சுறா

சுறா திரைப்படம் – சில சிந்தனைகள்

நேற்று சுறா திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

நேர்ந்தது என்கிற சொல்லாட்சி நான் சொல்ல விரும்புவதை சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.

சினிமாவுக்குப் போகும் போது நான் எதிர்பார்ப்பது ஒரே ஒரு விஷயம்தான்.

அதிக நேரம் காத்திருக்காமல் டிக்கெட் கிடைக்க வேண்டும். அதற்காக இணையத்தில் ஒதுக்கீடு செய்கிற பழக்கமெல்லாம் பொதுவாக இல்லை.

I know it will cost a fortune!

அந்தக் காசில் இருபது நாள் பெட்ரோல் போடலாம்,(அ) ரெண்டு புத்தகங்கள் வாங்கலாம்,(அ) இருபதுக்கு மேற்பட்ட ரிரைட்டபிள் டிவிடி வாங்கலாம் (அ)பதினாறு ’ஏழை’களுக்கு பீர் வாங்கி ஊற்றலாம்…….

டிக்கெட் உடனே கிடைத்தது, போய் உட்கார்ந்தோம்.

உடனே டிக்கெட் கிடைக்கிற படங்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் படம் இருந்தது. ஆகவே வேண்டாத ஆப்சர்வேஷன்கள் செய்ய நிறைய அவகாசம் இருந்தது. தமன்னா வருகிற காட்சிகளை மட்டும் ஐம்புலன்களும் ஒன்றி பார்த்தேன். இதர காட்சிகளில் அவர்கள் சொல்ல முயன்றிருப்பதை விட்டு விட்டு சொல்லாததை கவனித்தேன்.

வில்லனை ஒரு அதி புத்திசாலியாக, அசாதாரணமான ஃபீச்சர்கள் இருக்கும் ஆசாமியாக சித்தரித்து நிறைய காட்சிகள் எடுத்திருக்கிறார்கள். ஆட்சேபங்கள் எழுந்ததால் அந்தக் காட்சிகளில் சில நீக்கப்பட்டும், சில மாற்றப்பட்டும் உள்ளன. பதிலாக கதானாயகன் புத்திசாலி என்று காட்டும் சில அவசரக் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மோப்பம் பிடித்து வேற்று ஆள் இருப்பதைக் கண்டு பிடிக்கிற காட்சி, பத்திரம் போலி என்று கண்டறிந்து டபிள் கிராஸ் செய்கிற காட்சி, தானே வாக்குமூலம் தந்து ஜர்னலிஸ்ட்டை படமெடுக்க வைக்கிற காட்சி, ஆத்திரத்தின் உச்சத்துக்கு இடையிலும் குழந்தையை உள்ளன்போடு கொஞ்சி விட்டு அடுத்த நிமிஷம் மறுபடி கொந்தளிக்கிற காட்சி என்று நிறைய சொல்லலாம்.

சிக்னிஃபிகன்ஸை காட்சியின் வாயிலாக சொல்லாமல் வில்லன், ‘சிம்பிள் மை டியர் வாட்ஸன்’ என்கிற பாணியில் தானே சுருக்கி வரைவது பரிதாபமாக இருக்கிறது. இது நிர்பந்தமாகச் செய்யப்பட்ட மாற்றம் என்பது தெளிவு.

ஜர்னலிஸ்ட்டிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது வியர்த்தம் என்கிற மாதிரி அந்த ஆளைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். ஏதோ ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை மனசில் வைத்து அந்தக் காட்சியை எடுத்து விட்டு பிறகு வெடுக்கென்று மாற்றியிருப்பது புரிகிறது.

வில்லனை கதானாயகன் அசாதாரண கெளரவமாக நடத்துகிறார்.

முடி என்கிற பதத்தின் கொச்சை வடிவம் சினிமாவில் இப்போது ரொம்ப சகஜமாக பிரயோகிக்கப்பட்டாலும், அருமையான வாய்ப்பு கிடைத்தாலும், இந்தப் படத்தில் ‘என் கிட்டேர்ந்து சவரி முடியைக் கூட வாங்க முடியாது’ என்கிற மாதிரி அதையும் டிசென்சிட்டைஸ் செய்திருக்கிறார்கள்.

கடைசி சண்டையில் பொதுவாக வில்லனை அடித்துத் துவைத்து, மிதித்து, கொழ கொழவென்று வாயிலிருந்து ரத்தம் வர தரையில் சொறி நாயை இழுப்பது போல இழுத்து படாத பாடு படுத்துவது நம் சினிமாக்களின் முக்கிய ஃபீச்சர். ஆனால் இதில் சின்னதாக நாலு அடி அடித்துவிட்டு, நிறைய அடி வாங்கிக் கொண்டு, சட்டென்று கழுமரத்தில் ஏற்றி கெளரவமாகத் தொங்க விட்டு விடுகிறார்கள்.

பாத்திரம் அமைச்சர் பாத்திரம் என்பதால் இந்த ஸ்பெஷல் டிரீட்மெண்ட்டா அல்லது நடிகர் சன் பிக்சர்ஸின் செல்லப்பிள்ளையா தெரியவில்லை.

வடிவேலு, சிங்கமுத்து இல்லாமல் ரொம்பக் கஷ்டப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. புன்னகைக்கக் கூட முடியவில்லை. இதை அவர்களே ஓரளவு உணர்ந்ததாலோ என்னவோ வெண்ணிற ஆடை மூர்த்தி தோன்றுகிற ஒரு காட்சியை பலவந்தமாகச் சேர்த்திருக்கிறார்கள். அது ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது.

படத்தைத் தயாரிப்பதில் நிறைய பிரச்சினைகளும் அவைகளை ஓவர்கம் செய்ய அவகாசமில்லாததும் ரிலீஸ் தேதியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்திருப்பதும் தெரிகிறது.

உங்களில் யார் யார் இதே மாதிரி நினைத்தீர்கள்? கையைத் தூக்குங்கள்?