வியாபாரத் தந்திரம்

தமிழ் பேசு – தந்திரங்கள் தூசு!

வியாபாரத் தந்திரங்கள் தெரிந்துகொள்ள எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உங்களில் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம்.

துணிக் கடையில் பான்ட் துணி வாங்கப் போகும் போது, ரொம்ப சுமாரானவைகளையே கடைக்காரர் காட்டிக் கொண்டிருப்பார். அலமாரியில் காட்டி “அதோ அதெல்லாம் நல்லா இருக்கே எடுங்க” என்று சொன்னால்

“அதெல்லாம் காஸ்ட்லி ஐட்டம் சார்” என்று உங்கள் ஈகோவைப் பிராண்டுவார்.

இதிலிருக்கும் சூழ்ச்சி தெரியாதவர்கள் உடனே சிலிர்த்துக் கொண்டு

“காஸ்ட்டைப் பத்திக் கவலை இல்லை” என்பார்கள்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் யானை விலை ஐட்டம் முழுசையும் விற்று விடுவார் கடைக்காரர்.

எங்கள் ஊரில் ஒரு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் இருந்தார். மகா கஞ்சர். சுலபத்தில் எதுவும் வாங்கி விட மாட்டார். ஆனால் தமிழ் மேல் அலாதி பிரியம் கொண்டவர். தமிழ்த் திறமை எங்கே இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவார். அவரை பொருள் வாங்க வைக்க மார்க்கெட்டில் இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள்.

கறிகாய்க் கடை பழனிக்கு அவர் குணம் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரை கவிழ்ப்பதற்கு புதுப் புது பொறிகள் வைப்பான்.

நன்றாகப் பழுத்து கும்ம் என்று வாசனை அடிக்கும் கொய்யாப் பழங்களைக் காட்டி

“அய்யா, கொய்யாக்காய் வாங்கிக்கங்க” என்பான்.

“பழம்ன்னு சொல்லு. பக்கத்து ஊர் வரைக்கும் வாசனை வருது, இதைப் போய் காய்ங்கிறியே”

“உங்க கிட்டே படிச்சிட்டு எப்டிய்யா இலக்கணப் பிழையோட பேசறது?”

“எது இலக்கணப் பிழை?”

“அய்யா, இதெல்லாம் கொய்யா(மல் விடப்பட்ட) காய்கள். அப்படி விட்டதால் கனிகளா ஆனவை. இதையெல்லாம் கொய்யாக் காய்கள்ன்னும் சொல்லலாம், கொய்த கனிகள்ன்னும் சொல்லலாம்”

கேட்க வேண்டுமா? ஆசிரியர் அகமகிழ்ந்து ஒரு டசன் வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் மார்கெட் பக்கம் வந்த ஆசிரியர்,

“என்னப்பா.. இன்னிக்கு என்ன புதுசா?” என்றார்.

“இன்னைக்கு கல்கட்டாப் புடலங்காய்தான் ஐயா புதுசு”

“இங்கே பார், நீ நேத்து சொன்னது நல்ல தமிழ் விளக்கம். அதனாலே பழம் வாங்கினேன். கல்கத்தாவிலே புடலங்காய் விசேஷமா? சும்மா விக்கணும்ங்கிறதுக்காக பொய் பேசக்கூடாது”

“பொய்யெல்லாம் ஒண்ணுமில்லை. கல் கட்டாம வளர்த்த புடலங்காய் இதுன்னு சொன்னேன்”

புடலங்காய்கள் பிஞ்சாக இருக்கும்போது வளையாமல் இருக்க கல்லைக் கட்டி விடுவார்கள்.

ஆசிரியரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இரண்டு புடலங்காய்களை வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.