நிறைய சாப்பிட்ட குதிரையில் ஏறினால்…..

குரு செய்பவைகளை சிஷ்யன் அப்படியே காப்பியடிப்பது ஆபத்தாகி விடும்.

நெடுங்காலத்துக்கு முன்னர் ஒரு மருத்துவர் இருந்தார். ரொம்பத் திறமையான வைத்தியர் என்று பேரெடுத்தவர். அவருக்கு ஒரு சீடன் இருந்தான்.

வயிற்று வலி என்று செல்வந்தர் ஒருவர் அழைத்திருந்தார். செல்வந்தரின் நாடியைப் பிடித்துப் பார்த்த மருத்துவர்,

“கடலை அதிகமாகச் சாப்பிடக் கூடாது” என்று சொன்னபடி மருந்தைத் தந்தார்.

செல்வந்தர், சீடன் இருவருக்கும் வியப்பு. வெளியே வந்ததும் சீடன் கேட்டான்,

“கடலை சாப்பிட்டதுதான் வயிற்று வலிக்குக் காரணம் என்று எப்படித் தெரியும்?”

“கட்டிலுக்கு அடியில் ஏகப்பட்ட கடலைத் தோல் கிடந்ததை நீ கவனிக்கவில்லையா?” என்றார் மருத்துவர்.

சீடன் இதை அப்படியே மனனம் செய்து கொண்டான்.

இன்னொரு நாள் சேனாதிபதிக்கு வயிற்று வலி என்று போனபோது சீடன் உற்சாகமாக,

“சேனாதிபதிக்கு ஏன் வயித்து வலின்னு எனக்குத் தெரிஞ்சி போச்சு” என்றான்.

நாமே எதையும் கவனிக்கவில்லையே இவன் என்னத்தைப் பார்த்தான் என்று கட்டிலடியில் பார்த்தார் வைத்தியர். குதிரை சேணம் கிடந்தது. அதை அவிழ்த்து வைத்துவிட்டு குதிரையைக் குளிப்பாட்டப் போயிருப்பான் போலிருக்கிறது வேலைக்காரன். என்னத்தை உளறப் போகிறானோ என்று அவனைத் தடுப்பதற்குள் சீடன்,

“குதிரை சாப்பிட்டதாலேதான் சேனாதிபதிக்கு வயித்து வலி” என்றான்.

“குதிரை சாப்பிட்டதாலா?” என்றார் சேனாதிபதி பயந்து.

அவசரமாகச் சமாளிக்காவிட்டால் மானக் கேடு ஆகிவிடும் என்று மருத்துவர் குறிக்கிட்டு,

“அதாவது சேனாதிபதி அவர்களே, குதிரை வயிறு நிரம்பச் சாப்பிட்டால் உற்சாகமாய்த் துள்ளும் அல்லவா? அப்போது குதிரை மேலே ஏறினால் வயிறு கலக்கும் அல்லவா? அதனால் வயிற்று வலி வந்திருக்கலாமே? அதைத்தான் சொல்கிறான்” என்றார்.

வெளியே வந்ததும் “அடேய் மூடா, கடலைத் தோல் கிடந்தால் கடலை சாப்பிட்டான் என்றால் சேணம் கிடந்தால் குதிரை சாப்பிட்டதாக அர்த்தமா? எப்படி சமாளிக்க வேண்டியதாயிற்று பார்த்தாயா?” என்று கடிந்து கொண்டார்.

சில நாட்களில் அரசருக்கு வயிற்று வலி என்று போனார்கள். அரசரின் கை பிடித்து மருத்துவர் சோதித்துக் கொண்டிருந்த போது சீடன் உற்சாகமாய்,

“ராஜா என்ன சாப்ட்டாருன்னு தெரிஞ்சி போச்சு” என்றான்.

