குச்சி ஐஸ்,கமர்க்கட்,எலந்த வடை

என் பள்ளிக்காலத்தில் வாங்கித் தின்பது என்று ஒரு சமாச்சாரம் உண்டு.

ரேஷனுக்குப் போய் வரும் போதோ, மாவு மில்லுக்குப் போய் வரும்போதோ அரையணா அல்லது அஞ்சு பைசா லஞ்சம் கிடைக்கும்.

ஐந்து பைசாவுக்கு கணக்கிலடங்காத ஐட்டங்கள் உண்டு.

குச்சி ஐஸ் மூன்று பைசாதான். சேமியா ஐஸ் என்றால் அஞ்சு பைசா. சேமியா ஐஸ் வாங்கப் போகும் போது நாகராஜ்,

“ஐய்யே, அது சேமியாவே இல்லை. பழையதை அரைச்சி கருவடாம் மாதிரி பிழிஞ்சது” என்று டிஸ்கரேஜ் செய்வான். அவனிடம் இருக்கும் ஒரு பைசாவைக் கொடுத்து பார்ட்னர் ஆகி என்னை ரெண்டு குச்சி ஐஸ் வாங்கச் செய்வான்.

அஞ்சு பைசாவுக்கு எலந்த வத்தல் வாங்கினால் ரெண்டு கையையும் சேர்த்துப் பிடிக்கிற அளவு கிடைக்கும். அதை டிரவுசர் பையில் போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாகத் தின்று நாகப்பட்டினம் பூரா கொட்டை போடுவோம்.

அவித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒரு துண்டோ அல்லது ஒரு குச்சிக் கிழங்கோ கூட அஞ்சு பைசாதான். எனக்கு அதில் விருப்பம் கிடையாது.

திருமுடிச் செட்டியார் அல்லது லோகு கடைக்குப் போனால் அஞ்சு பைசாவுக்கு என்னென்னவோ கிடைக்கும். மீன் மிட்டாய், தேன் மிட்டாய், எலந்த வடை, கமர்க்கட், தேங்காய் பர்பி, தவிட்டு ரொட்டி, ஊறுகாய் பாக்கெட்…

எதை வாங்குவது எதை விடுவது என்கிற மலைப்பு ஜப்பானில் அக்கிஹாபாராவில் கூட எனக்கு அவ்வளவு ஏற்படவில்லை.

அந்த அஞ்சு பைசாவை சேமிப்பில் வைத்துக் கொண்டால் பாண்டியன் டாக்கீஸில் இடைவேளையில் சூடான போண்டா வாங்கலாம்!

கையில் காசில்லாத போது வேறொரு டெக்னிக் உபயோகிப்போம். ஒரு பிடி அரிசி போட்டால் அரைக்கால் படி அரை நெல்லிக்காயோ, எலந்தப் பழமோ, நாகப்பழமோ கிடைக்கும். வீட்டில் எல்லாரும் தூங்கும் போது நைசாக அரிசி டின்னிலிருந்து ஒரு பிடி அரிசி எடுப்பது கஷ்டமில்லை. எலந்தப்பழம், நெல்லிக்காய் எல்லாம் ஆபத்தில்லை. நாகப்பழம் வாங்கினால் நாக்கை நீட்டச் சொல்லி கண்டு பிடித்து விடுவார்கள்.

15 comments

    1. சென்ஷிஜி, அடடா… வாழ்க்கையின் சுவையான ஒரு பகுதியை இழந்துட்டீங்களே! எலந்தப்பழமும், எலந்த வத்தலும் மீனும் உப்புக் கருவாடும் போல. உங்களுக்கு மீன் பிடிக்குமா, உப்புக்கருவாடு பிடிக்குமா?

  1. உப்பு நார்த்தங்காயைக் கூட டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, வகுப்பு நடக்கும்பொழுது, சிறிய சிறிய துண்டுகளாக – வாயிலிட்டுச் சுவைத்தது ஞாபகம் வந்தது.

