இதயம் பேத்துகிறது

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

நவம்பர் 23, 2009 · 8 மறுமொழிகள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங் இல் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

இந்த ஏழு ஹாபிட்களும் ஸ்டீபன் கோவே சொன்ன செவன் ஹாபிட்ஸ் ஐ விட ரொம்பவும் சக்தி வாய்ந்தவை!

→ 8 மறுமொழிகள்பகுப்புகள்: அறிவியல்/சுய முன்னேற்றம் · நகைச்சுவை
குறிச்சொற்கள்: ,

ஆந்திராவில் காந்திக்கு ரேஷன் கார்ட்

நவம்பர் 23, 2009 · 3 மறுமொழிகள்

→ 3 மறுமொழிகள்பகுப்புகள்: துணுக்கு
குறிச்சொற்கள்: , ,

எம்.ஜி.ஆர். என்கிற தமிழ் ரசிகர்

நவம்பர் 22, 2009 · 10 மறுமொழிகள்

எம்.ஜி.ஆர். என்கிற மூன்றேழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

அதற்கு காரணங்கள் பல.

அவற்றில் ஒன்று அவர் படத்தில் வந்த கவி நயம் மிக்க பாடல்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

இதோ அந்த ஒரு சோறு:

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி போகும் நிலவே நில்
என்மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல்

என்று ஆரம்பித்து

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிய செங்கனிச் சாறுண்ண
முன்வந்த பொன்னந்தி மாலைஎங்கே

என்று முதற்சரணமும்

தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
என்னத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கை பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்

என்று அடுத்த சரணமும்

வருகிற பாட்டில்

என்னடா சிறப்பு என்பீர்கள்….

இந்தப் பாடல் வல்லின மெல்லின இடையினத்தின் ஆபத்தான தொகுப்பு.

ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் தெரியுமா?

வல்லின, மெல்லின, இடையினங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் மாறுபட்டால் மட்டுமே உச்சரிப்புக்கு சௌகர்யமாக இருக்கும். அந்த சௌகர்யம் இந்தப் பாட்டில் இல்லை. இதைச் சரியாக உச்சரித்த டி.எம்.எஸ். க்கு ஹாட்ஸ் ஆப்.

எங்கே இந்தப் பாட்டைச் சரியான உச்சரிப்பில் பாடி பதிவு செய்து யாராவது அனுப்புங்கள் பார்ப்போம். அவர்களுக்கு செந்தமிழ் வித்தகன் என்கிற பட்டத்தை வழங்குவோம்!

சரி, இதை நான் சரியாக உச்சரித்திருக்கிறேனா என்று பார்க்க கீழே உள்ள ஒலிக் கோப்பை கேட்டுப் பாருங்கள்.

குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.

ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.

→ 10 மறுமொழிகள்பகுப்புகள்: 1
குறிச்சொற்கள்:

டெலிபோன் லொள்ளு

நவம்பர் 22, 2009 · 7 மறுமொழிகள்

“ஹலோ, நான் ராஜேந்திரன் பேசறேன்.. யாரு?”

“கரெக்ட். நீங்க ராஜேந்திரன்தான்”
______________________________________________
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”

“இல்லைங்க, இது போன்”
______________________________________________
“ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”

“ஐய்யா குளிக்கறாரு”

“சாரிங்க, ராங் நம்பர்”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே பேச முடியுமா?”

“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் மணி கிட்ட பேச முடியுமா?”

“அவசியமில்லை, தூரக்கேர்ந்து பேசினாலே அவருக்கு கேக்கும்”
________________________________________________

→ 7 மறுமொழிகள்பகுப்புகள்: நகைச்சுவை
குறிச்சொற்கள்: ,

மயிரா மானமா?

நவம்பர் 22, 2009 · 13 மறுமொழிகள்

உதிர்ந்த முடிகள் என்று ஒரு அரசியல் தலைவர் சிலரை வர்ணித்த போது அவர் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.

“இந்த பொறாமை இருக்கே, அது போறாமையால வருது. அந்த போறாமை வந்தா மனிஷன் என்ன ஆவான்னு அதைத் தலைகீழே திருப்பிப் படிச்சா புரியும்” என்று தங்கவேலு ஒரு படத்தில் சொல்வார்.

