Stress Management க்கு தமிழில் எளிய இனிய புத்தகம்

எல்லாருக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கிறது.

மகள் கல்யாணத்தைப் பண்ண முடிவு செய்த அப்பா, இண்ட்டர்வியூவுக்குப் போகிற இளைஞன், பெண்ணிடம் காதலைச் சொல்ல முடிவு செய்த பையன், பரிட்சைக்குப் போகும் மாணவன், பெரும் பணக்காரர்களுக்கு நடுவில் சிக்கிய மிடில் கிளாஸ் ஆசாமி இப்படி எந்த ஒரு புதிய டாஸ்கை எடுத்துக் கொண்டவர்களும் முதலில் உணர்வது ஸ்ட்ரெஸ். வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ்ஸான தருணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நமக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.

ஸ்ட்ரெஸ் என்கிற இந்தத் தவிர்க்க முடியாத சமாச்சாரத்தை சரியாக Handle செய்து நம் டாஸ்கை வெற்றிகரமாக முடிப்பது எப்படி?

இதை படு சீரியஸாகச் சொன்னால் அதுவே உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்றும். இதுக்கு ஸ்ட்ரெஸ்ஸே பரவாயில்லை என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் போய் விடுவீர்கள்.

இதைப் பண்ணு அதைப் பண்ணு என்று உபதேசம் செய்தாலும் பிரயோஜனம் இல்லை.

கொஞ்சம் கதை, கொஞ்சம் சுவாரஸ்யமான அனுபவங்கள், கொஞ்சம் ஜோக், கொஞ்சம் கீதை, கொஞ்சம் SWOT, கொஞ்சம் Mindfulness, கொஞ்சம் யோகா என்று Subject இன் அலுப்பு தெரியாமல் சொன்னால் பிடிக்குமா?

உபதேசமாக இல்லாமல் எளிமையான உங்களால் முடிந்த பயிற்சிகளைச் சொன்னால் உபயோகமாய் இருக்குமா?

ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவத்தின் முடிவில் நிறைய புது விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொள்வது நன்றாக இருக்குமா?

அப்படியானால் ‘ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும்.

சுவாசம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூ.160. தலகாணி சைஸெல்லாம் இல்லை, அடக்கமான சின்ன புஸ்தகம்.

ஃபோன் மூலம் ஆர்டர் செய்ய : 8148080118

ஆன்லைனில் வாங்க: https://www.swasambookart.com/books/9789395272049

சம்பிரதாயமா, லாஜிக்கா?

காரண காரியங்களோடு விதிக்கப்பட்ட சில முறைமைகள் தலைமுறைகளைக் கடக்கும்போது காரணம் மறைந்து சம்பிரதாயங்களாக ஆகிவிடுகின்றன.

ஒரு சம்பவம் சொல்கிறேன், விளங்கும்.

பல வருஷங்களுக்குப் பிறகு நாகப்பட்டினத்துக்கு அருகே கிராமத்தில் இருக்கும் பள்ளிப் பிராயத்து நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தேன். இரவு அங்கே தங்க வேண்டியிருந்தது.

‘நானும் ஜவஹரும் பெட்ரூம்ல ஏஸி போட்டுகிட்டுப் படுத்துக்கறோம். நீயும் வர்ஷாவும் ஹால்ல படுத்துக்கோங்க’ என்றார் நண்பர் மனைவியிடம்.

வர்ஷா என்பது அவர் பேத்தி.

‘குழந்தைகளுக்குத்தாண்டா ஏஸி கீஸி சௌக்யமெல்லாம் வேணும்; நாம வெளில படுத்துப்போம்’ என்றேன்.

அதற்கு அவர் சொன்ன காரணத்தை இங்கே பகிர்வது நாகரிகம் அல்ல. தொடர்ந்து மனைவியிடம்,
‘பெட்ரூமைக் கொஞ்சம் பெருக்கிடு, இவனுக்கு டஸ்ட் அலர்ஜி’ என்றார்.

