ஷிவ் கேரா

நீங்களும் இப்படித்தான் நினைச்சிருப்பீங்க

இந்தக் குட்டிக் கதை Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது. (கவனக் குறைவா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா அதுதான் எல்லார் கண்ணுலயும் படுது! விஷயத்தை விட்டுடறாங்கெ!  🙂 )

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் நான் எழுதியது)

அது எவ்வளவு பெரிய சாதனை?

சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்கிற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தொடர்ந்து பயிற்சி இல்லாவிட்டால் பல விஷயங்கள் ஏறக்குறைய மறந்து போய் விடுகின்றன. அப்படி மறந்து போகிற பல விஷயங்களில் எழுதுவதும் ஒன்று.

 எத்தனை வருஷம் டச் விட்டுப் போனாலும் நீச்சலும் சைக்கிள் ஓட்டுவதும் மறப்பதில்லை. இந்த விஞ்ஞான ஆச்சரியம் குறித்து யாராவது ரிஸர்ச் செய்யலாம்.

 எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் நிறைய உண்டு. எழுதுவதில் அவ்வப்போது கொஞ்சம் பிரேக் கொடுக்க வேண்டும் என்பது அவைகளில் ஒன்று. ஷிவ் கேரா கூட ‘When did you sharpen your axe last?’ என்று கேட்பார். தீட்டாமல் தொடர்ந்து வெட்டிக் கொண்டே இருந்தால் கோடாலி மொன்னையாகிக் கொண்டே போகும். மரமும் வெட்டுப்படாது, நம்முடைய சக்தியும் விரயம் (லாட்ஜ் டாக்டர்கள் சொல்லும் விரயமல்ல)

 எழுதாமல் இருந்த இந்த இடைவெளியில் நான் என் கோடறியைத் தீட்டிக் கொண்டிருக்கவில்லை. சரக்கு அடித்துக் கொண்டிருந்தேன். சரக்கு என்று நான் சொன்னது இசையை. (ஹி.. ஹி.. பின்னே? நான் எவ்வளவு பாப்புலர்! ஜவர்லாலே சரக்கு அடிக்கிறார் என்று பொதுமக்களுக்கு தப்புப் பாடம் கிடைத்து விடக் கூடாதே!) இசை என்னுடைய அடிக்‌ஷன். அதில் இறங்கிவிட்டால் இன்னும் ஒரு பெக், இன்னும் ஒன்றே ஒன்று என்று குடிகாரன் மாதிரி நிறுத்தாமல் போய்க் கொண்டே இருப்பேன். பத்து பாடல்கள் கொண்ட ஒரு குறுந்தகடு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்கிற வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

 ரெடி பண்ணி விட்டேனா என்றால் இல்லை.

 சுருதியும் தாளமும் சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் என் அப்ஜெக்டிவாக இருந்தது. கொஞ்சம் கேட்சியான மெட்டுக்கள் என்று அந்த அப்ஜெக்டிவை அப்டேட் செய்து கொண்டேன். அதுவும் சரியாக வந்ததும் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் கவனம் போயிற்று. ஓவர்லோட் இல்லாமல் பாட்டைப் பதிவு செய்வது, ஒவ்வொரு கருவிக்கும் பொருத்தமான ஃப்ரீக்வன்ஸியைக் கண்டுபிடித்து ஈக்வலைஸரில் அவைகளைக் கொஞ்சம் தூக்கி வைப்பது, இடமிருந்து வலமாக டிரம்ஸ் எங்கே வைப்பது, பாஸ் எங்கே வைப்பது, அக்கம்பனிமெண்ட்களை எங்கே வைப்பது என்பதெல்லாம் பிறகு சேர்ந்து கொண்டன.

 இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் பக்கம் கவனம் போயிற்று.

 பொறுமையிழந்த என் இல்லத்தரசி, “முழுக்கக் கற்றுக்கிட்ட பிறகுதான் முதல் சிடியே போடணும்ன்னா அதுல பெனிஃபிட் இருக்கு” என்று ஆரம்பித்தார்.

 “என்ன பெனிஃபிட்?” என்றேன் ஆசையாக.

 “டெக்னிக்கல் எக்ஸல்லன்ஸ். உத்திரவாதமான குவாலிட்டி”

 “இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்”

 “இன்னொண்ணு கூடச் சொல்லணும்; அதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க”

 “என்னது?”

 “இசையில விற்பன்னரான பிறகுதான் உங்க சிடி வரப் போகுது. அப்ப உங்க குரலைக் கேட்கிறவங்களுக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியமும் இருக்கும்”

 “அதான் என்னன்னு கேட்டேன்?”

 “தொண்ணூத்தியாறு வயசான ஒருத்தர் தன்னம்பிக்கையோட பாடி ஒரு ஆல்பம் வெளியிடறது என்ன சாதாரண விஷயமா? எவ்வளவு பெரிய சாதனை அது?”

சிந்தனை தூண்டும் ஜென்

ஜென் கதைகள் சிறப்பானவை.