மயிறு என்று வசனம் வந்தால் சென்சாரில் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.

கீழ் வரும் திருக்குறளைப் பாருங்கள் :

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்து போகிற மாதிரி காரியங்களைச் செய்கிற போது மனிதர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்கு சமமானவர்கள் ஆகி விடுவார்கள் என்று இதற்கு அர்த்தம். மானம் என்கிற அதிகாரத்தில் வருகிறது, குறள் எண் : 964

உயிரே போனாலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்று சொல்கிறவர்கள் கூட மயிரை இழக்க வேண்டும் என்றால் ரொம்ப யோசிக்கிறார்கள்.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான் ஜாதி நம் ஜனங்கள். மயிரில்தான் மானமே இருப்பதாக நினைக்கிறார்கள்.

அப்போது அவர்கள் மானத்தை என்னவாக மதிக்கிறார்கள்?

→ 13 மறுமொழிகள்பகுப்புகள்: துணுக்கு · நகைச்சுவை
குறிச்சொற்கள்: , , ,

சில பிரபலங்களும் நானும் – 1

நவம்பர் 22, 2009 · 9 மறுமொழிகள்

கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே. குமரன் அவர்கள் நான் பணியாற்றிய முதல் நிறுவனத்தில் என் சக ஊழியர். என்னை விட சற்றே சீனியர்.

பெரிய இடத்துப் பிள்ளை என்கிற பந்தாவெல்லாம் கிடையாது.

ரொம்பப் பிரியமாகப் பழகுவார். ஏற்கனவே சதர்ன் போரெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் ரசாயனத் தொழிற்சாலையில் என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை தேவை என்று சொல்வார். நைட் ஷிப்டில் அரட்டை அடிக்கும் போது பிரபலங்களுடன் உரையாடிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அதில் பல விஷயங்கள் அவருடைய அனுமதி இன்றி பிரசுரிக்க முடியாத ரகம்.

சத்யா ஸ்டூடியோ டைரக்டர் (சினிமா டைரக்டர் அல்ல. நிறுவன டைரக்டர்) திரு. பத்மநாபனின் மகளை கல்யாணம் செய்து கொண்டார். திருமணம் கலைவாணர் அரங்கத்தில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் என்கிற ப்ரிவேலேஜில் மேடைக்குப் போய் வாழ்த்தவும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.

திபு திபுவென்று எல்லாரும் மேடையில் ஏறினோம். எல்லாரும் போய் ஓரமாக அடுத்த போட்டோவுக்காக காத்திருந்தார்கள்.

மாலைமுரசு புகைப்படக்காரர் எம்.ஜி.ஆர்., ஜேப்பியார், மனோகரன் உள்ளிட்டவர்களை கவர் செய்து போட்டோ எடுக்கத் தயாரான போது குறுக்கே நான் நடந்து கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர்., என்ன சொல்வாரோ என்கிற பதட்டத்தில் மேடையில் இருந்த காவல் அதிகாரி வேகமாக என்னை நோக்கி வந்தார்.

எம்.ஜி.ஆர். என் நண்பர்கள் பக்கம் கை காட்டி என்னை டைரக்ட் செய்து விட்டு

“ஒரே நிமிஷம். அடுத்தது நம்ம போட்டோ” என்றார்.

ஹைய்யா எம்.ஜி.ஆர். என்னோட பேசினார் என்று அடிக்கடி நான் சொல்லிக் கொள்கிற நிகழ்ச்சி இது.

அதே நிறுவனத்தில் பி.வி.சித்தார்த்தன் என்று ஒரு பொறியாளர் இருந்தார். எம்.ஐ.டி. யில் Instrumentation படித்தவர்.

ஒருதரம் கண்ட்ரோல் பானலில் பிரச்சினை இருந்ததால் அவர் ராத்திரி வரைக்கும் தங்க வேண்டியதாகப் போயிற்று. ராத்திரி பதினோரு மணிக்கு போன் வந்தது.

“மிஸ்டர் சித்தார்த்தன் இருந்தா கூப்பிடறீங்களா?” என்கிற குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது.

“சார் நீங்க?”