‘எப்படிடா எனக்கு டஸ்ட் அலர்ஜின்னு ஞாபகம் வச்சிருக்கே? எனக்கே மறந்து போச்சு. இப்பல்லாம் ஒண்ணும் தொந்தரவு பண்றதில்லை’ என்றேன் வியப்பாக. தொடர்ந்து ‘விளக்கு வச்சப்புறம் பெருக்கக் கூடாது, ஏஸிதானே போடப் போறோம் ஃபேன் இல்லையே’ என்றேன்.

‘எனக்கு இந்த விளக்கு வச்சப்புறம் பெருக்கக் கூடாது என்கிற சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. சுத்தம்தான் முக்கியம்’ என்றார் நண்பர்.

‘பரவாயில்லை, வேண்டாம்’ என்று பிடிவாதமாக மறுத்து விட்டேன்.

எல்லாரும் தூங்கப் போய்விட்டோம்.

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும். பெட்ரூமைப் பெருக்கிக் கொண்டிருந்த நண்பரின் மனைவி ‘என்னங்க, வர்ஷாவோட தோடுத் திருகாணி எங்கேயோ விழுந்திடுச்சின்னு சொல்லிகிட்டு இருந்தாளே, இங்கே பாருங்க’ என்று கூப்பிட்டார்.

பெருக்கிச் சேர்த்த குப்பைக்கு நடுவே சின்ன திருகாணி!

‘இப்பத் தெரியுதா?’ என்று சிரித்தேன்.

‘என்ன இப்பத் தெரியுதா?’ என்றார் நண்பர் புரியாமல்.

‘நேத்து ராத்திரி பெருக்கியிருந்தா இந்தத் திருகாணி அரை வெளிச்சத்தில கண்ணுக்குத் தெரிஞ்சிருக்காது, குப்பையோட குப்பையா போயிருக்கும்’

நண்பரும் நண்பர் மனைவியும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் என்னைப் பார்த்தார்கள்.

‘விளக்கு வச்சப்புறம் பெருக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னது சம்பிரதாயம் இல்லை, ஒரு Safety Measure’

கலாச்சார அதிர்ச்சி

மதுரை நகரின் அரசு பஸ்களில் ஆம்பிளை சீட் எந்தப் பக்கம் பொம்பளை சீட் எந்தப்பக்கம் என்றே தெரியவில்லை.

லெஃப்ட், ரைட், செண்ட்டர் எல்லா இடத்திலும் பெண்கள். கியர் பாக்ஸ் மேல் கூட ஒரு ஆயா உட்கார்ந்திருந்தார். ஃபர்ஸ்ட் கியர் போடும் போதெல்லாம் அருள் வந்தது போல அவருக்கு உதறியது. பெண்களுக்கு முன்னுரிமை தரும் மதுரை மக்களின் இந்த நல்ல கலாச்சாரம் சென்னையிலிருந்து போகும் என் போன்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கலாச்சார அதிர்ச்சி என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலிருக்கிறது.

பயந்து “சாரி சார்” என்று இறங்கப் போனேன்.

கண்டக்டர் “ஏன் இறங்கறீங்க?” என்றார்.

“லேடீஸ் பஸ்ஸுன்னு தெரியாம ஏறிட்டேன்”

“என்னா லந்தா?”

“இல்லைங்க, அழகர் கோயில்”

“லந்து பண்றீங்களான்னு கேட்டேன்”

“இல்லைங்க.. நான் கன்ஸல்டன்ஸி பண்றேன்”

அத்தோடு கண்டக்டர் சுஸ்த் ஆகி நிறுத்தி விட்டார். பின்னே… வேறே எப்படிச் சமாளிப்பதாம்? கோவலனை வெட்டியது போல என்னை வெட்டி விட்டால்?

மதுரைல பார்த்து நடந்துக்க வேணாமா?

இப்படி ஒரு வாழ்க்கைதான் என் கனவு!

பாரதியின் காணி நிலம் வேண்டும் போல எனக்கும் ஒரு கனவு உண்டு. கேமிராவை ஸூம் பண்ணுங்கள்.

சோழ நாட்டுக் கிராமம் ஒன்று.

