ரஜூலாக் கப்பல்

எஸ்.எஸ்.ரஜூலா என்றொரு கப்பல் இருந்தது. (இப்போதும் இருக்கிறதா?)

1900 ஆம் வருஷத்திலிருந்து பணியைத் தொடங்கிய இது சென்னையிலிருந்து சிங்கப்பூர் மற்றும் பெனாங் செல்லும் கப்பல். அப்போதெல்லாம் Negapatam என்று அழைக்கப் பட்டது எங்கள் ஊர். ஒன்று விட்டு ஒரு வாரம் எங்கள் துறைமுகத்துக்கு ரஜூலாக் கப்பல் வரும். வெளிநாடு செல்லும் விமானங்களில் இலவசமாக வழங்கப் படும் ஏர் பேக்குகள் மாதிரி, ரஜூலாக் கப்பலில் வழங்கப்படும் பைகள் நாகப்பட்டினத்தில் பிரபலம்.

இப்போதைய பிக் ஷாப்பர்களை விட பெரிய பை.

ஒரு வாரத்து துணிகளை அடைத்து வண்ணான் கடைக்கு எடுத்துப் போகலாம், ஒரு மாசத்து அரிசி வாங்கலாம், தெருவோரக் காய்கறிக் கடைக்காரர்கள் சரக்கு கொள்முதல் செய்யலாம், தலைப்பக்கம் வெண்டிலேஷன் ஓட்டை போட்டு தூளியாகக் கூட பயன்படுத்தலாம்!

பள்ளிக்கூடப் பிள்ளைகள் கப்பல் படம் வரைந்தால், அதில் எஸ்.எஸ்.ரஜூலா என்று எழுதுவார்கள்.

நாகப்பட்டினத்தின் யுநீக் சமாச்சாரங்களில் ஒன்று அந்திக் கடை.

மாலை வேளையில் மட்டும் வேலை செய்யும் வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள். கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி நண்பர்கள் தள்ளிக் கொண்டு வரும் பொருட்கள்!

பெரிய கடைத் தெருவின் இறுதியில் எஸ்.டி.சவுந்திர ராஜ பிள்ளை மருந்துக் கடை வாசலில் பெரிய்ய வெட்ட வெளி இருக்கும். (கோவி.கண்ணனுக்குத் தெரிந்திருக்கலாம்!). ரஜூலாக் கப்பல் வந்த மறுநாள் அந்திக் கடைக்குப் போனால் புதுப் புதுப் பொருட்கள் பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்து நெயில் கட்டர் என்றொரு சமாச்சாரமே இங்கேதான் முதலில் பார்த்தேன்.

மடக்கி வைக்கிற மாதிரி பிளாஸ்டிக் ஹாங்கர்கள், பள்ளிப் பிள்ளைகள் சென்ட் ரப்பர் என்று அழைக்கும் எரேசர்கள், முதுகில் எரேசர் வைத்த வண்ண வண்ண பென்சில்கள், ஹீரோ மற்றும் யூத் பேனாக்கள், அஞ்சு கலர் பால் பாயின்ட் பேனாக்கள், சிகரெட் லைட்டர்கள், ட்ரிப்பில் பைவ் மற்றும் மால்பாரோ சிகரெட்டுகள் என்று வித விதமான சமாச்சாரங்கள்.

டிரான்சிஸ்டர் ரேடியோக்களே புதுசாக இருந்த போது சோப்புக் கட்டி சைசில் ரேடியோக்கள்.

அதை வாங்கி மொபைல் போன் போல காதருகே வைத்து கிரிக்கெட் காமேன்ட்டரி கேட்பார்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள். வானொலி நிலையங்களிலும், ஒலிப்பதிவுக் கூடங்களிலும் மட்டுமே புழக்கத்தில் இருந்த ஒளிப்பதிவு கருவியை வீட்டுக்கு கொண்டு வந்த கேசட் டேப்புகளை அங்கேதான் முதலில் பார்த்தேன். உள்ளங்கை சைசில் இருந்த அதை பெட்டியில் போட்டு பட்டனை அழுத்தியதும்,

“ஆஜ் மத் ஹோஷ் ஹுவா சாயிரே” என்று லதா மங்கேஷ்கர் பாடுவது மெய் சிலிர்க்கும்.

