self development

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

Advertisements

தனக்குத் தானே ரிவர்ஸ் கியர்

ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒரு சமயம் நிருபர் ஒருவர்,

“காந்தியைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு ஜேகே சொன்ன பதில் கொஞ்சம் முரண்பாடானது.

“காந்தியைப் பற்றி எனக்கு ஏன் அபிப்பிராயம் இருக்க வேண்டும்? முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். எனக்கு அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது” என்பதே அவர் சொன்ன பதில்.

இதை முதன் முதலில் படிக்கிறவர்கள் ஜேகே ஒரு திமிர் பிடித்தவர் என்றோ, கிறுக்கு என்றோ, பரபரப்புக்காக முரண்பாடாகப் பேசுகிறவர் என்றோ பலவாறாக நினைக்கக் கூடும்.

‘ஒரு கிண்ணம் காலியாக இருக்கும் போதுதான் அதைப் பயன்படுத்த முடியும்’ என்றும் அவர் சொல்லியிருப்பதை அறிந்தவர்கள் இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒருத்தரைப் பற்றி அபிப்ராயம் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால், அவரது சொற்களையும் செய்கைகளையும் அந்த அபிப்ராயத்தின் வழியே பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த அபிப்ராயம் என்பது ஒரு வடிகட்டி மாதிரி. அபிப்ராயத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களை நிராகரித்து விட்டு, தொடர்புள்ளவைகளைத் தேடித் தேடி எடுத்துக் கொள்ளும். தொடர்பில்லாதவைகளை தொடர்புப் படுத்திப் பார்க்கும்.

ஆக ஒருவரைப் பற்றி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றால், அதுவாகவேதான் அவர் தெரிவார். அவரது நிஜப் பரிமாணம் நம் அபிப்ராயத்தை விட உயர்ததாகவோ, தாழ்ந்ததாகவோ, தொடர்பே இல்லாததாகவோ இருந்தாலும் நமக்கு அது தெரிய வராது.

அதனால்தான் யாரைப் பற்றியும் அபிப்ராயம் இருக்கக் கூடாது என்று ஜேகே சொன்னார்.

ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும், அவர் முன்னர் சொன்ன, செய்த விஷயங்களின் தாக்கம் இன்றிப் பார்ப்பது ரொம்ப சிரமமான விஷயம்.

ஜேகேயின் உண்மையான பரிமாணம் தெரியாதவர்கள் அவரது மேற்சொன்ன ஸ்டேட்மென்ட்டைப் படித்தால் அதன் நிஜ அர்த்தம் புரியுமோ? அது புரியவே ஜேகே பற்றிய ஒரு பர்செப்ஷன் தேவையிருக்கிறது!

அப்போ ஜேகே சொன்னது தப்பா?

மடையன் என்றால் மேதாவி

மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.

கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.

எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”

“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”

நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.

“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”

“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”

“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”

“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”

நான் சிரித்தேன்.

“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”

இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.

“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”

“ஓரளவு தெரியும்”

என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.

“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”

“அதுவும் ஓரளவு தெரியும்”

இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”

நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.

“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”

“ஆமாம்”

“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”

“நிஜம்தான்”

“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”

எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.

“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”

எங்கே வருகிறார் இவர்?

“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”

என் முகம் மாறுவதைப் பார்த்து,

“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.

“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”