வாசலில் திண்ணைகளும் உள்ளே பெரிய முற்றமும் அமைந்த வீடு வேண்டும். காலை எழுந்தால் கோயில் நாதசுரக்காரர் அற்புதமாக வாசிக்கும் ஹம்சத்வனி வீட்டில் கேட்க வேண்டும். ஊரின் சைஸுக்கு சம்பந்தம் இல்லாத பிரம்மாண்ட கோயிலாக அது இருக்க வேண்டும். பத்தாம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ கட்டிய கோயிலாக இருக்க வேண்டும். கோயிலில் அம்பாளுக்குப் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்ய வேண்டும் குருக்கள். அம்பாளின் பாதங்கள் தெரிகிற மாதிரி புடவை அணிவிக்க வேண்டும். கர்ப்பக் கிரஹத்தில் மின்சார விளக்கு கூடாது. நன்றாகக் கொழுந்து விட்டு எரியும் இரண்டு குத்து விளக்குகள் மட்டும் வேண்டும்.

கோயிலில் காலையும் மாலையும் பொங்கலும் தயிர்சாதமும் பிரசாதமாகக் கிடைக்க வேண்டும். சாயந்திரம் ஓதுவார் கணீரென்று தேவாரம் பாட வேண்டும்.

காவேரி கரைபுரண்டு ஓட வேண்டாம். இடுப்பளவாவது தண்ணீர் வேண்டும். சாயந்திரம் அரட்டைக்கு உட்கார ஆற்று மணல் பகுதி வேண்டும். அரட்டைக்கு சங்கீதம், சினிமா, இலக்கியம், அரசியல் தெரிந்த மூன்று நண்பர்களாவது வேண்டும்.

எங்கேயாவது இருந்தால் சொல்லுங்கள்.

கதை சொல்லும் குறுந்தொகைப் பாடல்

எழிலன் ஒரு ஷோக்குப் பேர்வழி.

ஒவ்வொரு பெண்ணிடமுமே ‘நீதான் எனக்கு எல்லாம், உன் கிட்டேர்ந்து விலகவே மாட்டேன்’ என்றுதான் தொடங்குவான். தொடங்குவான் என்றால் அவன் தொடங்க மாட்டான். அவனுடைய அல்லக்கை போய் பேசுவான்.

ஒவ்வொரு பெண்ணிடமுமே ’இதோ வந்துடறேன்’ என்று கூறித்தான் கழற்றிக் கொள்வான். அப்புறம் அடுத்த பெண்ணுக்குப் போய்விடுவான்.

குழலியிடம் கூட அப்படித்தான் வந்தான், அப்படித்தான் போனான். ஆனால் தலைவன் வருவான் என்று குழலி காத்திருந்தாள் நெடுங்காலம்.

எழிலனின் ஷோக்குகள் தொடர்ந்தன. அவன் வழக்கப்படி ஒரு நாள் தன் அல்லக்கையை அழைத்து ‘ஒரு நல்ல பார்ட்டியா பார்த்துப் பேசிட்டு வாய்யா’ என்றான். பெண்களையே அவ்வப்போது மாற்றுகிறவன் அல்லக் கைகளையா நிரந்தரமாய் வைத்திருப்பான்? அதுவும் மாறும். இவன் புதியவன்.

எழிலனின் அல்லக்கை குழலியிடமே போய்ப் பேசிவிட்டு வந்து ‘வரச் சொல்றாங்க’ என்றான். எழிலனுக்கு அது குழலி என்று தெரியாது. இருப்பிடத்தை வேறு அவள் மாற்றியிருந்ததால் போய்ப் பார்க்கிறவரை தெரியாது.

குழலி என்று தெரிந்ததும் ‘அடிப் பாவி, கற்புக்கரசி வேஷம் போட்டுக் கொண்டு ஒரு அல்லக்கை வந்து அனுமதி கேட்டதும் யாருன்னே தெரியாம வரச் சொல்லிட்டியே’ என்கிற மாதிரி பார்க்க,

‘நீயா!’ என்கிற அதிர்ச்சி குழலியின் கண்களில்.

