ராமானுஜய்யங்கார் முதல் ரீமாசென் வரை

இசைக்கும் எனக்கும் இருக்கும் உறவு கலப்படமான உணர்வுகளின் கலவை.

 அந்த உறவால் எனக்கு கண்டிப்பு, பயம், அவமானம், வெட்கம், லாபம், பெருமிதம், மகிழ்ச்சி என்று பல்வேறு உணர்வுகள் ஏற்பட்டதுண்டு.

 வீட்டில் ரெக்கார்ட் பிளேயர் வாங்கினார் அண்ணா. கையால் கீ கொடுத்து ரெக்கார்ட் போடுகிற சௌண்ட் சர்வீஸ் ஆசாமிகள் இருக்கிற இடத்திலெல்லாம் நான் ஆஜராகி பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட வெறி இருக்கும் போது வீட்டிலேயே ரெக்கார்ட் பிளேயர் என்றால் எப்படிப்பட்ட எக்ஸைட்மெண்ட்! ஆனால் அதில் மணி ஐயர், சோமு, அரியக்குடி, பாலமுரளி கிருஷ்ணா, ஜி.என்.பி, காருக்குறிச்சி இவர்கள் மட்டுமே பர்ஃபார்ம் செய்வார்கள்.

 எனக்கு ஒரு விஞ்ஞாப்பூர்வமான சந்தேகம் வந்தது.

 அடங்கொப்புராண சத்தியமா, முத்தமிடும் நேரமெப்போ, தம்மருதம் எல்லாம் பாட வேண்டுமானால் வேறு மாதிரி பிளேயர்தான் வாங்க வேண்டுமா அல்லது இதுவே பாடுமா என்பதே அது. திருட்டுத்தனமாக என் இளைய அண்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்து ரிக்கார்ட் வாங்கி வந்ததும் அந்த சந்தேகம் தெளிவாயிற்று.

 பெரியண்ணா இல்லாத போது அதைப் போட்டு ங்ங்ங்கொய்ய்ய்ய்.. டிட்டிட் டீட்டிட்டிடீய்… டொங்.. டொங்.. டொங்.. தம்மருதம்ம்ம்ம்ம்ம்ம் என்று பாடவிட்டு சிலிர்த்துக் கேட்டுக் கொண்டிருப்போம். பெரியவர் வருகிற சப்தம் கேட்டதும் சோமுவின் ‘ராமநாமமு ஜன்ம ரட்சக மந்த்ரம்’ போட்டு பக்தி சிரத்தையாக ரசிப்போம்.

 இந்த விளையாட்டு நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

 ஒருநாள் ஆர்வக் கோளாறில் அவர் கொல்லைப் பக்கம் இருப்பது தெரியாமல் போட்டு விட்டேன். அன்றைக்கு வந்தது வினை. காதைத் திருகி மண்டையில் ந்ண்ண்ணங் என்று ஒரு குட்டு வைத்து,

 “இந்தப் பாட்டெல்லாம் போட்டால் பிளேயரை உடைச்சிப் போட்டுடுவேன்” என்று மிரட்டினார். ஹனிமூன் முடிந்தது.

 அதற்கப்புறம் 1979ம் வருஷம் சங்கீதம் கற்றுக் கொண்டே தீருவது என்கிற வெறி வந்து மகாராஜபுரம் சந்தானத்தின் சிஷ்யை காமாட்சி சுப்ரமணியம் என்கிறவரிடம் போனேன். கொஞ்சம் பெரிய பையனாக இருந்ததால்,

 “ஏதாவது பாட்டு தெரிஞ்சா பாடிக்காட்டு” என்றார், பின்னாலேயே “தாளம் போட்டுண்டு பாடணும்” என்று கண்டிஷணும் போட்டார்.

 “சினிமாப் பாட்டுத்தான் தெரியும்” என்றேன்.

 “பின்னே நீ என்ன பாலமுரளியோட ஜதி பேதத் தில்லானாவா பாடுவே… பாடு” என்றார்.

 ’தொடுவதென்ன தென்றலோ மலர்களோ’ பாடினேன்.

 “பாட்டு தாளத்துக்கு சரியாத்தான் இருக்கு. ஆனா போடற தாளம்தான் தப்பு” என்றார். தொடர்ந்து, ”சினிமாப் பாட்டொண்ணும் மட்டமில்லை சுருதி, லயம் பிராக்டீஸுக்கு சினிமாப் பாட்டுத்தான் பெஸ்ட்” என்றவர் ‘நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்’ என்று தாளம் போட்டபடி பாடிக் காட்டி இதை ஏக தாளம் போட்டு பாடறது கஷ்டம்” என்றார். அவருக்கு ஏகப்பட்ட தாளம் தெரியும் என்பது புரிந்தது.