“நான் அவரோட பாதர்”

 
சித்தார்த்தன் அப்பாவோடு பேசி முடித்ததும் அவரிடம்,
 
“உங்க பாதர் வாய்சை எங்கேயோ கேட்டிருக்கேன்” என்றேன்.
 
“சினிமாவிலே கேட்டிருப்பீங்க”
 
“சினிமா… அட… ஆமாம்…. ஆனாலும் ஞாபகம் வரமாட்டேங்குதே”
 
“ஜெயசுதா உங்க அபிமான நடிகைன்னு சொல்லியிருக்கீங்க”
 
“ஆமாம்…. அந்த குழந்தை முகமும், துரு துரு கண்ணும்…”
 
“அந்த ஜெயசுதாவுக்கு ஹஸ்பெண்டா நடிச்சிருக்கார்”
 
“என்னது?”
 
“சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலே! இப்ப மூன்றாம் பிறைலே சிலுக்கோட நடிச்சிருக்கார்”
 
“ஓஹோ.. அதான் பி.வி.சித்தார்த்தனா!” 

→ 9 மறுமொழிகள்பகுப்புகள்: கதை/கட்டுரைகள்
குறிச்சொற்கள்: , , ,

பதிலை எப்போ எழுதணும்?

நவம்பர் 21, 2009 · 8 மறுமொழிகள்

“அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து  போட முடியுமா?”

“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
__________________________________________________________
“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”

“நாயை கடிக்காம இருக்கணும்”
_______________________________________________________
“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
________________________________________________________
“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”

“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
__________________________________________________________
“ராமு, ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”

“வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு”
_________________________________________________________
“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”

“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்”
_________________________________________________________
“ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”

“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
__________________________________________________________
“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”

 ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
__________________________________________________________ 

→ 8 மறுமொழிகள்பகுப்புகள்: நகைச்சுவை
குறிச்சொற்கள்: ,

ஆம்பிளையா நீ?

நவம்பர் 21, 2009 · 5 மறுமொழிகள்

“வாங்க மாமா” என்ற ரமேஷை அலட்சியமாகப் பார்த்து,

“ம்ம்” என்று சொன்னவாறு உள்ளே வந்தார் சிவசு. வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். வாட்சைப் பார்த்தார்.

“ரமேஷ், பில் கேட்ஸ் நூறு டாலர் நோட்டை கீழே போட்டா திரும்பிப் பொறுக்க மாட்டாராம். ஏன் தெரியுமா? அதைக் குனிஞ்சி பொறுக்கி எடுக்க ஆகிற நேரத்திலே அவர் முன்னூறு டாலர் சம்பாதிச்சிடுவாராம். ஏறக்குறைய நானும் அந்த மாதிரிதான். அவருக்கு நூறு டாலர்ன்னா எனக்கு நூறு ரூபா”

“புரியுது சொல்லுங்க”

“ஆனா பத்து பைசா விழுந்தாக் கூட பொறுக்கி ஆக வேண்டிய அளவு குறைவானது உன் வருமானம்”

“காசு விழாமையே பொறுக்கறவங்க கூட இருக்காங்க மாமா” ரமேஷ் சிரித்தான்.

“இருந்தாலும் என் பொண்ணை உனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வெச்சேன் தெரியுமா? என் பொண்ணு ஆசைப்பட்டதாலே. ஒண்ணுமே இல்லைன்னாலும் குறைஞ்ச பட்சம் ஆம்பிளையாவாவது இருப்பேன்னு நினைச்சேன். இப்போ அதுவும் இல்லைன்னு ஆயிடுச்சு…”

இந்த வார்த்தை ரமேஷை ரொம்ப பாதித்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

வேலைக்காரி மீனா விளக்குமாற்றை சுவற்றில் ரெண்டு இடி இடித்து அவளது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினாள். நீ உள்ளே போ என்கிற மாதிரி அவளை ரமேஷ் முறைத்தான்.

“எனக்கிருக்கிறது அருணா மட்டும்தான். பிள்ளைங்க இல்லை. என் குடும்பம் இந்தத் தலைமுறையிலே அழிஞ்சி போறதை நான் விரும்பல்லே. எனக்கொரு பேரனோ பேத்தியோ வேணும்… அது உன்னாலே முடியுமோ?”