கட்டிலுக்கு அடியில் பார்த்த மருத்துவருக்கு திக்கென்றது. கீழே ராணியின் உள்ளாடை கிடந்தது. அவசரமாக சீடனைப் பார்த்து,

“ஏதாவது உளறாதே. என்னால் சமாளிக்கவே முடியாது” என்றார்.

சமாளிப்பது என்கிற வார்த்தையைக் கேட்டதும் சீடன் மேலும் அதிக உற்சாகம் பெற்று,

“ஓ.. அப்படியா விஷயம். சமாளிப்பது எப்படின்னும் தெரியும். நானே சமாளிக்கிறேன்” என்றான்.

மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை. சீடன் ஆரம்பித்தான்,

“ராணி நிறைய சாப்பிட்டதால துள்ளுவாங்க இல்லையா…” என்று ஆரம்பித்தான்.

மருத்துவர் எழுந்து ஓடி விட்டார்.

மோனா free யா இருந்தா….

ராணா ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி. பெரிய சாதனையாளர். அவரைப் பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டார்கள்.

தன் சாதனைகளையும் வெற்றிகளையும் பற்றிச் சொன்ன ராணா பத்திரிகையாளர்களுக்கு அனுதினமும் தான் தயாரிக்கும் To do லிஸ்டைக் காட்டினார். சாதிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாய்ச் செய்யாமல் அவைகளைச் சின்னச் சின்ன இலக்குகளாய்ப் பிரித்து தினசரி ஒவ்வொன்றிலும் கொஞ்சம் செய்வதாகச் சொன்னார். ஜவர்லால் நடத்திய பயிற்சி வகுப்பில் அதைக் கற்றுக் கொண்டதாகவும் சொன்னார்.

“ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க?”

“இதோ அதுவும் லாஸ்ட்ல இருக்கே” என்று காட்டினார்.

ஏகப்பட்ட வேலைகளின் பட்டியலோடு கடைசியில், Have some fun with Moana when free என்று இருந்தது.

“மோனாங்கிறது….?”

“என் வொய்ஃப்”

ராணாவின் பக்கத்து வீட்டில் இருந்தவன் அவரது சிஷ்யன். ஆனால் அவனால் ராணா அளவு சாதிக்க முடியவில்லை. அவனையும் பேட்டி கண்டார்கள். ராணா போலவே To do லிஸ்ட் போட்டால் என்ன என்று கேட்டார்கள்.

“ஏறக்குறைய அவருடைய To do லிஸ்ட்தான் என்னுடையதும். ஆனாலும் என்னால திட்டமிட்டபடி எதையும் முடிக்க முடியவில்லை” என்று அலுத்துக் கொண்டு லிஸ்டைக் காட்டினான்.

பத்திரிகையாளர்கள் அவனுடைய லிஸ்டை வாங்கிப் பார்த்தார்கள்.

கடைசி ஐட்டம் : Have some fun with Moana when she is free என்று இருந்தது.

(யாரும் திட்டக் கூடாது. இங்கிலீஷ்காரங்க ஜோக் எழுதற ஸ்டைல்ல டிரை பண்ணினேன். அவ்வளவுதான்)

எத்தனை துப்பாக்கி வள்ளுவர் சொன்னது?

நான் ஹோசூர் போன புதிதில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது.

ஆகவே பீர்பால்கள் எல்லாரும் கர்நாடகா பார்டரில் இருந்த நர்மதா என்கிற பாருக்குத்தான் தீர்த்த யாத்திரைக்குப் போவார்கள். அங்கே இருந்த ஒரு தனியார் ஆட்டோமொபைல் நிறுவனம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். தங்கள் ஊழியர்கள் சரக்கடிப்பது தெரிந்தால் செம்ம அர்ச்சனை நடக்குமாம். அதிலும் மனைவிமார்கள் புகார் செய்தால் போச்!