சிச்சுவேஷன் ரொம்பக் கிரிட்டிக்கல் என்பதைப் புரிந்து கொண்ட தோழி சொல்கிறாள்,

’நாரையின் வாயில் சிக்கித் தப்பித்து நீரில் விழுகிற கெண்டை மீன் துள்ளி மீண்டும் தண்ணீருக்கு மேற்பரப்புக்கு வரும் போது கண்ணில் தாமரை பட்டால் கூட அதிர்ச்சியாகத்தான் பார்க்கும். உன் அல்லக்கை ஒரு ஃப்ராடு. நீ யோக்யன் என்று அவன் சொன்னதும் ஃபேக். குழலி சம்மதிச்சிட்டா என்று உன் கிட்டெ வந்து சொன்னதும் ஃபேக். அவன் ஒரு பாணன் என்கிறதால் இனி எந்தப் பாணனைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும்’

இவ்வளவு பெரிய கதையை ஒரு ஆறு வரிக் குறுந்தொகையில் உணர முடிகிறது.

பாடியவர் : ஓரம் போகியார்
திணை : மருதம்
துறை : பாணனின் வழியாகச் சம்மதம் பெற்று அவள் பால் செல்கிறான் தலைவன். அந்த சமயம் அவளது தோழி கூறும் விதமாக இந்தப் பாடல்.

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒருநின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசினோர்க்கே

காஞ்சிக்கும் படப்பைக்கும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னும் இதே பெயர் என்பது தெரிகிற போது மாத்திரம் இல்லை, படப்பை இன்றைக்கும் இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள எழிலோடு விளங்குவதும் கொஞ்சம் சிலிர்ப்பாக இருக்கிறது.

தீர்ப்பை மாத்தி சொல்லு …

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ஜவர்லால்.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் ஜவர்லால் வந்தார்.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

தாடியை எடுக்காதே!

’தாடியை எடுத்தா நீ ரொம்ப ஹேண்ட்சம்மா இருப்பே’ என்றாள் விஜி.

‘இருக்கலாம். ஆனா நான் தாடியை எடுத்தா என் வைஃப் கொன்னுடுவா’ என்றான் ராஜு.

‘ஏன்? தாடி வச்சாத்தான் நீ அழகாமா?’

‘அப்படில்லாம் ஒண்ணுமில்லை. தாடியை எடுக்கிறதா இருந்தா என் கிட்டே சொல்லாம எடுக்கவே கூடாதுன்னு சொல்லியிருக்கா. ஒரு தரம் தாடியை எடுத்தப்போ திரும்ப ஓரளவு தாடி வளர்கிற வரைக்கும் வெளியிலயே விடல்லை’

‘வெரி ஸ்ட்ரேஞ்ச். என்னன்னு தெரிஞ்சே ஆகணும் போல இருக்கு. இன்னைக்கு நீ தாடியை எடுக்கறே; தாடியை எடுக்கல்லைன்னா நான் கொன்னுடுவேன்; போய் ஷேவிங் பண்ணிக்கிட்டு வா’

சரிதான். இன்றைக்கு நம்ம தலையெழுத்து இதான் போலிருக்கு, நடக்கிறது நடக்கட்டும் என்று தாடியை ஷேவ் பண்ணிவிட்டு வந்தான்.

‘ஆஹா.. ஓஹோ.. ஹேண்ட்சம்’ என்று பலவாறாய்ப் பாராட்டினாள் விஜி.

‘சரி டயம் ஆச்சு. நான் கிளம்பறேன் வீட்டுக்கு’ புறப்பட்டான்.

தன் சாவியைப் போட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். மனைவி தூங்கியிருந்தாள். எப்படியும் பாட்டு வாங்க வேண்டும்; என்னத்துக்கு ராத்திரியில், காலையில் திட்டட்டும், என்று சந்தடியில்லாமல் அருகில் படுத்துக் கொண்டான். எல்லா விளக்கையும் ஆஃப் பண்ணிவிட்டான்.

புரண்டு படுக்கும்போது, சரியாக தாடையைத் தடவினாள்.