  2. எலந்தை வத்தலுக்கு எலந்தை வடை என்றொரு பெயரும் உண்டு. நாங்களெல்லாம் காடு காடாய் சுத்தி எலந்த பழம் பொறுக்கியது ஞாபத்துக்கு வருகிறது….

    அப்புறம் புளிப்பு மிட்டாய், சீரக மிட்டாய் மிஸ்ஸிங் உங்கள் லிஸ்ட்டில்.

    1. இலந்தை வத்தலை உரித்து கொட்டை வேறு கோது வேறாக ஆக்கி குழைத்து தட்டையாக தட்டி வெய்யிலில் வைத்து……. அது வேறே இது வேறெங்க…

  3. புபட்டியன் சொன்ன எலந்தை வடைதான் எலந்தை வத்தலா.. எலந்தை வடை என்று கும்பகோணம் சுற்றுப்புற கிராமப்புறங்களில் கூறுவது வழக்கம்.

    எலந்தம் பழம், நெல்லி, நார்த்தங்காய், நாகப்பழம் – பள்ளியில் ரெண்டாம் பீரியட் முடிந்ததும் வாத்தியாருக்கு தெரியாமல் ஓடி ஊரிலுள்ள கொல்லைகள், தோப்புகளில் இதைப் பறிப்பதுதான் எங்களுடைய முக்கியப் பணி :))

  4. //எதை வாங்குவது எதை விடுவது என்கிற மலைப்பு ………. கூட எனக்கு அவ்வளவு ஏற்படவில்லை.//

    repeatuuuuu….

    (இந்த இடுகையின் தாக்கத்தால் நானும்
    ஒரு இடுகையை போட்டு,
    அப்படியே அதன் ஒரு
    பாகமாக இதற்கு லின்ங் போட்டுவிட்டேன்.

    நீங்கள் பொறுத்தருள்வீர்கள் என்று…. )

  5. /
    எலந்தப்பழம், நெல்லிக்காய் எல்லாம் ஆபத்தில்லை. நாகப்பழம் வாங்கினால் நாக்கை நீட்டச் சொல்லி கண்டு பிடித்து விடுவார்கள்.
    /

    haa haa
    மலரும் நினைவுகள் ஒவ்வொருவருக்கும் மலருதே :)))

  6. நம்ம லிஸ்ட்:-

    காட்டுப் பழங்கள்/காய்கள்
    – எலந்த பழம்
    – பெரிய நெல்லிக்காய்
    – அரி நெல்லிக்காய்
    – விக்கிப் பழம்
    – சூரிப் பழம்
    – களாக்காய்
    – கருக்கட்டாம் பழம்
    – நாகப் பழம்
    – பேரிக்காய்
    – பப்ளிமாஸ்
    – மாங்கா கீத்து (மிளகாய் உப்புடன்)
    – நாரத்தஙாய் (மிளகாய் உப்புடன்)
    – குட்டி ஆரஞ்சு (மிளகாய் உப்புடன்)
    – கொய்யாக்காய் (Not பழம்)
    – எலந்த வடை (கங்கா கேக்)
    – எலந்த உருண்டை

    ஜௌ /கமர்கட்
    – வெல்லப் பாகு ஜௌ
    – ரோஸ் கலர் ஜௌ
    – மஞ்ஜள் கலர் ஜௌ
    – பம்பாய் மிட்டாய்
    – கமர்கட்
    – தேன் மிட்டய்
    – ஆரஞ்சு மிட்டாய்

    குச்சி ஐஸ்
    – சாதா ஐஸ்
    – பால் ஐஸ்
    – சேமியா ஐஸ்
    – ஜவ்வரிசி ஐஸ்
    – பஞ்ஜாமிர்த (வாழைப்பழ) ஐஸ்

    – – சிமுலேஷன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!