எங்கள் நிறுவனத்தில் ஒரு நண்பருக்கு ஃபேர்வெல் அங்கே நடந்தது. முடிந்து வெளியே வரும் போது பார்க்கிங் ஏரியாவில் ஒரு ஆள் நின்று கொண்டு,

‘துப்பார்க்கு துப்பாய…’ குறளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு எதுவும் புரியவில்லை. அருகிலிருந்த நண்பனைக் கேட்டேன். மேற்சொன்ன நிறுவனத்தின் பேரைச் சொல்லி ‘…….. ஸ்டாஃப் சார். வீட்டுக்குப் போனா பொண்டாட்டி இந்தக் குறளை தெளிவாச் சொல்லச் சொல்வா. தப்பாச்சுன்னா புகார் பண்ணிடுவா’ என்றான்.

அந்த ஆள் என்னிடம் வந்து ‘சார் சரியா சொல்றேனா பாருங்க’ என்று கேட்டுவிட்டு ஒருதரம் சொன்னான்.

‘இந்தக் குறள்ள துப்பாக்கிங்கிற வார்த்தை ரெண்டு தரம் வரணுமே? நீங்க ஒரு தரம்தான் சொல்றீங்க?’ என்றேன்.

‘ஒரு தரம்தான் சார் வரும்’ என்றான்.

‘நீ போதைல இருக்கே. ரெண்டு ஒண்ணாத் தெரியுது’

‘சார்.. போதைன்னா ஒண்ணு ரெண்டாத் தெரியும். ரெண்டு எப்படி சார் ஒண்ணா தெரியும்?’

‘ஜுரம்ன்னா என்ன?’

‘டெம்ப்பரேச்சர் அதிகமாகும்’

‘ஜுரம் மிஞ்சிப் போனா?’

‘ஜன்னி பிடிக்கும்’

‘அப்ப டெம்ப்பரேச்சர் எவ்வளவு இருக்கும்?’

‘கம்மியாயிடும்’

‘அதேதான். போதை பயங்கரமா எகிறி இப்ப அப்நார்மலுக்கு பதில் சப்நார்மல் ஆயிடிச்சு’

அந்தாள் ராத்திரி வீட்டுக்குப் போனானா தெரியவில்லை.

அரஸ்ட்டுத்தான்.. ஆனா ஜாமீன்ல விட்டாச்சு

நாகப்பட்டினத்தில் எனக்கு ஆசிரியராக இருந்த பலருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்.

ராஜசுந்தரம் என்கிற என் ஏழாங்கிளாஸ் வாத்தியார் ‘லூஸ் மோஷன்’ ஆகிறதே என்று ஒரு பையனை அனுப்பி வைத்தியர் கந்தசாமிப் பிள்ளையிடம் சூரணம் வாங்கிச் சாப்பிட்டார். கந்தசாமிப் பிள்ளையிடம் லூஸ் மோஷனுக்கு மருந்து சாப்பிட்டால் ஷட்டரை இழுத்து மூடினது போல சட்டென்று நின்று விடும்.

ராஜசுந்தரம் பெரிய கடைத் தெருவில் ரொட்டிக் கடை வைத்திருந்தார்.

சாயந்திரம் அந்தப் பக்கம் சுவேகாவில் வந்த பிள்ளை,

“எப்படி இருக்கு?” என்று விசாரித்தார்.

“அரஸ்ட் ஆயிடிச்சு” என்றார் ராஜசுந்தரம்.

பிள்ளைவாள் திருப்தியாகிப் போய்விட்டார். போய் சவுந்திரராஜப் பிள்ளை மெடிக்கல்ஸில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அங்கே வந்த ராஜசுந்தரத்தின் கடை ஆள் ஒருவர் கந்தசாமிப் பிள்ளையிடம்,

“ஐயாவுக்கு லூஸ் மோஷன் சூரணம் வேணும்” என்று கேட்டான்.

பிள்ளை எழுந்தார்.

“இப்பதானே பார்த்துட்டு வரேன், வா போய்ப் பாக்கலாம்” என்று கூடவே புறப்பட்டுக் கடைக்கு வந்தார்.