ரமேஷ் பதிலேதும் சொல்லவில்லை.

“என் பொண்ணுக்கு ஒரு நல்ல ஆம்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணப் போறேன். விவாகரத்துக்கு சம்மதம்ன்னு கையெழுத்துப் போட்டுடு.”

“அதெல்லாம் வேணாம் மாமா.. பொறுமையா இருங்க”

“இத பார், நீ நல்லவங்கிறதாலேதான் உன்னை மதிச்சி பேசிகிட்டிருக்கேன். இல்லைன்னா கேஸ் வராம உன்னைக் காலி பண்ணிட்டு என் பொண்ணுக்கு விதவை மறுமணம் பண்ணிடுவேன்”

இப்போது அடக்க மாட்டாமல் மீனா குறுக்கே வந்து விட்டாள்.

“மீனா, பெரியவங்க பேசறப்போ என்ன இது அதிகப் பிரசங்கித்தனம்… போ உள்ளே” என்று ரமேஷ் அதட்டியத்தை காதில் வாங்காமல்,

“ஐய்யா நீங்க பெரிய மனிஷன். இவரைப் பத்தி உங்க கிட்டே ஒரு புகார் சொல்லணும்.”

“அவளைப் பேச விடேன்ப்பா”

“அப்படிச் சொல்லுங்க. ஐய்யா நீங்க இவரை ஆம்பிளை இல்லைன்னு சொன்னீங்க”

“நான் சொல்லல்லைம்மா, டாக்டர் ரிப்போர்ட் அப்படி சொல்லுது”

“நல்லவருன்னு வேறே சொன்னீங்க”

“ஆமாம்மா”

“என் வயித்திலே வளர்ற குழந்தை ரெண்டுமே தப்புன்னு சொல்லுதே”

“மீனா… என்ன உளர்றே?”

உள்ளேயிருந்து தீர்மானமாய் வெளியே வந்த அருணா,

“வாங்கப்பா போகலாம்” என்றாள்.

திகைத்துப் போன சிவசுவும் அருணாவும் வாசலை நோக்கி நடந்தார்கள்.

“மீனா, என்ன இது முட்டாள்தனம். எதுக்காக இப்படிப்பட்ட களங்கத்தை உன் மேலே சுமத்திக்கறே?”

“பொண்டாட்டிக்கும், இன்னொரு பொம்பளைக்கும் எதிர்லே உங்களை ஆம்பிளை இல்லைன்னு ஒருத்தர் சொல்றதைக் கேட்டுகிட்டு சும்மா இருந்தீங்களே, அந்த களங்கத்தை நீங்க ஏன் உங்க மேலே சுமத்திகிட்டீங்க?”

“களங்கமாவது ஒண்ணாவது…. அவ ஏற்கனவே குழந்தை இல்லையேன்னு ஏக்கத்திலே இருக்கா”

“அதுக்காக டாக்டர் கொடுத்த சர்ட்டிகேட்டை உள்ளே வெச்சிட்டு உங்க மேலேதான் குறைன்னு நீங்களா ஒரு பொய் சர்ட்டிகேட்டை ரெடி பண்ணிக் குடுப்பீங்களா?”

“தயவு செஞ்சி கொஞ்சம் உளராம இரேன். புருஷன் பெண்டாட்டிக்குள்ளே குறையாவது மண்ணாங்கட்டியாவது. அருணா வருத்தப்படக்கூடாதுன்னுதான் இவ்வளவு நேரம் வாயை மூடிகிட்டு இருந்தேன்”

“எவ்வளவு நேரம் பேசாம இருப்பீங்க? அந்தம்மாவுக்கு வேறே கல்யாணம் பண்றேன்னு சொல்றாரு…”

“அவரு சொல்வாரு, அருணா ஒத்துக்கணுமே…”

“ம்ம்க்கும்.. பொண்டாட்டி மேலே பிரியமும் கரிசனமும் உங்களுக்கிருக்கு. கொறை உங்க மேலேன்னு டாக்டர் சொன்னாலும் நம்பறாங்க, என்னைக் கெடுத்துட்டீங்கன்னு நான் சொன்னாலும் நம்பறாங்க. உங்களைத் தவிர மீதி எல்லாரையும் நம்பறாங்க”

வாசல் வரை போன சிவசுவும் அருணாவும் திடுக்கிட்டு அங்கேயே நின்றார்கள்.

