வந்துவிட்டாள் ஓடு!

காலையிலிருந்து கணேஷ் எங்கே போனாலும் நூறடி தூரத்தில் அவனைத் தொடர்ந்து கொண்டே இருந்தாள் அந்தப் பெண்.

முதலில் அவன் கவனிக்கவில்லை. கவனித்தாலும் அது ஏதோ எதேச்சையாக நடக்கிறது என்று நினைத்தான். கடந்த எட்டு மணி நேரத்தில் எட்டாவது முறையாகப் பார்த்ததும்தான் சந்தேகம் ஏற்பட்டது.

நிச்சயப் படுத்திக் கொள்வதற்காக வேகமாக நடந்தான். சுமார் நூறடி நடந்து நின்று திரும்பிப் பார்த்தான். சந்தேகமேயில்லை. அவள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள். யார் இது? எதற்காக என்னைத் தொடர்கிறாள்? நேராக அவளையே கேட்டுவிட்டால் போயிற்று.

கணேஷ் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவள் முகத்தின் அசாதாரணமான அழகின் ஊடே ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது. ஒரு சின்ன ஆம்பிளைத்தனம் அல்லது சூனியக்காரித்தனம் என்று சொல்லலாம். சிலசமயம் ரொம்ப இளம்பெண் போலவும், சிலசமயம் கிழவி போலவும் தெரிந்தாள். உடம்பின் அளவுகளில் எல்லாம் கோயில் சிற்பம் மாதிரி ஒரு செயற்கை தெரிந்தது. உள்ளூர் அல்லாத ஒரு மிலேச்சத்தனம் தெரிந்தது. உள்ளூர் இல்லை, இந்த கிரகத்து மனிஷியே இல்லையோ என்று கூடத் தோன்றியது.

யோசனையுடன் அவளை நோக்கி நடந்து கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று ஒரு விஷயம் உறைத்தது. இரண்டு நிமிடங்களாக அவளை நோக்கி நடந்தும், இன்னமும் அதே நூறடி தூரத்தில்தான் இருந்தாள். ஹோட்டல் வாசலிலிருந்து பார்த்த போது காரைக்கால் அம்மையார் கோயில் வாசலில் இருந்தாள். இப்போது நடந்து நடந்து கோயில் வாசலுக்கு வந்து விட்டான். அவள் சாலையின் முனைக்குப் போய் விட்டாள். எப்போது நடந்தாள் அல்லது நகர்ந்தாள்?

ஒருவேளை பிரமையாக இருக்குமோ?

இல்லை, இப்போது அவனை நோக்கி அவள் நடக்க ஆரம்பித்திருந்தாள். காத்திருந்தான். வரட்டும் கேட்டு விடலாம். சாலையில் கிழவர் ஒருவர் வண்ணப் பொடியில் பெரிதாகப் படம் போட்டு விட்டு ஜனங்கள் காசு போடத் துணியை விரித்திருந்தார். மார்க்கண்டேயனுக்கு எமன் பாசக் கயிறு வீசுகிற படம். படத்தைப் பார்த்த அவனுக்கு திக்கென்றது.

படத்திலிருந்த எமனுக்குப் பெண் வேஷம் போட்ட மாதிரிதான் அவள் முகம் இருந்தது. படத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அதே முகம்.

எமனா? எமனா என்னை நோக்கி வருவது?

மூன்று வருஷம் முன்னால் வைதீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் பார்க்கும் போது முத்தாய்ப்பாகச் சொன்ன செய்யுள் நினைவு வந்தது.

கீழைக் கடலருகே வாழு முன்னருகே

சோழகுலவல்லிப் பட்டணமா – மாங்கே

பொங்கு சனியுன்னைப் பிரியுமுன்னே வாழ்வு

மங்கி விடும் வாய்ப்புளதாம்.

“என்ன அர்த்தம் சாமி?” என்று கேட்ட போது ஜோசியர்

“உங்க ஊரு காரைக்கால். கிழக்கில இருக்கிற சோழநாட்டுக் கடற்கரைப் பட்டணம் அது. பொங்கு சனி நடந்துகிட்டு இருக்கு உன் ராசிக்கு. அடுத்த சனிப்பெயர்ச்சிக் குள்ளே…..” என்று நிறுத்தினார்.

“வாழ்வு மங்கறதுன்னா என்னங்க? லோ வோல்டேஜ் ஆயிடுமா?” என்று நக்கலாகக் கேட்டான். அடுத்தநாளே அதை மறந்தும் போய்விட்டான். நாளைக்கு சனிப் பெயர்ச்சி.  கிட்டே வந்து கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் எமன் தெரிகிறான். வாழ்வு மங்கும் வாய்ப்புளதாம்!