 நீதி சிந்தனையைப் பொறுத்தது. நிறைய நீதிகள் சொல்லலாம். ரா.கி.ரங்கராஜன் கட்டுரைகள் படித்தேன். ஒரு ஜென் சொல்லியிருந்தார். பின்னால் நீதியும் சொல்லியிருந்தார். கதையை முதலில் படியுங்கள்.

 குங்க்ஃபூ-கராத்தே கற்கப் போகிறான். குருவைக் கேட்கிறான்,

 “எவ்வளவு காலம் பிடிக்கும்?”

 “பத்து ஆண்டுகள்” என்கிறார்.

 “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் பூரா கற்பேன். இப்போது சொல்லுங்கள்?”

 “இருபது ஆண்டுகள்” என்றார்.

 ரங்கராஜன் சொன்ன நீதி : பொறுமை.

 என் புரிதல் வேறு. இதைப் படியுங்கள் :

 மரம் வெட்டும் தொழிலாளிகள்; அவர்களில் புதிதாக ஒருவன். புதியவன் அதிகம் சம்பாதித்தான். இரண்டு பங்கு வெட்டினான். மற்றவர்களுக்கு ஆச்சரியம். ‘எப்படி?’ என்று கேட்டார்கள்.

 ‘ஒவ்வொரு முறையும் தீட்டுகிறேன்.’ கோடாலியைக் காட்டினான்.  ’தீட்டலுக்கு ஒரு மரம். நீங்கள் எப்போது தீட்டினீர்கள்?’

 ஷிவ் கேரா சொன்னது. ஷார்பனிங் தி ஆக்ஸ். அதுதான் இந்த ஜென்னும். தொடர்ந்து கற்பது உதவாது. மூளையைத் தீட்ட வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்குப் பிறகும்!

 (வித்யாசமாக முயன்ற இடுகை. என்ன வித்யாசம் தெரிகிறதா?)

இந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே

கலக்கிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹஸாரே!

இந்தியன் படம் பார்க்கிற போது இப்படி ஒரு தாத்தா நிஜமாகவே உருவானால் பரவாயில்லையே என்று உங்களை மாதிரியே நானும் ஏங்கினேன்.

ஷிவ் கேராவின் ஃப்ரீடம் இஸ் நாட் ஃப்ரீ படித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் வோட்டுப் போடுமுன் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைப் படிக்கிற போதும், ஏன் நம் நாடு இப்படி அழிந்து கொண்டிருக்கிறது, விடிவே இல்லையா என்கிற ஏக்கம் ஏற்படுகிறது.

அன்னா ஹஸாரே பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. இவர் சுபாஷ் சந்திர போசின் இந்தியன் தாத்தா அல்ல, காந்தியின் இந்தியன் தாத்தா. ஆனால் அரசியல்வாதிகளின் ஆணவமும், மெத்தனமும் இவரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.

அன்னா ஹஸாரேக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு தோன்றியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். கிரன் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தேசத்தில் நல்லது நடக்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.

லோக்பால் பில் என்றால் என்ன?

லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?

லோக்பால் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.

முதலில் அன்னா ஹஸாரேயின் செயலை இம்மெச்சூர் என்று காங்கிரஸ் வர்ணித்தது. பிறகு கொஞ்சம் காத்திருக்க வேண்டும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. பிறகு வீரப்ப மொய்லி அவர்கள் அடுத்த பார்லிமெண்ட் செஷனில் கொண்டுவருகிறோம் என்று உறுதி அளித்தார். எதற்குமே அன்னா மசியவில்லை. ஷரத் பவார் லோக்பால் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். ம்ஹூம்…..

மெச்சூராக இருப்பது என்றால் என்ன?

இந்தியாவின் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் ஸ்விஸ் வங்கியில் இருப்பதும், நூறு வருஷத்து இந்திய பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திருடப்பட்டிருப்பதும் தெரியவே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பதா?

அன்னா ஹஸாரேக்கு ஆதரவு தருவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்க்கவில்லை மக்கள். உமாபாரதியையும், சௌதாலாவையும் அப்படியே வண்டியேற்றி அனுப்பிவிட்டார்கள்.

கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி.

அவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.

எல்லா சுயமுன்னேற்ற சமாச்சாரமும் ஒரே புத்தகத்தில்…..

எல்லா சுய முன்னேற்றத் தலைப்புகளிலும் இருக்கும் முக்கியமான செய்திகளைத் தொகுத்து ஒரே புத்தகமாகத் தர முடியுமா? அதுவும் மிக எளிமையாக, யாருக்கும் புரிகிற மாதிரி…

மேனேஜ்மெண்ட், தரக் கட்டுப்பாடு, விற்பனை, தகவல் பரிமாற்றம், நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி, காதலிப்பது எப்படி….. இத்யாதி.

வெறும் 272 பக்கங்களில், வெறும் ரூ.160 ல்!