சென்னையில் இருக்கும் சைனா பசார், பர்மா பசார் எல்லாம் எங்கள் அந்திக் கடைக்கு அப்புறம் வந்தவைதான்!

பொருள் வாங்க வருகிறவர்கள் சொற்பமாக இருப்பார்கள். வேடிக்கை பார்க்கிறவர்கள்தான் ஜாஸ்தி. வேடிக்கை மட்டும் பார்க்கிறவர்களைக் கண்டால் கடைக்காரர்களுக்கு டென்ஷனாகி விடும். “என்ன வேணும்?” என்று அதட்டுவார்கள்.

இப்படி அதட்டப் படும் போது என் அண்ணனின் நண்பர் ஒருவர் முகத்தை வெகுளியாக வைத்துக் கொண்டு,

“பாரின் எலந்த வடை இருக்கா?” என்று கேட்டு சமாளித்தார்.

15 comments

 1. அததுக்கு அப்போ என்ன விலைன்னும் சொல்லி இருந்தால் இன்னும் பொறாமையா இருந்திருக்கும்…சுவாரஸ்யமாவும்..!

  1. பிரபு… அப்பல்லாம் சிசரோ அல்லது உளி மாதிரி டேப்பராக சாணை பிடித்த ஒரு கத்தியோதான் எங்களுக்கு நகம் வெட்ட பயன் படும்.

 2. மிகச் சுவாரஸ்யமான கட்டுரை … அந்த(தி)க் காலத்தில உங்க கையில கேமெரா இல்லை, இல்லாட்டி சுவாரஸ்யமான படங்களும் எங்களுக்குக் கிடைச்சிருக்கும் 🙂 அதனால என்ன உங்கள் எழுத்து படம் போட்டுக் காட்டுகிறது, போதாதா?

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 3. //சென்னையில் இருக்கும் சைனா பசார், பர்மா பசார் எல்லாம் எங்கள் அந்திக் கடைக்கு அப்புறம் வந்தவைதான்!//

  என்ன இருந்தாலும் சொந்த ஊர விட்டுகொடுக்க முடியுமா…

 4. //மடக்கி வைக்கிற மாதிரி பிளாஸ்டிக் ஹாங்கர்கள், பள்ளிப் பிள்ளைகள் சென்ட் ரப்பர் என்று அழைக்கும் எரேசர்கள், முதுகில் எரேசர் வைத்த வண்ண வண்ண பென்சில்கள், ஹீரோ மற்றும் யூத் பேனாக்கள், அஞ்சு கலர் பால் பாயின்ட் பேனாக்கள், சிகரெட் லைட்டர்கள், ட்ரிப்பில் பைவ் மற்றும் மால்பாரோ சிகரெட்டுகள் என்று வித விதமான சமாச்சாரங்கள்.

  டிரான்சிஸ்டர் ரேடியோக்களே புதுசாக இருந்த போது சோப்புக் கட்டி சைசில் ரேடியோக்கள்.//

  இத்தனையும் இப்பவும் அதிசயமான விஷயங்கள்தான் சார்.

  நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

 5. எஸ்.எஸ்.ரஜூலா என்றொரு கப்பல் இருந்தது. (இப்போதும் இருக்கிறதா?)இப்போது இல்லை. 1974 ஆகஸ்ட் 30ம் தேதியுடன்அதன் வாழ்நாள்முடிவுபெற்றது.
  அது மும்பையில்உடைக்கப்பட்டுவிட்டது.
  1973ல் ஷிப்பிங் கார்ப்பேஷண் இந்தியாவால் வாங்கப்பட்டு ரங்கட் என்று பெயர் மாற்றப்பட்டு கல்கத்தா அந்தமான் இடையே பயணம் செய்தது. (12/05/1974) last voyage

 6. ஒலிப்பதிவுக் கூடங்களிலும் மட்டுமே புழக்கத்தில் இருந்த ஒளிப்பதிவு கருவியை வீட்டுக்கு கொண்டு வந்த கேசட் டேப்புகளை

  Is there not a oli – oLI mix-up here?

  1. கருத்துப் பிழைகளை சுட்டிக்காட்ட ஆளிருப்பது மாதிரி, எழுத்துப் பிழைகளுக்கும் இருக்கிறீர்கள்… நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s