“என்ன சார், அரஸ்ட் ஆயிடிச்சுன்னு சொன்னீங்க, உங்க ஆள் திரும்பவும் வந்து சூரணம் கேக்கறானே?” என்றார் பிள்ளை.

“அரஸ்ட்டுதான் ஆயிருந்தது. சூரணம் அரஸ்ட் பண்ணிடுச்சேன்னு கொஞ்சம் சுண்டல் சாப்ட்டேன், அது அரஸ்ட் ஆனதை ஜாமீன்ல விட்டிடுச்சு” என்று வேதனையினூடே ஜோக் அடித்தார் ராஜசுந்தரம்!

 

திருவள்ளுவரும் Big Bang Theory யும்

Big Bang Theory க்கு எல்லாம் முன்னதாக திருவள்ளுவர் சொல்லியிருக்கும் ஆதி பகவன் தியரி ஆணித் தரமானது.

எப்படி என்பதற்கு முன்னால் கொஞ்சம் விஞ்ஞானம் சொல்கிறேன். வேதாந்தமாகத் தெரியும். இது அரிஸ்டாட்டில் முதலில் சொல்லி அப்புறம் சின்மயானந்தா வரை உறுதி செய்யப்பட்டது.

நாம் பார்க்கும் எதையும், யாரையும் ஒரு விளைவாக(Effect) எடுத்துக் கொண்டு அதன் காரணத்தை அறிந்து, பிறகு அந்தக் காரணத்தை விளைவாக வைத்துக் கொண்டு அதன் காரணம் என்ன என்று மேலேறி (Upward Causation) பின் அதை விளைவாக வைத்து அதன் காரணத்துக்கு ஏறி…. என்று போனோமானால் காரணம் காண முடியாத, மேலும் Upward Causation இல் பயணிக்க முடியாத, தானே காரணம் தானே விளைவு என்கிற ஒரு இடத்தில் நின்று போவீர்கள்.

இதையே Downward Causation ஆக இதன் விளைவு என்று தொடங்கிக் கீழே போனாலும் அப்படி ஓர் இடத்தில்தான் முடிவீர்கள்.

அந்த இடம்தான் கடவுள் என்று அரிஸ்டாட்டிலும் சொல்லியிருக்கிறார், வள்ளுவரும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

தங்க நகை என்கிறோமே, தங்கத்தை மாத்திரம் அடகு வைத்துவிட்டு நகையை கழட்டி என்கிட்ட குடுத்துடு என்று அடகுக் கடையில் சொல்ல முடியுமோ? தங்கம் காரணம், நகை விளைவு ஆனால் அவைகளைப் பிரிக்க முடியாதல்லவா?

Who created the universe? If God has created, without an universe how and where did he survive? என்பது ஒரு பகுத்தறிவு(?) கேள்வி.

ஆதிபகவன் முதற்றே யுலகு என்கிறார் வள்ளுவர்.

ஆதி என்பது தொடக்கம்,(பிரபஞ்சம் உருவான காலம்) பகவன் என்றால் இறைவன். ஆதி பகவன் என்பது தங்க நகை போலத்தான். ஆதி என்பது (தொடங்கப்பட்ட விஷயம்) விளைவு. பகவன் காரணம். பிரபஞ்சத்தை ஒப்புக் கொள்கிறேன், கடவுளை ஒப்புக் கொள்ளவில்லை என்பது நகையை ஒப்புக் கொள்கிறேன், தங்கத்தை ஏற்கவில்லை என்பது போல.

ஆதி பகவன் என்கிற இரண்டே சொற்களில் கடவுளும் பிரபஞ்சமும் ஒன்றே, பிரித்துப் பார்க்க இயலாதது என்பதை வள்ளுவர் காட்டுகிறார். இதையே சுவாமி சின்மயானந்தா If you separate cause and effect neither of them will exist என்பார்.

