management

ஜெயகாந்தனின் சமாளிஃபிகேஷனா இது?

ஜெயகாந்தன் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த காலம் உண்டு.

 அப்போதும், அங்கிருந்து விலகிய பிறகும் கூட சோவியத் யூனியன் குறித்து மிகுந்த உயர்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்தவர். சோவியத் யூனியன்தான் உலகுக்கே வழிகாட்டி என்று சொன்னவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்தது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டியதற்குக் காரணம் சோவியத் யூனியனில் நிகழ்ந்த மாறுதல்களே.

 ஆனால் தன் நிலைப்பாட்டு மாறுதலை அவர் விளக்கும் போது பொத்தாம் பொதுவில் சோவியத் மீது பழி போடவில்லை. அவர் சொன்ன விளக்கமும் சுவாரஸ்யமானது.

 “………………. மறுக்கவில்லை. ஆனால் அதைப் பொய்யென்று காலம் நிரூபித்து விட்டது. அப்படியானால் நான் என் விருப்பத்தைச் சொன்னேன் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்?”

 இதை உலக மகா சமாளிஃபிகேஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.

 தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

 என்கிற குறள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் ஜெயகாந்தன் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ அல்லது அமைப்போ சம காலத்தில் உண்டாக்கும் தாக்கங்களை விட தங்களுக்குப் பின்னால் நெடுங்காலம் இந்தச் சமூகத்தால் எப்படி அறியப்படுகிறார்கள் என்பதை வைத்தே தகுதிகள் முடிவு செய்யப்பட வேண்டும். காலம் அதைப் பொய்யென்று நிரூபித்து விட்டது என்று சொல்லும் போது ஜெயகாந்தன் இதைத்தான் உணர்த்துகிறார்.

 Desire, Goal, Achievement இந்த மூன்றுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. ஒன்றைச் சாதிக்க முதல் தேவை Desire. ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அந்த இலக்கை அடைந்து விட்டால்தான் அதை இலக்கு – Goal என்று சொல்ல முடியும். இல்லாவிட்டால் அது வெறும் Desire தான்.

 A desire becomes a goal only when it is reached; else, it is just a desire என்று அவர் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisements

திருவள்ளுவரின் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்க்கிங்

சம்பிரதாயமான வழிகளில் யோசிக்கிறதை விட கொஞ்சம் மாறுதலாக யோசிப்பதை Lateral thinking என்றும், Thinking out of the box என்றும் மேலாண்மையில் குறிப்பிடுவார்கள். அதுமாதிரி சிந்தனைகள் மிகக் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறப்பான பலன்களைத் தரக் கூடியது.

 ஒரு தொழிற்சாலையில் சோப்புக்கட்டிகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து அனுப்ப ஒரு கன்வேயர் இருந்தது. வேலை செய்கிறவர்களின் கவனக் குறைவு காரணமாக சில பெட்டிகள் காலியாகப் போயின. கஸ்டமர்களிடம் கெட்ட பேர் ஏற்பட்டது. அதை எப்படி சரி செய்வது என்று யோசித்த போது லோட் செல், ஸ்கான்னர், இன்ஃப்ரா ரெட் சென்சர் என்று யோசனைகள் வந்தன. எல்லாம் இரண்டொரு லட்சம் செலவாகிற, ஒரு மாசத்துக்கு மேல் ஆகிற ஐடியாக்கள்.

 ஒரு தொழிலாளி சொன்ன யோசனை சுவாரஸ்யமானது.

 சினிமாவில் புயல் ஏற்படுத்த உபயோகிக்கிறது மாதிரி கொஞ்சம் சக்தி வாய்ந்த பெடஸ்டல் ஃபேனை வைத்தால் போதும். காலிப் பெட்டிகள் காற்றில் பறந்து கன்வேயரை விட்டு வெளியே போய் விழுந்து விடும் என்றானாம்.

 திருக்குறளில் கூட பல இடங்களில் Out of the box thinking காணப்படுகிறது.

 அவற்றில் சில நூற்றி எண்பது டிகிரி எதிர்த் திசையில் கூட இருக்கின்றன.

 சாதுவாக இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுகிற கேரக்டர்களை பசுந்தோல் போர்த்திய புலி என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

 ஆனால்,

கபட வேஷ போலிச்சாமியார்களை வள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசு என்கிறார்.

 ஊர்மக்களின் அடி உதையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள, அவர்களை பயந்து பக்கத்தில் வராமல் இருக்கச் செய்ய புலித்தோலைப் போர்த்தியபடி பயிரை மேய்ந்ததாம் பசு ஒன்று.