கணேஷுக்கு வியர்த்தது.

என் கதை முடிந்தது! முடிந்ததா அல்லது மார்க்கண்டேயன் தப்பித்தது மாதிரி தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா? எதற்காக அந்தப் படம் இப்போது கண்ணில் பட வேண்டும்? ஒருக்கால் தப்பித்துப் போ என்று விதி எச்சரிக்கிறதோ? அவள்… அல்லது அவன்… அருகில் வருவதற்குள் ஓடி விட வேண்டும். வேகமாக நடக்க ஆரம்பித்தான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாக நடந்தான். அவள் தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஓட ஆரம்பித்தான்.

தலை தெறிக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை. இனிமேல் ஓட முடியாது என்கிற ஸ்டேஜ் வரும்வரை ஓடினான். மூச்சு வாங்கிக் கொள்ள நின்ற போது மஸ்தான் சாஹிப் தர்க்கா அருகே வந்திருப்பதைப் பார்த்தான். தர்க்கா வாசலிலிருந்து மைதீன் பாய் ஓடி வந்தார்.

“என்னாச்சு கணேசா? ஏன் ஓடறே?”

“துரத்தறா”

“யாரு?”

“எமன்.. எமன் துரத்தறான்”

“துரத்தறான்னு சொன்னே?”

“அவதான் அது.. எமன். அவந்தான் அவ மாதிரி”

கணேஷ் தீவிரமாகக் குழம்பியிருப்பது புரிந்தது அவருக்கு.

”முதல்லே உட்காரு. யார் துரத்தினாலும் சரி. ஹமீதை விட்டு கவனிச்சிக்கச் சொல்றேன். இங்க வா”

“இல்ல பாய்.. அவ வர்ரதுக்குள்ள நா போகணும். தப்பிக்கணும்.”

“ஏன் தப்பிக்கணும்? என்ன ஆச்சு?”

“கீழைக் கடலருகே வாழு முன்னருகே

சோழகுலவல்லிப் பட்டணமா – மாங்கே

பொங்கு சனியுன்னைப் பிரியுமுன்னே வாழ்வு

மங்கி விடும் வாய்ப்புளதாம்…… நாளைக்கு சனிப் பெயர்ச்சி. அதான் அவன் வந்துட்டான்”

“என்ன குலவல்லிப் பட்டணம், என்ன பொங்கு சனி?” பாய் கேட்டுக் கொண்டிருந்த போதே அவர்கள் அருகில் கார் ஒன்று வந்து நின்றது.

“பாய், நாகப்பட்டணம் போகணும்ன்னிங்களே, வரீங்களா?” என்றார் உள்ளேயிருந்த நபர். சாயந்திரம் நாகப்பட்டிணத்தில் அவருக்கு ஒரு வேலை இருந்தது. நேற்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

“நா வரேன்” என்றான் கணேஷ் அவசரமாக.

“தம்பி யாரு, ஒரு ஆளுக்குதான் இடமிருக்கு” என்றார் கார்.

“அவ வந்துட்டா, அவ வந்துட்டா நா போறேன்” என்று பறந்தான் கணேஷ்.

“தம்பிக்கு ஏதோ அவசரம், அவரைக் கூட்டிட்டு போங்க. நா அப்புறம் வர்ரேன்”

கார் புறப்பட்டது.

குழப்பத்தோடு கார் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் மைதீன் பாய். என்ன ஆயிற்று இவனுக்கு? வந்தான், உளறினான், வினாடி தாமதிக்காமல் ஓடிவிட்டான்!

திடீரென்று தனக்கு அருகில் யாரோ வந்து நின்ற மாதிரி உணர்ந்தார். தர்க்கா வாசலில் படுத்திருந்த நாய் ஒன்று வெற்றிடத்தைப் பார்த்து தொடர்ந்து குலைத்தது. கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று அல்லது யாரோ அருகில் நிற்பது அவருக்குப் புரிந்தது.

“யாரது?” என்றார் பொதுவாக அந்த திசையைப் பார்த்தபடி.

பதிலில்லை.

“நீங்க வந்திருக்கிறது தெரியும்” என்றார் மறுபடி.

யாரோ தொண்டையைச் செறுமுகிற மாதிரி சப்தம் வந்தது. முணுமுணுப்பாக ஒரு குரல் கெட்டது. பேச்சில் தெளிவில்லை.

“நீதான் கணேஷைத் துரத்திகிட்டு வந்ததா?”