ரமேஷுக்கு சந்தோசம் ஜிவ்வென்று ஏறியது.

“தாங்க்ஸ், மீனா என் ஐடியா ஒர்க் அவுட் ஆயிடும். அவங்க ரெண்டு பேருமே அருணா கிட்டதான் பிரச்சினைன்னு நம்பிட்டாங்க. இனிமே மறு கல்யாணமும் இல்லை, சொத்தும் கை நழுவல்லை” என்றான் கிசு கிசுப்பாக.

→ 5 மறுமொழிகள்பகுப்புகள்: கதை/கட்டுரைகள்
குறிச்சொற்கள்: , ,

ஞாபகம் வருதா, ஞாபகம் வருதா….

நவம்பர் 21, 2009 · 22 மறுமொழிகள்

பொழுது போகல்லை ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாமா?

கீழே சில சினிமாப் பாட்டுக்களின் சரணத்திலேர்ந்து சில வரிகள் தந்திருக்கேன். இந்தப் பாடல்களின் பல்லவி என்ன என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.

1 . எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும்……

2 . பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடையின்னும் நூறாண்டு சென்றாலும்

3 . ஜன்னல் கம்பி உந்தன்
கைகள் பட்டு பட்டு
வெள்ளிக் கம்பி என்று ஆகியதே…

4 . உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும்….

5. நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
உள்ளங்கையில்தான் வந்து சேராதோ
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாளே….

இப்போதைக்கு இது போதும். பிடிச்சிருந்தா சொல்லுங்க அடிக்கடி விளையாடலாம். விடைகள் நாளை காலை பின்னூட்டமாக.

→ 22 மறுமொழிகள்பகுப்புகள்: துணுக்கு
குறிச்சொற்கள்: , ,

சைஸ் என்னங்க?

நவம்பர் 20, 2009 · 9 மறுமொழிகள்

“சைஸ் என்னங்க?” என்றான் கடைக்காரன்.

“இருபத்தெட்டு” என்றேன்.

“இருபத்தெட்டு சிரிசாச்சுங்களே..”

கண்ணில் கொள்ளி வைக்க, கடன்காரன்… எங்கே போகிறது பார்வை.

என் கண்ணிலிருந்த உக்கிரத்தைப் பார்த்து சட்டென்று பார்வையைத் திருப்பினான்.

“சரி, சரி… உங்க சௌரியம். கலரா ஒய்ட்டா?”

அவருக்கு ஒய்ட்டைத் தவிர வேறு கலர் பிடிக்காது.

“ஒய்ட்டுதான்”

பாக் பண்ணி வாங்கிக் கொண்டேன்.

மணி ஐந்து. அவர் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அவர் வருவதற்குள் போட்டிருக்க வேண்டும். ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் அவர் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒரு கஷ்டம். ஹூக் எட்டாது.

ட்ரை பண்ணிப் பார்க்கலாம். முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறான் எதிர் வீட்டு பாபு. இந்நேரம் காலேஜிலிருந்து வந்திருப்பான். ஓடுகிற பாம்பைப் பிடிக்கச் சொன்னால் கூட எனக்காகப் பிடிப்பான். இதைச் செய்ய மாட்டானா!

வீட்டுக் கதவைத் திறக்கிற போதே பாபு வந்து “ஹாய் ஆண்ட்டி” என்றான்.

“பாபு ஐ நீட யுவர் ஹெல்ப்”

“சொல்லுங்க ஆண்ட்டி, பால்கனிலேர்ந்து குதிக்கணுமா?”

“அதெல்லாம் வேண்டாம், இந்த சீலிங் பானை கிச்சன்ல இருக்கிற ஹூக்கில் மாட்டிக் கொடு போதும்”

(குமுதத்தில் வெளியான என் முதல் ஒரு பக்கக் கதை)

→ 9 மறுமொழிகள்பகுப்புகள்: கதை/கட்டுரைகள்
குறிச்சொற்கள்: , , , ,