 பயிரைத் தின்கிற குணமே அது புலியில்லை என்பதைக் காட்டிக் கொடுத்து விடும் என்பது கூடத் தெரியாத முட்டாள் பசு போன்றவர்களாம் போலிச் சாமியார்கள். ரொம்ப சீக்கிரம் அடையாளம் காணப்படுவார்களாம்!

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றதம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

என்பது அந்தக் குறள்.

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொன்னது : அதைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்
சொல்ல நினைத்தது : அதை இன்னும் பார்க்கக் கூட இல்லை

சொன்னது : நாளைக்கு முதல் வேலையா……
சொல்ல நினைத்தது : சாமி சத்தியமா இன்னைக்கு முடியாது

சொன்னது : நாங்க சொன்னதிலே ஒரு சின்ன கம்யூனிகேஷன் பிழை
சொல்ல நினைத்தது : புளுகிட்டோம், மன்னிச்சிடுங்க.

சொன்னது : நிச்சயமா நம்மாலே முடியும்
சொல்லநினைத்தது :அத்தனை எளிதா முடிக்கிற சமாச்சாரமில்லை.

சொன்னது : சரியான ரூட்டிலே போய்கிட்டிருக்கோம். டார்கெட் தேதியை மட்டும் கொஞ்சம் தள்ளி வெச்சாப் போதும்.
சொல்ல நினைத்தது : புராஜக்ட் நாசமாய்ப் போய் விட்டது. செத்தாலும் கம்மிட் பண்ண மாதிரி முடிக்க முடியாது.

சொன்னது : எங்களுக்குள்ளே ஒரு சின்ன கருத்து வேறுபாடு
சொல்ல நினைத்தது : நடந்த சண்டையிலே டிபார்ட்மென்டே நாறிப் போச்சு. செக்யூரிட்டியை விட்டு விலக்கல்லைன்னா அவனை அண்டர் வேரோடு ஓட விட்டிருப்பேன்.

சொன்னது : நீ என்ன எல்லாம் பண்றேன்னு ஒரு லிஸ்ட் போடு. உனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்ன்னு பாக்கலாம்
சொல்ல நினைத்தது : அப்டி என்ன பெருசா புடுங்கறேன்னு பார்க்கலாமே.

சொன்னது : நிஜமான காரணம் என்னன்னு பார்க்கணும்
சொல்ல நினைத்தது : நீ எங்கே சொதப்பிநேன்னு சொல்றேன்

சொன்னது : நாங்க ஒரு டீமா இதை செய்தோம்
சொல்ல நினைத்தது : என்னை மட்டும் குறை சொல்றதிலே அர்த்தமில்லை

சொன்னது : இது நல்ல கேள்வி
சொல்ல நினைத்தது : இதப்பத்தி எனக்கு ஒரு இழவும் தெரியாது

சொன்னது : வாழ்த்துக்கள்
சொல்ல நினைத்தது : செத்தடா

சார், ஒரு வாரம் லீவ் வேணும்….

லீவ் கேட்பதற்காக வருகிற சக ஊழியர்களின் நடவடிக்கைகள் ஏறக்குறைய எல்லா அலுவலகங்களிலுமே ஒரே மாதிரி இருக்கும்.

லீவ் கேட்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த ப்ராசஸ் ஆரம்பமாகி விடும்.

தங்கள் இன் ட்ரேயில் இருக்கும் பேப்பர்களை மள மளவென்று கிளியர் செய்வார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தொழிற் கூடத்திலிருந்து எந்த புகாரும் வராத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். வழக்கமாக இது என் வேலை இல்லை என்று ஒதுக்கி வைக்கிற வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

எல்லாம் முடிந்து அறைக்கு வருவதற்கு முன்பு பி எ விடமோ, ரொம்ப நெருக்கமானவர்களிடமோ ‘தலைவர் மூட் எப்படி இருக்கு?’ என்று விசாரித்துக் கொள்வார்கள்.

உள்ளே வந்ததும் ‘கண்டேன் சீதையை’ என்கிற மாதிரி லீவ் கேட்க மாட்டார்கள்.

ஒரு வசீகரச் சிரிப்பு அல்லது குட் மார்நிங்குடன் தொடங்கும்.

“என்ன செந்தில், என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லை சார். ஜஸ்ட் சம அப்டேஷன்ஸ், அவ்ளோதான்”

“சொல்லு, என்ன அப்டேஷன்?”

