அருமையான கதையமைப்பு. இடைவேளையில் காபி குடிக்க வந்த போது ஏறக்குறைய எல்லாருக்குமே எனக்கிருந்த அதே சிலிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

 இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தது.

 என் பிரமிப்பும் சிலிர்ப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. அதற்கப்புறம் வில்லனையும் அவன் ஆட்களையும் அடித்துத் துவைக்கிற சாதாரண விஜய் படம். கைப்பற்ற வேண்டிய வீடியோ கேஸட் வைத்திருக்கும் பிக்பாக்கெட்காரனுக்கு வில்லன் ஃபோன் செய்யாமல் என்கேஜ் செய்து வைப்பது நல்ல ஐடியா. வில்லனை ஜெயிலிலிருந்து தப்ப வைத்து (வில்லன் ஒளிந்திருந்து ஏமாற்றி தன் சொந்த முயற்சியில் தப்புவதாகத்தான் காட்டுகிறார்கள். விஜய், ‘நீ தப்பிச்சதும் என் ஐடியாதான்’ என்கிறார்!) மந்திரி கொலையில் சிக்க வைப்பதும் நல்ல ஐடியாதான்.

 ஆனால் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்.

 வில்லன் திரும்பவும் தப்பித்துப் போய் மலைக் குகையில் ஒளிந்து கொண்டு அப்புறம் சொத்து சொத்து சண்டைகள். இடுப்பில் கத்தியை சொருகிய பிறகு விஜய் எட்டு பேரைப் போட்டுத் தள்ளுகிறார். சித்தப்பா திடீரென்று கட்சி மாறுவது சஸ்பென்ஸ் இல்லை, சொதப்பல்.

 ரெக்கார்டிங் வெகு சிறப்பு. 3டி ஒலி அமைப்பை நன்றாக உணர முடிகிறது. விஜய் பாடும் பாட்டும் நன்றாக இருக்கிறது. அமலா பால் அழகோ அழகு.. மிடுக்கோ மிடுக்கு. இடைவேளை விட்டதும் ஓடி விடுங்கள்…

சிங்கம் II (விமர்சனம்)

????????????????????????????????????????????

பெண்கள் கழிப்பறைக்கு வெளிப்புறம் பெண் படம் போடுவது வழக்கம்தான்; ஆனால் அதற்காக மோனலிஸாவின் ஒவியத்தை எழுதி வைப்பார்களோ?

 அப்படித்தான் இருக்கிறது இவர்கள் அஞ்சலியைப் பயன்படுத்தியிருக்கும் விதம். அட்ரோஷியஸ்!

 தியேட்டர் முழுக்க புஷ்பேக் சீட்டில் சாய்ந்து கொண்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தேசிய கீதத்தை முழுசாகப் பாடுகிறார்கள் படத்தில். இதை எப்படி சென்ஸார் போர்ட் அனுமதித்தது? தேசிய அவமானம்!

 சரி.

 படம் ஆரம்பித்து ஏறக்குறைய இடைவேளை வரை ஆஹா, படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கை வருகிறது. ஆனால் இடைவேளை நெருங்கும் போது என்ன இன்னும் இடைவேளை வரவில்லை என்று நெளிய வைக்கிற மாதிரி இருக்கிறது. நீளம் அதிகம் என்பதாலா திரைக்கதை டைட்டாக இல்லாததாலா?

 கஸ்டமர் ஃபீட்பேக்கை வெகுசிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் ஹிட் ஆன பாடல்களின் சாயலிலேயே இதிலும் பாடல்கள், முக்கியமாக காதல் வந்தாலே பாடல்! அனுஷ்காவின் உதட்டுச் சுழிப்பு, கண்ணடிப்பு, மின்னல் வேக அணைப்பு எல்லாமே அப்படியே ஆக்‌ஷன் ரீபிளே. ஆனாலும் அனுஷ்காவை ஹன்ஸிகா ஓவர்டேக் செய்து விடுகிறார். ஹன்ஸிகா வரும் காட்சிகள் ரசனையாக இருக்கின்றன. அனுஷ்கா காட்சிகள் ரொம்ப ரொம்ப சாதாரண ரகம். ஆனாலும் ஹன்ஸிகாவின் மரணம் டைரக்டர் எதிர்பார்த்த இம்பேக்ட்டை உண்டாக்கவில்லை. சாரி சார்..