இப்போது வந்த பதில் கொஞ்சம் புரிந்தது, “துரத்தல்லை” என்றது குரல்.

“பின்னே?”

“இன்னும் இருபது நிமிஷத்தில் அவன் விதி முடியுது. ஆனா முடிக்கப் பட வேண்டிய இடம் இது இல்லை. எப்போ எப்படி அவன் அங்கே கிளம்பப் போறான்னுதான் பார்த்துகிட்டு இருந்தேன்”

“எந்த இடம் அது?”

“சோழகுலவல்லிப் பட்டணம்”

கணேஷும் இதைத்தானே சொன்னான்! ஒரு வினாடி துணுக்குற்றாலும் உடனே சமாளித்துக் கொண்டார். பாய் சிரித்தார்.

“சோழகுலவல்லிப் பட்டணமா? எனக்குத் தெரிஞ்சி அப்படி ஒரு பட்ணம் இந்த ஜில்லாவிலயே இல்லை”

பதிலில்லை.

“என்ன, நா சொன்னது கேட்டதா?” என்றார் ஒருதரம் உரக்க. ரோடில் போன நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தார்கள்.

அதற்கும் பதிலில்லை.

நாயைப் பார்த்தார். அது சாந்தமாக வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. ஆள் புறப்பட்டாகி விட்டது போலிருக்கிறது.

கடைக்குள்ளிருந்து ஹமீது வந்தான்.

“பாய், மொபைல்ல யார் கிட்டயாவது பேசிகிட்டு இருந்தீங்களா?”

இல்லை என்று சொல்ல வந்தவர் நிறுத்திக் கொண்டார். யாரிடம் பேசினோம் என்று சொன்னால் தனக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள் என்று பயந்து, “ஆமாம்” என்றார்.

“சோழகுலவல்லிப் பட்டணம்ன்னு ஒரு ஊர் இந்த ஜில்லாவிலயே இல்லைன்னு சொன்னீங்களோ?”

“ஆமாம்”

”தப்புங்க”

“என்னா தப்பு?”

“தமிழ் வாத்யார் சோமசுந்தரம் தெரியுமில்ல?”

“யாரு, பி.சோ. வா?”

“ஆமாம், அவரு போன வாரம் பேசிகிட்டு இருக்கிறப்ப சொன்னார்.”

“என்ன, சோழகுலவல்லிப் பட்டணம் இருக்குன்னா?”

“ஆமாம்”

“எங்க இருக்குதாம்?”

“இப்ப பேர் மாறிப் போச்சு. முற்காலச் சோழர்கள் காலத்தில் அப்படி ஒரு பேர் இருந்ததாம் அந்த ஊருக்கு”

“சரி இப்ப என்னா பேரு?”

“நாகப்பட்டணம்”

(ஜெஃப்ரி ஆர்ச்சர் ஃபேரிடேல் மாதிரி ஒரே பாராவில் ’டெத் ஸ்பீக்ஸ்’ என்கிற ஒரு குட்ட்ட்ட்ட்டிக் கதை எழுதியிருக்கிறார். அதைத் தமிழ் வாசகர்கள் ரசிக்கிற விதத்தில் பகிர வேண்டும் என்கிற ஆசையில் எழுதப்பட்டது)

20 comments

  1. ஜெஃப்ரி ஆர்ச்சரின் சில நூல்கள் படித்திருக்கிறேன். தமிழில் நல்ல முயற்சி. என்க்கென்னவோ சுஜாதா எழுத்துக்களை படிக்கிற மாதிரியே இருந்தது. ஏகப்பட்ட பேருக்கு அவர் இன்ஸ்பிரேஷன். இருக்கலாம் உங்களுக்கும். அதிகமாய் அவர் எழுத்துக்களையே நேசித்து படித்ததால் உண்டான ப்ரமையாகக் கூட இருக்கலாம். படிக்க சுவாரஸ்யமாக் இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

  2. இப்ப பேர் மாறிப் போச்சு. முற்காலச் சோழர்கள் காலத்தில் அப்படி ஒரு பேர் இருந்ததாம் அந்த ஊருக்கு”

    “சரி இப்ப என்னா பேரு?”

    “நாகப்பட்டணம்”

    பாய், நாகப்பட்டணம் போகணும்ன்னிங்களே, வரீங்களா?” என்றார் உள்ளேயிருந்த நபர்– ivar gathi enna sir????

  3. அருமை!
    பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது…
    பகிர்விற்கு நன்றி!
    படிக்க! சிந்திக்க! :
    “உங்களின் மந்திரச் சொல் என்ன?”

எதுவா இருந்தாலும் எழுதுங்க!