ஆண்களின் மூன்று பருவங்கள்

செங்கல்பட்டில் இருந்து மின்சார வண்டியில் வரும்போது எஸ். ஆர். எம் மாணவிகள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தேன். ஆம்பிளைகளைக் கலாய்ப்பதில் லேட்டஸ்ட் என்ன என்று கேட்டேன்.

ஆண்களை மூன்று பருவங்களாகப் பிரித்திருக்கிறார்களாம்.

முதலாவது மெடில் ஏஜ் (Meddle Age) : கையையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அடிக்கடி மனைவியைச் சீண்டி மேற்படி விஷயத்துக்கு அழைத்துக் கொண்டே இருக்கும் பருவம்.

இரண்டாவது மிடில் ஏஜ் (Middle Age) : தொடர்ச்சியாக இல்லாமல் இடையிடையே தொல்லை பண்ணுகிற பருவம்.

அத்தோடு நிறுத்திவிட்டு சும்மா இருந்தார்கள்.

“மூணாவது என்னம்மா?” என்று கேட்ட பிறகு,

“மிடீல ஏஜ்” என்கிறார்கள்!

செந்தில் கவுண்டமணியைக் கட்டிய தந்திரம்

திருமந்திரத்தில் கொஞ்சம் மந்திர தந்திரங்கள் எல்லாம் கூட இருக்கின்றன.

பள்ளிப் பருவத்தில் கிளை நூலகத்தில் சமத்தாக தமிழ்வாணன் நாவல்களும், நாடோடியின் கட்டுரைகளும் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.

மாய மோதிரம் சினிமா பார்த்ததும் கொஞ்சம் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உண்டாயிற்று.

‘பில்லி சூன்யம், ஏவல் முதலியன செய்யும் முறைகள்’ என்று ஒரு புஸ்தகம் இருந்தது. மடித்தாலே துண்டாகிவிடும் போல இருந்த பக்கங்கள் மூக்குப் பொடிக் கலரில் இருந்தன. அதைக் கொண்டு வந்து அரைப் பரிட்சை லீவில் தமிழ்ப் புஸ்தகத்துக்குள் மறைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். லீவிலாவது இவன் புஸ்தகம் படிப்பதாவது என்று சந்தேகத்தில் எட்டிப் பார்த்த அப்பா,

“அடச் சீ.. மூதேவி. இந்த சனியனை எல்லாம் வீட்டுக்குள் கொண்டு வந்தே, கொளுத்திடுவேன்” என்று விசிறி அடித்து என்னையும் டிக்கியில் உதைத்து லைப்ரரிக்கு ஓட்டினார்.

அத்தோடு அந்த ஆர்வம் நசுக்கப்பட்டது.

இப்போது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் படித்தேன்.

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனம் காணுமே

அதாவது பசும் அரசமரப் பலகையில் ஐந்தெழுத்தை மகரத்தில் தொடங்கி எழுத வேண்டுமாம். (மவாயநசி) அதை தினம் பூக்கள் தூவி வழிபட வேண்டும். இதே போல ஓலையில் எழுதி அதன் மேல் தேன் மெழுகு கொண்டு பூசி லேசாக வெப்பப்படுத்தி அதை இப்பலகையின் மேல் வைக்க வேண்டும். இதற்கு மந்திரம் கட்டுதல் என்று பெயர். (தம்பனம்)

இது பகைவரைச் செயலற்றுப் போகச் செய்யுமாம்.

’பண்ணிப் பாக்கப் போறேன்’ என்று வேஷ்டியை இறுக்கிக் கொண்டு புறப்பட்ட என்னை இல்லத்தரசி தடுத்தார்.

“உங்களுக்குப் பகை நீங்களேதான். கைகால் இழுத்துக்கப் போகுது, சும்மா இருங்க” என்றார்.

எப்போதும் உற்சாகமாய் இருப்பது எப்படி?