 சந்தானத்தின் எண்ட்ரி படு டிரமாட்டிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.(காமெடிக்காக செய்வது போல நிஜமாகவே செய்திருப்பது தெரிகிறது; மேலும் அதே காமெடிப் போர்வையில் சந்தானம் அனுஷ்காவுடன் ஆடுவது போலவும் காட்டப்படுகிறது. சந்தானம் அந்தக் காட்சியில் நிஜமாகவே அருமையாக டான்ஸ் பண்ணியிருக்கிறார்!) சந்தானம் ஒரு பிராண்ட் இமேஜாக இன்னமும் பயன்பட்டு வருவது புரிகிறது.

 தென் ஆப்பிரிக்கர்கள் சிலரும் தயாரிப்பில் கூட்டணி போலத் தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க நடிகர் டேனி அதே பெயருள்ள கதாபாத்திரமாகவே வருகிறார். அந்த டேனியையும் சேர்த்து படத்தில் ஏகப்பட்ட ரிடண்டண்ட் கேரக்டர்கள். விவேக், கிட்டி கூட அனாவஸியம்தான். பல வருஷங்களாக தூத்துக்குடியில் இருக்கிற கேரக்டராக நடிக்க வராதது பரவாயில்லை, தமிலையாள மொழியில் ரஹமான் பேசுவது ரொம்பத் தமாஷ்.

 வசனகர்த்தா (டைரக்டர் ஹரியேதான்) தனக்குத் தெரிந்த் எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கக்கியிருப்பது இரக்கத்தை வரவழைக்கிறது. அதேபோல விவேக் முயன்றிருக்கும் காமெடிகளும் இரக்கத்தை வரவழைக்கின்றன. காற்று சந்தானம் பக்கம் அடிப்பதால் அவர் என்ன செய்தாலும் செல்லுபடி ஆகிறது. அதிலும் பல மொக்கைகள்.

 இன்னின்னாரெல்லாம் கிரிமினல்கள் என்பது கால் படத்திலேயே தெரிந்து விடுகிறது. ஆகவே திரைக்கதையில் விறுவிறுப்பு போய் விடுகிறது. அட அவர்களைச் சிக்க வைக்கிற ஐடியாக்களாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் ம்ம்ஹூம்…

 சூர்யா எல்லாரையும் போட்டு சொத்து சொத்தென்று மொத்துகிறார் அவ்வளவுதான். அவ்வப்போது ஐஎம்ஏ நம்பர், சிம், லொக்கேஷன், மொபைக் சிக்னல் ஜேம்மர் என்று பம்பார்டிங்காக டயலாக் வருகிறது. ஆனால் எல்லாமே கைப்புண்ணுக்குக் கண்ணாடி ரகம்தான்!

 எனக்குத்தான் ரசனை இல்லை. படம் ஆந்திராவில் சக்கைப் போடு போடுகிறதாம். நம்ம ஊரில் கூட ஓடி விடும் போலத்தான் தோன்றுகிறது. ஆனாலும்,

 சிங்கம் ஒன்னை ரசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடைவார்கள். சூர்யா,

 Pull your socks up!

மாற்றான் – வழக்கப்படி லேட் விமர்சனம்

கே.வி. ஆனந்த், சூர்யா, சுபா, ஹாரிஸ் ஜெயராஜ்….

ஆஹா…. மாற்றான் ஏ-மாற்றான் என்று மனதில் அயன் படம் கொடுத்த கலர்க் கனவுகளோடு தியேட்டருக்குப் போன சராசரி சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன். எனக்கு ஏமாற்றம்.

வோல்கா கதாபாத்திரம் வில்லியல்ல என்று தெரிகிற போது ஆஹா.. கதையில் நல்ல திருப்பங்கள் இருக்கும் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்த நிமிஷமே சூர்யாவின் அப்பா பாத்திரம்தான் வில்லன் என்பது வெட்ட வெளிச்சமாகச் சொல்லப்பட்டு விடுகிறது.

அதற்கப்புறம் கதையில் என்ன இருக்கிறது?