 ஆனால் இந்த முயற்சியும் அவமானத்தால் டிஸ்கண்ட்டினியூ ஆகிவிட்டது. சரிகமபதநி கற்கும் போதே நான் ப சொல்லும் லட்சணத்தைப் பார்த்து,

 “பே… என்ன பே… ? ப்பாஆ நல்லா அழுத்திச் சொல்லணும்” என்று அவர் சொன்னதும் பாட்டு கற்றுக் கொள்ள வந்த குஞ்சு குளுவான்களெல்லாம் கிக்கிக்கீ என்று சிரித்தது எரிச்சலாக இருந்தது.

 முதன் முதலாக நான் கார் வாங்க ஆசைப்பட்டபோது இஸ்ரோ தலைவர் ரங்கராஜனிடம் ஒரு ஆம்னி இருப்பதாக அறிந்தேன். போய்ப் பார்த்தால் கார் அருமையாக இருந்தது. விலை எண்பதாயிரம் சொன்னார்கள். கையில் அவ்வளவு காசில்லை. என் இனேபிலிட்டியை வெட்கத்தை விட்டு ஒப்புக் கொண்டு விட்டு வெட்டி அரட்டை மட்டும் அடித்துக் கொண்டிருந்தோம். பேச்சு வாக்கில் என் இல்லத்தரசி ‘இவர் நல்லாப் பாடுவார்’ என்று சொல்ல மிஸஸ். ரங்கராஜன், “எனக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாட்டுக்கள் ரொம்பப் பிடிக்கும்” என்றார்.

 ’நிலவே என்னிடம் நெருங்காதே’ பாட்டு பாடிக் காட்டினேன்.

 கார் சாவிகளை என்னிடம் கொடுத்து, “கார் உங்களுடையது. எவ்வளவு பணம் என் அக்கௌண்ட்டில் போடறீங்களோ அதுதான் விலை” என்று சொல்லி விட்டார்.

 ஐம்பத்தைந்தாயிரம்தான் போட்டேன். துணிகரமான அயோக்யத்தனம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் வாஷிங்டன் கிளம்பிக் கொண்டிருந்த அவர்கள் உபரியாக மைக்ரோவேவ் ஓவன், சோஃபா செட், கார்னர் ஃபர்னிச்சர் எல்லாம் கொடுத்ததும் மூச்சே நின்று விட்டது. அதுதான் என் இசைக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். (அதற்கப்புறம் இன்னும் கிடைக்கவில்லை)

 சமீபத்தில் நடந்தது கொஞ்சம் எம்பாரஸிங் சமாச்சாரம்.

 என் பேரனை ‘ஹரிவராசனம்’ பாடித் தூங்கப் பண்ணி, ’கிருஷ்ணா நீ பேகனே’ பாடி உற்சாகப் படுத்தி என்னை ஒரு சங்கர சாஸ்திரியாகக் காட்டிக் கொண்டிருந்தேன். அவன் கீழே இருக்கும் போது மாடியில் கதவை எல்லாம் சாத்திவிட்டு ஜன்னல் திரைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டு ‘இத்துனூண்டு முத்தத்தில இஷ்டமிருக்கா இல்ல இங்கிலீசு முத்தத்தில கஸ்டமிருக்கா’ பாட்டைப் போட்டுவிட்டு ரீமா சென் போல இடுப்பை வெட்டி வெட்டி ஆடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தால் பூனை மாதிரி உள்ளே வந்து நின்றிருக்கிறான் பேரன்.

 சரக்கடிக்கிற சாமியாரைப் பார்த்தது போல உறைந்து போனவன் ஒரு வினாடியில் சமாளித்துக் கொண்டு வசீகரமாக சிரித்தான். மரியாதை, பயமெல்லாம் கலந்த பிரியமாக இருந்தது இப்போது கலப்படமில்லாமல் வெறும் பிரியமாக மட்டும் இருக்கிறது.