“காபிடல் பர்செசஸ் எல்லாத்துக்கும் கம்பாரிட்டிவ் ஸ்டேட்மன்ட் போட்டாச்சு. அப்ப்ரூவல்க்கு அனுப்பிட்டேன்”

“ஓ… எஸ் பார்த்தேன்”

“பாச்ட் த்ரீ டேய்ஸ் டார்கெட் ஹண்ட்ரட் பர்சன்ட் அசீவ் பண்ணியிருக்கோம். நோ பிரேக் டவுன்ஸ்”

“தட்ஸ் குட்”

“புதுசா வாங்கின ஜெர்மன் மெஷின் கமிஷன் பண்ண நெக்ஸ்ட் வீக் ஆள் வர்றதுக்கு அர்ரெஞ் பண்ணியாச்சு”

“வெரி குட்”

“அந்த மெஷினோட பிக்ஸ்ச்சர் டிராயிங் நேத்து ரெடி பண்ணிட்டேன்”

“யு மீன் சாட்டர்டே?”

“இல்ல சார் நேத்து”

“ஓ.. யு வேர் ஹியர் எச்டேர்டே?”

“ஆமாம் சார் அப்பத்தான் கமிஷனிங் எஞ்சினியர் வரும் போது பிக்ஸ்ச்சர் ரெடியா இருக்கும்”

“தட்ஸ் வெரி நைஸ்”

இந்த இடத்தில்தான் கமலஹாசன் மாதிரி கிளாசிக் டச் வெளிப்படும்.

“ஒக்கே சார், வேறே ஒண்ணும் இல்ல” என்று ஆசாமி வெளியே போய் விடுவார். கதவு வரை போய் விட்டு திரும்ப வருவார்,

“சாரி சார், இன்னொண்ணு கேக்கணும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”

“என்னது?”

“ஒன் வீக் லீவ் வேணும்…. பசங்களுக்கு லீவ் விட்டாச்சு. எங்கயாவது போகணும்ன்னு நச்சரிக்கறாங்க”

“வாட், ஒன் வீக்கா? நோ…”

“ஓக்கே சார், ஆன்யுவல் லீவ்ல போய்க்கலாம்ன்னு சொல்லிடறேன்”

மறுபடி வெளியேறல்.

“ம்ம்ம்… செந்தில்…”

“சார்”

“கேன் யு கட் ஷார்ட் இட் பை டூ டேய்ஸ்?”

“ஓக்கே சார், பிரைடே வந்துடறேன்”

“ஓக்கே, ஹேவ் எ நைஸ் டைம்”

“தாங்க் யு சார்”

அவருக்கு மூன்று நாள்தான் லீவ் தேவைப்பட்டிருக்கும்.

கொட்டேஷன் கொடுக்கிற ஒவ்வொரு ஆளும் எத்தனை லெவல் பாசாக வேண்டுமோ அதற்கேற்றார் போல விலை கோட் செய்வார்கள். ஒவ்வொரு லெவலிலும் இரண்டு பர்சன்ட் டிஸ்கவுண்ட் தருவார்கள்!

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.

நான் சொல்ல வந்தது வேறே. இதற்கு மேனேஜ்மென்ட் சயன்சில் ஒரு பேர் இருக்கிறது.

Failure Mode Effect Analysis.

அதாவது, ஒரு வேலையைச் செய்யும் முன்பு அது எந்த வகையில் எல்லாம் தோற்கக் கூடும் என்பதை முன்னரே யோசித்து அறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை முன்னமே செய்து வைத்தல்.

மேனேஜ்மென்ட்டில் இதை ஒரு Proactive tool என்பார்கள்.

வாழ்க்கையில் நம்மையே அறியாமல் நாம் இதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கத்தான் இந்தப் பதிவு.

மடையன் என்றால் மேதாவி

மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.

கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.

எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”

“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”

நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.

“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”

“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”

“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”

“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”

நான் சிரித்தேன்.

“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”

இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.

“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”

“ஓரளவு தெரியும்”

என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.

“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”

“அதுவும் ஓரளவு தெரியும்”

இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”

நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.

“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”

“ஆமாம்”

“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”

“நிஜம்தான்”

“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”

எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.

“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”

எங்கே வருகிறார் இவர்?

“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”

என் முகம் மாறுவதைப் பார்த்து,

“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.

“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”

தமிழன் மேனேஜ்மென்ட் முன்னோடி!

எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிற போது, திரு.ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ‘தமிழன் அறிவியல் முன்னோடி’ என்றொரு பாடம் இருந்தது(ஸ்டாப்.. ரெண்டாயிரத்தி ஒம்போது மைனஸ் ஆயிரத்தி தொளாயிரத்தி என்று கணக்குப் போட வேண்டாம். இன்னும் வாக்கியம் முடியவில்லை) என் தாத்தாவுக்கு!

அதில் படித்ததை எல்லாம் விளக்கு விளக்கென்று விளக்கி உங்களை பாதியிலேயே ஓடச் செய்கிற எண்ணமில்லை. அது பற்றி சில சக ப்ளாக்கர்கள் ஏற்கனவே எழுதி இருப்பதை நான் அறிவேன். ஆனாலும் அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எழுத ஆசை. மீனாட்ச்யம்மைப் பிள்ளைத் தமிழில் நான் தேடும் பாடல் கிடைத்ததும் எழுதுறேன். ஏனென்றால் அந்தப் பாடல் என் மூத்த ப்ளாக்கர்களுக்கும் கிடைக்கவில்லை.

இப்போது எழுத வந்தது வேறே.

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

இதற்குப் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் அர்த்தம் : கோபக்காரர்கள் முட்டாள்கள் என்பதே. இவ்வளவு எளிமையான அர்த்தம் இருக்கிற விஷயம் தலைமுறை தலைமுறையாக சாகாவரம் பெற்று இன்றைக்கும் பேசப்படாது.

Transactional Analysis என்று ஒரு சப்ஜெக்ட் இருக்கிறது. I am OK You are OK என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இதெல்லாம் வெளிநாட்டில் நேற்று முளைத்த காளான்கள்! இவைகள் எல்லாம் மனித மனத்தின் பல்வேறு நிலைகளைப் பேசுகிற சமாச்சாரங்கள். அதில் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு ரெண்டைப் பார்க்கலாம்.

மனித மனத்தின் நிலைகளைப் பொதுவாக உணர்வுப் பூர்வ நிலை, அறிவுப் பூர்வ நிலை என்று இரண்டாகச் சொல்லலாம். இந்த இரண்டின் பெருக்குத் தொகை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறாதது-அதாவது கான்ஸ்டன்ட். பெருக்குத் தொகை மாறாதது என்றால் ஒன்றுக்கு மற்றது எதிரானது என்று அர்த்தம். அதாவது ஒன்று கூடினால் இன்னொன்று குறையும். (PV = k)

ஆத்திரம் என்பது உணர்வு. புத்தி என்பது அறிவு. உணர்வு அதிகமாகும் போது k இன் மதிப்பை சமநிலையில் வைக்க அறிவு குறைந்து விடும்.

அறிவு அடங்கியும் உணர்வு தூக்கலாகவும் இருக்கிற மன நிலை எமோஷனல் நிலை. இப்படிப்பட்ட மன நிலையில் முடிவுகள் எடுக்கப் பட்டால் அவை பெரும்பாலும் தவறாகவே அமையும். உணர்வு அடங்கியும் அறிவு தூக்கலாகவும் இருக்கும் மன நிலையை அஸ்ஸெர்ட்டிவ் என்பார்கள். முடிவெடுக்கிற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த அஸ்ஸெர்ட்டிவ்நெஸ் ரொம்ப அவசியம் என்கிறார்கள். (எமோஷனல் இண்டேல்லிஜென்ஸ் என்று ஒரு சப்ஜெக்ட் இருக்கிறது என்று பாய நினைக்கிறவர்களுக்கு : அந்தக் கச்சேரியை தனியாக வைத்துக் கொள்ளலாம்)

ஆத்திரத்தில் இருக்கிறவர் லாஜிக் பேசி எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

வங்கியில் வேலை செய்கிறவர் வட்டியை தப்பாகக் கணக்கிட்டால், கூட்டு வட்டி ஈஸ் ஈக்வல் டு பி இன்டூ ஒன ப்ளஸ் ஆர் பை ஹண்ட்ரட் தி ஹோல் பவர் என்ய்யா. பி என் ஆர் பை ஹண்ட்ரட் போட்டிருக்கியே என்று பாடம் நடத்துகிற மேனேஜர்கள் கிடைப்பது துர்லபம்.

“எவண்டா உனக்கு டிகிரி குடுத்தான்?” என்று விசிறி அடிக்கிறவர்கள்தான் ஏராளம்.

ஆத்திரத்தில் இருக்கிறவர்களிடம் லாஜிக் பேசினால் நம்மை சம்ஹாரம் செய்து விடுவார்கள்.