மதுரைக் காண்டத்திற்குப் பின்னரான சிலப்பதிகாரம் போல் படம் நகர்கிறது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி தவிர வஞ்சிக் காண்டத்தை யாருமே படித்திருக்க மாட்டார்கள் என்பது என் துணிவு. (என் சிலப்பதிகாரத்தில் திரைக்கதை மாற்றம் செய்து வஞ்சிக் காண்டத்தில் கொஞ்சம் மசாலா தூவி முன்னரே எழுதியிருந்தேன்!)

ஆர்த்தர் ஹெய்லி டைப் ஆராய்ச்சிக் கதைகள் சராசரி தமிழ் சினிமா ரசிகனால் வரவேற்கப்படுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. அதிலும் ஜெனட்டிக் எஞ்சிநியரிங் என்பதெல்லாம் ஏ கிளாஸ் ஆடியன்ஸுக்கே கொஞ்சம் சலிப்புத் தரும் சமாச்சாரங்கள் என்பதும் என் பணிவான அபிப்ராயம். இன்னும் கொஞ்சம் மசாலா தூவியிருந்தால் இந்தக் குறைகளை மறைத்திருக்கலாம்.

இரட்டை சூர்யாக்கள் வரும் சில காட்சிகளில் தொழிற்நுட்ப உன்னதத்தை வியக்க முடிகிறது. முக்கியமாக இரண்டு சூர்யா ஒரு காஜல் தோள்களை அணைத்தபடி சிரிக்கும் காட்சி. ஒரே ஒரு பாட்டும் அதன் காட்சியும் அயன், கோ படங்களில் கிடைத்த சுகமான அனுபவத்தைத் தருவது கொஞ்சம் ரிலீஃப் (நாணி, கோணி, ராணி… என்ன சாகித்யம் இது!) காஜல் அகர்வாலை ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிவிட முடியாது. அவ்வப்போது புத்தகத்தின் நடுப்பக்கத்தின் விளிம்பு மட்டும் தெரிகிறது. ஏனோ இரட்டை சூர்யாக்கள் வரும் வரை என்னால் படத்தில் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஒட்டுதல் அதிகமாகிறது.

காஜல்-சூர்யா காதல் அரும்பும் காட்சிகள் கொஞ்சம் இதம்.

‘உன் உடம்பில் பத்து பேரின் ஜீன்கள் இருக்கின்றன’ என்று செண்டிமெண்ட்டிலும் விஞ்ஞானம் டாமினேட் செய்கிறது.

எது எப்படியோ, வித்யாசமான படத்தைத் தர வேண்டும் என்கிற கே.வி. ஆனந்த்-சூர்யா-சுபாவின் துணிச்சலையும், கமிட்மெண்ட்டையும் பாராட்டத்தான் வேண்டும்.

இது பில்லா விமர்சனம் அல்ல

நான் சிரித்தால் தீபாவளி

இதுவரை எந்தத் திரைப்படத்தையும் நான் முன் பதிவு செய்து பார்த்ததில்லை. தொழில் கட்டாயத்தின் காரணமாக பில்லாவுக்கு முன் பதிவு செய்து பார்த்தேன். அதுவும் எங்கள் ஊர் வெற்றி தியேட்டரிலேயே..

 நான் பார்த்தது 15ம் தேதி. சீட் வரிசைகளுக்கு இடையிலிருக்கும் நடைபாதையில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடுகிற அளவு கூட்டம். தியேட்டர் வாசலிலிருந்து, படம் ஆரம்பிக்கும் போது திரையில் சிலைடு வரை அறிவிப்புக்கள் ‘பாடல்களை மறு ஒளிபரப்பு செய்ய முடியாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டன.

 அஜித்துக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவு தீவிர ரசிகர்கள் உருவாகியிருப்பது ஆச்சரியம் தருகிறது. அஜித் படங்களை அவர் ஒரு ஆக்டராக இருக்கிற வரை பார்த்ததுடன் சரி. ஸ்டார் ஆன பிறகு (தியேட்டரில்) பார்த்ததில்லை. அஜித் டயலாக் பேசினாலே ஆரவாரம் கூச்சல். ‘பில்லாவாலே இனி வெளில வர முடியாது’ என்று திரையில் ஒருவர் சொல்லும் போது, ‘வருவாண்டா’ என்று சாமி வந்த மாதிரி ஒரு ரசிகர் கூச்சலிடுகிறார்!