12 comments

  1. ஒரு அருமையான வாழ்க்கையில் கடந்து வந்த தகவல்களை உள்ளடக்கிய பதிவு.
    எங்கள் கல்லூரி காலத்தில்தான் ஸ்பூல் டேப் வந்தது. கல்லூரியின் அந்தக் கருவியைப் பயன்படுத்தும் வாய்ப்பு, கலை மன்றத்தின் செயலாளர் என்ற முறையில் எனக்கும் நண்பர்களுக்கும் கிடைத்தது. சவுண்ட் ஆப் மியுஸ்க் பாடல்களுடன் வக்த என்ற ஹிந்தி திரைப்பாடலும் டேப்பில் இருந்தது. பாட்லகளைப் பதிவு பண்ண தெரியவில்லை. தில்லானா மோகனா வந்த காலம்.
    மதுரை சேதுராமன் நாதஸ்வர கச்சேரி கல்லூரியில் நடந்தது. அதை கூடபதிவுச் செய்ய முடியவில்லை. வானொலி பெட்டியை தூஷண பெட்டி என்று ஊரில் அழைத்த காலம். இலங்கை வானொலியில் சினிமா பாட்டு கேட்போம்.வீடுகளில் சத்தமாக ரேடியோ வைப்பார்கள்.
    வாழ்க்கையில் இடையில் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்த போது இசையில் தேர்ந்த நண்பர் சிவகுமார் சுப்ரமணியும் கிடைத்தார். நன்றாக ஹிந்துஸ்தானியில் பாடுவார். நாளாம் நாளாம் திருநாளாம் என்பது ராகேஸ்வரி என்று பாடி காட்வார். பண்டிட் ஜேஸ்ராஜின் பாடல்களை வட இந்தியர்கள் வியக்கும் அளவுக்குப் பாடிக்காட்டுவார். திரு ரங்கநாதன் இந்திய தூதுவராக இருந்த போது அவரது கச்சேரியை இந்திய தூதரகத்தில் நடத்தினேன். குஜ்ராத்திகள் மெச்சினார்கள்.

    இன்று எல்லாம் இருந்தும் அடையாளங்களை இழந்து ஒரு நடோடியாக அடங்கி கிடக்க வேண்டிய நிலையில் உள்ளேன் பிரியா ச்கோதிரிகள் இந்த மாத இறுதிய்ல் சிவா விஷ்ணு கோவிலில் பாடுவதாக அறிந்தேன். போகலாம் $15 கொடுத்தால். ஜீனில் சாருலதாமணி நியுஜேரிசி வருவதாக தகவல்.
    பெட்னா விழாவிற்கு சீர்காழி சிவசிதம்பரமா அல்லது சஞ்சை சுப்ரமணியமா என்ற சர்ச்சை ஓடி கொண்டிருக்கிறது.
    கடந்த ஆண்டுகளில் சுதா ரகுநாதன், ஆத்ம நாதன், நித்யசிறி மகாதேவன், டி கே எஸ் கலைவாணன் நிகழ்ச்சிகளைப் பெட்னாவில் நடத்தி இருக்கிறோம்.

    கடந்தகால வரலாற்றுக்கு அழைத்துச் சென்றதிற்கு நன்றி.
    நாஞ்சில் பீற்றர்

  2. ‘இத்துனூண்டு முத்தத்தில இஷ்டமிருக்கா இல்ல இங்கிலீசு முத்தத்தில கஸ்டமிருக்கா’ பாட்டைப் போட்டுவிட்டு ரீமா சென் போல இடுப்பை வெட்டி வெட்டி ஆடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தால் பூனை மாதிரி உள்ளே வந்து நின்றிருக்கிறான் பேரன்.

    சரக்கடிக்கிற சாமியாரைப் பார்த்தது போல உறைந்து போனவன் ஒரு வினாடியில் சமாளித்துக் கொண்டு வசீகரமாக சிரித்தான். ////// அருமை அருமை….!

  3. கண்ணன் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன். நண்பரே… மிகச்சிறந்த பதிவு… மிகச்சிறந்த நடை… தொடரட்டும்
    அன்புடன் மதுரை சந்துரு

  4. நல்ல ஆழமான பதிவு.. உங்கள் நெடிய வாழ்க்கையின் முழுதும் வரும் ஒரு இழையை அழகாக பதிந்திருக்கிறீர்கள்!

  5. சார்,
    நல்லதொரு அனுபவ பதிவு.
    ஒரொரு பத்தியும் ஒரு கிளாசிக்.

    சரி, எல்லாரும் கார் வாங்கனும்னா கார் சம்பந்தப்பட்டவங்க கிட்ட போய் கேட்பாங்க. நீங்க என்னான்னா ராக்கெட் விடுறவர்கிட்ட போய் கேட்டுருக்கீங்க!!

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!