அமெரிக்க ஆசிரியர்களின் சுய முன்னேற்ற நூல்கள் ரஜினி படத்து டிக்கெட் மாதிரி விற்கின்றன. நம்ம ஊரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஸ்டீஃபன் கோவே, டேல் கார்னி, ஷிவ் கேராவை எல்லாம் துக்கிச் சாப்பிடுகிற சுய முன்னேற்ற குரு இருந்தார்.

அவர் எதைப் பற்றியும் ஒரேயடியாகப் பேச மாட்டார். ஒன்றரை வரி சொல்வார். ஆனால் அதைப் பற்றி ஒரு ஜென்மம் பூரா யோசிக்க வைத்து விடுவார்.

கரெக்ட், அவரேதான்.

மிஸ்டர் திருவள்ளுவர்.

திருக்குறளுக்கு உரை நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். பொழிப்புரைகளில் ஒவ்வொரு குறளின் அந்த்தமும் டிஸ்க்ரீட்டாகத் தனித்து நிற்கும். இது உரை இல்லை. ஒவ்வொரு அதிகாரத்திலும் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தொகுத்து ஒவ்வொரு கட்டுரை. அவ்வளவே.

இந்தப் புதிய முயற்சிக்கு யோசனை சொன்னவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் திரு. பத்ரி சேஷாத்ரி அவர்களும், திரு.பா.ராகவன் அவர்களும்.  அவர்கள் சொன்னதைப் புரிந்து கொண்டு பகீரதப் பிரயர்த்தனம் செய்திருக்கிறேன்.

உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

படித்துப் பாருங்கள்.

நூல் பெயர் :திருக்குறள் வழியில் உருப்படு

ஆசிரியர் : கே.ஜி.ஜவர்லால்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

                               33/15, எல்டாம்ஸ் சாலை

                               ஆழ்வார்பேட்டை-சென்னை 600 018

தொலைபேசி : 044-42009601, /03, /04

மின்னஞ்சல் : support@nhm.in

விலை ; ரூ.160/= மட்டும்.

தேவை – இன்னும் சில சீமாச்சுக்கள்….

சீமாச்சு என்று ஒரு ப்ளாக்கர் இருப்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாதிருக்கலாம்.

கீரன் அவர்கள், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற கம்ப இராமாயண வாசகம் பற்றி சொன்னதை நான் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அவரது ப்ளாக்கில் ஒரு இடுகை போட்டிருந்தார். அதுதான் அறிமுகம்.

அதற்கப்புறம் சில பல மின்னஞ்சல்கள் மூலமாகவும், அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்பு ஏற்பட்டது.

அவர் அமெரிக்காவில் இருக்கிற ஒரு NRI.

மாயவரத்தில் அவர் படித்த பள்ளியை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறவர். அந்தப் பள்ளிக்காக அவர் சம்பாதிக்கிற பணம் மொத்தத்தையும் செலவு செய்து கொண்டிருக்கிறவர். அமேரிக்கா போனவர்கள் கொஞ்சம் காசு பார்ப்பதையும், அந்தக் காசில் இங்கே செட்டில் ஆவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள். பிறிதொரு சாரார் இந்த நாட்டைப் பற்றி கவலையே இன்றி அந்த நாட்டு பிரஜை ஆனவர்கள்.

இவர் ரொம்ப வித்தியாசமானவர்.

அந்தப் பள்ளியிலிருந்து வருகிற ஒவ்வொரு குழந்தையும் தலை சிறந்த இந்தியப் பிரஜையாக வர வேண்டும் என்கிற உந்துதலில் இருக்கிறவர்.

ஒரு பள்ளியில் படித்து அவர் இன்று சிறப்பாக இருக்கிறார்.

அந்தப் பள்ளியில் படிக்கிற அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும், அதனால் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்.

இதில் ரொம்ப சிறப்பு என்ன என்று கேட்டால், என் அடுத்த நடவடிக்கை என்ன என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது இந்த அழைப்பு வந்ததுதான்!

என் தகப்பனார் அவரது தேசப்பற்று காரணமாகத்தான் நரசிம்மன் என்கிற என் பெயரை ஜவ(ஹ)ர்லால் என்று மாற்றினார்.

இந்த தேசத்துக்கு நான் ஏதாவது செய்ய விரும்பினால், அது நல்ல பிரஜைகளை உருவாக்குவது மூலம்தானே செய்ய முடியும்? ஷிவ் கேராவின் யு கேன் வின் படிக்கும் போது அவரது ஆதங்கமான பள்ளிகள் ஆட்டிட்யூடை சொல்லித் தருவதில்லை என்கிற செய்தியை கண்ணீருடன் படித்த நான், அந்த ஆட்டிட்யூடை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஒரு வாய்ப்பு கிட்டுகிற போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

என்னால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.

சீமாச்சுவின் கிரீடத்திற்கு ஒரு இறகாகும் சிறிய முயற்சி இது.

இன்னும் சில சீமாச்சுக்கள் இந்த நாட்டுக்குத் தேவை!