 அஜித் ரசிகர்களில் பெரும்பாலோர் ஹை-டெக் ஆசாமிகள். ஆனாலும் ஒரு பாமரத்தனமான உணர்வு ரீதி அபிமானத்தைப் பார்க்க முடிவது ஆச்சரியம். இதனால்தான் அஜித் கதை, திரைக்கதை, வசனம், இசை எல்லாவற்றையும் விட தன் ரசிகர்களை அதிகம் நம்பி மட்டும் படங்கள் செய்கிறார் போலிருக்கிறது!

 இதுதான் சினிமா விமர்சனமா? என்று கேட்காதீர்கள். அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே இல்லை என்று. பில்லா II வின் விமர்சனத்தை கிழக்கு பதிப்பகத்தின் ஆழம் இதழுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆகவே அதை இங்கே எழுதுவது நியாயமில்லை.

 வருகிற இதழ் ‘ஆழம்’ வாங்கிப் படியுங்கள்!

இலக்கிய எழுத்தும் வெகுஜன எழுத்தும்

பயப்பட வேண்டாம். இது சீரியஸான திறனாய்வுக் கட்டுரை அல்ல. ஆகவே இலக்கியவாதிகள் என் மேல் பாயத் தயாராக வேண்டாம்.

பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா?

எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது.

நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது.

இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது,

சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.

உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது.

எங்கேயும் எப்போதும் (சினிமா விமர்சனம்)

ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். படம் முடிந்ததும் எனக்குக் கைதட்ட வேண்டும் போல் இருந்தது. நான் கையைத் தூக்குமுன் மற்ற ரசிகர்கள் படபடவென்று தட்டியே விட்டார்கள். (நாள் 27.09.2011, இடம் ஐநாக்ஸ். பனிரெண்டு நாற்பது மணி ஷோ)

 தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புதுக் கோணம். படமே ஒரு விபத்தின் அனாட்டமிதான். பிரயாணிகளில் இரண்டு ஜோடிகளின் ஃப்ளாஷ் பேக்தான் படம். எளிமையான ஆனால் படு சுவாரஸ்யமான திரைக்கதை. இப்படி இரண்டு ஜோடிகள் வருகிற போது ஒரு ஜோடி ஒரு மாற்றுக் குறைவாக இருப்பதுண்டு, ஆனால் இந்தப் படத்தில் இரண்டு ஜோடிகளின் கதைகளுமே ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. நடிப்பில் அஞ்சலிக்கு அரைமார்க் அதிகம் தந்தே ஆக வேண்டும் மற்றவர்களை விட! அடேயப்பா முகம் திரும்பி இருக்கும் போது கூட முதுகும் இடுப்பும் நடிக்கின்றன அவருக்கு.

 குறிப்பாக, “காதலிக்க ஆரம்பிச்சாச்சுன்னா அடிக்கடி லீவ் போடணும், பர்மிஷண் போடணும், பொய் சொல்லணும், செலவு பண்ணனும், கோர்ட், கேஸு, தகறாரு எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படி இறங்கும் காட்சியில் கலக்கியிருக்கிறார்.

 காதலிக்கப் போகிறவனின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து ஆரோக்யத்தை உறுதிப் படுத்திக் கொள்ளும் ராட்சஸத்தனம் ரசனையாக இருக்கிறது! அதில் சமூகத்துக்கும் மெசேஜ் வைத்திருக்கிறார் டைரக்டர்.

 நடிப்பில் அடுத்த பரிசு ஜெய் க்கு, ”இவளுகளும் நம்பளை மாதிரிதானா.. கலர் டிரெஸ் போட்டுகிட்டு வந்து ஆஃபீஸ்லதான் யூனிஃபார்மா” என்று வியக்கிற காட்சி ஒரு உதாரணம். அதற்கப்புறம்தான் அநன்யா.