ஒரு குட்டிக் குழந்தை குடுகுடுவென்று ஓடி எதிரில் வந்து கொண்டிருந்தவர் காலில் இடிக்கிற மாதிரிப் போய் சட்டன் பிரேக் போட்டது. போட்டு விட்டு கலகலவென்று சிரித்தது.

அந்த மனிதர் தரையளவு தாழ்ந்து “பேரென்ன பாப்பா?” என்றார்.

குழந்தை கொஞ்சமும் யோசிக்காமல் “அனு” என்றது.

இந்த சம்பவத்தைக் கொஞ்சம் வேறு விதமாக யோசிப்போமா?

அது குழந்தையாக இல்லாமல் ஒரு இருபது வயதுப் பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள். தலையைக் குனிந்தபடி வந்த அவள் எதிரில் வந்தவருடன் இடிக்கிற மாதிரி வந்து இதே போல பிரேக் போடுகிறார். இப்போது அந்த மனிதர் அதே போல,

“வாட்ஸ் யுர் குட் நேம்?” என்று கேட்கிறார்.

அந்தப் பெண் இதே போல சொல்வாளா?

புன் சிரிப்போடு கடந்து போனாள் என்றால் மரியாதை.

இந்த வேறுபாடு எவ்விதம் ஆகிறது?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு சிஸ்டங்கள் இருக்கின்றன. முதலாவது Spontaneous Response System. இன்னொன்று Analytical Response System.

குழந்தைப் பருவத்தில் நமக்கு அனுபவமும் இல்லை. நம் டேட்டா பேங்க்கும் காலியாக இருக்கிறது. ஆகவே எல்லா ரெஸ்பான்ஸும் முதல் சிஸ்டத்திலிருந்து வருகிறது. அனுபவங்கள் ஆரம்பித்ததும் நம் டேட்டா பேங்க்கில் பல விஷயங்கள் ஸ்டோர் ஆகின்றன. அவற்றில், ஒரு ஸ்ட்ரேஞ்சரிடம் பெயரைச் சொல்லும் போது அது எவ்விதமெல்லாம் தப்பாகப் பயன்படுத்தப் படுகிறது என்கிற செய்திகள் எழுதப்பட்டதும் பெயர் என்ன என்று கேட்டதும் ரெஸ்பாண்ட் செய்வது இரண்டாம் சிஸ்டத்துக்கு மாறுகிறது.

நீங்க யாரு?, என்னவா இருக்கீங்க?, எதுக்காக என் பேர் வேணும்? என்றெல்லாம் கேட்ட பிறகே அந்த பேர் என்னவுக்கு பதில் சொல்கிறோம்.

கொஞ்ச காலம் ஆனதும் அநேகமாய் எல்லாமே இரண்டாம் சிஸ்டத்துக்கு மாறி விடுகின்றன.

அப்படி மாறாதவர்கள் குழந்தை மனதுடனும், உற்சாகமாயும், துடிப்போடும் இருப்பதைக் காணலாம்.

தட்டிக் கேக்க ஆளில்லைன்னா…

பெரியவர் உத்தண்டி யாரையோ பார்த்து,

‘எலே, பூசாரி மவனே.. ஒன்னத் தட்டிக் கேக்க யாருமில்லைங்கிற தைரியத்துல கட்டப் பஞ்சாயத்து பண்ணிகிட்டுத் திரியிறியா? பாத்துகிட்டுத்தான் இருக்கேன் எல்லாத்தையும். உரிச்சிடுவேன்’ என்று அதட்டிக் கொண்டிருந்தார்.

அந்தப் பையன் போய்விட்டான். எதிரே வந்த கணக்கப்பிள்ளை ‘இப்படியெல்லாம் பயங்காட்டி அவனை அடக்கிட முடியும்ன்னு நினைக்கிறியா உத்தண்டி?’ என்றார் சிரித்துக் கொண்டே.