போச்சு! சிக்கினோம்!!

கோபமாய் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள்

‘அது வந்து …’ என்று பலஹீனமாய் அவன் ஆரம்பிக்க, காதிலேயே வாங்கிக் கொள்ளாமல்,

‘முட்டாளே, இன்னும் நீ இங்கேயா இருக்கே? சீக்கிரம் எழுந்து ஓடு, இல்லைன்னா செத்தே’ என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

(யாரும் திட்டக் கூடாது. படித்த ஆங்கில ஜோக் இது)

வாழ்க்கையை ரீவைண்ட் செய்ய ஒரு ஐடியா!

ஒரு சுவாரஸ்யமான கற்பனை.

ஒரு சின்ன நகரம் அமைக்க வேண்டும். அதில் திண்ணை வைத்த ஓட்டு வீடுகள், பெரிய குளங்கள், ஜட்கா வண்டி, தமுக்கு அடித்துக் கொண்டு நோட்டீஸ் பறக்க விடும் சினிமா வண்டிகள், அரை மணிக்கு ஒரு தரம் ரீல் மாற்றும் சினிமா தியேட்டர்கள், அவற்றில் எம். ஜி. ஆர்., சிவாஜி சினிமாக்கள், வீடுகளில் ரேடியோக்கள், அந்த ரேடியோக்களில் காலையில், ‘ஆகாஸவாணி : செய்திகள், வாசிப்பது விஜயம்; இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு ஒன்றைக் காண வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தினார்’ என்று செய்திகளும்,

பிற்பலில் மாதர் நிகழ்ச்சியில் பாபுஜியும் மாதரும், மாலை ஏழரைக்கு விவிதபாரதியில் தேன் கிண்ணம் என்று நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாக வேண்டும். தெருக்களை அடைத்துப் பந்தல் போட்டு லவுட் ஸ்பீக்கர் கட்டி பாட்டுப் போட்டு கல்யாணங்கள் நடத்த வேண்டும்.

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படியே 1970ம் வருஷ செட் அப். இந்த நகரத்தில் சில 60+ ஆண்களையும் பெண்களையும் வெளி உலக சம்பந்தம் இல்லாமல் 100 நாட்கள் தங்க வைக்க வேண்டும்.

ஆட்ட விதிகள், தங்கி இருப்பவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது நடக்கும் விஷயங்களை நிகழ்கால வாக்கியங்களாய்ப் பேச வேண்டும். அதாவது, அந்தக் காலம் போலவே இருக்கு இல்லே? என்கிற மாதிரி பேசாமல்,

‘செட்டியார் வீட்ல கல்யாணம். சாயந்திரத்துலேர்ந்து பாட்டு போட்டுக் கொல்றான் அன்பு சவுண்ட் சர்வீஸ்க்காரன்’

‘நியூஸ் கேட்டியா? நிஜலிங்கப்பாவும் சிண்டிகேட் காங்கிரஸ்ல சேர்ந்துட்டாராம்’

‘ஸ்டார் டாக்கீஸ்ல அவள் ஒரு தொடர்கதை போட்டிருக்கான். ஸ்ரீப்ரியான்னு ஒரு பொண்ணு, பிரமாதமா நடிச்சிருக்கா’

என்கிற மாதிரியெல்லாம்தான் பேச வேண்டும். நகரத்தோடு நகமும் சதையுமாய் ஒட்டிக் கொள்ள வேண்டும். நூறு நாட்கள் முடிந்ததும் நகரில் வசித்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

பதினைந்து வயதாக! மனசில் மட்டுமில்லை, உடலளவிலும்!

சும்மா காது குத்துகிறேன் என்று நினைக்காதீர்கள்.