 ஒரு கிராமத்துப் பெண்ணாக வெகுளித்தனத்தை வெகு சிறப்பாகக் காட்டியிருக்கிறார் அநன்யா. பக்கத்துப் பெண்ணின் உள்ளாடை தெரிகிற போது தருகிற ரியாக்‌ஷன் ரசனை.

 டைரக்டர் சரவணன் மேல் வரிசையில் ஒரு தனி இடம் பிடிக்கப் போவது உறுதி.

 சத்யாவின் (புதுசு?) இசையில் பாடல்கள் காட்சிக்கு வெகு பொருத்தமாக இருக்கின்றன. பாட்டை தனியாகக் கேட்டால் இவ்வளவு ரசனையாக இருக்குமா தெரியவில்லை.

விபத்தை இவ்வளவு விவரமாகக் காட்டியிருக்க வேண்டுமா?

 ‘அந்த’ ப் பாத்திரத்தின் மரணம் அவசியமா? பிழைத்துக் கண் திறந்து புன்னகைக்க வைத்திருக்கலாமோ?

வேங்கை சினிமா விமர்சனம்

வேங்கை படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம்தான்.

நானும் தனுஷ் ரசிகன்தான். என் எதிர்பார்ப்புகள் எல்லாமே பொய்த்துப் போயின. வழக்கமாக இருக்கிற மாதிரி தனுஷுக்குப் பொருந்துகிற கேரக்டர் இல்லை. வழக்கமான சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை. பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். எல்லாவற்றையும் விடப் பெரிய சோகம் ஒன்று இருக்கிறது. தனுஷ் படத்தில் காமெடி ரொம்ப சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் காமெடிதான் மிகப் பெரிய மைனஸ்! டைரக்டர் காமெடிக் காட்சிகளைப் பார்த்தாரா இல்லையா?

மஹா அசூயையான காமெடி. பெண்ட் எடுக்கிறேன் என்று தேய்ப்பது ஒரு காமெடியா! அடக் கடவுளே!

கஞ்சா கறுப்பு வடிவேலுவின் வெற்றியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வடிவேலுவின் அப்சர்வேஷன் பவர் அசாத்யமானது. சுற்றுப் புறத்தில் இருக்கும் மனிதர்களை, வித்யாசமான மனிதர்களை அவர் எத்தனை நுணுக்கமாக கவனிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹரி மற்றும் தனுஷ் படங்களில் கதாநாயகியை நாமே காதலிக்க ஆசைப் படுவோம். இந்தப் படத்தில்…… அட்லீஸ்ட் தமன்னாவின் ட்ரேட் மார்க் கிளாமராவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லை, டைரக்டர் ஹரி ரசிகர்களும் ஏமாற்றம்தான் அடைவார்கள். சிங்கம் கொடுத்தவரின் படமா இது!

தேவி ஸ்ரீ பிரஸாத்…. இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம். உங்கள் பழைய பாட்டுக்களின் வாசனை வருவதைத் தவிர்க்க வேண்டும். பீட் மட்டுமே பாட்டு இல்லை. ரீரிகார்டிங்கில் கூட டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் சரியில்லை. எழுபது சதவீத ரிகார்டிங் இடது டிராக்கிற்கே போய் விட்டது. ஒலிப்பதிவில் அகலமே இல்லை.

தனுஷ்…. அவார்ட் தந்த மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள். என் மாதிரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மதியுங்கள். யார் தன் ரசிகர்களைப் புரிந்து கொண்டார்களோ அவர்கள்தான் டாப் ஹீரோ ஆக முடியும்.