“ஏன்ய்யா, செத்தன்னிக்கு வரச்சொன்னா பத்தன்னிக்கு வந்திருக்கியே.. அறிவு இல்லை?” என்று கேட்பவரிடம்

“ஆக்சுவலா என்ன ஆச்சுன்னா பஸ்லேர்ந்து ஒர்த்தன் மோஷன்லே இறங்கினதாலே, லா ஆப் கான்செர்வேஷன் ஆப் மொமேன்ட்டம்ன்னாலே..” என்று ஆரம்பித்துப் பாருங்கள்.

அந்த பேட் மொமேன்ட்டால் உங்களுக்கு லூஸ் மோஷன் ஆரம்பித்து விடும்.

இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று திருக்குறளை விட சின்னதாகச் சொல்லியிருக்கிறான் நம்ம ஆள்..

இப்போ சொல்லுங்கள், தமிழன் மேனேஜ்மென்ட் முன்னோடிதானே?

கோணல் புத்தியும் கிரியேட்டிவிட்டியும்

கோணல் புத்தி பற்றி எழுதியிருந்தோம்.

ஒரு வகையில் கிரியேட்டிவிட்டி என்பதே கோணல் புத்திதான். சிஸ்டமேட்டிக்காக யோசிக்கிறவர்கள் கிரியேட்டிவாக இருப்பது அபூர்வம்.

ஒரு பற்பசை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனையை அதிகரிக்க எண்ணினார்கள்.

அதிகாரிகள் அனைவரையும் கூப்பிட்டு யோசனை கேட்டார்கள். விலை குறைப்பு,விளம்பரம்,இலவச இணைப்பு,பரிசுத் திட்டம் என்று ஏதேதோ யோசனைகளை வந்தன. இவை எல்லாமே செலவு வைப்பதாகவோ, அதிக காலம் தேவைப் படுவதாகவோ இருந்ததால் நிர்வாகிக்கு திருப்தி இல்லை.

தேநீர் கொண்டு வந்த பையன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

நிர்வாகியிடம் போய் தயங்கித் தயங்கி ஒரு யோசனை சொன்னான்.

அதை உடனே செயல் படுத்தினார் அவர். அடுத்த மாதமே முப்பது சதவீதம் விற்பனை ஏறியது.

அவன் சொன்ன யோசனை என்ன தெரியுமா?

ஆறு மில்லி மீட்டராக இருந்த பற்பசை ட்யூபின் வாய் அளவை எட்டு மில்லி மீட்டராக  ஏற்றச் சொன்னான்!

எப்புடீ?

நீங்கள் கோணல் புத்திக்காரரா?

சில பேர் எல்லாவற்றையுமே கொனஷ்டையாகத்தான் பார்ப்பார்கள்.

வாட்டர் போலோ என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. அதில் பந்தைப் பொறுக்குவதே பெரிய வேலை.(எல்லாம் கேள்விப் பட்டதுதான். எனக்கு நீச்சலே தெரியாது. வாட்டர் போலோ எங்கே தெரியப் போகிறது!)

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ஒருத்தன் நினைத்தான். ஒரு நாயை வாங்கினான். அதற்க்கு நீர் மேல் நடக்கிற பயிற்சியை ரொம்ப சிரமப் பட்டு கொடுத்தான்.

ஆச்சரியமான விஷயங்களை நேராகச் சொல்கிற வழக்கம் யாருக்கும் கிடையாது. அதைப் பார்க்கிறவர்கள் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும் என்று நினைப்போம். அவனும் அப்படித்தான் முயன்றான்.

எல்லாரையும் கூட்டிப் போய் நிற்க வைத்தான்.

பந்தை தூக்கித் தூக்கி நீரில் எறிந்தான். நாய் நீர் மேல் ஓடி ஓடிப் போய் அதை எடுத்து வந்தது.

“வித்யாசமா ஏதாவது தெரிகிறதா?” என்று பெருமையாகக் கேட்டான்.

கூட்டத்திலிருந்த ஒருத்தன் சொன்னான் :

“ஆமாம், உன் நாய்க்கு நீந்தத் தெரியவில்லை”

ஷிவ் கேரா வின் “யு கேன் வின்” இல் படித்தது.

எம்.ஜி.ஆரும் மேனஜ்மேன்ட்டும்

எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.

ஏன் என்று சொல்கிறேன்.

பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.

ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு (கையில் கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு அல்ல!) ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.

நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.

ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.

அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?

அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!