1981ம் வருஷம் ஹார்வேர்ட் சோஷியல் சைக்காலஜிஸ்ட் எலன் லாங்கர் என்கிற பெண்மணி நான் மேலே சொன்னது போன்ற 1959ம் வருஷ செட் அப் உருவாக்கி அதில் சில 70+ மனிதர்களைக் குடி வைத்திருக்கிறார். ஆட்டத்தின் முடிவில்,

வரும்போது வீல்சேரில் வந்தவர் போகும் போது வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து போயிருக்கிறார், சுவற்றில் சாய்ந்தபடி ஜட்டி மாற்றிக் கொண்டவர்கள் எல்லாம் ஒற்றைக் காலில் நின்றபடி போட்டுக் கொண்டார்களாம், எப்போதுமே இங்கே வலிக்குது அங்கே வலிக்குது டயர்டா இருக்கு என்று சொன்னவர்கள் ஃபுட் பால் விளையாடினார்களாம், கண்ணாடி இல்லாமல் புஸ்தகம் படித்தார்கள், ஆர்த்தரிட்டீஸ் காணாமல் போனது, ஷுகர் லெவல் இறங்கியது, பிளட் பிரஷர் நார்மல் ஆனது, இன்னும் சில பிரசுரிக்க முடியாத மாறுதல்களும் நிகழ்ந்தனவாம்!

இத்தனைக்கும் அவர்கள் 7 நாட்கள்தான் அங்கே இருந்திருக்கிறார்கள்!

பிக் பாஸ் மாதிரி கழிசடை நிகழ்ச்சிகளுக்கு பதிலாக யாராவது ஒரு டிவிக்காரர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் மாற்றங்களைக் காட்டலாம்.

எழுபதுகள் என்றால் கலந்துகொள்ள நான் ரெடி!

சந்தோஷமும் குழந்தைதான்!

சந்தோஷமும், நிம்மதியும் இல்லையே என்று ஒரு தம்பதியர் அந்த முனிவரைப் போய்ப் பார்த்தார்கள்.

‘எப்படி இருக்கீங்க, சந்தோஷமா இருக்கீங்களா?’ என்று கேட்டார் முனிவர்.

‘இல்லை சுவாமி, சந்தோஷம் எங்களை விட்டுப் போய் ரொம்ப நாளாச்சு’ என்றார்கள் தம்பதியர்.

முனிவர் சிரித்தார்.

‘ஏன் சாமி சிரிக்கறீங்க?’

‘ஒரு திருவிழாக் கூட்டத்தில் உங்களை மாதிரி ஒரு தம்பதியர் குழந்தையைத் தொலைச்சிட்டாங்க. போலீஸ்காரங்க கிட்டே போய்க் குழந்தையைக் காணோம்ன்னு புகார் பண்ணிட்டு அழுதாங்க. ஸ்பீக்கர்ல அன்னவுன்ஸ் பண்ணி எப்படியோ தனியா இருந்த அந்தக் குழந்தையைக் கண்டு பிடிச்சிட்டாங்க. என்ன பாப்பா இது அம்மா, அப்பாவோட ஜாக்கிரதையா போறதில்லையா? ஏன் இப்படிக் காணமப் போனே? அப்படீன்னு அது கிட்டே கேட்டாங்க. அந்தக் குழந்தை என்ன சொல்லிச்சு தெரியுமா?’

‘என்ன சுவாமி சொன்னது?’

‘நான் பத்திரமாத்தான் இருக்கேன். என் அம்மா அப்பாதான் காணாமப் போய்ட்டாங்கன்னு சொல்லிச்சாம்’

‘புரியல்லை சுவாமி’

‘சந்தோஷம் குழந்தை மாதிரி. கொண்டாடற இடத்திலதான் இருக்கும். சந்தோஷம் உங்களை விடல்லை. நீங்கதான் சந்தோஷத்தை விட்டுட்டீங்க. இந்தாங்க நீங்க விட்ட சந்தோஷம். இனிமே விடாம ஜாக்கிரதையா வச்சிக்கணும்’ என்று பிடி திருநீற்றைத் தந்தார்.

யார் இந்தப் பிரபல டைரக்டர்?

ரொம்ப பிஸியான அந்த டைரக்டர் பேட்டிக்கு மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.

ஆனால் ‘எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும்ன்னு தெரியல்லை, எப்போன்னும் தெரியல்லை. ஆனாலும் நாளைக்கு வாங்க’ என்றார்.