தமன்னாவின் சிறுத்தை

  • தமன்னாவின் சிறுத்தைன்னு தலைப்பு கொடுத்ததுக்கு ரசிகர்கள் கோபப்பட வேண்டாம். நமிதாவா இருந்தா பெரு(ந்)த்’தை’ன்னு சொல்லியிருப்பேன்.
  • தமன்னாவுக்கு ஜாஸ்தி வேலையில்லை, கவர்ச்சி வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நோ வெட் சாங்ஸ், ஒன்லி டிரை. அவர் ரசிகர்கள் ஏமாறலாம்.
  • வழக்கமான அலட்சிய சிரிப்பும், நக்கலுமான நடிப்புக்கு ஒரு ரோல், விறைப்பான டிப்பிக்கல் மசாலா பட நடிப்புக்கு ஒரு ரோல் என்று ரெண்டும் செய்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார் கார்த்தி.
  • எச்சரிக்கை-சூர்யா உஷார். கார்த்தி ஓவர்டேக் செய்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.
  • வித்யாசாகர் : ஒரே ஒரு பீட்டை வைத்துக்கொண்டு படம் பூரா ஒப்பேற்றிவிட்டார். இருந்தாலும் உத்தித் பாடும் டூயட் நல்லா இருக்கு. நிறைய பாட்டில் ‘கொக்கரக் கொக்கரக்கோ’ வாசனை வருவது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
  • நடிகர்களுக்கு அதிகச் சுமை தராமல் காட்சி அமைப்பை வைத்தே நம்மைக் கண்கலங்க வைக்கிற காட்சிகள் வருகின்றன. உதாரணம் ரத்தினவேல் பாண்டியனின் மரணம். இன்னொன்று குழந்தை மேல் ராக்கெட் ராஜாவுக்கு பிரியம் ஏற்படும் காட்சி.
  • ’உங்க ரெண்டுபேரையும் பாத்தா நல்லவங்க மாதிரி தெரியுது’ என்று அந்தப் பெண் சொன்னதும் ‘ஒன் மினிட்’ என்று கார்த்தியும், சந்தானமும் மறைவாகப் போய் இடி இடியென்று சிரித்து விட்டு திரும்ப சீரியஸாகி ரிடர்ன் ஆகிற காட்சி ரசனை!
  • ரெண்டு மாசம் முன்னால் மாயாஜாலுக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் பார்க்கப் போன போது அங்கே சிறுத்தை பட ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. வெள்ளை சுரிதாரோடு தமன்னாவை ஜம்ப் பண்ணச் சொல்லி பதினாறு ரீடேக் எடுத்தார்கள். ராஜா-ராஜா பாட்டின் நடுவே ஒண்ணேகால் செகண்டுக்கு அந்த ஷாட் வருகிறது. காமிராமேனுக்கு என்ன உள்நோக்கமோ!

எந்திரன் – வாசகர் விமர்சனம்

நம் வாசகர் திருமதி.நீலா சந்திரசேகர் எந்திரன் படத்தை சூடாக கானடாவில்(?) பார்த்து விட்டு எழுதியிருக்கும் விமர்சனம்.

 இது ரஜினியை பற்றிய விமரிசனம் அல்ல. அவருடைய ஆளுமை, திறமை, உழைப்பு எல்லாம் படம் முழுவதும் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. அதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ரசிகர்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பு – கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார். ஆனால் லஞ்சம் ஊழல் போன்ற சமூக பிரச்சினைகளை தன்னுடைய முந்தைய படங்களில் வித்தியாசமாக கையாண்ட டைரக்டர் ஷங்கரிடம் எதிர்பார்த்து, ஏமாற்றத்தினால் எழுந்த ஆதங்கம் இது.

கதை? சீதையின் மீது கொண்ட மோகத்தால், தன்னையே நோக்கி நெடும்பகை தேடிக்கொண்ட இராவணனின் கதை-கணினி யுகத்தின் மாற்றியமைக்கப்பட்ட 2 XP இயந்திரமானாலும் மனித உணர்வுகள் ஊட்டப்பட்டபின்பு பெண் மேல் கொண்ட ஆசையால் தன்னை படைத்தவனையும் தடுக்கவரும் அனைவரையும் கொன்று குவிக்க வெறி ஆட்டம் போடும் அவலம். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” – இங்கு இயந்திரன் ஆவது ஆணாலே, அழிவது பெண்ணாலே .