‘எல்லாம் முடியும். தட்டிக் கேக்க ஆளில்லைன்னா தம்பி சண்டைப் பிரசண்டன் ந்னு ஏஞ் சொன்னாங்க? எதிர்ப்பே இல்லைன்னா ஆட்டம் போட்டுகிட்டுத்தான் இருப்பானுவ’ என்றார் உத்தண்டி.

‘அவன் கல்லுளி மங்கன். அசைய மாட்டான்’

‘ஏன் அசையாம, அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகரும். இவன் வெறும் டம்மி’

பஞ்ச் டயலாக்கை உதிர்த்து விட்டு என்னைப் பார்த்து ‘என்ன தம்பி, கிராமத்துல எப்புடி பொளுது போவுது?’ என்று கேட்டுக் கொண்டிருந்த போதே அவர் நின்று கொண்டிருந்த தென்னை மரத்திலிருந்து பொத்தென்று ஒரு தேங்காய் விழுந்தது. ரொம்ப நேரோ எஸ்கேப்.

சிரித்தேன்.

‘ஏந்தம்பி சிரிக்கிறீங்க?’

‘இல்ல.. நியூட்டன் ஆப்பிள் மரத்துக்குக் கீழே நிற்கிறப்போ அவர் தலைல ஆப்பிள் விழுந்துச்சாம். அப்போதான் புவி ஈர்ப்பைக் கண்டு பிடிச்சாராம். அவர் தென்னை மரத்துக்குக் கீழே நின்னிருந்தா என்ன ஆயிருக்கும்ன்னு யோசிச்சேன்’

‘அவன் ஏன் செத்தான்னு நாம கண்டு பிடிக்கிற மாதிரி ஆயிருக்கும்’ என்று சிரித்தார். தொடர்ந்து ‘வேற என்ன கண்டு பிடிச்சான் அந்த நூய்ட்டன்?’ என்றார்.

‘லாஸ் ஆஃப் மோஷன். லாஸ்ன்னா எல் ஓ எஸ் எஸ் இல்லை, எல் ஏ டபிள்யு எஸ். விதிகள்’

‘மூணு வேளை மூக்குப் பிடிக்க தின்னா காலைல மோஸன் கல கலன்னு வரப் போகுது. களுத அதுக்கென்ன விதிமுறைங்க?’

‘அந்த மோஷன் இல்லை, இயக்கம். இயக்க விதிகள்’

‘எங்கே ஒண்ணு சொல்லுங்க கேப்போம்?’

’நகராம இருக்கிற பொருளோ, நகர்ந்துகிட்டு இருக்கிற பொருளோ அது இருக்கிற நிலையை மாற்றுகிற மாதிரி ஒரு விசை வராதவரை தாங்கள் இருக்கும் நிலையிலேயே தொடரும்’

‘ஒரு எளவும் வெளங்கல்லையே?’

‘கொஞ்சம் முன்னாலே நீங்க ரெண்டு பழமொழிகள் சொன்னீங்களே, அதான் நியூட்டனோட முதல் இயக்க விதி’

‘எப்புடி?’

‘தட்டிக் கேக்க ஆளில்லைன்னா தம்பி சண்டைப் பிரசண்டன்னு சொன்னீங்களே அது போலத்தான் நகர்ந்துகிட்டு இருக்கிற பொருள். எதிர்க்கிற விசை இருந்தா மெல்லப் போகும் அல்லது நின்னு போகும் இல்லைன்னா திசை மாறிப் போகும். தட்டிக் கேக்கிற ஆளுதான் விசை’

‘அ(ட்)ட!’

‘அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகரும்ன்னீங்களே, அதான் நிற்கிற பொருள்’

‘ஆஹா! நம்ம ஊரு கிளவன் கிளவி சொன்னதை இங்கிலீஸ்ல சொன்னதால அவன் விஞ்ஞானி ஆய்ட்டானாக்கும்?’