கிடைக்கப் போகும் குறுகிய நேரத்தில் எவ்வளவு உயர்ந்த தகவல்களை வாங்க முடியும் என்று பேட்டி காணும் குழு யோசித்தது. பதினைந்து இருபது நிமிடங்களுக்குள் ஒரு அற்புதமான பேட்டி எடுக்க வேண்டிய அழுத்தம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, மறக்க முடியாத நிகழ்ச்சி, பிரபல ஹீரோவுடனான அனுபவங்கள், எப்படி சினிமாவில் நுழைஞ்சீங்க மாதிரியான உளுத்த கேள்விகளுக்கு பதில் தூண்டில் மாதிரிக் கேள்விகளைத் தயார் செய்து கொண்டார்கள்.

எந்த ஸ்லாட்டில் எவ்வளவு நேரம் கிடைக்குமோ.. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ, எதுவானாலும் பரவாயில்லை. இட் ஈஸ் வொர்த் வெய்ட்டிங் என்று புறப்பட்டுப் போனால்,

டைரக்டர் ஏற்கனவே காத்திருக்கிறார்.

மூக்குக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டு ஒரு அரதைப் பழைய கண்ணாடியை அணிந்திருந்தார்.

‘இதோ.. இப்படி உங்க தோள்ள தட்ட முடியும் போல இருக்கு; ஆனா நீங்க எங்கேயோ இருக்கீங்க’ என்று கண்ணாடியின் பவர் மிஸ்மேட்சைத் தெரிவித்துவிட்டு ‘ஆகவே இப்பவே லைட்டா தலையை வலிக்கிற மாதிரி இருக்கு’ என்று சீக்கிரம் முடிக்க வேண்டியதன் தேவையை உணர்த்தினார்.

கேள்விக்கெல்லாம் காத்திருக்காமல் சட்டென்று ஆரம்பித்தார்.

‘எனக்கு அப்போ எட்டு வயசு இருக்கும்ன்னு நினைக்கிறேன். பேட்டரியில் ஓடும் ரயில் வண்டிகள் எனக்கு ரொம்ப இஷ்டம். இரண்டு ரயில்கள் வச்சிருப்பேன். ஒண்ணை இடமிருந்து வலமாயும், இன்னொண்ணை வலமிருந்து இடமாயும் ஓடவிட்டு, இடித்துக் கொண்டு விழச் செய்வேன். திரும்பவும் எடுத்து மறுபடி அதையே செய்வேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் என் அப்பாவுக்கு எரிச்சலாக வரும்.

‘இத பார்.. இன்னொரு வாட்டி இதைத் தூக்கிகிட்டு ரிப்பேர் ஷாப்புக்கு என்னைப் போக வச்சியோ, தொலைச்சிடுவேன். எவ்வளவு தரம் ரிப்பேர் பண்றது. ஒழுங்கா விளையாடறதுன்னா விளையாடு, இல்ல.. ரெண்டு ரயிலையும் தலைசுத்தி விட்டெறிஞ்சிடுவேன். இனி உனக்கு விளையாட ரயில் கிடையாது’ என்றார்.

ரயிலும் ரிப்பேர் ஆகக் கூடாது, இந்த ஆக்ஸிடெண்ட் திரில்லும் வேணும்; என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன். பக்கத்து வீட்லேர்ந்து 8 மிமி ஃபிலிம் போட்டு ஷூட் பண்ற மூவி கேமிராவை இரவல் வாங்கிகிட்டு வந்தேன். நான் பண்றது சரியா? எதிர்பார்த்த திரில் வருமா, எதுவுமே தெரியல்லை.

ஆக்ஸிடெண்ட்டை நடத்தி படம் எடுத்தேன்.

டெவலப் பண்ணிட்டு போட்டுப் பார்த்தா, நிஜத்தில் பார்க்கிறதை விட படு திரில்லிங்காய் இருக்கு.

இப்படித்தான் ஆரம்பிச்சது நான் சினிமா எடுக்கிறது’

இந்தப் பிரபல டைரக்டர் யாரென்று ஊகிக்க முடிகிறதா?