communication

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

Advertisements

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொன்னது : அதைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்
சொல்ல நினைத்தது : அதை இன்னும் பார்க்கக் கூட இல்லை

சொன்னது : நாளைக்கு முதல் வேலையா……
சொல்ல நினைத்தது : சாமி சத்தியமா இன்னைக்கு முடியாது

சொன்னது : நாங்க சொன்னதிலே ஒரு சின்ன கம்யூனிகேஷன் பிழை
சொல்ல நினைத்தது : புளுகிட்டோம், மன்னிச்சிடுங்க.

சொன்னது : நிச்சயமா நம்மாலே முடியும்
சொல்லநினைத்தது :அத்தனை எளிதா முடிக்கிற சமாச்சாரமில்லை.

சொன்னது : சரியான ரூட்டிலே போய்கிட்டிருக்கோம். டார்கெட் தேதியை மட்டும் கொஞ்சம் தள்ளி வெச்சாப் போதும்.
சொல்ல நினைத்தது : புராஜக்ட் நாசமாய்ப் போய் விட்டது. செத்தாலும் கம்மிட் பண்ண மாதிரி முடிக்க முடியாது.

சொன்னது : எங்களுக்குள்ளே ஒரு சின்ன கருத்து வேறுபாடு
சொல்ல நினைத்தது : நடந்த சண்டையிலே டிபார்ட்மென்டே நாறிப் போச்சு. செக்யூரிட்டியை விட்டு விலக்கல்லைன்னா அவனை அண்டர் வேரோடு ஓட விட்டிருப்பேன்.

சொன்னது : நீ என்ன எல்லாம் பண்றேன்னு ஒரு லிஸ்ட் போடு. உனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்ன்னு பாக்கலாம்
சொல்ல நினைத்தது : அப்டி என்ன பெருசா புடுங்கறேன்னு பார்க்கலாமே.

சொன்னது : நிஜமான காரணம் என்னன்னு பார்க்கணும்
சொல்ல நினைத்தது : நீ எங்கே சொதப்பிநேன்னு சொல்றேன்

சொன்னது : நாங்க ஒரு டீமா இதை செய்தோம்
சொல்ல நினைத்தது : என்னை மட்டும் குறை சொல்றதிலே அர்த்தமில்லை

சொன்னது : இது நல்ல கேள்வி
சொல்ல நினைத்தது : இதப்பத்தி எனக்கு ஒரு இழவும் தெரியாது

சொன்னது : வாழ்த்துக்கள்
சொல்ல நினைத்தது : செத்தடா

அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா

கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.

பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.

“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”

மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.

கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.

“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”

மாமி போய் விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து

“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.

கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.

மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.