தாய் தந்தை படைக்காத தம்பி சிட்டியை படைத்து இயந்திர சாதனை படைக்கும் வசீகரன்.வெட்டிக்கொண்டு வா என்றால் நிஜமாகவே வெட்டிக்கொண்டு வரும் சிட்டி. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று இராணுவத்திற்கு பயன்பட பழக்கும் வசீகரன். படைத்தல், காத்தல், அழித்தல்என்று ரஜினி ஒரு மும்மூர்த்திகளின் அவதாரம். எஜமான் ரஜினி பட்டாம் பூச்சி பிடிக்க ஓடினார் என்றால், எந்திரன் ரஜினி கொசு பிடிக்க ஓடுகிறார். ஒரேடியாக ஒழித்து கட்டிவிடுவார், தமிழகத்திற்கு இனிமேல் தலை வலி இல்லை என்றால், அந்த ஒரு கொசுவை மட்டும் பிடித்து வந்து ஐசிடம் மன்னிப்பு கேட்க வைத்து பறக்க விடுகிறார்.(என்ன கொடுமைடா சாமி )கண்ணின் கடைப்பார்வை இயந்திரனையும் விட்டு வைக்காதோ? வசீகரன் அருகில் ஐஸை பார்த்தால் நமக்கே பொறாமை வருகிறது, சிட்டிக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை. இயந்திர முகத்தில், முத்தம் ஏற்படுத்திய மாற்றங்களை உணரும் ரஜினி சூப்பர் . ஐஸுக்கு அதிகமாக வேலை இல்லை. இருந்தாலும் அவளை சுற்றியே கதை இயங்குவதால் இராமாயண சீதை. இயந்திர ராவணனால் சிறை எடுக்கப்பட்டு மீண்டு வரும்வரை பாட்டு பாடியே பொழுதை கழிக்கிறார். தான் சிந்தும் ஒரு துளி ரத்தத்திலிருந்து அனேக ராவணங்கள் தோன்றி போர் புரிந்ததாக இதிகாசம் கூறுவது இங்கும் அப்படியே. ஒவ்வொரு நட்டில் இருந்தும் உயிர்த்தெழும் அனேக கோடி இயந்திர மனிதர்கள் !!!!!!

அடெயப்பாஆஆ என்ன பிரம்மாண்டம்!!!!!!!! எவ்வளவு பொருள் சேதங்கள், உயிர் சேதங்கள் ? அங்கு போவது நட்டும் ஸ்க்ரூ வும் தான், ஆனால் இங்கு போவது மனித உயிர்கள் !!!!!!!!!!! கட்ட பொம்மன் காலத்தில் வாளுக்கும் பீரங்கிகளுக்கும் நடந்த போர் மாதிரி, அது கூட தெரியாத விஞ்ஞானி.!!!!!!! இயந்திர மனிதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை இந்த நாட்டிற்கு. (கொசுவை அழிப்பதில் இருந்து கோட்டையை பிடிப்பதுவரை எவ்வளவோ பண்ணி இருக்க முடியும்) ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்று சாகசம் புரிய மட்டும் என்றால் சின்னத்திரையில் மெகா தொடராக வந்திருக்கலாம். நவீன இயந்திர மனிதனும் காதலில் சிக்கி போராடி ” கை கலைப்பில்” முடிகிறது கதை. இயந்திர மனிதனுக்குள்ளும் மனித உணர்வுகள் ஊட்டப்பட்ட பின்பும் மேலோங்கி நிற்பது காதல் என்ற உணர்வுதான். சிதைந்து வீசி எறியப்படபின்பும் குப்பை மேட்டிலிருந்து புரண்டு வந்து இயந்திரம் கேட்கிறது,”எனக்கு அவ வேணும்; சானா வேணும்” …………… மற்றைய குணங்களில் ஒன்று கூட வெளிப்படவில்லையே?

பல வருடங்களுக்குப்பிறகு ….. ஏதோ எல்லா துறைகளிலும் ரோபோ வின் உதவியால் அனேக மாற்றங்களை ஷங்கர் காட்டப்போகிறார் என்று ஆவலோடு பார்த்தால், பள்ளி பிள்ளைகளுக்கு “சும்மா” இதுதான் ரோபோட் என்று வேடிக்கை காட்டி விட்டு போவது இன்னும் வேதனை. (ஷங்கரின் முந்தைய படங்களில் அது மாதிரி ஏதாவது மாற்றங்கள் காட்டியது, மனதுக்கு இதமாக இருந்ததே?) அட ராமா!!!!!!!! இதற்க்கு A I R D approval மட்டுமல்ல, எங்களுடயதும் NO தான்.